Pages

பக்கங்கள்

Monday, September 23, 2013

எட்டுத்தொகை நூல்கள் – ஒரு விளக்கம்


எட்டுத்தொகை நூல்கள் – ஒரு விளக்கம்
சினேகா சிவகுமார், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி





முன்னுரை

உலக இலக்கியங்களுள் பெருமையுடையனவாய் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. அவற்றுள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் தனிச்சிறப்புடையன. அதிலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்கள் தனிப்பெருமை உடையன.  எட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒரு சேரத் தொகுக்கப்பட்டவை (1). நற்றிணை 400 பாடல்களையும், குறுந்தொகை 400 பாடல்களையும், ஐங்குறுநூறு 500 பாடல்களையும் பதிற்றுப்பத்து 100 பாடல்களையும், பரிபாடல் 22 பாடல்களையும், கலித்தொகை 150 பாடல்களையும், அகநானுறு 400 பாடல்களையும்,  புறநானூறு 400 பாடல்களையும் கொண்டு உள்ளன (2). எட்டுத்தொகை நூல்கள் தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றன. அகத்தையும் புறத்தையும் பற்றிக் கூறும் பாடலாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். எட்டுத்தொகை ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல், என்னும் மூன்று யாப்புகளால் ஆனது.  ஏறத்தாழ 2345 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்கள், 30 பெண் பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப்பாடல்கள் 102 அவற்றுள் குறுந்தொகை நூலை எழுதியவர்கள் 206 பேர் என கூறப்படுகிறது அகநானுறு 158 புலவர்களால் பாடப்பெற்றது (1).  குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை மற்றும் கலித்தொகை ஆகியவற்றைப் பற்றி எனக்கு தெரிந்த விடயங்களைச் சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 குறுந்தொகை 

குறுந்தொகை அகப்பொருள் பற்றியது. அகப்பொருள் பற்றிப் புலவர்கள் பாடிய செய்யுட்கள் அடியளவு நோக்கித் தொகுக்கப்பட்டன. இது நான்கு அடி சிற்றெல்லையைக் கொண்டது. எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை. அகம் குறுந்தொகையில் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் இயல்புகளும் நிகழ்ச்சிகளும் அங்கங்கே கூறப்பட்டுள்ளன. குறுந்தொகை மூலம் ௮ரசர்கள் செங்கோல் செலுத்தும் இயல்புடையவர்கள், குடிமக்கள் குறைகளைக் கேட்டு அறம் வழங்கினார்கள், குற்றம் செய்தவர்களைத் தண்டித்தார்கள் என்று தெரியவருகிறது.(1)

 அகநானூறு

இந்நூலைத் தொகுத்தவர் உப்பூரிகுடிக் குழார் மகனார் உருத்திரசன்மர் ஆவார் எனவும், தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி எனவும் அறியப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை. எல்லாப்பாடல்களும் நிறைவாகப் பெறபட்டதும் தமிழுலகம் செய்த நற்பேறு எனலாம். இப்பாடல்கள் சந்தச்சுவையும், இலக்கியச் சுவையும் நனி கொண்டு விளங்குகின்றன.(2) அகநானூறில் ஐந்து வகையான திணைகளும் அவற்றின் ஒழுக்கங்களும் நிலவப்பெற்றவை. தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்தியும், அவர்கள் அணிந்த ஆபரணங்கள் பற்றியும் அக்காலத்தில் இருந்த உயிரினங்கள் பற்றியும் மற்றும் பூக்களும் மரங்களும் பற்றிய செய்திகளும் அகநானூற்றுப் பாடல்களில் கூறப்பட்டு உள்ளன.


நற்றிணை

நற்றிணை என்னும் இந்த நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவார்கள். இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 9 அடி முதல் 12 அடிகள் வரை இருக்கும். இந்நூலைத் தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் தொகுப்பித்தவர் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" என்பவர்.  நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களில் அடங்கும். குறுந்தொகை மற்றும் நெடுந்தொகை ஆகிய இரண்டுக்கும் நடுவில் அளவான அடிகளை உடையதால், இதற்கு நற்றிணை என்று பெயர் வந்திருக்கலாம் (3).

குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.(4) இந்நூலின் மூலம் நாம் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

கலித்தொகை

இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். மற்ற அகத்திணை நூல்கள் சொல்லாத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை இந்நூலில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நூலைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பற்றிய குறிப்புகள் தெரியவில்லை.  (5).

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்   
பாடல் சான்ற புலனெறி வழக்கம் 
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்    
உரியதாகும் என்மனார் புலவர் (அகத். 53)

என்பது தொல்காப்பியரது வாக்கு. இச்சூத்திரத்தில்  'என்மனார் புலவர்' என்று குறிப்பதனால், ஆசிரியர்  தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேயே அகப்பொருள் இலக்கிய வழக்கில் பரிபாடலும்  கலியும் முதன்மை பெற்று விளங்கியது புலனாகும் (6).

 
முடிவுரை

எட்டுத்தொகை நூல்களில் பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும் பற்றி இந்த நூல்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
 
ஆதார நூற்பட்டியல்


  1. குறுந்தொகை - மூலமும் உரையும்: டாக்டர் உ.வே.சா உரையும் ஆராய்ச்சியும்
  2. அகநானூறு - மூலமும் தெளிவுரையும்: வ.த. இராமசுப்ரமணியம்  எம். ஏ.
    3.   http://www.tamilvu.org/library/l1210/html/l1210ind.htm
   4.   http://ta.wikipedia.org/s/hv9
   5.   http://ta.wikipedia.org/s/o3e
   6.   http://www.tamilvu.org/library/l1260/html/l1260ind.htm

 


 

 

No comments:

Post a Comment