Tuesday, September 30, 2014

வயதான குழந்தைகளை பாதுகாப்போம் - அக்டோபர் 1ஆம் தேதி "சர்வதேச முதியோர் தினம்"









படங்கள் உதவி - கூகிள் ஆண்டவர்

அக்டோபர் 1ஆம் தேதி உலக முதியோர் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த “சர்வதேச முதியோர் தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் எனக்கு இம்மாதிரி தினங்களை கொண்டாடுவதில் உடன்பாடில்லை. ஆனால் இன்றைய அவசர உலகில் இம்மாதிரியான தினங்கள் அவசியம் தான் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. குறைந்தபட்சம் இம்மாதிரியான தினங்களை ஒரு விழிப்புணர்வு தினமாகவாவது நினைக்க தோன்றுகிறது. பெண்கள் தினம்”, “ஆண்கள் தினம்” (இந்த தினம் அதிகம் பிரபலமடையவில்லை – ஆண்கள் எல்லாத்திலும் விட்டுக்கொடுத்து போவது தான், பிரபலமடையாமல் இருப்பதற்கு காரணம்), “அன்னையர் தினம்”, தந்தையார் தினம்” என்கிற வரிசையில் “முதியோர் தினமும் சேர்ந்து விட்டது. இன்றைக்கு இந்த விழிப்புணர்வு தினம், மிகவும் அவசியம் தான். பெற்றோர்கள் தங்களின் கடமையாக பிள்ளைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில் அவர்கள் முன்னேற வழி வகுக்கிறார்கள். ஆனால், பிள்ளைகளோ, வளர்ந்த பின்பு, பெற்றோர்களை பாதுக்காப்பது தங்களின் கடமை என்பதை மறந்து, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதும், இன்னும் ஒரு சில பிள்ளைகளோ, தங்களின் தேவைக்கு அந்த வயதான பெற்றோர்களை வேலைக்கு அனுப்புவதும் உலகம் முழுவதிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இங்கு சிட்னியிலும், நான் அலுவலகத்துக்கு செல்லும் வழியில், ஒரு சில முதியவர்கள் சாலையோரத்தில் உட்கார்ந்து, பிச்சை எடுக்கும் அவலத்தை பார்த்திருக்கிறேன். அவர்கள் பக்கத்தில் ஒரு அட்டையில் “Domestic Violence. Homeless now.Help needed” என்கிற வாசகங்கள் இருக்கும். அவர்களிடம் சென்று அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கலாம் என்று எண்ணுவேன். ஏனோ, அவர்களை காட்சிப் பொருளாக ஆக்குவதற்கு மனம் இடம் கொடுத்ததில்லை.

இங்கும் முதியோர் இல்லங்கள் நம் நாட்டைப் போல் நிறைய இருக்கின்றன. ஓவியாவின் முதல் பிறந்த நாளை, இந்த மாதிரி ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் வெளி மனிதர்கள் யார் வேண்டுமானாலும் முதியோர் இல்லங்களுக்கு சென்று இந்த மாதிரி நிகழ்வுகளை கொண்டாட முடியாது, முதியோர் இல்லத்தில் இருப்பவர்களின் சொந்தக்காரர்கள் மட்டும் தான், இந்த மாதிரி நிகழ்வுகளை கொண்டாடமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் தான், அடாடா, நாம் நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் ஏற்பட்டது. 

அன்றைக்கு கூட்டுக்குடும்பமாக இருந்த கால கட்டத்தில், இவ்வளவு வியாதிகள் வந்ததில்லை. மேலும் எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் சென்றதுமில்லை. அதற்கு காரணம் பெரியவர்கள் கூறும் “பாட்டி வைத்தியம்” தான். இன்றைக்கு அந்த பாட்டி வைத்தியம், மறைந்து கொண்டு வருகிறது. நாம் சாதாரண சளி பிடித்தால் கூட மருத்துவரிடம் செல்வது பழகிவிட்டது. இன்றைய நவநாகரிக உலகில், பாட்டி, தாத்தாவுடன் வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த தலைமுறையினர் தான் கூட்டுக்கும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அடுத்த தலைமுறையினராவது, அந்த முற்றுப்புள்ளியை அழிப்பார்களா என்று தெரியவில்லை. 


முதியவர்களின் அருமைகைளை தெரிந்து, அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்து அவர்களை குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே பிள்ளைகளின் முக்கிய கடமையாகும். நாம் வாழ்க்கையில் வேற எந்த நற்செயலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, முதியவர்களை புறக்கணிக்கும் தீய செயலை செய்யாமல் இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.  

Wednesday, September 24, 2014

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேடையேற்றிய நாடகம் - இறுதி பகுதி



 
 
 
 
காட்சி – 5

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியும், சுசிலையும் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வாருங்கள் அண்ணன். வாருங்கள் அண்ணியாரே.

தனபதி – எம்முடைய சொத்தெல்லாம் உன்னுடைய புதல்வனே கட்டிக்காக்கட்டும், நாங்கள் கானகத்துக்கு செல்கிறோம்.

அன்னம் – என்னை மன்னித்து அருளுங்கள் அண்ணா. அடியேன் சொல் அம்புகளின் மூலம் தங்களின் மனதை ரணப்படுத்தி விட்டேன். தாங்கள் எங்கும் செல்ல வேண்டாம். தயவு கூர்ந்து, இந்த சிறியவளின் தவறை மன்னியுங்கள். (காலில் விழுந்து வணங்குகிறாள்).

தனபதி – எழுந்திரு அன்னம். யாம் உம் மீது வருத்தம் கொள்ள வில்லை. அடுத்த பிறவியிலையாவது எங்களுக்கு குழந்தை செல்வத்தை அந்த சுந்தரேசன் தந்தருள வேண்டும் என்பதற்காக, கானகத்துக்கு சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள இருக்கிறோம். எங்களை தடுக்காதே.

அன்னம் – தங்களை கானகத்துக்கு அனுப்பிவிட்டு, நான் என்ன செய்வேன் அண்ணா.

தனபதி – உன் புதல்வன் பெரியவனாக ஆகும் வரை, எம்முடைய சொத்துக்களை எல்லாம் கட்டிக்காத்து அவனிடம் அளித்துவிடு. நாங்கள் சென்று வருகிறோம்.
 
காட்சி – 6

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியின் பங்காளிகள் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வாருங்கள், வாருங்கள்

வானதி – நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா?

அன்னம் – என்ன கேள்விப்பட்டீர்கள்?

ராக்கம்மா – எங்கள் பங்காளி தனபதியின் சொத்தையெல்லாம், நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

அன்னம் – நானாக ஒன்றும் எடுக்கவில்லை. என் அண்ணன் என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்.

வானதி – அது எங்களுக்கு எப்படி தெரியும் ?

ரக்காம்மா – அவரின் சொத்துக்கு நாங்களும் பாக்கியதாரர்கள் தான். தாங்கள் ஒருவர் மட்டுமே அந்த சொத்துக்களையெல்லாம் அனுபவிக்க முடியாது.

அன்னம் – அது எல்லாம் இல்லை. என் அண்ணன் என்னிடம் தான் ஒப்படைத்து விட்டு போயிருக்கிறார்.

ராக்கம்மா – ஓ! ஓ! அப்படியா, நாங்கள் இப்பொழுதே ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டு, அந்த சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, . உங்களை நடுத்தெருவில் நிற்க வைக்கிறோம்.

(இருவரும் போகிறார்கள்)

அன்னம் – சுந்தரேசா, இதென்ன சோதனை. அண்ணனின் மனம் புண்படும்படி பேசியதற்கு, எனக்கு நல்ல தண்டனை கிடைத்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்.

(அப்போது ஒரு அசிரிரி குரல் ஒலிக்கிறது)

அசிரிரி – மகளே! நீர் ஊர் தலைவரின் முன்னிலையில் வழக்குத்தொடு, யாம் வந்து உம்மைக் காப்பாற்றுகிறோம்.

அன்னம் – ஈசனே, என்னுடைய அழுகுரல், உன் காதில் விழுந்து விட்டதா. மிக்க மகிழ்ச்சி. நான் இப்பொழுதே சென்று வழக்கு தொடுக்கிறேன்.
 


 

காட்சி – 7

இடம் – ஊர் தலைவரின் இல்லம்

காட்சியமைப்பு – தலைவர் முன்னிலையில் அன்னமும், தனபதியின் பங்காளிகளும் வழக்கு தொடர்கின்றனர்.

அன்னம் – ஐயா, என் அண்ணன் அவரின் சொத்துக்களையெல்லாம் என் மகனிடம் ஒப்படைத்து விட்டு தான் சென்றார்கள்.

ராக்கம்மா – ஐயா, இவர் பொய் உரைக்கிறார். தாக்கீது ஏதாவது இருந்தால் காட்ட சொல்லுங்கள்.

ஊர் தலைவர் – உன்னுடைய அண்ணன், அவ்வாறு நினைத்திருந்தால், அதற்கான தாக்கீதை தம்மிடம் கொடுத்திருப்பாரே. எங்கே அதை காட்டு பார்க்கலாம்.

அன்னம் – ஐயா, தாக்கீது எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நான் உரைப்பது அனைத்தும் சத்தியமாகும்.

(அப்பொழுது, தனபதி அங்கு வருகிறார்)

அன்னம் – ஆ! என் அண்ணனே இங்கு வந்து விட்டார். அண்ணா, தக்க சமயத்தில் வந்து விட்டீர்கள். என்னை மன்னித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுங்கள், (அவர் காலில் விழுகிறார்)

தனபதி – எம்முடைய சொத்துக்கள் அனைத்துமே யாம் சுவிகாரமாக்கிக்கொண்ட தங்கையின் மகனே கட்டிக்காக்க வேண்டும் என்று கூறிவிட்டு தான் நான் கானகத்துக்கு சென்றேன்.

ராக்கம்மா – (ஊர் தலைவரைப்பார்த்து), ஐயா இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. கானகத்துக்கு சென்றவரால் எவ்வாறு, வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக வர முடியும்?

ஊர் தலைவர் – ஆமாம், சிந்திக்க கூடிய கேள்வி. உண்மையில் இவர் தனபதியாக இருக்க முடியாது தான்.

வானதி – இவர் தனபதியே இல்லை. அவரைப் போலவே தோற்றம் கொண்ட வேறு எவரோ.

தனபதி – நான் தனபதி இல்லையென்றால், எனக்கு இங்கிருக்கிறவர்களை அடையாளம் தெரிந்திருக்காது. இதோ ஊர் தலைவர், இதோ இவர் என் பங்காளியின் புதல்வி ராக்கம்மா, இவர் என் மற்றொரு பங்காளியின் புதல்வி வானதி. என்ன யாம் சொல்வது சரி தானே.

ஊர் தலைவர் – ஐயா, எமக்கு தங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. தாங்கள் தனபதியாக தான் இருக்க வேண்டும். ரக்காம்மா, வானதி நீங்கள் இருவரும் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையென்றால், பொய் வழக்கு போட்டீர்கள் என்று கூறி அரசவையில் ஒப்படைக்கப்படுவீர்கள். பிறகு நீங்கள் கடும் தண்டனை அனுபவிப்பீர்கள்.

(அங்கிருந்து ராக்கம்மாவும்,வானதியும் சென்று விட்டார்கள்)

தனபதி – ஐயா தங்களின் முன்பாக எம்முடைய சொத்துக்கள் அனைத்தும் தங்கையின் மகனுக்கே சாசனம் செய்து விடுகிறேன்.

(தனபதி சென்று விட்டார். அப்பொழுது ஒரு அசிரிரி குரல் ஒலிக்கிறது)

அசிரிரி குரல் – ஊர் தலைவரே, எம்முடைய பக்தனின் தங்கைக்கு நேர இருந்த அதர்மத்தை தடுக்க யாமே தனபதியின் வடிவில் வந்து இந்த வழக்கை முடித்துக்கொடுத்தோம்.

ஊர் தலைவர்,அன்னம் மற்றும் மகன் அனைவரும் கீழே விழுந்து கும்பிடுகிறார்கள்)
 

காட்சி – 8

இடம் – சொக்கனின் வீடு

காட்சியமைப்பு – தாங்கள் பார்த்த நாடகத்தைப் பற்றி சொக்கணும் அவர் மனைவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)

சொக்கன் – திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை” என்று சொல்லுவார்கள். அது அப்படியே அந்த அன்னத்தின் விஷயத்திலும் நடந்திருக்கிறது அல்லவா.

கீதா – ஆமாங்க, அந்த அன்னத்தின் நிலமையில தாங்க நாமும் இருக்கிறோம். அந்த ஈசன் எந்த வழியிலாவது நமக்கு அருள் புரிய மாட்டானா!

(அப்போது வக்கீல் சபாபதி வருகிறார். சொக்கணும்,கீதாவும் வணக்கம் சொல்கிறார்கள். கீதா உள்ளே செல்கிறாள்)

சொக்கன் – வக்கீல் சார், கையெழுத்தை செக் பண்ணிட்டாங்களா? என் பங்காளி ஃப்ராட் வேலை தானே பண்ணியிருக்கான்.

சபா – ரெண்டு பேரு கிட்டேயும் இருக்கிற லெட்டர்ல உள்ள கையெழுத்து ஒண்ணு தான்னு ரிசல்ட் வந்திருக்கு .

சொக்கன் – அப்படி முடியவே முயாதே. எங்க அண்ணனோட கடைசிக்காலத்துல, அவருக்கு கேன்சர் வந்து படுத்த படுக்கையாக ஆயிட்டாரு. அப்ப இந்த பங்காளி வீட்டுல போய் கொஞ்ச நாள் இருக்கிறேன்னு சொல்லி போனாரு, ஆனா அவன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்த்துக்கலை. அப்படி இருக்கும்போது, எப்படி அண்ணன் அவனுக்கும் அந்த மாதிரி எழுதி கொடுத்திருப்பாரு?

சபா – என்னன்னு தெரியலை சொக்கன். இப்ப ஜட்ஜ் தீர்ப்பை ஒரு வாரம் ஒத்திவச்சிருக்காரு.

சொக்கன் – நாங்க, அந்த ஆண்டவனை தான் நம்பிக்கிட்டு இருக்கிறோம் வக்கீல் சார்.

சபா – கண்டிப்பா அவன் உங்களை கை விட மாட்டான். சரி, நான் போயிட்டு வரேன்.

(ஒரு வாரம் கழித்து)

சொக்கன் – கீதா,கீதா, தீர்ப்பு நம்ம பக்கம் வந்துடுச்சு.

கீதா – என்னங்க சொல்றீங்க, உண்மையாகவா? ஆண்டவனே, கடைசில நல்ல தீர்ப்பா சொன்னதுக்கு உனக்கு ரொம்ப நன்றிப்பா.

சொக்கன் – ஜட்ஜ்,தீர்ப்பை வாசிக்கும்போது, பங்களியோட முகத்தை பார்க்கணுமே, அப்பப்பா, அவனுக்கு சொத்துல ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சவுடனே, கோபமா கிளம்பி போய்விட்டான்.

(அப்பொழுது வக்கீல் உள்ளே வருகிறார்)

கீதா – வாங்க வக்கீல் சார், கொஞ்ச நேரம் இருங்க பாயாசம் செஞ்சு கொண்டுக்கிட்டு வரேன்.

சபா – சொக்கன், நீங்க கும்பிட்ட கடவுள் உங்களை கை விடலை. இப்பத்தான் ஜட்ஜ் என்னைய அவரோட ரூமுக்கு கூப்பிட்டு பேசினாரு.

சொக்கன் – என்ன சொன்னார் வக்கீல் சார்.

சபா – ஜட்ஜ்க்கும் உங்களை மாதிரி கடவுள் பக்தி அதிகம். சிக்கலான சில கேஸ்களுக்கு ஆண்டவன் தான் அவருக்கு வழி காட்டியிருக்காராம். அந்த மாதிரி தான் உங்க கேஸ்லையும், ஆண்டவன் வழி காட்டினாராம்.

சொக்கன் – என்னது ஆண்டவன் வழி காட்டினாரா?

சபா – ஆமா, உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் இருக்கிற பேப்பர்ல உள்ள கையெழுத்து உங்க அண்ணனோடதுன்னு தெரிஞ்சவுடனே, ரெண்டுபேரும் சொத்தை சமமாக பிரிச்சுக்குங்கன்னு மறு நாள் தீர்ப்பு சொல்லலாம்னு ஜட்ஜ் நினைச்சிருந்திருக்காரு.

சொக்கன் – ஓ! அப்படியா..

சபா – அன்னைக்கு ராத்திரி அவரோட கனவுல, ஒருத்தன் நல்ல அடம்பரமா செலவு செஞ்சு வாழ்கிற மாதிரியும், இன்னொருத்தான் தான தர்மங்கள் செய்கிற மாதிரியும் தெரிஞ்சுதாம். அடுத்த நாள் தீர்ப்பை தள்ளி வச்சுட்டு, அவரே உங்க ரெண்டு பேரை பத்தியும் ஒரு வாரமா விசாரிச்சு அப்புறம் தான் உங்க பக்கம் தீர்ப்பை சொல்லியிருக்காரு.

(அப்போது கீதா, பாயசத்தோடு உள்ளே வருகிறார்)

சொக்கன் – கீதா, வக்கீல் சார் சொன்னதை கேட்டியா, அந்த ஈசன் ஜட்ஜ் ஐயா கனவுல சூட்சமமா உணர்த்தி நம்ம பக்கம் தீர்ப்பை வழங்க வச்சதை .

கீதா – ஆமாங்க, இறைவன் எந்த காலத்துலேயும் தன்னோட பக்தர்களை கைவிடமாட்டான்ன்னு  புரியிதுங்க.

சொக்கன் – அந்த இறைவன் மேல நாம வச்சிருக்கிற பக்தி பத்தாது கீதா. இங்க சிட்னில மாதந்தோறும் நடக்கிற முற்றோதல்ல கலந்துக்கணும், முடிகிற சமயம் எல்லாம் கோவிலுக்கு போய் அவனை வழிபடணும். முக்கியமா நம்ம குழந்தைகளுக்கும் இறை பக்தியை நாம விடாம ஊட்டனும்.

வக்கீல் – சரியா சொன்னீங்க சொக்கன். நானும் நீங்க சொன்ன விஷயங்களை எல்லாம் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

சொக்கன் – (அவையோரை பார்த்து), அந்த காலத்துலேயும் சரி, இந்த காலத்துலேயும் சரி, இறைவனை நம்பினால், அவன் நம்மை கை விடமாட்டான்னு தெள்ளத் தெளிவாக தெரியுது.  இந்த நம்பிக்கையை தான் நாம அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வளர்க்கணும். அதற்கு ஒரே வழி, குழந்தைகளுக்கு இறை உணர்வை ஊட்டுவது தான்.

திருச்சிற்றம்பலம்

Tuesday, September 23, 2014

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேடையேற்றிய நாடகம்



அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

சென்ற மாதம் இங்கு சிறப்பாக நடைபெற்ற சைவ மாநாட்டில் அடியேன் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றிய "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற நாடகத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பதிகிறேன்.
சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களில், மாமனாக வந்து வழக்குரைத்த படலம்" என்ற திருவிளையாடலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு கோர்த்து ஒரு நாடகமாக வழங்கினோம்.

இந்த நாடகத்தின் முக்கிய நியதியானது -

"நல்லவர்களை இறைவன் என்றைக்குமே கைவிட்டது கிடையாது. எந்த ரூபத்திலையாவது வந்து அவர்களுக்கு நன்மை புரிந்துக் கொண்டுத்தான் இருக்கிறான்" என்பதாகும்.



கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கதாப்பாத்திரங்கள்:

  1. சொக்கன்
  2. சொக்கனின் மனைவி கீதா
  3. சொக்கனின் பங்காளி சண்முகம்
  4. வக்கீல் சபாபதி
  5. தனபதி
  6. தனபதியின் மனைவி சுசீலை
  7. தனபதியின் தங்கை அன்னம்
  8. அன்னத்தின்      மகன்
  9. தனபதியின் பங்காளி ராக்கம்மா
  10. தனபதியின் பங்காளி வானதி
  11. ஊர்      தலைவர்
  12. அசிரிரி குரல்

கட்சி – 1

இடம் – சொக்கனின் வீடு

காட்சியமைப்பு – சொக்கன் வீட்டிற்குள் நுழைகிறார்

கீதா – வக்கீல் என்னங்க சொல்றாரு?

சொக்கன் – அவர் என்னத்தைப் புதுசா சொல்லப்போறாரு. கேஸ் நம்ம பக்கம் ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு சொல்றார்.

கீதா – உங்க பெரியப்பா மகன், அப்பவே நம்ம புள்ளைங்க பேர்ல எழுதின உயிலை சட்டப்படி பதிஞ்சிருந்தாருன்னா, நாம இன்னைக்கு இப்படி கோர்டு, கேஸ்ன்னு அலைய வேண்டாம்.

சொக்கன் – அவருக்கு பங்காளி சண்முகம் இப்படி கேஸ் போடுவாருன்னு தெரியலை, அதனால வெறும் பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாரு.

கீதா – நாம நல்லா சாமியை கும்பிடுவோம், எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்.

(அப்போது சண்முகம் தன் குழந்தைகளோடு உள்ளே வருகிறார். அவரைப் பார்த்துவிட்டு கீதா முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே போகிறார்)





சொக்கன் – வா சண்முகம். எப்படி இருக்கே. என்னதான் நீ எனக்கு எதிரா கோர்ட்ல கேஸ் போட்டிருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்காம இருக்க மாட்டேன்
சண்முகம் – இந்த பாரு சொக்கா, நான் உன் வீட்டுல ஒண்ணும் விருந்து சாப்பிட வரலை. பேசாம கேசை வாபஸ் வாங்கிக்கன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.

சொக்கன் – என்ன ஆனாலும் சரி, நான் கேஸை வாபஸ் வாங்க மாட்டேன். ஏன் நீ கேஸை வாபஸ் வாங்குறதுதானே?

சண்முகம் – சரி, அப்ப ஒண்ணு பண்ணுவோம், ரெண்டு பேரும், நம்ம அண்ணனோட சொத்தை ஆளுக்கு பாதி, பாதியாக பிரிச்சுக்கலாம். என்ன சொல்ற?

சொக்கன் – இதபாரு, நான் உன்னைய தவிர வேற யார் கூட வேண்டுமானாலும் சொத்தை பங்கு போட்டுப்பேன், ஆனா உன் கூட மட்டும் சொத்துல பங்கு போடவே மாட்டேன். நீ நல்லவனாக  இருந்தா, அண்ணனோட கடைசிக் காலத்துல அவரை உன்கூட வச்சு பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம் இல்ல. அப்ப அவருக்கு ஒண்ணும் செய்யாம, இப்ப சொத்துல பங்கு கேட்டா என்ன நியாயம்?

சண்முகம் – இத பாரு, நான் சொல்ற வழிக்கு வரலைன்னா, அப்புறம் சொத்துல உனக்கு ஒண்ணுமே கிடைக்காது, பார்த்துக்க.

சொக்கன் – அண்ணன், அவரோட சொத்தை எங்கள் பிள்ளைங்க பேர்ல எழுதின விவரத்தை சட்டப்படி பதிவு பண்ணலைன்னாலும், கேஸ் என் பக்கம் ஜெயிச்சு ,அந்த சொத்து முழுவதும் என் கிட்ட தான் வரும். அதை நீ பார்க்கத்தான் போற.  

சண்முகம் – ஓ! அதனால தான், நீ கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்னு சொல்றியா!!! (சத்தமாக சிரிக்கிறார்). எனக்கும் அவர் அண்ணன் தானே, அவர் என் கிட்டேயும்,சொத்தெல்லாம் உன் பிள்ளைகளுக்குத்தான்னு கையெழுத்து போட்டு கொடுத்திருக்காரே. அதைத்தான் நான் நாளைக்கு கோர்ட்ல தாக்கல் செய்யப்போறேன். அதனால சொத்தெல்லாம் எனக்கு தான்னு வரப்போகுது, நீ நாமத்தை போட்டுக்கிட்டு போக வேண்டியது தான்.

(சண்முகம் வெளியே போகிறார். கீதா உள்ளே வருகிறார்)

கீதா – என்னங்க, உங்க பங்காளிகிட்டேயும், உங்க அண்ணன் எழுதி கொடுத்திருப்பாரா?

சொக்கன் – நீ வேற, அவர் அப்படி எல்லாம் பண்ணியிருக்கவே மாட்டாரு. இவன் ஏதோ ஃப்ராட் பண்ணியிருக்கான். கையெழுத்தை வச்சு, யார் கிட்ட இருக்கிறது உண்மைன்னு, கோர்ட்ல சொல்லிடுவாங்க.

கீதா – எனக்கென்னவோ ரொம்ப பயமாக இருக்குதுங்க. நாம வேற ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளை வச்சிருக்கோம். அதுகளுக்கு கல்யாணம் காட்சின்னு பண்ணனும். அந்த சொத்து இருந்தா, நல்ல இடத்துல ரெண்டு பேரையும் கல்யாணம் செய்யலாம். அப்புறம் உங்க அண்ணன் பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு,ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவை ஏத்துக்கலாம். முடிந்த அளவு பாழடைந்த கோயில்களையெல்லாம் புதிப்பிக்க முயற்சி  செய்யலாம்.இப்படி அந்த சொத்தை வச்சு, நான் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன்.  

சொக்கன் – கவலையேப்படாதே, எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான்.

கீதா – நானும் அந்த நம்பிக்கையில தாங்க இருக்கேன். உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம வாழ்ந்ததுக்கு, நாம தான் அவரை நல்லா பார்த்துக்கிட்டு, எல்லாம் செஞ்சோம். அவரும் நம்ம மேல பிரியமா இருந்தாரு. அவரை வச்சு பார்த்துக்கிட்ட புண்ணியத்துக்காவது, அந்த ஆண்டவன் அவரோட சொத்தை நமக்கு கொடுக்கணும்.

சொக்கன் – அண்ணாகத்தான், இஷ்டப்பட்டு தன் சொத்தெல்லாம் நம்ம பசங்க பேருக்கு எழுதி வைக்கிறேன்னு எழுதி வச்சார்.அதனால கண்டிப்பாக அந்த ஆண்டவன் நம்ம பக்கம் தான் இருப்பான். நம்ம வாழ்க்கையில நடக்கிறதை பார்க்கும்போது, அந்த காலத்துல ஈசன் புரிந்த திருவிளையாடல் ஒண்ணு எனக்கு நியாபகத்துக்கு வருது.

கீதா – திருவிளையாடல்னா, சிவாஜி நடிச்ச திருவிளையாடலையா  சொல்றீங்க?

சொக்கன் – அந்த படத்துல “தருமிக்கு பொற்கிழி அளித்த படலத்தை” காட்டியிருப்பாங்க. அது மாதிரி சிவன் 64 திருவிளையாடல்களை புரிந்திருக்கிறார். அதுல “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்ன்னு” ஒண்ணு இருக்கு. அந்த திருவிளையாடல் மாதிரியே தான், இப்ப நம்ம வாழ்க்கை இருக்கு.

கீதா – அந்த கதையை கொஞ்சம் சொல்றீங்களா.

சொக்கன் – இங்க ஒரு வாரமா, நாரத காண சபாவில, ஒய் .ஜி மகேந்திரனோட நாடக குழு, திருவிளையாடல் நாடகத்தை போட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு போடுற 3 நாடகத்துல, அந்த “மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தையும்” போடுறாங்க. வா, போய் பார்க்கலாம்.


கட்சி – 2

இடம் – நாரத காண சபா

காட்சியமைப்பு – மாமனாக வந்து வழக்குரைத்த படலம் நாடகம் அரங்கேறுகிறது

(சுந்தரேச பாதசேகரனின் ஆட்சிக்காலத்தில் தனபதி என்ற வணிகர் தன்  மனைவி சுசீலையுடன் மதுரை நகரில் வசித்து வந்தார். பெரும் செல்வந்தரான வருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.ஆஸ்தியை    வருங்காலத்தில் ஆள ஒரு குழந்தை வேண்டுமே! சுந்தரேச பெருமானிடம் அவர்கள் வைக்காத வேண்டுதல் இல்லை. வருடங்கள்  ஓடியதே தவிர குழந்தை பிறக்கிற வழியைக் காணோம்.  இனி நடப்பதை பாருங்கள்)

சுசீலை -  ஐயனே, அந்த சுந்தரேசன் கண்ணைத் திறக்க மாட்டானா? இனிமேல் நமக்கு குழந்தையே பிறக்காதா?

தனபதி - அவ்வாறு அதைரியம் கொள்ளாதே சுசீலை. நம்முடைய வேண்டுதலுக்கு அந்த ஈசன் செவி சாய்ப்பான்.

(இருவரும் அந்த இறைவனை தொழுதுவிட்டு, வெளியே போய் மீண்டும் உள்ளே வருகிறார்கள்)

தனபதி – சுசீலை, யாம் ஒன்று சொல்லுவோம், கேட்கிறாயா?

சுசீலை – சொல்லுங்கள் ஐயனே, நான் என்றைக்கு தங்களின் பேச்சை மீறியிருக்கிறேன்.

தனபதி – நமக்கும் வயதாகிறதொழியே, குழந்தை பிறப்பதாக இல்லை. நம்முடைய ஆஸ்தியை நமக்கு பின் கட்டிக்காப்பதற்கு, எம்முடைய தங்கையின் மகனை சுவீகாரம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

சுசீலை – மிகவும் பொருத்தமான செயல் ஐயனே. அப்படியே செய்யுங்கள்.

தனபதி – சரி, தங்கையின் இல்லத்திற்கு செல்வோம்.






காட்சி – 3

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியும், சுசிலையும் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வர வேண்டும் அண்ணனே, வர வேண்டும் அண்ணியாரே. வர வேண்டும். வர வேண்டும்.

(அப்போது வருண் இருவர் காளிலும் கீழே விழுந்து வணங்குகிறான்)

வருண் – பணிகிறேன் மாமா

தனபதி – (வருணை எழுப்பி), யாம் உனக்கு தாய் மாமன் அல்ல. இனி, நீ எம்மை தந்தையே என்று தான் அழைக்க வேண்டும்.

சுசீலை – ஆம் மகனே, இனி நான் தான் உன் தாய்.

அன்னம் – (அதிர்ச்சியாக) தாங்கள் இருவரும் என்ன சொல்கிறீர்கள்? இந்த சின்னவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தனபதி – அம்மா அன்னம், உன் மகனை யாம் சுவீகாரம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறோம். தமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?

அன்னம் – அப்படியா, மிக்க மகிழ்ச்சி அண்ணா. இனி எம்முடைய புதல்வனைப் பற்றி எனக்கு பயம் இல்லை. தங்களிடம் வளர்ந்து பெரிய ஆளாக வந்துவிடுவான்.

தனபதி – வந்த வேலை மிகவும் சுலபமாகி விட்டது. யாம் நல்லதொரு சுபமுகூர்த்த நாளில், இப்பாலகனை எம்முடைய புதல்வனாக சுவிகரித்துக்கொள்கிறோம். நாங்கள் விடைபெறுகிறோம் சகோதரி.

(இருவரும் கிளம்பி செல்கிறார்கள்)

அன்னம் – மகனே, இனிமேல் மாமாவும், மாமியும் தான் எல்லாம். அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடந்து வருங்காலத்தில் மாமனைப் போல் பெரிய ஆளாக வர வேண்டும்.

வருண் – ஆகட்டும் அன்னையே. தங்கள் சொல்படியே நடக்கிறேன். 


காட்சி – 4

இடம் – தனபதியின் இல்லம் 

காட்சியமைப்பு – அன்னம் அங்கு வருகிறார்

அன்னம் – அண்ணியாரே, என் புதல்வன் எப்படி இருக்கிறான்?

சுசீலை – வா அன்னம். என்னது உன் புதல்வனா? அவனைத்தான் நாங்கள் சுவீகாரம் செய்து கொண்டோமே. இனிமேல் அவனை அப்படி கூப்பிடாதே.

அன்னம் – என்னது அப்படி கூப்பிட கூடாதா? நீங்கள் சுவீகாரம் செய்துகொண்டாலும் அவன் என் மகன் இல்லை என்று ஆகிவிடுமா?, பத்து திங்கள் என் வயிற்றில் அவனை சுமந்து ஈன்றவள் நான் தானே.  

சுசீலை – நீ இவ்வாறு பேசுவது, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இரு, நான் சென்று என் ஐயனிடம் இதைப்பற்றி எடுத்துரைக்கிறேன்.

(அப்போது வருண் அங்கு வந்து தன் தாயோடு பேசிக் கொண்டிருக்கிறான். சுசிலையும் தன் கணவனிடம் முறையிடுகிறாள்)

சுசீலை – ஐயனே, நம்முடைய பாலகனுக்கு தங்களின் தங்கை தான் தாயாம், நானில்லையாம். இப்படியே சென்றால், நம் பாலகன் என்னை அன்னையே என்று அழைக்க கூட மாட்டான். தங்களின் தங்கைக்கு தாங்கள் தான் புரிகிற மாதிரி எடுத்துரைக்க வேண்டும்.

தனபதி – அன்னம், நீ அடிக்கடி உன் புதல்வனை இங்கு பார்க்க வருவது மிகவும் தவறு. அவன் இப்பொழுது எங்கள் மகன். மேலும் நீ தான் அவனின் தாய் என்றால், அவன் சுசிலையை தாயாக ஏற்றுக்கொள்வானா?

அன்னம் – அண்ணா, ஐயகோ, இக்து என்ன கொடுமை, ஈன்றெடுத்த புதல்வனை மகனே என்று அழைப்பதற்கு கூட முடியாதா? அவனை தாங்கள் சுவீகரித்தாலும் அவன் என்னுடைய மகன் என்பதில் மாற்றம் இல்லை.

தனபதி – இவ்வாறு ஒரு எண்ணத்தோடு, இனி நீ இங்கு வர வேண்டாம்.

அன்னம் – அண்ணா, என்னையா வர வேண்டாம் என்று சொல்கிறீர்கள். என் புதல்வனால் தான் தங்களுக்கு இறுதிக்கடன் நடந்து, நீங்கள் சொர்க்கத்தை அடைய முடியும். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

(அன்னம் செல்கிறாள். தனபதி இறைவனை தொழுகிறார்)

தனபதி – சுந்தரேசா! எனக்கு குழந்தை இல்லாததால் தானே இப்படி ஒரு வசைக்கு ஆளானேன். இப்பிறவியில் என் வேண்டுதலை ஏற்க மறுத்தாய். அடுத்தபிறவியிலாவது அந்த பாக்கியத்தைக் கொடு. சுசீலை, சுசீலை.

சுசீலை – ஐயனே, அழைத்தீர்களா?

தனபதி – எமக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் இனி ஒரு ஷணம் கூட இங்கிருக்க வேண்டாம். புறப்படு, நாம் கானகத்துக்கு சென்று அங்கு தவ வாழ்க்கையை மேற்கொள்வோம்.

சுசீலை – தங்களின் வாக்கே எனக்கு தேவ வாக்கு . புறப்படலாம் ஐயனே.

Thursday, September 18, 2014

நம்ப முடியவில்லை!!! நம்ப முடியவில்லை!!!!


 


வலைப்பூ நண்பர்கள் மூவர் அவர்களுக்கு கிடைத்த விருதினை என்னுடன் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த செய்தி அறிந்தவுடன், வலைப்பூவுலகில் நான் என்ன பெரிதாக சாதித்துவிட்டேன் என்று எனக்குள் கேள்வி எழுந்தது.  இந்த விருதுக்கு நான் தகுதியானவன் தானா என்றெல்லாம் எண்ணினேன். உண்மையை சொல்வதென்றால், நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கூட முற்றுப்பெறவில்லை. பெரும்பாலும் அனுபவப்பதிவுகளைத்தான் நான் எழுதி கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு சில கதைகளை எழுதியதோடு சரி, பிறகு கதைக்களம் பக்கமே செல்வவில்லை. மனதிற்குள் சில கருக்கள் உருவாகியிருப்பது என்னமோ உண்மை தான். அவைகள் தொடர்கதைகளாக பிரசவிக்கும் காலம் தான் எப்போது என்று தெரியவில்லை. இந்த விருதை பெற்ற பிறகு, சீக்கிரம் அந்த கருக்கள் பிரசவிக்க வேண்டுமே என்று ஆவல் ஏற்படுகிறது.

நான் விருதைப் பெற தகுதியானவன் தான் என்று என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு விருதினை அளித்த மூவரும் ஆசிரியர்கள்.  அதாவது இருவர், ஆசிரியர்களாக தொழில் புரிபவர்கள். மற்றொருவர் டியுசன் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தவர். இப்படி ஆசிரியர்கள் கையால் விருது பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. (படிக்கிற காலத்தில் பெறாததை எல்லாம் இப்போது பெறும்போது சந்தோஷமாகத்தானே இருக்கும்!!!)

எனக்கு விருதை அளித்த ஆசிரியர்கள்:

இவர் கரந்தையில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருடைய வரலாற்று பதிவுகளின் மூலம், வரலாற்று பக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.


 இவர் புதுக்கோட்டையில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய பதிவுகள்  ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தன்னார்வல தமிழ் ஆசிரியராக இருக்கும் எனக்கு கற்றுக்கொடுக்கிறது.

           http://www.malartharu.org

இவர்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் ஸ்ரீ காரியசித்தி கணபதி கோயிலில் குருக்களாக இருப்பவர். தமிழ் இலக்கணத்தைப் பற்றி அதிகம் தெரியாமலே, இங்கு தன்னார்வல தமிழ் ஆசிரியராக இருக்கும் எனக்கு இவருடைய பதிவுகள் தான் இலக்கணத்தை எளிதாக  கற்றுக்கொடுத்துக்கொண்டு வருகிறது.

                    http://thalirssb.blogspot.com/

இந்த விருது ஒரு தொடர் விருது. இந்த விருதின் விதிமுறைகள் என்னவென்றால்,

 
1.        விருதை அளித்த தளத்தினை தளத்தை பகிர வேண்டும்.

2.        விருதினை தளத்தில் பதிய வேண்டும்.

3.        குறைந்தது ஐந்து பேருக்கு இந்த விருதை பகிர வேண்டும்

4.        விருதினை பெற்ற நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டும்

 
முதல் இரண்டும் முடிந்து விட்டது. குறைந்தது ஐந்து பேருக்கு இந்த விருதினை பகிரவேண்டும்.  ஏற்கனவே, நான் தாமதமாக இந்த பதிவை எழுதுவதால், ஏறக்குறைய என் வலைப்பூ நண்பர்கள் அனைவரும் இந்த விருதினை பெற்றுவிட்டார்கள். இருந்தும் நான் ஒரு சிலருக்காவது இந்த விருதினை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

கம்பனது உவமைகளை எடுத்து கூறும் நண்பர் அன்பு ஜெயா  - http://tamilpandal.blogspot.com.au/

ஊக்கமது கைவிடேல் நண்பர் பக்கிரிசாமி  - http://packirisamy.blogspot.com/

காகித பூக்கள் சகோதரி ஏஞ்சலின் - http://kaagidhapookal.blogspot.com.au/

சுயம்பு நண்பர் இல.விக்னேஷ் - http://indianreflects.blogspot.com/

 
நிறைய பதிவுகளில் என்னுடைய சுயபுராணத்தை சொல்லிவிட்டேன். அதனால் என்னைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

 இந்த விருதினை எனக்கு வழங்கிய நண்பர் ஜெயக்குமார், நண்பர் கஸ்தூரி ரங்கன் மற்றும் நண்பர் சுரேஷ் அவர்களுக்கும், நான் மொக்கையாக பதிவை போட்டாலும், அதை படித்து கருத்து கூறும்  வலைப்பூ நண்பர்களுக்கும், இந்த தளத்தை வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .