Wednesday, February 12, 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்

நம் வலைப்பூ நண்பர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு ஒரு மாபெரும் கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த போட்டிக்கான கடைசி நாள் சனவரி மாதம் 10ஆம்தேதி. அந்த சமயங்களில் தான் நான் மிகவும் மும்முரமாக கம்பன் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈடுப்பட்டிருந்தேன். சரி, நம்மால் இதில் பங்கேற்கமுடியாது என்று எண்ணி, இந்த போட்டியில் ஈடுபடாமல் இருந்துவிட்டேன். இரு நாட்களுக்கு முன்பு தான் நண்பர் பாண்டியனின் வலைப்பூவில், இந்த கட்டுரை போட்டியின் இறுதி நாளை தள்ளி வைத்திருக்கும் விஷயம் தெரியவந்தது. சரி, முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று களத்தில் இறங்கி கட்டுரையை முடித்தேன். எந்த அளவிற்கு அது கட்டுரையாக வந்துள்ளது என்று தெரியவில்லை. இதோ அந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு . நான் எடுத்துக்கொண்ட தலைப்பு - "இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்" 

முன்னுரை:

ஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்துரைத்து,அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதாவது பத்து ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட திரைப்படங்கள் எல்லாம் அவ்வாறு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லமுடியும். ஏன் நான் இல்லை என்று சொல்கிறேன் என்றால், இன்றைய திரைப்படங்களின் மாறுபட்ட போக்கினால் சமுதாயத்திற்கு பெரிய பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாறுப்பட்ட போக்கினால் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம்:

ஒரு சமுதாயத்தின் அங்கத்தினார்களாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் இன்றைய திரைப்படங்களினால் எவ்வாறு பாதிக்கப்பட்டுளார்கள் என்று பார்க்கலாம்.

குழந்தைகள்:

குழந்தைகளின் மனது ஒரு களிமண்ணைப் போன்றது. எந்த ஒரு விஷயமும் அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். அதனால் தான் அவர்களுக்கு அந்த வயதில் நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆனால், இன்றைக்கு வரும் அநேக திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளும், படுக்கையறைக்காட்சிகளும் தான் அதிகமாக இடம்பெறுகின்றன. இம்மாதிரியான காட்சிகளை அவர்களின் மனதில் பதிய வைப்பதில் இன்றைய திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

விடலைப் பருவத்தில் இருக்கும் சிறுவசிறுமியர்கள்:

விடலைப் பருவம் என்பது பதிமூன்று வயதிலிருந்து பத்தொன்பது,இருபது வயதிலான காலகட்டம். இந்த பருவத்தில் தான் ஆண்,பெண் இருபாலருக்கும் உடல் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடல் மாற்றத்தினால் எதிர் பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய திரைப்படங்கள் அவர்களுக்கு நல்லொழுக்கத்தையா சொல்லிக்கொடுக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் காதலிப்பது மாதிரி படம் எடுக்கிறார்கள். இதனைப் பார்த்து, மாணவர்கள் படிக்காமல் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சிறுவர்களை குற்றவாளியாக சித்தரித்து, அவர்களின் செயலுக்கு நியாயத்தையும் கற்பிக்கிறார்கள். இன்றைக்கு வெளிவரும் படங்களில் பாதிக்கும் மேல் கற்பழிப்பு காட்சிகள் இல்லாமல் வருவது இல்லை. பழைய படங்களில் இம்மாதிரியான  காட்சிகளை புலி மானை வேட்டையாடுவது போல நாசூக்காக காட்டுவார்கள். ஆனால் இன்றைக்கு வரும் திரைப்படங்களிலோ அப்பட்டமாக அக்காட்சிகளை காட்டுவதினால், சிறுவர்களின் மனதில் விரசத்தை ஏற்படுத்துகிறார்கள். சமீபத்தில் டெல்லியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் பதினேழு வயதுடைய  சிறுவனும் ஒருவன். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு  மாணவன் ஒருவன் தன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். தான் பார்த்த ஒரு திரைப்படத்தில் இப்படித்தான் கத்தியால் குத்துவார்கள், அதைப்பார்த்து தான் நான் இவ்வாறு செய்தேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான். பள்ளிக்கூட வயதில் ஒழுக்கத்தோடு, நன்றாக படிக்கவும் வேண்டிய மாணவர்கள், இன்றைய திரைப்படங்களினால் பிஞ்சிலே பழுத்து திசைமாறி போவது மிகவும் வேதனையான விஷயாமாகும்.

இளைஞர்கள்:

கல்லூரி மாணவர்கள் என்றாலே, தம் அடிப்பதும், தண்ணி அடிப்பதும் மேலும் அடி தடி கலாட்டாக்களில் ஈடுபடுபவர்களாகத்தான் இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஒரு விபரீதமான எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு அதே எதிர்பார்ப்பார்ப்போடு வந்து சீரழிந்து போகிறார்கள். மேலும் இன்றைய திரைப்படங்களில் காட்டப்படும் கல்லூரி காதலில் பெரும்பாலும் உடல் சம்பந்தப்பட்டதாகவும், டைம்பாஸ் காதலாகவுமே காட்டப்படுகிறது. என்னைப் பொருத்தவரையில் படிக்கின்ற வயதில் காதலிக்கக்கூடாது. அப்படியே காதலித்தாலும், அது உண்மையான காதலாக இருக்கவேண்டும் என்றே நினைப்பவன். இம்மாதிரி படங்களினால் உண்மையான காதலே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள்:

இன்றைய திரைப்படங்களை, குடும்பத்துடன் சென்று பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மேல சொல்லப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதையும் மீறி, “குடும்பத்துடன் இந்த படத்தை கண்டுக்களிக்கலாம்” என்று சொல்லப்படுகிற படத்திற்கு போனால், அதிலும் இரட்டை அர்த்த வசனங்களும், குத்துப்பாட்டு என்று அருவருக்கத்தக்க நடன காட்சிகளும்,உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்கிற காட்சிகளும்  இடம்பெறுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொள்கிற காட்சி, படத்தில் முக்கியமான காட்சி. அதனால் அதனை படம்பிடித்துள்ளோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஒரு முத்தக்காட்சி, படத்திற்கு தேவையான முக்கியமான காட்சியாம். இந்த அளவிற்கு இன்றைய திரைப்படத்தின்போக்கு மாறியிருக்கிறது.

முடிவுரை:


முப்பது,நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படங்களினால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லையா என்று எண்ணத்தோன்றும். அன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லக்கூடிய தரமான படங்கள் அதிகமாவும், இம்மாதிரி தரமற்ற படங்கள் குறைவாகவும் வெளிவந்திருக்கிறது. அதனால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இன்றோ, தரமற்ற படங்கள் அதிகமாவும், தரமான படங்கள் வெகு குறைவாகவும் வெளிவருவதால், சமூகத்தில் பாதிப்புகள் அதிகமாக ஏற்படக் காரணமாக அமைகிறது. இந்நிலை மாறுவதற்கு, மக்கள் தரமற்ற படங்களை ஒதுக்கிவிட்டு, தரமான படங்களுக்கு மட்டும் ஊக்கம் கொடுத்தால், எதிர்காலத்தில் கண்டிப்பாக தரமற்ற படங்கள் ஒழிந்து தரமான படங்கள் மட்டும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. 

20 comments:

  1. கட்டுரை அருமையாக வந்திருக்கிறது சகோ!
    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  2. ஒவ்வொரு தலைப்புகளுடன் அருமையாக எழுதி உள்ளீர்கள்... போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு நல்ல திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்துரைத்து,அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்///

      திரைப்படம் ஒரு பொழுது போக்கே அது நம்மை நல்வழிபடுத்த வேண்டுமென்று நினைத்தால் அது தவறே. அரசியல் சாக்கடை என்றால் திரைபடம் ஒரு கழிப்பறையே. கழிப்பறையில் போய் நாம் நல்லதை கற்று வர வேண்டும் என்று நினைப்பது தவறே,

      மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களும் ஆசிரியர்களும்தானே ஒழிய திரைப்பட டைரக்டர்கள் அல்ல குழந்தைகள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது பெற்றோர்களும் அதே சமயத்தில் ஆரம்ப பள்ளிகூட ஆசிரியர்களும் நல்ல கருத்தை எடுத்துரைத்து நல்வழிப்படத்த வேண்டும். அப்படி செய்தால்தான் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அப்படி வளரும் குழந்தைகள்தான் திரைபடத்தை பொழுது போக்காக பார்த்துவிட்டு பொழுதை போக்கிவிட்டு செல்வார்கள். ஆனால் நாம் அப்படி செய்வதை விட்டு திரைப்படம் நம்மை நல்வழி படுத்த வேண்டும் என நினைப்பது மிக தவறே

      Delete
    2. திரைப்படங்கள் பொழுது போக்கோடு, நல்ல கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். இந்தப் பார்வையானது மற்றவர்களிடமிருந்து வேறுபடலாம்.

      Delete
  4. வணக்கம் சகோதரா !
    நல்ல தலைப்பே தெரிவு செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி !.
    பொழுது போக்குக்காக விளையாடுகிறோம் அவைகளில் சில மூளைக்கு வேலையும் பயிற்சியும் கொடுக்கிறது, அதே போல் சிலது உடலுக்கு பலத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது புஸ்தகங்கள் வாசிக்கிறோம்.அல்லவா அவை அறிவு பெருகவும் ஞாபகசக்தியை கூட்டுபவையாகவும் இல்லையா. அதே போன்று நிச்சயமாக திரைப்படங்களும் பொழுது போக்கு அம்சத்தோடு நல்ல கருத்துக்களை தெரிவிக்கவே வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் சொல்வதையும் விடவும் தமக்கு பிடித்த நடிகர்கள் சொல்வது இலகுவாகவும் விரைவாகவும் படித்தவர்களையும், பாமரர்களையும், குழந்தைகளையும் சென்றடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதுவே சொல்பவை நல்லவைகளாக இருந்தால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகாதா.

    தாங்களின் கருத்துகள் அனைத்தும் சரியே உண்மையே. குழந்தைகள் மனது களிமண்ணை போன்றது என்பது எவ்வளவு உ ண்மையான விடயம் கொடுக்கும் விடயத்தை பொறுத்தே வடிவங்கள் அமையும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    ஆதங்கத்தையும் கொட்டிவிட்டீர்கள் . அருமை அருமை !
    போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோ. நீங்கள் சொல்வது உண்மை தான், நமக்கு பிடித்தவர்கள் சொல்லும்போது,நாம் அதை உடனே ஏற்றுக்கொள்கிறோம்.வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. கட்டுரை சிறப்பாக வந்துள்ளது! வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  6. தாமதமான நன்றியை சொல்லுவதற்கு மன்னிக்கவும் தனபாலன்.
    மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வாழ்த்துக்களுக்கு மிக்க நர்ணி சுரேஷ்.

    ReplyDelete
  8. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.....

    கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  9. வணக்கம் சகோதரர்
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
    முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

    ReplyDelete
  10. வணக்கம்.
    ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
    தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..
    http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

    சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
    மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
    சந்திப்போம்.....
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
  11. அன்பார்ந்த சகோதரர்கள் பாண்டியன் மற்றும் ரூபன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    கட்டுரை போட்டியை செம்மையாக நடத்திய உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதற்கு நடுவார்களாக விளங்கிய கவிஞர் திரு முத்துநிலவன் ஐயா, கவிஞர் திரு வித்தியாசாகர் ஐயா மற்றும் கவிஞர் திரு செல்லப்பா ஐயா ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த போட்டியை வழிநடத்திய திரு ரமணி ஐயா, திரு திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
    போட்டியை நடத்துபவர்களுக்கு ஊக்கம் அளிக்க இதில் பங்குக்கொண்ட சக வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இறுதியாக, என்னுடைய கட்டுரைக்கு ஆறுதல் பரிசு வழங்கி என்னை கவுரவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். கண்டிப்பாக இந்த பரிசு இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் பங்குப்பெற எனக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.



    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சகோதரரே!
    தாங்களும் வெற்றி பெற்றதையிட்டு மட்டிலா மகிழ்ச்சியே.
    இன்னும் பல போட்டிகளில் கலந்து வெற்றிகள் பெற வேண்டும்.என்று மனமார வாழ்த்துகிறேன்...! இனியாவும் ஓவியாவும் சந்தோஷப் பட்டிருப்பார்கள் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
      இனியாவிற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஓவியாவும், மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

      Delete
  13. அருமையான பதிவு

    ReplyDelete