Thursday, January 31, 2013

தாமதமான பதிவு


என்னடா போன வருஷம் 62 பதிவுகளை பதிச்சுட்டேன்னு சொன்னான். இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒரு மாசம் முடியுது, ரெண்டே ரெண்டு பதிவுகளை தான் பதிச்சிருக்கான்னு (அதிலும் ஒரு பதிவு, வீட்டு அம்மணியோடது!), நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது. என்னங்க பண்றது, இங்க நாங்க பொங்கல் திருவிழாவை ஜனவரி மாதம் 20ஆம் தேதி  மிக விமர்சையா கொண்டாடினோம். அதுக்காக நிறைய வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. இவன் ஒருத்தன் தான் எல்லா வேலையும் செஞ்ச மாதிரி பேசுறானேன்னு நினைக்காதீங்க. இங்கில்பர்ன்ல இருக்கிற தமிழ் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த திருவிழாவை கொண்டாடினோம். நான் இதுல பெரியவங்க நாடகம் ("ஒரு காதல் கதை") ஒண்ணும், சிறு குழந்தைகளின் சிறிய நாடகம் ஒன்றும் ("அல்வா சாப்பிட்டால்") மேலும் மேடை சிரிப்பு நிகழ்ச்சி ("கண்ணம்மாப்பேட்டை") ஒன்றும் பண்னினேன். இது எல்லாத்துக்கும் கடைசி நேரத்தில் தான் கதை மற்றும் நாடக வசனம் எல்லாம் எழுதி அதுல நடிக்கிறவங்களுக்கு கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லி அவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணி ஒரு வழியா அரங்கேற்றினோம். அதனால 20ஆம் தேதி வரைக்கும் என்னால வலைப்பூ பக்கம் வர முடியலை. 21ஆம் தேதி, எங்க வீட்டு அம்மணி வலது கண்ணுல "GLAUCOMA" ஆபிரேஷன் செஞ்சுக்கிட்டாங்க.    அதனால நான் ரெண்டு வாரம் லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன். (இதெல்லாம் சூட்டோட சூட்டா சொல்லிடனும். அதற்கப்புறம் நான் காதல் கீதத்தோட முடிவு பகுதியை பதியுறேன்) . இதற்கு நடுவுல போன வெள்ளிக்கிழமை இரவு என்னோட மிக மிக நெருங்கிய நண்பரோட மகன் (அவர் இந்த வருடம் மருத்துவராகியிருப்பார்)தவறிவிட்டார். அந்த துக்கமும் சேர்ந்துக்கொண்டதால், என்னால் கணினி பக்கமே போக முடியவில்லை.  

இவையெல்லாம் தான் என்னோட தாமதத்துக்கு காரணங்கள். கண்டிப்பாக இனிமேல் ஒழுங்காக பதிவுகளை பதிவேன் என்று நம்புகிறேன். 


Tuesday, January 8, 2013

புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி

காதல் கீதம் தொடர்கதையை தான் முடிக்க வேண்டும் என்று எண்ணிக்
கொண்டிருந்த வேளையில், வீட்டு அம்மணிக்கு, தானும் எதையாவது எழுத வேண்டும் என்று ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிவிட்டது. அவர்கள் எதையாவது எழுதியிருந்தால் மட்டும் பரவாயில்லை, அதை என்னுடைய வலைப்பூவில் பதிய வேண்டும் என்று கட்டளையிட்டது தான் என்னை பயமுறுத்தியது. அதனால் தான் நான் விபரீதமான எண்ணம் என்று சொன்னேன்.  நானும் விட்டுக்கொடுக்காமல், நீ பாட்டுக்கு கண்டதையும் எழுதினால் எப்படி பதிவது என்றேன். உடனே, நீங்க தத்துபித்துன்னு எழுதுறதை விட நான் நல்லா தான் எழுதுவேன் என்று கூறி, ஒரு கட்டுரையையும் எழுதி கொடுத்தார்கள், அதை படித்தவுடன் தான் தெரிந்தது, ஆஹா, நமக்கு போட்டி வெளியில் எல்லாம் இல்லை,வீட்டுக்குள்ளேயே இருக்காங்கன்னு. ஏதோ என் பொழப்புல மண்ணை அள்ளிப்போடாம இருந்தா சரி தான்னு நினைச்சுக்கிட்டு , நானும் அந்த கட்டுரையை இந்த பதிவுல பதியுறேன்.  


இந்திய நாடு நிறைய விஷயங்களில் உலகத்திற்கு,முன்னோடியாக இருந்திருக்கிறது. இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்தில் நவீன விஷயமாக நாம் கருதுவது, கருவை வெளியே வைத்து வளர்க்கும் முறை, அதாவது ஆங்கிலத்தில் “IVF” முறையை தான். ஆனால், இந்த முறை நம் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு என்று, தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கருகாவூரில் “கர்ப்பரட்சாம்பிகை” கோவிலின் தல வரலாறு சொல்கிறது.


முல்லைவதனம் என்னும் ஊரில் கௌதமர், கார்த்திகேயர் என்று இரண்டு முனிவர்கள் தவம் செய்தார்கள். குழந்தையில்லை என்ற குறையை சொல்லி அவர்களிடம் நித்திருவர் – வேதிகை தம்பதியினர் முறையிட்டனர். அதற்கு அந்த முனிவர்கள், அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன நாதரையும், அம்மனையும் வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உபதேசித்தார்கள். அவ்வாறே அந்த தம்பதியினரும் உபதேசிக்க, வேதிகா கருவுற்றாள்.
கணவர் ஊரில் இல்லாமல், வேதிகை மட்டும் தனித்து இருந்த சமயத்தில், தாய்மையின் அடையாளமான கருவை சுமந்திருந்த காரணத்தால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்திருந்ததினால் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதனை அடைந்த வேதிகை மீண்டும் அந்த அம்பாளிடம் சென்று முறையிட்டாள். அம்பாளும், வேதிகையின் மேல் இறக்கம் கொண்டு, அன்னை கர்ப்பரட்சாம்பிகையாக தோன்றி, கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து, குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி “நைந்துருவன்” என்று பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.


கரு காத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம், இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவலகில் கருத்தரிக்காதவர்களை, கருத்தரிக்க வைக்கவும், கருத்தரித்தவர்களின் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்று பிராத்தனை செய்ய, அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்று, இத்தலத்தில் வீற்றிருந்து, நமக்கெல்லாம் அருள் புரிகிறாள். இதனால் தான், கருவை ரட்சித்த அந்த அம்மனுக்கு “கர்ப்பரட்சாம்பிகை” என்று பெயர் வந்தது.
என்னதான், இந்த நிகழ்ச்சி ஒரு புராண கதையாக இருந்தாலும், இன்றும் இந்த அம்மனை, குழந்தை பேறு இல்லாதவர்கள் வணங்கினால், கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம். எனக்கு திருமணமாகி சரியாக பத்து வருடங்கள் முடிந்து தான் ஓவியா பிறந்தாள். அதுவும் இந்த அம்மனை வணங்கி, அங்கு கொடுக்கப்பட்ட நெய் பிரசாதத்தை, சாப்பிட்ட பிறகு தான், நான் கருவுற்றேன். அதே மாதிரி, ,குழந்தை தங்காதவர்களும், குழந்தை தங்க வேண்டும் என்று வேண்டினாலும், நல்லபடியாக சுகப் பிரசவம்  ஆகி குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்று வேண்டினாலும் கண்டிப்பாக நடக்கிறது. எனக்கு ஓவியா கொடுக்கப்பட்ட தேதிக்கு நான்கு வாரத்திற்கு முன்பே பிறந்தாலும், சுகப்பிரசவத்தில் தான் பிறந்தாள். எனக்கு தெரிந்த சில தோழிகள், தங்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு இந்த அம்மனை வணங்கி, சுகப்பிரசவத்துக்கான ஸ்லோகத்தை தினமும் படித்து, இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார்கள். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் கவலைப் பட வேண்டாம். ஒரு முறை இந்த கோவிலுக்கு போய் வணங்கி வாருங்கள், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் இறந்த ஒருவரின் இதயத்தையோ, கண்ணையோ மற்றொவருக்கு பொருத்தி,அவரின் வாழ்கையில் விளக்கேற்றி வைக்கிறோம். ஆனால் இதற்கு இன்னும் ஒரு படி மேல போய், நம் சித்தர்கள் “கூடு விட்டு கூடு பாயும்” கலையில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இறந்த ஒருவரின் உடலில் தங்களின் ஆன்மாவை உள்ளே செலுத்தி, இறந்தவரையே நடமாடவிட்டிருக்கிறார்கள். அதே போல் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது, மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கஸ்ருதா என்ற முனிவர் காடராக்ட் ஆபரேஷன் செய்து, அதை பற்றிய விவரங்களை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று. ஆக மொத்தத்தில், அந்த காலத்தில் நம் சித்தர்கள், ஞானிகள் செயத்தை தான், நாம் இன்றைய நவீன மருத்துவத்தில் செய்துக்கொண்டிருக்கிறோம்.  
- கீதா சம்பந்தம் 

Tuesday, January 1, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்ன எழுதப்போறோம், எதை எழுதப்போறோம்னு போன வருஷம் ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்துச்சு. சரி, நம்ம சொந்த கதை,சோக கதையெல்லாம் எழுதுவோம்னு நினைச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படியோ 62 பதிவுகளை போன வருஷத்துல பதிச்சுட்டேன். என்னோட இந்த தத்துபித்து உளறல்களை எல்லாம் நீங்களும் படிச்சு, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக இந்த வருடமும் உங்களுக்கு பிடித்த வகையில் என்னுடைய பதிவுகள் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிக்கொள்கிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.