Thursday, September 19, 2013

முத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்

முத்தமிழின்  சிறப்புகள் – ஒரு விளக்கம்
வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம், ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ் பள்ளி,    ஹோல்ஸ்வொர்தி.

இந்தக் கட்டுரையில் முத்தமிழின் சிறப்புகள் பற்றியும், பயன்கள் பற்றியும், அதன் தேவைகள்  மற்றும்  அதை என்னுடைய வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதைப் பற்றி விளக்கங்களைத் தரப் போகிறேன்.

முத்தமிழ் என்பது இரண்டு வார்த்தைகளாகும், அதாவது மூன்று தமிழ்.  தமிழர்கள், கலைகளிலும் மற்றும் கேளிக்கைளிலும் (பொழுதுபோக்கு) மிகவும் செழிப்பான வரலாற்றைக்  கொண்டவர்கள்.  அவர்கள் கலை, கேளிக்கைகளில் - இயல் (இலக்கியம் அல்லது இயல்பு), இசை மற்றும் நாடகம் என்று பிரித்தனர் . முத்தமிழின் சிறப்புகளைப் பற்றிச் சிலப்பதிகாரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயல்
இயல் என்றால் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஓர் அர்த்தம் இயல்பு; இன்னொரு அர்த்தம் தமிழ் மொழி, மற்றும் அதன் இலக்கியம் ஆகும். நான் தமிழ் மொழியியல் பற்றி விளக்கப்போகிறேன். தமிழ்  இலக்கியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகள்  கொண்ட ஒரு செழிப்பான  மற்றும் நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கிச் சங்க இலக்கியம், காதல், போர், சமூக மதிப்புகள் மற்றும் மதம் உட்பட வாழ்கையின் பல அம்சங்களைக் கையாள்வது பற்றிப் பல புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் பல  துரதிருஷ்டவசமாக அழிந்துபோய்விட்டன. தற்போது இருக்கின்ற நூல்கள் போர்க்காலச் சங்க காலத்தின் நூல்களில் ஒரு பங்கு கூட இல்லை [1]. உலகின் சிறந்த இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்கள் பல உள்ளன. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு [2]. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டுத் தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள், என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றிப் பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை  சங்க இலக்கியங்கள் ஆகும்.

தமிழ் இலக்கியங்களின்  கால வகைப்பாடு பின்வருமாறு[3]

பழங்காலம்

        சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
       நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

                இடைக்காலம்
     பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
     காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
     உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
      புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
     புராணங்கள், தலபுராணங்கள்
     இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்

தற்காலம்
      கட்டுரை
      சிறுகதை
      புதுக்கவிதை
      ஆராய்ச்சிக் கட்டுரை

நவீன கால இலக்கியம், இந்தியத் தேசியக் கவிஞர் மற்றும் கதையாசிரியர் சுப்ரமணிய பாரதியாரால் தொடங்கப்பட்டு  விரைவாக  மற்றும் பலரால் தொடரப்பட்டது. இவர்கள் நம் தமிழ் இலக்கியத்தில் இருக்கும் சக்தியை உணர்ந்து மக்களை ஊக்குவித்தார்கள். கல்வியறிவு வளர்ச்சி தொடங்கியவுடன் தமிழ் உரைநடை மலர்ந்தது.  சிறுகதைகள் மற்றும் நாவல்கள் தோன்றத் தொடங்கின. நவீன தமிழ் இலக்கிய விமர்சனங்கள் கூட உருவாகின.  தற்போதைய நவீன காலத்தில் சினிமா புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு மொழி இணைக்கும் கருவியாக இருக்கிறது.

இசை
சங்க காலத்து இசை, தமிழ் இசையின் வரலாற்று முன்னோடியாகும்[4]. பண்டைய காலத்தில் புத்தகத்தில் இருந்த கவிதைகள் இசையோடு சேர்த்துப் பாடல்களாக உருவாக்கப்பட்டன. அதை பத்துபாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் காணலாம்[5]. சங்க காலத்துத் தொல்காப்பியம் இலக்கியத்தில் வெவ்வேறு இசைக் கருவிகளையும் மற்றும் இசையின் முக்கிய ஐந்து இயற்கை இருப்பிடங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு இயற்கை இசைக்கும் ஒவ்வொரு கருவிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு இசை உணர்வுகளை ஏற்படுத்தினர். அதாவது காதல் வரும்போது குறிஞ்சி இயற்கையை உபயோகித்து மலரும் உணர்வை வரவழைதனர்.  மற்றும் சோக உணர்வை வரவழைக்க நெய்தல் இயற்கைப் பாட்டினை உபயோகித்தார்கள்.  பெரும்பான்மையாக யாழ், புல்லாங்குழல் மற்றும் முரசை இசைக் கருவிகளாகச் சங்க காலத்தில் பயன்படுத்தினார்கள்.  சங்க காலத்திற்குப் பிறகு (மூன்றாம் நூற்றாண்டிலிருந்து) இசை பல்வேறு  நிலையை அடைந்தது. இந்தக்காலத்தில், இசைக் கருவிகள் ஐந்து விதமாகப் பிறந்தன [6].  அவை: தோல்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி, மற்றும் கஞ்சக்கருவி. இராகங்களும் மாறின. இதைச் சிலப்பதிகார நூலில் [7] காணலாம்.  காலங்கள் போகப்போக இசை மாறிக்கொண்டே இருந்தாலும், இன்றும் சில நாட்டுப்புற இசை வழக்கிலுள்ளன.  அவை: ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், காவடியாட்டம், கும்மி, வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், மயிலாட்டம், களரி , தெருக்கூத்து  போன்றனவாகும்.

நாடகம்
தமிழ் நாடக வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது[8] . பல்வேறு விதமான நாடகங்கள் இருக்கின்றன, அவற்றில் சில, தெருக்கூத்து மற்றும் மேடை அரங்கு நாடகங்கள் ஆகும். பண்டைய காலத்தில், பொழுதுபோக்குவதற்காக நாடகங்கள் உருவாக்கப்பட்டன. பல வேடங்கள் போட்டு நடித்தார்கள். அரசியல் பிரச்சினைகள், திருவிழாக்கள், சோக நிகழ்வுகள் பற்றிப் பெரும்பான்மையான நாடகங்கள் இருந்தன. நவீன காலத்தில், வெள்ளித்திரை பிரபலமானதால்  சில கிராமங்களில் மட்டுந்தான் இன்றும் தெருக்கூத்து நடக்கிறது. தற்பொழுது, பெரும்பான்மையான நாடகங்கள் அழிந்துவருகின்றன.
இயல், இசை, நாடகங்கள் மூலம் நாம் நம் தாய்மொழி தமிழைக் கற்கிறோம்.  சில சிறப்பான நூல்கள் (திருக்குறள்) மூலம் நாம் எப்படி நன்றாக வாழ்வது என்று அறிகிறோம். நம் கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்கிறோம். நாம் நம் முத்தமிழின் சிறப்புகளை அறிந்து, அனுபவிக்கவேண்டும். தமிழ் ஒரு அருமையான மொழி  என்று உணரவேண்டும். வரும் தலைமுறைக்கு நம் தமிழ் மொழியை இயல், இசை, நாடகங்களால் அறிய வைக்கலாம், புரிய வைக்கலாம் மற்றும் அனுபவிக்க வைக்கலாம் என்பது என் கருத்து.
மேற்சொன்ன முத்தமிழின் சிறப்பினைப் புலம் பெயர்ந்து வாழும் நான் சிலவற்றை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்குக் கவிதைகளை வாசிக்கும் பொழுதும், திருக்குறளைக் கற்கும் பொழுதும் மற்றும் தமிழ் நாடகங்களில் நடிக்கும் பொழுதும் தமிழின் செழுமையையும், பெருமையையும் உணர்வுபூர்வமாக என்னால் அறிய முடிந்தது.

வாழ்க முத்தமிழ்! வளர்க அதன் புகழ்!

சான்றுக்குறிப்புகள்
    3- தமிழ் இலக்கியம் – மு. வரதராசனார்
     7- சிலப்பதிகாரம், http://en.wikipedia.org/wiki/Ancient_Tamil_music

   

No comments:

Post a Comment