Wednesday, February 27, 2013

வீட்டு வேலை – நிறைவு


ஒரு வழியா வீட்டு அம்மணிக்கு ஆபிரேஷன் முடிஞ்சிடுச்சு. ஆனா மறு நாள்லேருந்து, எனக்கு வீட்டு வேலை ஆரம்பமாயிடுச்சு. காலைல நான் எழுந்து குளிச்சு, டீ போட்டு குடிச்சு, அம்மணியை எழுப்பி அவுங்களுக்கு இடது கண்ல(ஆபிரேஷன் பண்ணாத கண்) ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு மருந்து போட்டு, அப்புறம் பாலை கலந்து குடுத்து முடிக்கும்போது சரியா, சின்ன மகாராணி எழுந்திருப்பாங்க. அவுங்களை தூக்கி வச்சுக்கிட்டு, அதையும்,இதையும் காமிச்சு பாலை கொடுத்து முடிச்சு, அப்புறம் குளிப்பாட்டிகிட்டு இருக்கும்போதே பெரிய மாகாரணி எந்திரிச்சிடுவாங்க. சின்ன மகாரணியை குளிப்பாட்டி முடிச்சு, டிரஸ் போட்டுவிட்டு, பெரிய மகாரணியை கவனிக்க ஆரம்பிக்கணும். அவுங்களை ரெடி பண்ணி, காலைல சாப்பிடுறதுக்கு பிரட் கொடுத்து, டே-கேருக்கு(day care) கூட்டிக்கிட்டு போகணும். சின்னவங்களை வீட்டில விட்டுட்டு போக முடியாது, அதனால அவுங்களையும் கார்ல உட்காரவச்சு பெல்ட்டை போட்டு, அங்க போனவுடனே அந்த பெல்டை கழட்டி, அவுங்களை தூக்கிக்கிட்டு, பெரியவங்களை கையை புடிச்சு கூட்டிக்கிட்டு போயி விட்டுட்டு வந்து, மறுபடியும் சின்னவங்களுக்கு பெல்ட்டை போட்டு, திருப்பி வீட்டுக்கு  வந்து , கார்லேருந்து அவுங்களை இறக்கி விட்டுட்டு, அம்மணிக்கு வலது கண்ல மருந்து விடணும். அதுவும் சரியா ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு மருந்தும், நாலு மணி நேரத்துக்கு ஒரு மருந்தும் போடணும். அதற்கப்புறம்  பிரட் டோஸ்ட் பண்ணி அவுங்களுக்கு சாப்பிட கொடுத்துட்டு, நானும் சாப்பிடுவேன். சிங்க்ல இருக்கிற கொஞ்ச பாத்திரத்தை கழுவி, கவுத்துட்டு வந்து உட்காரலாம்னு பார்த்தா, சின்னவுங்க அப்ப தான் டாய்லெட் போயிருப்பாங்க. உடனே அவுங்களுக்கு நாப்பியை மாத்திட்டு, அரிசையை எடுத்து குக்கர்ல வச்சுட்டு அப்பாடான்னு உட்காருவேன். கொஞ்ச நேரத்துலேயே, ரெண்டு மணி நேரத்துக்கு போட வேண்டிய மருந்துக்கான நேரம் வந்துரும். மறுபடியும் அவுங்களுக்கு கண்ல மருந்தைப் போட்டுட்டு உட்காருவேன். சின்னவுங்களுக்கு, என்னது இவன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே கவனிச்சிக்கிட்டு இருக்கானே, நம்மளை கவனிக்க மாட்டேங்கிறானேன்னு நினைச்சு அழுக ஆரம்பிச்சுடுவாங்க. இவுங்க அழுவுறாங்களேன்னு தூக்க போனா, என்னைய தூக்க விடமாட்டாங்க. அம்மா தான் தூக்கணும்னு, ரொம்ப பொறுமையை சோதிப்பாங்க. அப்புறம் எப்படியோ, கஷ்டப்பட்டு அவுங்களை தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு பின்னாடி போயி ஆவுங்களோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு, உள்ள வந்தா மதியம் சாப்பிடுறதுக்கான நேரம் வந்துடும். உடனே நண்பர்களின் புண்ணியத்தில், அவர்கள் கொடுத்த சாப்படை எல்லாம் எடுத்து சூடு பண்ணி, முதல்ல சின்னவங்களுக்கு குழவா பிசைந்து, ஊட்டி விட ஆரம்பிப்பேன். அவுங்க பசிக்கு ஒரு நாலு வாய் மட்டும் வாங்கிக்கிட்டு, அப்புறம் சாப்பிட மாட்டேன்னு ரகளை பண்ணுவாங்க. மறுபடியும் அவுங்களை தூக்கிக்கிட்டு வீட்டுக்கு பின்னாடி போயி காக்கா, குருவி எல்லாம் காமிச்சு, எப்படியோ கஷ்டப்பட்டு கொடுத்து முடிச்சுடுவேன். சில நாள்ல, அதுல கொஞ்சத்தை வச்சுடுவாங்க. உடனே அம்மணி, உங்களுக்கு அவளை டாக்கிள் பண்ண தெரியலை. நானாயிருந்தா எப்படியாவது அவளுக்கு ஊட்டி விட்டுடுவேன்னு புலம்புவாங்க (சின்னவங்க ஒழுங்கா சாபிடலையாம்!!). அப்புறம் தட்டுல அவுங்க கேக்கிறதை எல்லாம் எடுத்து வச்சு கொடுத்துட்டு, நானும் சாப்பிட்டு முடிச்சு, மறுபடியும் அந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிச்சா, பெரியவங்களை கூப்பிட போற நேரம் வந்துடும்,அவுங்களை போயி கூட்டிக்கிட்டு வந்து, ரெண்டு மகாரணிகளுக்கும்,அம்மணிக்கும் பாலை கொடுத்து, அப்புறம் நான் டீயை போட்டு குடிச்சு, வீட்டுல இருக்கிற நொறுக்குத் தீனியை ரெண்டு பேருக்கும் சாப்பிட கொடுத்து மறுபடியும் அம்மணிக்கு கண்ணுல மருந்தை போட்டுவிட்டு உட்கார்ந்தா, ரெண்டு மகாரணிகளுக்குள்ள சண்டை வந்துடும், அந்த சண்டையை பஞ்சாயத்து பண்ணி முடிச்சு, ராத்திரிக்கு நண்பர்கள் கொடுத்த மாவை வச்சு தோசையை எல்லோருக்கும் ஊத்திக் கொடுத்து,ஊட்டிவிட்டு,நாங்க சாப்பிட்டு முடிச்சு, அந்த பாத்திரதை எல்லாம் கழுவி வச்சா படுக்கிற நேரம் வந்துடும். மறுபடியும் கண்ணுக்கு மருந்து போட்டுட்டு, ரெண்டு பேரையும் தூங்க வச்சுட்டு, சரி, நாம போய், இந்த வலைப்பூவுக்கு எதாவது கிறுக்கலாம்னு யோசிப்பேன். அது வெறும் யோசிப்போட முடிஞ்சிடும். ஏன்னா கண்ணு ரெண்டும் என்னைய தூங்க வைன்னு கெஞ்ச ஆரம்பிச்சிடும்.அப்புறம் எங்கேருந்து கணினி பக்கம் போறது, அதனால நானும் தூங்க போயிடுவேன். இதுல நடுவுல மூணு நாலு தடவை துனியெல்லாம் துவைச்சு காயப்போட்டு, அப்புறம் மடிச்சு வைக்கணும். வீடு ரொம்ப குப்பையா இருக்குனு, அம்மணி ஒரே புலம்பல், அதை நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல வெளியே விட்டுடுவேன். ஒரு நாள் அவுங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு, நானே எப்படியோ வீட்டை முழுக்க கூட்டுரேன்னாங்க. ஐயையோ, வம்பா போச்சேன்னு நினைச்சுக்கிட்டு (அவுங்க ஒரு நாலு வாரத்துக்காவது குனியக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க), அதனாலே நானே வீட்டை கூட்டினேன். இதுல பெரிய மகாராணி வாரத்துல மூணு நாள் தான் டே-கேருக்கு போவாங்க. மத்த நாள்ல எல்லாம் வீட்டுல தான் இருப்பாங்க. அப்ப, ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது இருக்கே, அப்பப்பா! நாக்கு தள்ளிடும்.
அந்த ரெண்டு வாரத்துல தான் தெரிஞ்சுது, வீட்டு வேலையும் ஒண்ணும் சாதாரணமானது இல்லைன்னு. நான் ஆபிஸ்ல இருக்கும்போது, மெயில், தினமலர், விகடன்ன்னு இப்படி எல்லாத்தையும் பாத்துக்குவேன். ஆனா அந்த ரெண்டு வாரமும், என்னால ஒண்ணு கூட பார்க்க முடியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்தியாவில வீட்டு வேலை பார்க்கும் மனைவிக்கு, கணவன் சம்பளம் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர போறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். கணவன் வெளியில போய் சம்பாதிக்கிறான், மனைவி வீட்டில் இருந்து, வீட்டை கவனிச்சுக்கிறாங்க, இதுல எதுக்கு மனைவிக்கு சம்பளம்னு யோசிச்சேன். ஆனா, இந்த ரெண்டு வாரம் வீட்டை கவனிச்சுக்கிட்டதுல, அவுங்களுக்கும் சம்பளம் முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது அவுங்களை உற்சாகப்படுத்தும். மேலும் அவுங்களுக்கு நாமளும் சம்பாதிக்கிறோம்னு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். அதனால நான் அடுத்த மாசத்திலிருந்து அவுங்களுக்கு ஒரு சம்பளத்தை போட்டுக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். 




Friday, February 15, 2013

காதலர் தினம்


எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன். ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா,,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். எனக்கு தெரிஞ்சதை, இந்த கவிதைல சொல்லியிருக்கிறேன் (கவிதைன்னு நீங்க நம்புவீங்க என்ற நம்பிக்கையில்,கவிதைன்னு சொன்னேன்). 


விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்

எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். இன்னைக்கு காதலர் தினமா இருக்கிறதுனால, இந்த பதிவை போடும்படி ஆகிவிட்டது. இல்லை என்றால், என்னோட சோக கதையை, அதாங்க, நான் கஷ்டப்பட்டு வீட்டு வேலை செஞ்சதை பத்தி எழுதியிருப்பேன். கண்டிப்பா அடுத்த பதிவு அது தாங்க.

Monday, February 11, 2013

வீட்டு வேலை


எங்க வீட்டு அம்மணி, நீங்க பாட்டுக்கு காலைல 7.30 மணிக்கு கிளம்பி போயி ராத்திரி 7.30 மணிக்கு தான் வீட்டுக்கு வரிங்க. அதனால உங்களுக்கு நான் வீட்டுல செய்யுற வேலை எதுவுமே தெரிய மாட்டேங்குது. ஒரு நாளாவது, நான் உங்களை மாதிரி வெளில போயிட்டு, நீங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு பார்த்தா தான் தெரியும், ஆபிஸ் வேலையை காட்டிலும் வீட்டு வேலை எவ்வளவு கஷ்டம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. கெட்டதை எல்லாம் யாராவது சொன்னாங்கன்னா, காதை பொத்திக்கணும்னு சின்ன வயசுல அம்மா சொன்னது தான் அந்த நேரத்துல நியாபகத்துக்கு வருமா, அதனால நானும் அவுங்களோட இந்த புலம்பலை எல்லாம் கேக்குற மாதிரி ஒரு காதுல கேட்டு இன்னொரு காதுல வெளியே விட்டுருவேன் (அவுங்க முன்னாடி காதை பொத்திக்க முடியுமா என்ன!!!).இவங்களுக்கு எல்லாம் வீட்டை நிர்வாகம் பண்றதுனால, நாட்டையே நிர்வாகம் பண்றோம்னு ஒரு நினைப்பு, அதான், எப்பப்பார்த்தாலும் உலகத்துலேயே, வீட்டு வேலை செய்யுறது தான் ரொம்ப கஷ்டமான வேலைன்னு ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். ஆனா அவுங்களோட இந்த புலம்பல் ஒரு நாளைக்கு உண்மையாக போகுதுன்னு எனக்கு அப்பவெல்லாம் தெரியலை.

எங்க வீட்டு அம்மணிக்கு ரெண்டு கண்ணுலையும் பிரஷர் இருக்கு,அதுலேயும் ஒரு கண்ணு ரொம்பவே மோசமா பாதிச்சிருச்சு. அதனால அந்த கண்ணுக்கு ஆபிரேஷன் செஞ்சாகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மூணு வாரத்துக்கு முன்னாடி, அந்த ஆபிரேஷனை வீட்டு அம்மணி செஞ்சுக்கிட்டாங்க. இந்த ஆபிரேஷன் செஞ்சதுனால ஆறு வாரத்துக்கு ரொம்ப வேலை எல்லாம் செய்யக்கூடாது, முக்கியமா தலையை குனியக்கூடாது, அதிக எடை உள்ள பொருளையோ,குழந்தையோ தூக்கக்கூடாது. அப்புறம் சமையல் செய்யக் கூடாதுன்னு, இப்படி ஏகப்பட்ட கூடாதுகளை எல்லாம் டாக்டர் சொன்னாரு. ஆஹா, நாம நம்மலாள ஆறு வாரம் எல்லாம் லீவு போட முடியாது, எப்படியும் ஒரு ரெண்டு வாரமாவது லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செய்யணும் போல இருக்கேன்னு அப்பத்தான் என்னோட மண்டைல ஒரைச்சது. சரி, கழுதை வீட்டு வேலை என்ன பெரிய கொம்பான்னு நினைச்சுக்கிட்டு கோதாவுல இறங்கிட்டேன். ஆபிரேஷன் செய்யுற அன்னையிலிருந்தே என்னோட பொறுமையை சோதிக்கிற நாள் ஆரம்பமாயிடிச்சு. 12.30 மணிக்கு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்னு சொன்னாங்க. நாங்களும் எங்களோட நண்டு,சிண்டை எல்லாம் கூட்டிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனோம். ஒரு மணி நேரம் கழிச்சு, ஒரு நர்சம்மா வந்து, வீட்டு அம்மணியை கூட்டிக்கிட்டு உள்ளே போனாங்க. அவுங்க உள்ள போன உடனே, என்னோட ரெண்டாவது மகாரணியார்  அம்மான்னு ஒரு கத்து கத்துன்னாங்க பாருங்க, அங்க உட்கார்ந்திருந்தவுங்க எல்லாரும் குழந்தைக்கு என்னமோ ஆயிடிச்சுன்னு என் பக்கத்துல வந்து என்னாச்சு, என்னாச்சுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும், ஒண்ணும் ஆகலை, அவுங்க வந்து “அம்மா கொடுக்கு” அதனால தான் இப்படின்னு சொன்னேன். (சின்ன மகாரணிக்கு அம்மா மட்டும் இருந்தா போதும். அதுவும் ராத்திரியாயிட்டா, நான் என்ன கொடுத்தாலும் சரி, நீ வேண்டாம், எனக்கு அம்மா தான் வேணும்னு சொல்லி, என்கிட்டவே வர மாட்டாங்க). அங்க இருந்த இன்னொரு தாத்தா, பெரிய குழந்தை சமத்தா இருக்குதே, பரவாயில்லையேன்னு சொன்னாரு. நான், அவருக்கிட்ட, இவுங்க “அப்பா கொடுக்கு” அதான் கத்தலை அப்படின்னேன்(இவுங்க சின்னவுங்களுக்கு நேர் எதிர், இவுங்களுக்கு நான் இருந்தா போதும். அதுவும் சனி, ஞாயிறுல எல்லாமே நான் தான் இவங்களுக்கு பண்ணனும்). சின்ன மகாராணியோட அழுகையை கேட்டு, வெளியே வந்த இன்னொரு நர்ஸ், நீங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து, உங்க மனைவியை கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லி, நேரடியா வெளியில போங்கன்னு சொல்லாம என்னைய வெளியே துரத்தி விட்டுட்டாங்க. நானும் ஒரு ரெண்டு மணி நேரம் தானே, எப்படியாவது இவுங்க ரெண்டு பேரையும் சமாளிப்போம்னு நினைச்சுக்கிட்டு, ரெண்டு பேரையும் வெளியே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா ரெண்டு மணி நேரம் எல்லாம் ஆகலை, அஞ்சு மணி நேரம் ஆச்சுங்க, வீட்டு அம்மணி வெளியில வர்ரதுக்கு. ஆபிரேஷன் என்னமோ ஒன்றரை மணி நேரம் தான். மிச்ச நேரம் எல்லாம் அவுங்க வெளியில உட்கார்ந்து காத்துக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, உள்ள உட்கார்ந்து காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. அந்த அஞ்சு மணி நேரம், ரெண்டு மகாரணிகளையும் பார்த்துக்கிட்டு இருந்ததே பெரிய சாதனையா போச்சு எனக்கு. சரி, அந்த ரெண்டு வாரத்திலே, நான் எப்படி வீட்டு வேலை எல்லாம் செஞ்சேன்னு அடுத்த பதிவுல சொல்றேன் (பாத்திரம் எல்லாம் கழுவி, ரொம்ப அசதியாயிடுச்சு!!!)