Saturday, August 31, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – முதல் படப்பிடிப்பு காட்சிக்கு தயாரானது


எப்படியும் நாலைந்து காட்சில நடிக்கணும்னு சொல்லியிருந்ததுனால, இந்த முத காட்சியோட படப்பிடிப்பில கலந்துக்காம அடுத்த காட்சியோட படப்பிடிப்பில் கலந்துக்கலாமான்னு, அவுங்க கிட்ட போன்ல கேட்டேன். அதுக்கு அவுங்க, நீங்க வர்ற காட்சியெல்லாம் கோர்வையா வரும், அதனால அந்த மாதிரி பண்ண முடியாது. நாளைக்கு நீங்க வரலைன்னா, படத்துல நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க. அத்திப் பூத்த மாதிரி நமக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு, அதை ஏன் கெடுத்துக்கணும்னு முடிவு பண்ணி, கான்பெராவிலிருந்து மாலை 4மணிக்கு கிளம்பி, இரவு 7.30மணிக்கு வீட்டுக்கு வந்துட்டோம். நாளைக்கு காலையில சரியா 8மணிக்கு படப்பிடிப்பு தளமான ஹாரிஸ் பார்க்கில் இருக்கும் “spice of life”க்கு வந்துடுங்க. வரும்போது 4 set formal dress, 4 set informal dress, அதுல 2 t-shirt அப்புறம் shoes,chappal, இதையெல்லாம் கொண்டு வந்துடுங்கன்னு இரவு 8மணிக்கு மறுபடியும் போன் பண்ணி சொன்னாங்க. அப்பவே, அவுங்க சொன்ன dress எல்லாம் எடுத்து பெட்டில வச்சுட்டேன். மறு நாள் காலைல குடும்பத்தோட, சரியா 7.50க்கு எல்லாம் அந்த எடத்துக்கு போய் சேர்ந்தேன். பார்த்தா என்னோட இரண்டு நண்பர்கள் மட்டும் வந்திருந்தாங்க. அந்த ரெஸ்டாரண்ட்டும் திறக்கலை. நாங்க அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியிலே வாட்ச்மேன் வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். படப்பிடிப்புக்கு தேவையான வேறு சில பெரிய பெரிய கருவிகளை எல்லாம் இந்த ஊர்ல இருக்கிற சினிமா கம்பெனி ஆளுங்க   அதையெல்லாம் கொண்டு வந்து செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆக மொத்தத்துல நாங்களும் அந்த வெள்ளைக்கார ஆளுங்களும் தான் சொன்ன நேரத்துக்கு வந்திருந்தோம். சரியா 9மணிக்கு ஒரு பெரிய பஸ் வந்துச்சு. இயக்குனர், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர், எடுபிடிகள்ன்னு எல்லோரும் அதிலிருந்து இறங்கினார்கள். அவுங்களோட காலை உணவும் இறங்கிச்சு. வண்டியிலிருந்து இறங்கின எல்லோரும் முத வேலையா பேப்பர் தட்டை எடுத்துக்கிட்டு இட்லி சாம்பாரை சாப்பிட ஆரம்பிச்சாங்க. எங்களை யாரும் ஒண்ணும் கண்டுக்கவேயில்லை. அப்ப தான் அந்த ரெஸ்டாரண்ட்டையே திறந்தாங்க. ஒரு வழியா உதவி இயக்குனர் கிருஷ்ணா எங்களிடம் வந்து, நீங்க உங்களோட துணிமனியெல்லாம் எடுத்துக்கிட்டு போய், அங்க நிக்கிற பல்லவிக்கிட்ட போய் காட்டுங்க, அவுங்க இந்த காட்சிக்கு என்ன போட்டுக்கலாம்னு சொல்லுவாங்கன்னு சொன்னாரு. நாங்க எல்லாரும் பெட்டியை எடுத்துக்கிட்டு போய் அந்த பல்லவி முன்னாடி கடையை விரிச்சொம். அந்த பொண்ணும், எல்லார்க்கிட்டேயும், நீங்க இதை போட்டுக்கிட்டு வாங்க, நீங்க அதை போட்டுக்கிட்டு வாங்கன்னு சொன்னுச்சு. நாங்களும் ரெஸ்டாரண்ட்க்குள் போய் மாத்திக்கிட்டு, தலையெல்லாம் சீவி, பல்லவி முன்னாடி வந்து நின்னோம் அந்த பல்லவியும் அவுங்களோட உதவியாளர் ஒருவரை கூப்பிட்டு, இவருக்கு அந்த கண்ணாடியை கொடுங்க, இவருக்கு இந்த கண்ணாடியை கொடுங்க, இவருக்கு இந்த பட்டையான சங்கலியை கொடுங்கன்னு ஆர்டர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்ப எனக்கு ஒரு சோடா புட்டி கண்ணாடியை கொடுத்தாங்க. அதை போட்டவுடனே, எனக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரிஞ்சுது. என்னங்க, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியிது, இதென்ன பவர் கண்ணாடியான்னு கேட்டேன். ஆமா, , கொஞ்சம் பவர் தான், ஆனா ஒண்ணும் பிரச்சனை இல்லை அப்படின்னாங்க. அடப்பாவிகளா! உங்க படத்துல ஏதோ ரெண்டு மூணு காட்சில நடிக்கிறதுக்காக, என்னோட கண்ணை நொல்லை கண்ணாக்கிவிடுவீங்க போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு,சரி பரவாயில்லை, டேக்குக்கு(!) போகும்போது மட்டும் அந்த கண்ணாடியை போட்டுக்கலாம்னு முடிவு பண்னி,அந்த கண்ணாடியை டி-ஷர்ட்ல வெளியில தெரியிர மாதிரி மாட்டிக்கிட்டேன். . இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு பொருளை கொடுத்து போட்டுக்க சொன்னாங்க. அதுக்குள்ள அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா வந்து, பல்லவியிடம் என்ன! எல்லோரும் ரெடியான்னு கேக்க ஆரம்பிச்சார். அவுங்களும் இன்னும் இரண்டு பேர் தான் ரெடியாகலை. ஐந்து நிமிஷத்துல ரெடியாயிடுவாங்கன்னு சொன்னாங்க. கிருஷ்ணா எங்களை எல்லாம் இயக்குனர் கிட்ட கூட்டிக்கிட்டு போனாரு. இயக்குனரும் எங்களுக்கு, நாங்க நடிக்க வேண்டிய காட்சியை விளக்கி சொல்ல ஆரம்பிச்சாரு.

-    இன்னும் சொல்கிறேன்


Wednesday, August 21, 2013

555 – விமர்சனம்


படத்தோட தலைப்பை பார்த்தவுடன், இதென்ன சிகரெட் பேர் மாதிரி இருக்கிறதேன்னு யோசிச்சுக்கிட்டே படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சிகரெட் பேருக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 555ன்னு பொறிக்கப்பட்ட ஒரு லாக்கெட்டினால் பெரிய விபத்து ஏற்படுகிறது. அதனால் தான் இந்த தலைப்பை வைத்து இருப்பார்கள் போல. வில்லனிடமிருந்து, தன்னையும் தன் காதலியையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார் பரத்.

ஒரு மிக மோசமான விபத்துல பரத் தன்னோட பயணம் செய்த காதலியை பறிகொடுக்கிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளாததுனால, அவருக்கு அவருடைய அண்ணன் சந்தானம், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறவைக்கிறார். ஒரு கட்டத்துல சந்தானமும், மனநல மருத்துவரும், உங்களுக்கு ஒரு காதலியே கிடையாது, நீங்களே ஒரு கற்பனை கதாப்பாத்திரதை உருவாக்கி, அந்த கதாப்பாத்திரத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கீங்கன்னு சொல்றாங்க. சூழ்நிலைகளும் இதற்கு ஏற்றார் போல் அமைகிறது. அதனால் பரத் மட்டும் இல்லை,படம் பார்க்கும் நாமும் தான் குழப்பமடைகிறோம். உண்மையிலேயே அவர் கற்பனை கதாப்பாத்திரத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோன்னு சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் பரத்தோ, இதையெல்லாம் நம்பாமல் நான் சொல்வதெல்லாம் உண்மை. அதை நிரூபிப்பதற்காக தன் காதலியின் வீட்டிற்கு இரவில் செல்கிறார். அங்கு அவரை ஒரு கும்பல் துரத்துகிறது. அந்த கும்பல் எதுக்காக அவரை துரத்துகிறது, காதலி உண்மையிலேயே இருக்கிறாளா என்பதையெல்லாம் ஏகப்பட்ட திருப்பங்களோடு சொல்வது தான் இந்த 555.
இந்த படத்தின் கதாநாயகனே திரைக்கதை தான். நல்ல விறுவிறுப்பாகவும், த்ரில்லிங்காகவும், ஏகப்பட்ட ட்விஸ்ட்களோடு படம் நகர்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட மூலக்கரு தான் நம்பும்படியாக இல்லை. 30 வருடங்களுக்கு முன் கவுரவ கொலை செய்யப்பட தன் காதலியின் உருவ அமைப்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கதாநாயகியின்(பள்ளியில் படிக்கிறார்) பெற்றோரை கொன்று, அவரை தத்தெடுத்து வளர்க்கும் வயதான பணக்கார வில்லன், கதாநாயகியின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய நினைக்கிறாராம். அட கடவுளே! எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ!!!!. சில இடங்களில் மிக சாதாரண லாஜிக் கூட இயக்குனருக்கு தெரியவில்லை(இணை இயக்குனர்களுக்கும்,உதவி இயக்குனர்களுக்கும் கூடவா அந்த ஓட்டைகளை தெரியாமல் இருக்கும்!!!). அந்த சாதாரண லாஜிக்கைப் பற்றி சொன்னால், படம் பார்க்கும்போது அந்த விறுவிறுப்பு போய்விடும் என்பதால் அதனை நான் சொல்லவில்லை.  

சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகாரக இல்லாமல், குணச்சித்திர நடிகராக இதில் நடித்திருக்கிறார். கதாநாயகி மிர்திகா மிகவும் அழகாக இருக்கிறார். பரத்திடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது லூசுத்தனமாக இருக்கிறது. இன்னும் எத்தனை படத்தில் தான், கதாநாயகிகளை இந்த மாதிரி ஒரு லூசுத்தனமான கதாப்பாத்திரமாக காட்டப்போகிறார்களோ?. கதாநாயகியின் வளர்ப்பு அத்தையாக வருபவர், அழகான வில்லி கதாப்பத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். இன்னொரு கதாநாயகி வேற, அவரும் பரத்தை காதலிக்கிறார்.  

இதுல எதுக்காக பரத் ‘6 பேக்’, இல்லையில்லை ‘8 பேக் வச்சிருக்கிறாருன்னு தெரியலை(6 பேக்கா, 8 பேக்கான்னு தெரியலை). ஆனாலும் அதற்காக பரத்தின் உழைப்பு நன்றாக தெரிகிறது.


நன்றாக திரைக்கதையை கொண்டுபோன விதத்துக்காக, இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.  

Monday, August 19, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – நடிக்க தேர்வானது


உதவி இயக்குனர் எங்களிடம் பேர் எல்லாம் வாங்கிக்கிட்டு போன பிறகு, நாங்களும், சரி ஒரு பத்து நிமிஷத்துல இயக்குனர் வந்துடுவாருன்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். நேரம் தான் போனுச்சே தவிர, இயக்குனர் வந்த பாடில்லை. எங்களுக்கு தெரிஞ்சு போச்சு, இந்த சினிமாக்காரங்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, சொன்ன நேரத்துக்கு வர மாட்டாங்க,நாம தான் அடிச்சு புடிச்சு 5.40க்கு எல்லாம் வந்திருக்கோம்னு. என்ன பண்றது, வந்தாச்சு தேவுடு காக்க வேண்டியது தான்னு உட்கார்ந்திருந்தோம். அப்ப அங்க வந்த என்னோட நண்பர் ஒருவருக்கு பெரிய சந்தேகம், எப்படி, இவுங்க நம்மளை படத்துக்கு தேர்வு செய்வாங்கன்னு. “நடிச்சு காட்ட சொல்லுவாங்காளா” இல்லை “வசனம் பேசிக் காட்டச் சொல்லுவாங்களான்னு” ஒரேடியா புலம்பிக்கிட்டே இருந்தாரு. அதுல இன்னொருத்தர் வேற, “எதுக்கு கவலைப்படுற, நாம தான் ஐந்தாறு நாடகத்துல நடிச்சிருக்கோம்,அதுவும் 300, 400 பேருக்கு முன்னாடியெல்லாம் நடிச்சிருக்கோம், அப்புறம் ஏன் பயப்பிடுறன்னு” அவரை சமாதானம் படுத்தினாரு. அவுங்க நம்மளை என்ன செஞ்சுக்காட்டச் சொன்னாலும், பின்னி பெடலெடுத்திடணும்னு ஒரு முடிவோடு தான் உட்கார்ந்திருந்தோம். மணியோ ஏழு ஆயிடுச்சு. ஃபிரெஷ்ஷப் பண்ண மேல போனவங்க இன்னும் கீழே வரவே இல்லை. அப்பத்தான் வரவேற்புல இருந்தவங்ககிட்ட, மற்ற ஆளுங்க, இந்த படத்தோட கதாநாயகன் இன்னைக்கு வராரு, அவருக்கு ஒரு சூட் அறை ஒண்ணு புக் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தது எங்க காதுல விழுந்துச்சு (ஒட்டெல்லாம் கேக்கலை!!!, நாங்க வரவேற்புல உட்கார்ந்திருந்ததுனால காதுல விழுந்துச்சு). பேசாம இன்னைக்கு ராத்திரி ஒன்போது,ஒன்பதரை மணி வரை இங்கேயே இருந்தா, “இளைய தளபதி” விஜய்யையும் பார்த்துட்டு போயிடலாம். ஒரு வேளை நாம இந்த படத்துல நடிக்கிறதுக்கு தேர்வாகலைன்னாலும் பரவையில்லை, அவரையாவது பார்த்த ஒரு திருப்தி கிடைக்கும்னு நாங்க பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு வழியா 7.30 மணிக்கு இயக்குனர், அப்புறம் உதவி இயக்குனர் எல்லாம் கீழே வந்தாங்க. நாங்க உட்கார்ந்திருந்ததுக்கு பக்கத்துல ஒரு சின்ன அறைக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டாங்க. ஆஹா, இந்த அறைக்குள்ள தான் தேர்வு பண்ணப்போறாங்கன்னு தெரிஞ்சுப் போச்சு. ஐந்து நிமிஷத்துக்கெல்லாம், அந்த உதவி இயக்குனர் வெளியே வந்து ரெண்டு எடுபிடிங்க கிட்ட என்னமோ பேசிட்டு உள்ளே போயிட்டாரு. உடனே ஒரு எடுபிடி அந்த அறையோட கதவுக்கிட்ட போய் நின்னாரு. இன்னொரு எடுபிடியோ, எங்க பக்கத்துல வந்து நின்னு, என்னோட ஒரு நண்பரை கூப்பிட்டு அந்த அறைக்குள்ள போகச் சொன்னாரு. எங்களுக்கு இப்பத்தான் உண்மையிலேயே டென்ஷன் எகிற ஆரம்பிச்சுது. வேலைக்கு இன்டர்வியூக்கு போகும்போது கூட இப்படி ஒரு டென்ஷன் இல்லை, இதுக்கு போய் இப்படி டென்ஷனா இருக்குதேன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே, அந்த நண்பர் வெளியே வந்துட்டாரு. உடனே இன்னொரு நண்பர் உள்ளே போனாரு. நாங்க முத நண்பரை பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டோம். “என்ன கேட்டாங்க, என்ன செய்ய சொன்னாங்கன்னு” சரமாரியா அவரை கேட்டோம். அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னைய உள்ள போகச் சொன்னாங்க.
நான் அந்த அறைக்குள்ள போனவுடனே, இயக்குனர் விஜய் என்னைய அவருக்கு முன்னாடி இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி, என்னைய பற்றி கேட்டாரு. நானும் உட்கார்ந்து என்னைய பற்றி சொன்னேன். நான் இந்த மாதிரி,இந்த மாதிரி, சிட்னில ஒரு ஐந்து குறு நாடகங்களை எழுதி, அதை மேடையேற்றி நடிச்சிருக்கேன். அப்புறம் இங்க வானொலிக்கு சில நிகழ்ச்சிகளை தயாரிச்சு வழங்குறேன்னு சொன்னேன். இயக்குனர் விஜய்யும், சார் நீங்க கண்டிப்பா இந்த படத்துல நடிக்கிறீங்கன்னு சொல்லி, எனக்கு பக்கத்துல உட்கார்ந்திருந்த அவரோட இணை இயக்குனர் பிரசன்னாவிடம், சாரை “லாக்” பண்ணிக்கோன்னு சொன்னாரு. நான் எந்த மாதிரி காட்சில நடிக்க வேண்டியிருக்கும்னு கேட்டேன்.


அப்ப அவர் நீங்க சந்தோனத்தோட ஒரு நாலைந்து நகைச்சுவை காட்சில வருவீங்கன்னு சொன்னாரு. ஐந்து நாள் நீங்க படப்பிடிப்புக்கு வரவேண்டியிருக்கும்ன்னு சொன்னாரு. அப்ப தான், அந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, சார் நீங்க இங்க கொஞ்சம் வந்து நின்னு, உங்களைப்பற்றி சொல்லுங்கன்னு சொன்னாரு. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. இப்பத் தானே  என்னோட அருமை பெருமைகளை எல்லாம் என் வாயாலே சொன்னேன், மறுபடியும் சொல்லனுமா, என்னடா, இது பேசாம ஒரு அல்லக்கையை கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம் போலன்னு நினைச்சேன்(சும்மா தாங்க, உண்மையில அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை). அப்புறம் தான் தெரிஞ்சுது, அவர் வீடியோ ரெகார்டிங் பண்றாருன்னு. சரின்னு, அவர் நிக்க சொன்ன இடத்துல நின்னு மறுபடியும் என்னைப்பற்றி சொல்லி முடிச்சேன். வெளியே வருவதற்கு முன்னாடி அந்த இணை இயக்குனர், சார், உங்க போன் நம்பரை சொல்லுங்க, நாங்க நாளைக்கு படப்பிடிப்பை ஆரம்பிச்சுடுவோம், அதனால கண்டிப்பா இந்த வாரத்துல உங்களை கூப்பிடுவோம்னு சொன்னாரு. நானும் என் போன் நம்பரை கொடுத்திட்டு வெளியே வந்தேன்.

நான் வெளியில வந்தவுடனே, என்னோட பெரிய மாகாராணி, அப்பா! நீங்க மட்டும் நிறைய டிராமால நடிக்கிறீங்க, நான் ரெண்டு டிராமால மட்டும் தான் நடிச்சிருக்கேன், அதனால நானும் உங்களோட நடிக்கணும்னு ஒரே அழுகை. (எனக்கே இயக்குனர் சொன்னதை நம்புறதா, வேண்டாமான்னு ஒரே சந்தேகம், இதுல இவுங்க வேற நடிக்கணுமாம், என்ன பண்றது!!!) அவுங்க அழுறதைப் பார்த்த வீட்டு அம்மணி, சின்ன மகாரணியை என்கிட்ட கொடுத்துட்டு, அவுங்க பெரிய மகாரணியை கூட்டிக்கிட்டு, அந்த அறைக்குள்ள போய், இயக்குனரிடம் இந்த படத்துக்கு, குழந்தை நட்ச்சத்திரம் தேவைப்படுமான்னு கேட்டிருக்காங்க. அவுங்க இந்த படத்துக்கு தேவை இல்லை. இருந்தாலும் உங்க குழந்தையை பேச சொல்லுங்கன்னு சொல்லி, பெரிய மகாரணியிடம் அவுங்களைப் பற்றின கேள்விகள் எல்லாம் கேட்டு அதை வீடியோ ரெகார்டிங் பண்ணிக்கிட்டாங்க. அதற்கு பிறகு தான், பெரிய மகாராணி முகத்துல சிரிப்பே வந்துச்சு. அப்புறம் நாங்க ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

எங்களுக்கு அந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த திங்கட் கிழமை வரைக்கும் ஈஸ்டர் விடுமுறை. இந்த லீவுல நம்மளை படப்பிடிப்புக்கு கூப்பிட்டாங்கன்னா பரவாயில்லை, ஆபிஸுக்கு லீவு போட வேண்டாமேன்னு நினைச்சுக்கிட்டு வியாழக்கிழமை வரைக்கும் இருந்தேன். போன் ஒன்றும் வரவே இல்லை. எனக்கோ வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் கான்பெரால, நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடுறதுனால, அங்க போக வேண்டியிருந்தது. படக்குழுவிடமிருந்து போன் வந்தா, போக வேண்டாம்னு நினைச்சேன். வியாழக்கிழமை இரவு வரை போன் வரலை. அதனால மறு நாள் காலைல நான் குடும்பத்தோட கிளம்பி கார்ல கான்பெரா போனேன். அங்க போய் இறங்கி மதிய சாப்பாடை சாப்பிட ஆரம்பித்த போது தான் போன்  வருது, இந்த மாதிரி நாளைக்கு காலைல இந்த இடத்துக்கு சரியா 10 மணிக்கு வந்துடுங்கன்னு. நான் இருக்கும் இங்கில்பர்ன்னுக்கும் கான்பெராவுக்கும் 250 கிலோமீட்டர். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. சரி, எப்படியும் நாலைந்து காட்சில நடிக்கணும்னு சொல்லியிருக்காங்க, அதனால இந்த முத காட்சி படப்பிடிப்பில கலந்துக்காம அடுத்த காட்சியோட படப்பிடிப்பில் கலந்துக்கலாமான்னு ஒரு யோசனை உள்ளுக்குள்ள ஓடிணுச்சு . 

நான் என்ன முடிவு எடுத்தேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் - முதல் காட்சிக்கு தயாரானது 

-    இன்னும் சொல்கிறேன்


Wednesday, August 14, 2013

தலைவா – நிஜத் தலைவா VS ரீல் தலைவா

தலைவா படத்தில் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளை என்னுடைய விமர்சனத்தில் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக இந்த படம் நாயகன் போன்ற படங்களின் சாயல் இருக்கிறது என்று கூறியிருந்தேன். ஏற்கனவே இந்த படம், நிறைய தமிழ் படங்களின் கலவை என்ற பேச்சு இருக்கிறது. மேலும் இந்த படத்தின் கதை ஒரு தொலைக்காட்சி சீரியலின் கதை என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல், இந்த படம், காலம் சென்ற என்னுடைய தந்தை மற்றும் தாத்தாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கு. படத்தில் அவர்களை களங்கப்படுத்துவது மாதிரி காட்சிகள் இருக்கின்றன,அதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்ணன் என்ற ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள அந்த இருவரை பற்றியும் ஒரு பத்திரிக்கை ஆராய்ந்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதை படித்த பின், இந்த பதிவை போடலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது(நன்றி ஜூனியர் விகடன்). தலைவா படத்தில் சத்யராஜ் மற்றும் விஜய்யின் கதாப்பத்திரங்கள் தன்னுடைய தாத்தாவான எஸ்.எஸ்.கந்தசாமி சேட் மற்றும் தன்னுடைய தந்தையான எஸ்.கே.ராமசாமி சேட் ஆகியோர்களைப் போல் உள்ளது என்று கூறியிருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
எஸ்.எஸ்.கந்தசாமி சேட் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் இருக்கும் தாராவி பகுதிக்கு குடியேறி, தோல் பதனிடும் தொழிலை செய்து வந்திருக்கிறார். பின்னாளில் அவர் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையையே நடத்தி, அதில் நம் தமிழர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறார். தன்னுடைய தொழிற்சாலையில், தொழிலாளிகளுக்கு சரியான சம்பளமும் கொடுத்திருக்கிறார். அதே மாதிரி மற்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சரியான சம்பளம் கிடைப்பதற்கு வழி வகுத்திருக்கிறார். தாராவியில் தமிழர்களுக்கென ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்திருக்கிறார். இப்படி தான் அவர் அங்குள்ள மக்களின் தலைவனாக உயர்ந்திருக்கிறார். அவருடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள், அவரை கொலை செய்திருக்கிறார்கள்.
தலைவா படத்தில் சத்யராஜ் என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவில்லை. அவர் அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கிறார். தன்னுடைய மகனை கூடவே வைத்திருக்கவில்லை. அந்த பகுதி மக்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். அவ்வளவு தான்.
எஸ்.கே.ராமசாமி சேட் தன் தந்தை இறந்த பிறகு, அவருடைய இடத்தில் இருந்து அதே மாதிரி மக்களுக்கு நல்லது செய்து வந்தார். அவர் மும்பை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றி பெற்று, சிவசேனா கட்சிக்கு ஆதரவு தந்து, மேயர் பதவியை அந்தக் கட்சிப் பெறுவதற்கு உதவி புரிந்தார். அந்த உதவியின் காரணமாகத்தான், இன்று சிவசேனா கட்சியில் தமிழர்கள் உறுப்பினர்களாகவும் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கவும் முடிகிறது. அவர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். மும்பையிலுள்ள தமிழர்களின் போராட்டத்தால், அவருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கை நடத்தாமல், மும்பையில் இறுதிச் சடங்கு நடைப்பெற்றது.
இதில் விஜய், தன் கண் முன்பே தந்தை கொல்லப்பட்டதை தொடர்ந்து, தன் தந்தையின் ஸ்தானத்திற்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்கிறார். ஆனால் அவர் தேர்தலில் எல்லாம் நிக்கவில்லை. அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இறுதியில் தன் தந்தையை கொன்றவனை பழி வாங்குகிறார். அவ்வளவு தான்.
பார்ப்போம், அந்த மனு விசாரணைக்கு வரும்போது, இயக்குனரும்,தயாரிப்பாளரும் என்ன சொல்கிறார்கள் என்று. ஒருவேளை திரைமறைவு காட்சிகள் அரங்கேறி, கோர்ட் படி ஏறாமலே வழக்கு வாபஸ் பெற்றாலும் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.  

Monday, August 12, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – இயக்குனரை சந்திக்க சென்றது

                                                      -    தலைவா திரைப்பட அனுபவம் - முன்னுரை


நண்பர் அனகன் பாபு கேட்டுக்கொண்டதின் பேரில், நானும் என்னுடைய நாடக குழுவைச் சேர்ந்தவர்களும் எங்களுடைய புகைப்படத்தை அனுப்பினோம். ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் காலையில் அனகன் பாபு என்னை அழைத்து, இன்று மாலை நீங்கள் சரியாக 5.30 மணிக்கு “போண்டாய் பீச்சில் (Bondai Beach)” இருக்கும் சுவிஸ் கிராண்ட் ரிசார்ட் (Swiss Grand Resort) ஹோட்டலுக்கு சென்று இயக்குனர் விஜய்யை சந்தியுங்கள்,இதனை மற்றவர்களுக்கும் கூறிவிடுங்கள் என்று கூறினார். அன்று நான் வீட்டு அம்மணிக்கு ஹாஸ்பிடலில் கண்ணை காட்டுவதற்காக விடுமுறை எடுத்திருந்தேன். அதனால் எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் மற்ற நண்பர்களுக்கு தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இருந்தாலும் எல்லோரும் சரியாக 5.15க்கு அந்த  ஹோட்டலில் சந்திப்போம் என்று பேசி வைத்துக்கொண்டு, எல்லோரும் சரியாக 5.25க்கு சென்றோம் (ட்ராஃபிக் அதிகமாக இருந்ததால் அந்த 10நிமிடம் தாமதம்). நான் என் குடும்பத்தையே கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். வரவேற்பில் இருந்தவர்களிடம் இயக்குனர் விஜய்யை பற்றி கேட்டேன். அவர்கள் அவருடைய முழு பெயரை கேட்டார்கள். எப்பவோ அவருடைய முழு பெயரை படித்த நியாபகம் இருந்ததால், அழகப்பன் விஜய் என்று கூறினேன். அதற்கு அவர்கள், இந்த பெயரில் யாரும் அறை எடுக்கவில்லை என்றார்கள். நானும் விடாமல், இந்த மாதிரி, இந்த மாதிரி, இந்தியாவிலிருந்து படம் எடுக்கிறதுக்காக வந்தவர்கள் இங்க  தங்கியிருக்காங்களான்னு கேட்டேன். அவர்களும்,ஆமாம் ஒரு நாற்பது பேர்  வந்திருக்கிறார்கள் என்று கூறினார்கள். அவர்களில் யாராவது ஒருவரை  பார்க்க முடியுமா என்று கேட்டதற்கு, பார்க்க முடியாது, நீங்கள் சரியாக  யார் பெயரில் அறை பதிவு செய்யப்பட்டிருக்கு என்று சொன்னால், நாங்கள் பார்க்க அனுமதிப்போம் என்று கூறினார்கள். நான் உடனே, அந்த  நண்பருக்கு போன் போட்டேன், ஆனால் அவர் எடுக்கவேயில்லை. மீண்டும், மீண்டும் போட்டுப்பார்த்தேன், அவர் எடுக்கவேயில்லை. அப்புறம் அவர் வீட்டிற்கு போன் போட்டு, அவர் மனைவியிடம் பேசினால், “என்னது, நீங்க அதுக்குள்ள டைரக்டரை பார்க்க போயிட்டீங்களான்னு” கேட்டாங்க. அட கடவுளே!ன்னு நினைச்சுக்கிட்டு, இல்லைங்க, உங்க வீட்டுக்கார் தான்  பார்க்க சொன்னாரு, அதான் வந்தோம், ஆனா இங்க டைரக்டரை பார்க்க முடியலை,உங்க வீட்டுக்காரருக்கும் போன் போட்டா, எடுக்கவே மாட்டேங்கிறாருன்னு சொன்னேன். அவுங்களும், நான் பண்ணிப்பார்க்கிறேன்ன்னு சொல்லி, ஐந்து நிமிடம் கழித்து கூப்பிட்டு, என்னோட போனும் எடுக்க மாட்டேங்கிறாரு. கொஞ்ச நேரம் கழித்து திருப்பியும் பண்ணிப்பார்க்கிறேன்னு சொல்லி வச்சாங்க. நாங்களும் பேசாம அந்த சோபாவில உட்கார்ந்தோம். நம்ம ஆளுங்க சில பேர் மேலேயும் கீழேயும் போயிக்கிட்டும், வந்துக்கிட்டும் இருந்தாங்க. எங்களுக்கு அவுங்க கண்டிப்பா இந்த படக்குழுவோட தான் வந்தவங்கன்னு தெரிஞ்சுது. அவுங்க கிட்ட போய் பேசினா, நம்மளைப் பற்றி ரொம்ப சீப்பா நினைச்சுட்டாங்கன்னா(!!!), என்ன பண்றதுன்னு, நாங்களும்  அவுங்ககிட்ட எல்லாம் பேசாம ரொம்ப நேரம் அந்த சோபாவிலேயே உட்கார்ந்துக்கிட்டு இருந்தோம். இதுலேயே அரை மணி நேரம் ஓடிடுச்சு. அப்பத்தான் நம்ம நண்பர் போன் செஞ்சு, சாரிங்க சம்பந்தம், ஆபிஸ் மீட்டிங்ல இருந்தேன், அதான் போன் எடுக்கலை, இயக்குனர் வந்து லொகேஷன் பார்க்க போயிருக்காராம். இப்ப வந்திடுவாரு, நீங்க அங்கேயே இருங்கன்னு சொல்லி கட் பண்ணினாரு. அவர் பேசி முடிச்ச, ஐந்து நிமிஷத்துக்கெல்லாம், இயக்குனரும், இன்னும் சிலரும் வெளியிலிருந்து வந்தார்கள். இயக்குனரிடம் போய் என்னைய அறிமுகப்படுத்திக்கிட்டேன். அவரும் வந்து ரொம்ப நேரம் ஆச்சான்னு கேட்டாரு. இல்ல, ரொம்ப நேரம் ஆகலை, அரை மணி நேரம் தான் அச்சுன்னு சொன்னேன். அப்ப மற்ற நண்பர்களும் வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார்கள். உடனே, அவர் நான் மேல போய் கொஞ்சம் ஃபிரெஷ்ஷப் பண்ணிக்கிட்டு வந்துவிடுகிறேன்னு சொல்லி மேல போனாரு. 

அவரோட உதவி இயக்குனர், எங்களிடம் வந்து, என் பேரு கிருஷ்ணா, நான் இந்த படத்துக்கு உதவி இயக்குனர், சார் இப்ப வந்துடுவாரு. அதுக்குள்ள உங்க பேர் எல்லாம் கொடுங்கன்னு சொல்லி எங்க பேர் எல்லாம் எழுதிக்கிட்டு போனாரு. நாங்களும், சரி ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்., உட்கார்ந்திருந்தோம், உட்கார்ந்து கொண்டேயிருந்தோம்.  

இயக்குனர் எத்தின மணிக்கு ஃபிரெஷ்ஷப் பண்ணிக்கிட்டு கீழே வந்தாருன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

தலைவா திரைப்பட அனுபவம் - நடிக்க தேர்வானது

                                  -  இன்னும் சொல்கிறேன்


Sunday, August 11, 2013

தலைவா – விமர்சனம்


ஆஹா! 1008 பிரச்சனைகளை கடந்து தலைவா படம் வெளிநாட்டிலும் , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளியாகிவிட்டது.இன்னும் தமிழ்நாட்டில் தான் வெளியாவில்லை. நானும் என்னுடன் நடித்த மற்ற நண்பர்களோடு நேற்று மாலை சென்று படத்தை பார்த்தேன். இந்த படம் ஒரு அரசியல் படம், அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய வகையில் வசனகள் இருக்கிறதுன்னு ஒரு புரளியை கிளப்பி இந்த படத்தை தமிழ்நாட்டில சொன்ன தேதிக்கு திரையிடாம பண்ணிட்டாங்க. இதுல வெடி குண்டு மிரட்டல் வேற. அதுக்கும் மேல இந்த படத்துல  எங்கப்பாவையும், தாத்தாவையும் இழிவுப் படுத்தியிருக்காங்கன்னு கோர்ட்ல வேற ஒருத்தர் கேஸ் போட்டிருக்கிறார். இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பிய படம். அந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செஞ்சுதான்னா, பெரிய கேள்விக்குறி தான் பதில். இந்த படத்துல புதுசா எந்த ஒரு விஷயத்தையும் இயக்குனர் சொல்ல வரலை. இன்னும் சொல்லப் போனா நாயகன், தேவர் மகன், பாட்ஷா, புதிய பறவை போன்ற படங்களை எல்லாம் சேர்த்து அரைச்ச புளிச்ச மாவு தான் இந்த தலைவா. அதில் கொஞ்சம் இந்த காலத்துக்கு ஏற்ப வெளிநாட்டு காட்சிகள். அப்புறம் முக்கியமா நாங்கள் நடித்த நான்கு காட்சிகளும் இடம்பெற்றுவிட்டன. என்ன, எங்களோட வசனங்களில் கொஞ்சம் கையை வச்சுட்டாங்க. அப்புறம் நாங்கள் நடித்த சில காட்சிகளில் கொஞ்சம் நீளத்தையும் குறைத்து விட்டார்கள். ஆனா இப்படி எல்லாம் குறைச்சும் கூட படம் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஓடுது.

25 வருட்டங்களுக்கு முன் பாம்பேயில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் சத்யராஜ் தன்னுடைய மகனை நாசரிடம் ஒப்படைக்கிறார். அந்த மகன் தான் விஜய், பின்னாளில் சிட்னியில் மினரல் வாட்டர் கம்பெனியை சந்தானத்துடன் சேர்ந்து நடத்துகிறார். மனசுக்கு பிடித்த வேலையாக , ஒரு நடனப் பள்ளியையும் நடத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அமலாபாலை சந்தித்து, கண்டவுடன் காதல் கொள்கிறார். இந்த நேரத்தில் சந்தானமும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். சந்தானத்துக்கு போட்டியாக சிட்னியில் 40 வயது பிரம்மச்சாரிகள் ஏழெட்டு பேரும் அமலாபாலை காதலிக்கும் நோக்கத்தில் அவர் பின்னாடி சுற்றுகிறார்கள். இந்த பிரமாச்சாரிகள் கூட்டத்தில் தான் நானும் ஒருவன். சிட்னியில் நடக்கும் நடனப்போட்டியில். விஜய் வெற்றி பெறுவதை தடுக்க வில்லன் குழு சதி செய்ய, அதனை முறியடித்து விஜய் குழுவினர் பரிசுக்கோப்பையை வெல்கிறார்கள். பிறகு அமலா பாலும் விஜய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார். தன் தந்தைக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் நோக்கத்தில் விஜய், அமலா பாலையும் அவரது தந்தை சுரேஷையும் அழைத்துக்கொண்டு மும்பை செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள், அவரை திரும்பியும் சிட்னிக்கு போக விடாமல் தடுக்கிறது. கடைசியில் தன் தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்குகிறார். இதை தான் இடைவேளைக்கு பிறகு நிறைய வன்முறை காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி வேற. பாவம் அவர் எண்ணி ஒரு நான்கைந்து காட்சிகளில் தான் வருகிறார். பெரிதாக அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. முதல் பாதியில் விஜய்யை காதலித்த அமலாபால் என்ன ஆனார் என்பதை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். அவருடைய கதாப்பத்திரம் புதிய பறவையில் சரோஜா தேவியின் கதாப்பாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். சத்யராஜுக்கு தம்பியாக பொன்வண்ணன் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நாசர் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். சில பல காரணங்களால் அவருக்கு பதில் பொன்வண்ணன் நடித்திருக்கிறார். நாசர் நடித்திருந்தால் இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ந்திருக்கும். முதல் பாதி வரைக்கும் தலைவா என்ற தலைப்புக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் நகைச்சுவையோடு படம் நகரந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் எப்படா முடியும் என்ற ஒரு அலுப்பு ஏற்படுகிறது.
எப்படிப்பட்ட படம் என்றே தெரியாமல், தலைப்பை மட்டும் வைத்து இது இப்படி தான் இருக்கும் என்று ஒரு வதந்தியை கிளப்பி, அது இப்போது அரசியல் காட்சிகள் எல்லாம் தலையிடக்கூடிய பிரச்கனை ஆனது தான் மிகப்பெரிய நகைச்சுவையே. படத்தில் நகைச்சுவை கம்மியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துக்கள் தான் இந்த படத்தின் உண்மையான நகைச்சுவை காட்சிகளே. இறுதியாக இயக்குனர் அடுத்த படத்திலையாவது தன் சொந்த சரக்கை நம்பி படம் இயக்கினால் கண்டிப்பாக அந்த படம் நன்றாக இருக்கும்.


பின் குறிப்பு: நான் இனி வரும் பதிவுகளில் என்னுடைய திரைப்பட அனுபவத்தை சொல்லப்போகிறேன். நான் இந்த படத்தில் வருவது வெறும் 2 நிமிடங்களுக்குள் தான். ஆனால் அதற்கு நான் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டியிருந்தது. அதிலும் இரு முறை படப்பிடிப்பிற்கு சென்று இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து கடைசியில் எங்கள் காட்சிகளை எடுக்காமல் திரும்பி சென்ற கதை எல்லாம் இருக்கிறது. 

Wednesday, August 7, 2013

பதிவர்கள் மாநாடு – 2013


இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே நிறைய தமிழ் சம்பந்தப்பட்ட மாநாடுகள் என் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கிறது. மலேஷியாவில் 10வது உலக தமிழ் மாநாடு நடந்து முடிந்தது. அதில் அடியேனும் ஒரு கட்டுரையை சமர்பித்திருந்தேன். அடுத்த மாதம் இங்கு சிட்னியில் உலக தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற இருக்கிறது. அதிலும் நான் எழுதிய “புலவர்களின் பார்வையில் சங்ககால போர்கள்” என்ற கட்டுரை மாநாட்டு மலரில் வெளிவர இருக்கிறது. இந்த மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 12வது உலக தமிழ் இணைய மாநாடு மலேஷியாவில் நடக்க இருக்கிறது. இப்படி எனக்கு தெரிந்து தமிழை சம்பந்தப்படுத்தி நிறைய மாநாடுகள் நடக்கிறது. சென்னையில் அடுத்த மாதம் 1ஆம் தேதி வலைப்பூ பதிவாளர்கள் ஒரு மிகப் பெரிய சந்திப்பை நடத்துகிறார்கள். சென்ற ஆண்டும் அவர்கள் மிகச் சிறப்பாக பதிவர்கள் சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதில் பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. மேலும் ..... 

Sunday, August 4, 2013

தந்தி – சிறுகதை

ஏங்க உங்க நண்பர் செந்திலோட தம்பிக்கு நாளைக்கு தானே கல்யாணம்?” என்று கேட்டாள் அர்ச்சனா.

“ஆமா அர்ச்சனா. நம்மளால தான் போக முடியலை. கண்டிப்பா குடும்பத்தோட வறேன்னு வேற சொல்லியிருந்தேன்.” என்றான் முருகன்.

“வரலைன்னு போன் பண்ணி சொல்லிட்டீங்களா?”

“நேத்தே போன் பண்ணிட்டேன். அவனை காட்டிலும் அவன் தம்பிக்கு தான் ரொம்ப வருத்தம்” என்றான் முருகன்.

“சரி நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அவருக்கு போன் பண்ணி பேசிடுங்க” என்றாள் அர்ச்சனா.

“போன் பண்றதை விட, நாளைக்கு போஸ்ட் ஆபிஸ் போய் ஒரு வாழ்த்துத் தந்தியை கொடுத்துட்டு வரேன்” என்றான்.

“என்னது தந்தியா, அதுவும் இந்த காலத்துல!, பேசாம ஒரு போன் பண்ணிங்கன்னா வேலை முடிஞ்சுடும். கல்யாண மாப்பிள்ளைக்கும் சந்தோஷமா இருக்கும். அதை விட்டுட்டு பெருசா தந்தி கொடுக்க போறாராம்” என்று சலித்து கொண்டாள் அர்ச்சனா.

அதற்கு முருகன், “போன் பண்ணி பேசுனா, கொஞ்ச நாள்ல மறந்துடுவாங்க. இதுவே ஒரு  தந்தி கொடுத்தா, அது ஒரு ஞாபக பொருளா இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு வந்த தந்திகளை இன்னமும் நான் பத்திரமா வச்சிருக்கேன்” என்றான்.

“அந்த அழகை தான் நான் பார்த்திருக்கேனே. என்னமோ பண்ணுங்க” என்று அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

மறு நாள் மாலை கல்யாண சத்திரத்தில், “டேய் சந்தோஷ், இந்தா உனக்கு ஒரு வாழ்த்துத் தந்தி வந்திருக்கு” என்றான் செந்தில்.

“என்னது வாழ்த்துத் தந்தியா!!!” யாரு அண்ணா அனுப்புனது?” என்று கேட்டான் கல்யாண மாப்பிள்ளை. 

“என்னோட நண்பன் முருகன் தான் அனுப்பியிருக்கான்” என்றான் செந்தில்.

ஒரு வாரம் சென்ற பிறகு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் அர்ச்சனாவும்,முருகனும். அப்போது வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டு அர்ச்சனா எழுந்து முருகனை எழுப்பினாள்.

“என்னங்க! யாரோ வீட்டு பெல் அடிக்கிறாங்க. போய் பாருங்க” என்றாள்.

முருகனோ,”நீ போய் பாரு அர்ச்சனா” என்று கூறிவிட்டு, போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டான்.

அர்ச்சனாவும் வாசல் கதவின் அருகில் வந்து, யாரது” என்று கேட்டாள்.

“மேடம், தந்தி” என்றான் போஸ்ட்மேன்.

“என்னங்க தந்தி வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்” என்று உள்ளே திரும்பி குரல் கொடுத்தாள்.

“நமக்கு தந்தியா!!” என்று ஆச்சிரியமாக கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தான் முருகன்.

“நமக்கு யார் தந்தி கொடுக்க போறாங்க, ரெண்டு பேருக்கிட்டேயும் செல் போன் இருக்கு. எதுவாயிருந்தாலும் அதுலேயே சொல்லிடுவாங்களே. எதுக்கு தந்தி கொடுக்கணும். ஏதாவது கேட்ட செய்தியா இருக்கப் போகுது. பயமா இருக்குங்க. நீங்களே வாங்குங்க” என்றாள் அர்ச்சனா.  

“தந்தின்னாலே கெட்ட செய்தி தானா? சரி நான் போய் தந்தியை வாங்குறேன்” என்று கதவைத் திறந்து கையெழுத்து போட்டு தந்தியை பெற்றுக்கொண்டான்.  

“தந்தி இறந்து விட்டது” என்று அந்த தந்தியில் இருந்தது.

“என்னது, தந்தி இறந்து விட்டதா?” என்னடி ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. யாராவது சும்மா விளையாடுறாங்களா?” என்று அவளிடம் தந்தியை கொடுத்தான்.

“ஆமா, தந்தி இறந்து விட்டதுன்னு தான் போட்டிருக்கு”. எவனோ வேலை வெட்டி இல்லாதவன் தான் இந்த மாதிரி கிறுக்குத் தனமா ஏதாவது செய்வான். சரி, வாங்க போய் படுப்போம் என்று கூறி படுக்கையறைக்கு சென்றாள்.

மறு நாள் காலை, ஒரு கையில் காபியோடு, மற்றொரு கையில் பத்திரிக்கையோடு வரவேற்பறையில் உட்கார்ந்து பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்தான் முருகன். அதில் முதல் பக்கத்தில், இந்திய தபால் துறை, தனது 150 ஆண்டு கால தந்தி சேவையை, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் நிறுத்திக்கொண்டது. மேலும் கடந்த ஒரு வார காலத்தில் தந்தி சேவையை உபயோகப் படுத்திய தனது வாடிக்கையாளர்களுக்கு “தந்தி இறந்துவிட்டது” என்று கடைசியாக ஒரு துக்கச்செய்தி தந்தியை கொடுத்து, தனது தந்தி சேவையை நிறுத்திக்கொண்டது என்று போட்டிருந்தது.  


பின் குறிப்பு: இது தான் என்னுடைய 100வது பதிப்பு. நம் இந்திய தபால் துறை, பாரம்பரியம் மிக்க தந்தி சேவையை நிறுத்திக்கொண்டதின் பின்னனியில் இந்த கதை புனையப்பட்டிருக்கிறது. 

Thursday, August 1, 2013

கணினி முதல் டேப்லட் வரை

சில வருடங்களுக்கு முன்னாடி வரை, எங்க வீட்டில ஒரு பெரிய கணினி மட்டும் தான் இருக்கும். நான் அந்த கணினில உட்கார்ந்து எனக்கு வரும் 100க் கணக்குல மின்னஞ்சல்களை (அதுல 95க்கும்  மேல வெறும் குப்பைகள் தான்) பார்த்துக்கிட்டு இருப்பேன். அம்மணியோ அந்த கணினியில தான் படங்களை எல்லாம் பதிவிறக்கம் செய்து பார்ப்பாங்க. நான் அடிக்கடி அந்த கணினிக்கு முன்னாடி உட்காருவதுனால, அவுங்களுக்கு கோபம் வந்துடும். ஆபிஸ்ல கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழுறது பத்தாதுன்னு, வீட்டுலயும் இதோட மாரடிக்கிறீங்களேன்னு சொல்லுவாங்க. இப்படி அவுங்க சொல்லும்போது மட்டும் நான் ரொம்ப நல்ல பிள்ளையாட்டம், இந்தாத்தா!, நீயே இதுக்கு முன்னாடி உட்காருன்னு சொல்லி, நான் எழுந்திடுவேன்(அவுங்களோட மாரடிக்க முடியாலைன்னு தானே கணினிக்கு முன்னாடி உட்காருகிறோம், இதுல அதுக்கும் ஆப்பு வச்சா என்ன தான் பண்றது!!!). அப்புறம் நான் ஐபிஎம்ல வேலைக்கு சேர்ந்தபிறகு, அவுங்களே எனக்கு ஒரு மடி கணினியை கொடுத்தாங்க. அதனால, நான் அம்மணியை தொந்தரவு பண்ணாம, அந்த மடி கணினிலேயே என்னோட அதி முக்கிய மின்னஞ்சல்களையெல்லாம் பார்த்துப்பேன். அதோட இந்த தமிழ் பள்ளிக்கு தேவையான வேலைகளை எல்லாம் நான் அந்த மடி கணினியில தான் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அந்த வேலையை கை கழுவிட்ட பிறகு, அந்த மடி கணினியையும் திருப்பி கொடுக்க வேண்டியதாக போயிடுச்சு(இரண்டரை வருடம் அவுங்களுக்கு வேலை பார்த்ததுக்கு, இந்தாப்பா, நீயே அந்த மடி கணனியை வச்சுக்கோன்னு அவுங்களுக்கு சொல்ல மனசு வரலையே!!!). மடி கணினி வச்சு பழகிப்போனதுனால, நானே சொந்தமா ஒன்றை வாங்கலாம்னு தெருவோர கடைல, ரொம்ப விலை குறைவா ஒரு மடி கணினியை வாங்கினேன். சரி, இனிமே நமக்கு வீட்டில எந்த பிரச்சனையும் வராதுன்னு நினைச்சேன். ஆனா எங்க பெரிய மகாராணி ரூபத்துல பிரச்சனை வந்துச்சு. அவுங்களுக்கு அப்ப இரண்டு வயது. என்னப்பா, நீ எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டரை தூக்கி மடில வச்சுக்கிற, எனக்கு விளையாடுறதுக்கு அதை கொடுன்னு ஒரே ரகளை. ஆஹா, அம்மாவுக்கு ஏத்த பொண்ணா இல்ல இருக்கான்னு நினைச்சு (பின்ன! சும்மாவா சொல்லியிருக்காங்க பெரியவங்க – “தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு!!!) இது விளையாடுற பொருள் இல்ல, அதனால இதைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லி, அவுங்க கோபத்தை இன்னும் கிளப்பிவிட்டுட்டேன். அந்த கோபத்தோட விளைவு, அந்த மடி கணினியில உள்ள கீ போர்ட்ல ஒரு பட்டனை(down arrow key) பெயர்த்து எடுத்துட்டாங்க. அதிலேருந்து, அவுங்களுக்கு ஒரு 10நிமிஷம் அந்த மடி கணினியை கொடுத்து, அவுங்களை விளையாட சொல்லிட்டு, பிறகு தான் நான் என் வேலையை பார்ப்பேன். இப்ப இரண்டாவது மகாராணிக்கு, நான் அந்த மடி கணினியை மடியில தூக்கி வச்சுக்கிட்டாலே போதும், எங்க இருந்தாலும் ஓடி வந்து, அதுல இருக்கிற பவர் பட்டனை ஆஃப் பண்றதுலேயே குறியா இருப்பாங்க. அதனால இப்பவெல்லாம் நான், மகாராணிங்க ரெண்டு பேரும் தூங்கின பிறகு தான், என்னோட வேலையே செய்வேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய மாகாரணி, அப்பா என்கிட்ட தான் ஐ-பேட் இல்லை, என்னோட நண்பர்கள் எல்லாம் வச்சிருக்காங்க. தமிழ் ஸ்கூல்லையும் ஐ-பேட் வச்சு சொல்லித் தராங்க, டே-கேர்லேயும் ஐ-பேட் வச்சு சொல்லித் தராங்க, அதனால எனக்கு ஐ-பேட் வாங்கிக்கொடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஒருவழியா டேப்லட் ஒண்ணு வாங்கிக் கொடுத்தேன். அதுல அவுங்க தமிழ் படிக்கிறதுக்கான apps அப்புறம் puzzles இதெல்லாம் பதிவிறக்கம் செஞ்சுக் கொடுத்ததுல அவுங்களுக்கு ஒரே சந்தோஷம்.  அம்மணியும் அப்பப்ப அந்த டேப்லட் எடுத்து பார்க்க ஆரம்பிச்சாங்க. அவுங்களுக்கு அதை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியலை. ரொம்ப யோசிச்ச பிறகு தான், அவுங்களுக்கு நாம ஏன் முகநூல் கணக்கை துவங்க கூடாதுன்னு ஒரு ஞானோதயம் ஏற்பட்டுச்சு. ஒரு சுபமுகூர்த்த நாள்ல, முகநூலில் ஒரு கணக்கை ஆரம்பிச்சு, புகைப்படத்தை எல்லாம் போட ஆரம்பிச்சாங்க. ஒரு நாள் ஒரு நண்பரோட வீட்டிற்கு போயிருந்தோம். அந்த நண்பரோட மனைவி, அம்மணிக்கிட்ட நீ என்ன இன்னமும் முகநூல்ல புதசா எந்த புகைப்படமும் போடாம, ஒரு வருசத்துக்கு முந்தின புகைப்படத்தையே போட்டிருக்கன்னு கேக்க, அதுக்கு அம்மனியோ, நானே! இப்ப தானே முகநூலுக்குள்ள வந்திருக்கேன்னு பதில் சொன்னாங்க. அடப்பாவிகளா, பேசுறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கும்போது, முகநூல்ல, இந்த படத்தை போட்டியா, அந்த படத்தை போட்டியான்னா கேட்பாங்க??
 இப்பெவெல்லாம், எங்க வீட்டுல தினமும்,இரண்டு மகாரணிகளையும் தூங்கவச்சுட்டு நான் ஒரு சோபாவில உட்கார்ந்து மடி கணினியில ஏதாவது இந்த மாதிரி சொந்த கதை, சோக கதையை எழுதிக்கிட்டு இருப்பேன். இன்னொரு சோபாவில அம்மணி டேப்லட்டை வச்சுக்கிட்டு, இந்த புகைப்படம் ரொம்ப நல்லா இருக்கு, அந்த புகைப்படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குனு முகநூலுக்குள்ள போய் எழுதிக்கிட்டு இருப்பாங்க. எங்களோட அந்த பெரிய கணினியை பார்க்க தான் ரொம்ப பாவமா இருக்கும். யாருமே அதை சீண்டுறதே இல்லை.