Monday, February 11, 2013

வீட்டு வேலை


எங்க வீட்டு அம்மணி, நீங்க பாட்டுக்கு காலைல 7.30 மணிக்கு கிளம்பி போயி ராத்திரி 7.30 மணிக்கு தான் வீட்டுக்கு வரிங்க. அதனால உங்களுக்கு நான் வீட்டுல செய்யுற வேலை எதுவுமே தெரிய மாட்டேங்குது. ஒரு நாளாவது, நான் உங்களை மாதிரி வெளில போயிட்டு, நீங்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு பார்த்தா தான் தெரியும், ஆபிஸ் வேலையை காட்டிலும் வீட்டு வேலை எவ்வளவு கஷ்டம்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. கெட்டதை எல்லாம் யாராவது சொன்னாங்கன்னா, காதை பொத்திக்கணும்னு சின்ன வயசுல அம்மா சொன்னது தான் அந்த நேரத்துல நியாபகத்துக்கு வருமா, அதனால நானும் அவுங்களோட இந்த புலம்பலை எல்லாம் கேக்குற மாதிரி ஒரு காதுல கேட்டு இன்னொரு காதுல வெளியே விட்டுருவேன் (அவுங்க முன்னாடி காதை பொத்திக்க முடியுமா என்ன!!!).இவங்களுக்கு எல்லாம் வீட்டை நிர்வாகம் பண்றதுனால, நாட்டையே நிர்வாகம் பண்றோம்னு ஒரு நினைப்பு, அதான், எப்பப்பார்த்தாலும் உலகத்துலேயே, வீட்டு வேலை செய்யுறது தான் ரொம்ப கஷ்டமான வேலைன்னு ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். ஆனா அவுங்களோட இந்த புலம்பல் ஒரு நாளைக்கு உண்மையாக போகுதுன்னு எனக்கு அப்பவெல்லாம் தெரியலை.

எங்க வீட்டு அம்மணிக்கு ரெண்டு கண்ணுலையும் பிரஷர் இருக்கு,அதுலேயும் ஒரு கண்ணு ரொம்பவே மோசமா பாதிச்சிருச்சு. அதனால அந்த கண்ணுக்கு ஆபிரேஷன் செஞ்சாகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மூணு வாரத்துக்கு முன்னாடி, அந்த ஆபிரேஷனை வீட்டு அம்மணி செஞ்சுக்கிட்டாங்க. இந்த ஆபிரேஷன் செஞ்சதுனால ஆறு வாரத்துக்கு ரொம்ப வேலை எல்லாம் செய்யக்கூடாது, முக்கியமா தலையை குனியக்கூடாது, அதிக எடை உள்ள பொருளையோ,குழந்தையோ தூக்கக்கூடாது. அப்புறம் சமையல் செய்யக் கூடாதுன்னு, இப்படி ஏகப்பட்ட கூடாதுகளை எல்லாம் டாக்டர் சொன்னாரு. ஆஹா, நாம நம்மலாள ஆறு வாரம் எல்லாம் லீவு போட முடியாது, எப்படியும் ஒரு ரெண்டு வாரமாவது லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செய்யணும் போல இருக்கேன்னு அப்பத்தான் என்னோட மண்டைல ஒரைச்சது. சரி, கழுதை வீட்டு வேலை என்ன பெரிய கொம்பான்னு நினைச்சுக்கிட்டு கோதாவுல இறங்கிட்டேன். ஆபிரேஷன் செய்யுற அன்னையிலிருந்தே என்னோட பொறுமையை சோதிக்கிற நாள் ஆரம்பமாயிடிச்சு. 12.30 மணிக்கு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்னு சொன்னாங்க. நாங்களும் எங்களோட நண்டு,சிண்டை எல்லாம் கூட்டிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனோம். ஒரு மணி நேரம் கழிச்சு, ஒரு நர்சம்மா வந்து, வீட்டு அம்மணியை கூட்டிக்கிட்டு உள்ளே போனாங்க. அவுங்க உள்ள போன உடனே, என்னோட ரெண்டாவது மகாரணியார்  அம்மான்னு ஒரு கத்து கத்துன்னாங்க பாருங்க, அங்க உட்கார்ந்திருந்தவுங்க எல்லாரும் குழந்தைக்கு என்னமோ ஆயிடிச்சுன்னு என் பக்கத்துல வந்து என்னாச்சு, என்னாச்சுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும், ஒண்ணும் ஆகலை, அவுங்க வந்து “அம்மா கொடுக்கு” அதனால தான் இப்படின்னு சொன்னேன். (சின்ன மகாரணிக்கு அம்மா மட்டும் இருந்தா போதும். அதுவும் ராத்திரியாயிட்டா, நான் என்ன கொடுத்தாலும் சரி, நீ வேண்டாம், எனக்கு அம்மா தான் வேணும்னு சொல்லி, என்கிட்டவே வர மாட்டாங்க). அங்க இருந்த இன்னொரு தாத்தா, பெரிய குழந்தை சமத்தா இருக்குதே, பரவாயில்லையேன்னு சொன்னாரு. நான், அவருக்கிட்ட, இவுங்க “அப்பா கொடுக்கு” அதான் கத்தலை அப்படின்னேன்(இவுங்க சின்னவுங்களுக்கு நேர் எதிர், இவுங்களுக்கு நான் இருந்தா போதும். அதுவும் சனி, ஞாயிறுல எல்லாமே நான் தான் இவங்களுக்கு பண்ணனும்). சின்ன மகாராணியோட அழுகையை கேட்டு, வெளியே வந்த இன்னொரு நர்ஸ், நீங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து, உங்க மனைவியை கூட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லி, நேரடியா வெளியில போங்கன்னு சொல்லாம என்னைய வெளியே துரத்தி விட்டுட்டாங்க. நானும் ஒரு ரெண்டு மணி நேரம் தானே, எப்படியாவது இவுங்க ரெண்டு பேரையும் சமாளிப்போம்னு நினைச்சுக்கிட்டு, ரெண்டு பேரையும் வெளியே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா ரெண்டு மணி நேரம் எல்லாம் ஆகலை, அஞ்சு மணி நேரம் ஆச்சுங்க, வீட்டு அம்மணி வெளியில வர்ரதுக்கு. ஆபிரேஷன் என்னமோ ஒன்றரை மணி நேரம் தான். மிச்ச நேரம் எல்லாம் அவுங்க வெளியில உட்கார்ந்து காத்துக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, உள்ள உட்கார்ந்து காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. அந்த அஞ்சு மணி நேரம், ரெண்டு மகாரணிகளையும் பார்த்துக்கிட்டு இருந்ததே பெரிய சாதனையா போச்சு எனக்கு. சரி, அந்த ரெண்டு வாரத்திலே, நான் எப்படி வீட்டு வேலை எல்லாம் செஞ்சேன்னு அடுத்த பதிவுல சொல்றேன் (பாத்திரம் எல்லாம் கழுவி, ரொம்ப அசதியாயிடுச்சு!!!)

1 comment:

  1. ஆபரேசன் செய்ய ஒன்றரை மணிநேரம் ஆச்சுதா? ... ஆனா இதே ஆபரேசன் செய்வதற்கு இப்போதெல்லாம் (2020 ல்) வெறும் 5 நிமிட நேரம் கூட ஆகுறது இல்லை !!! ... பார்த்தீர்களா மருத்துவமும், அறிவியலும் குறுகிய ஆண்டுகளுக்குள் எவ்வளவு அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ... !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete