Friday, April 19, 2019

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா?


வேண்டுமென்றே(?) பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்....





ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்(!) 


மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் 


ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏந்திச் செல்லும்  நவீன எந்திரங்கள் 




சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்களின் அவல நிலை

அதிமுக நிர்வாகி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக (தயாராக) நின்று கொண்டிருக்கிறார்  


கண்முன்னே இருந்தும் குமரியில் காணாமல் போன 1000 மீனவர்கள் 

குமரியிலும், பட்டுக்கோட்டையிலும் பதிவான கள்ள ஓட்டுக்கள் 

Thursday, April 18, 2019

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 8 (ஊக்கத்தொகை விருது)


(இனியா - புதுமைக்கான விருது (innovation award)
ஓவியா - இணைந்து செயல்பட்டற்கான விருதும்      (collaboration award), ஊக்கத்தொகை விருதும் (Scholarship award)


சென்ற வாரம் ஓவியா,இனியாவின் பள்ளியில் இருந்து, ஓவியாவும் (ஐந்தாம் விகுப்பு), இனியாவும் (இரண்டாம் வகுப்பு) இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முதல் பருவ கூட்டத்தில் (first term assembly) விருதுகள் வாங்குகிறார்கள்,வந்து கலந்து கொள்ளுங்கள் என்று கடிதம் வந்திருந்தது. இங்கு பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களில் (assembly) எல்லாம் பள்ளியின் தலைவர்கள் (மாணவன்,மாணவி தலைவர் மற்றும் மாணவன், மாணவி துணைத்தலைவர்) - குழு தான் முன்னின்று நடத்தும். தொடக்க கல்வி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தான், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று இந்த பதவிக்கு வருவார்கள்.

இம்மாதிரி விருது வழங்கும் கூட்டத்தில், ஆசிரியர்கள் விருது வாங்கும் மாணவர்களின் பெயர்களை படித்து, அந்த விருதை தலைவர்கள் குழுவிடம் கொடுப்பார்கள், தலைவர்கள் தான் அந்த விருதை மாணவர்களிடம் வழங்குவார்கள். இது ஒரு வகையில் விருது வாங்கும் மாணவர்களுக்கு, நாமும் இந்த இடத்தில் நின்று இம்மாதிரி விருதுகளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும்.

இந்த கூட்டத்திற்கு மாணவிகளுக்கான துணைத்தலைவர் விடுமுறையில் இருந்திருக்கிறார். அதனால் ஓவியாவின் வகுப்பில் ஒரு நாள், எல்லோருக்கும் ஒரு தலைப்பை கொடுத்து எந்த ஒரு முன் தயாரிப்புமின்றி, மூன்று நிமிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். அதில் ஓவியா தேர்வுப்பெற்று, இந்த கூட்டத்தை நடத்தும் ஒருவராக வாய்ப்பு பெற்றிருக்கிறார். எங்களுக்கு அவர் விருது வாங்குவது மட்டுமல்லாமல், இவ்வாறு ஐந்தாம் வகுப்பிலேயே, விடுமுறையில் இருக்கும் பள்ளியின் துணைத்தலைவருக்கு மாற்றாக அவர் வாய்ப்பு பெற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பள்ளியின் பட்டிமன்ற குழுவிழும் (SCHOOL DEBATE TEAM) ஓவியா தேர்வாகி இருப்பது தான். பட்டிமன்ற குழு என்ன செய்யும், எவ்வாறு ஓவியாவை தேர்வு செய்தார்கள் என்பதை பற்றியெல்லாம் வேறொரு பதிவில் சொல்கிறேன்.

இங்கு பள்ளியின் இடைவேளைகளில் எல்லாம் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்று தான் UKULELI (கிடாரின் சிறிய வடிவம்) என்கிற ஒரு இசை கருவியை இலவசமாக பயிற்றுவித்தல். இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். அதில் ஓவியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்த கருவி மற்றும் வேறு சில கருவிகளையும் முழுமையாக கற்றுக்கொள்ள “MUSIC BUS” என்ற ஒரு தனியார் நிறுவனம் வாரம் ஒரு நாள் பள்ளிகளுக்கே சென்று பயிற்றுவிக்கிறார்கள். ஒரு வகுப்புக்கு (30 நிமிடம்) கட்டணமாக $15 பெறுகிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஓவியாவும் நானும் அந்த மியூசிக் பஸ்ல சேரட்டுமா என்று கேட்டிருந்தார். நாங்களும் நீ இந்த ஒரு வருடமும் உங்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள், அடுத்த வருடம், உனக்கு இன்னும் அதே ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேர்த்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் அவரின் நியாமான ஆசைக்கு கடவுள் அளித்த அங்கீகாரம் தான் ஊக்கத்தொகை விருது.

இந்த விருதானது இந்த ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதின் மூலம் ஓவியா ஒரு ஆண்டு முழுவதும் மியூசிக் பஸ்ஸில் பயிற்சி பெறலாம்.








(உட்கார்ந்திருப்பவர்கள் தான் இந்த ஆண்டின் மாணவர்கள் தலைவர் குழ. அதில் ஓவியா துணைத்தலைவருக்கு மாற்றாக இருக்கிறார்)


(மாணவர் தலைவரின் உரை)


(மாணவி தலைவரின் உரை)


(ஓவியாவின் உரை)




(கூட்டத்தின் ஒரு பகுதி)



(விருதை அளிப்பதற்காக நின்றுகொண்டிருக்கிறார்)



இனியா விருதை வாங்குவதற்காக வருகிறார்)




(விருதை வாங்கிக்கொண்டு நிற்கிறார்கள்)




(ஊக்கத்தொகைக்கான விருதை காணொளி)




பின்குறிப்பு - அடுத்த ஆண்டு பள்ளிக்கூட தேர்தலில், ஓவியாவிற்கு தலைவர் பதவிக்கு நிற்க வேண்டும் என்று ஆசை. ஆனால் தனக்கு யார் வோட்டு போடுவார்கள் என்று கவலை. உடனே இனியா, அக்கா, நீங்கள் நில்லுங்கள் நான் என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி, உங்களுக்கு வோட்டு போடச்சொல்லுகிறேன் என்று கூறினார். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபோது எனக்கு நம்மூரில் நடக்கும் அரசியல் கூத்துக்கள் தான் நியாபகத்துக்கு வந்தது. 

Monday, April 8, 2019

ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் "ஸ்டண்ட்கள்"

ஓட்டு வாங்குவதற்காக நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் முன்பு எப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிக்கிறார்கள் பாருங்கள். இந்த ஸ்டண்ட்கள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகும் செய்வார்களா??? 
மக்களுக்கு சேவை செய்வதற்கே எங்களுக்கு நேரம் பற்றவில்லை இதில் எங்கேயிருந்து இப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க முடியும் என்று திருப்பி கேட்பார்கள் . 
 

ஒரு டீக்கடையை கூட விட்டு வைக்கலை. ஒவ்வொரு தேர்தலின் போது தான் இவர்களுக்கு எல்லாம் இந்த டீக்கடைகளே கண்ணில் தெரியும் போல. 


டவுட் கோவாலு - இவர்கள் குடித்த டீக்கு காசு கொடுத்திருப்பார்களா?







டவுட் கோவாலு - இவர் குடிப்பது காப்பியா? டீயா?  இல்ல  இரண்டும்  சேர்த்தா?




டவுட் கோவாலு - நம்மவருக்கு இந்த சின்ன கப் போதுமா?





டவுட் கோவாலு - இந்த கிளாசை என்றைக்காவது கையில் தொட்டிருப்பாரா? 




டவுட் கோவாலு - இது தாமரைப்பூ கலந்த டீயா?




டவுட் கோவாலு - பரிமாறுகிறவர்களுக்கு காவி உடை வாங்கிக்கொடுத்திருப்பாரோ?





டவுட் கோவாலு -  எப்படி இந்த சாப்பாட்டை சாப்பிடுறதுன்னு தெரியலையோ? 



டவுட் கோவாலு - நம்ம வேலைக்கு ஆப்பு வச்சுடுவாங்களோ?
                                                           




டவுட் கோவாலு - காய்கறி வாங்குபவர்களுக்கு தாமரைப்பூவும் இலவசமாக கொடுக்கப்படுமா?




டவுட் கோவாலு - ஓட்டுக் கேட்பதற்காக காலை பிடிக்கிறாரா?




டவுட் கோவாலு - இந்த பாட்டியை கட்டிப்பிடிக்க தோனலையா? 



டவுட் கோவாலு - அரசியலும் சினிமாவும் கை விட்டால்?





டவுட் கோவாலு - எந்த ஊர்ல இந்த ஹோட்டலை நடத்துறீங்க?


டவுட் கோவாலு - இந்த குழந்தையையும் கூட்டிக்கிட்டா பிரச்சாரத்துக்கு போறீங்க?





டவுட் கோவாலு - இந்த குழந்தை பெரியவளாகி தாமரைக்கு ஓட்டு போடுமா?



டவுட் கோவாலு - எம்.ஜி.ஆர் படமா பார்க்குறீங்க?







டவுட் கோவாலு - ஒத்த செருப்புக்கு இவ்வளவு பெரிய செருப்பு ஸ்டாண்ட்டா?



இத்தனை புகைப்படத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இந்த புகைப்படம் தான் . 

என்னடா இவன் அரசியல் பதிவெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா? தினம் தினம் இவர்கள் அடிக்கின்ற கூத்தை பார்த்து வெறுத்துப்போய் வந்தது தான் இந்த பதிவு. 

டவுட் கோவாலு -  தமிழ் நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும்  நோட்டா  வெற்றி பெற்றால்???

கொசுறு - இந்த ஸ்டண்ட் விஷயத்தில் தாமரை தான் முன்னுக்கு இருக்குது போல!!!!

Sunday, April 7, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 2


                                                            மினி சந்திப்பு                                                                                 (நானும் செல்லப்பாவும் டயட் கண்ட்ரோல்...)

முதல்  பகுதியை படிக்காதவர்கள் - பகுதி-1


அந்த கடினமான வேலை என்னவென்றால், தீர்க்கதரிசி அதிரா அவர்கள் கூறியது போல் எல்லோரையும் எப்படி ஒரே நாளில் ஒன்று சேர்ப்பது என்பது தான். எங்களை ஒன்று சேர்ப்பதற்கு முன்பு, முதலில் கல்லூரியிலிருந்து அனுமதியைப் பெற்று, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களின் தேதியையும் அறிந்து கொண்டு, பின்னர் எல்லோரிடமும் மே,ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் விழா நடத்தலாம் என்று ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளிடம் சொல்லி எல்லோரையும் கேட்கச்சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் மே மாதம் இறுதி வாரத்திலும், ஒரு சிலர் ஜூன் மாதத்திலும்  வைக்கலாம் என்று கூறி குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஜூன் மாதம் 10ஆம் தேதி என்று முடிவானது.

இங்கு எங்கள் துறையில் படித்தவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நாங்கள் மொத்தம் 21 மாணவ,மாணவியர்கள் கணிணித்துறையில் பயின்றோம். அதில் இருவர் மாணவிகள். நான் ஆஸ்திரேலியாவிலும், செல்வம், பழனியப்பன் மற்றும் தாமோதரன் மூவரும் சிங்கப்பூரிலும்,வள்ளியப்பன் மற்றும் செல்வதிருப்பதி அமெரிக்காவிலும்,பாண்டி ஐக்கிய அரபு நாடுகளிலும்  வசிக்கிறோம். தேதி முடிவானவுடன், எங்கள் துறையிலிருந்து 13 பேர் நாங்கள் கலந்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் இருதலைக் கொள்ளியாகவே நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு காரணம் வியாபாரத்தை விட்டுவிட்டு எப்படி வருவது என்பது தான். நண்பர்கள் ஒவ்வொரு முறையும் பேசும்போது கண்டிப்பாக வந்துவிடு என்று தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மணி தான் கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்ளுங்கள், நான் வீட்டையும், வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் அளித்து என்னை வழியனுப்பினார்கள்.

என்னுடைய பயணத்திட்டமானது, ஜூன் 5ஆம் தேதி சிட்னியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, 6,7 இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, உறவினர்களை சந்தித்துவிட்டு, ஷாப்பிங் செய்துவிட்டு, 8ஆம் தேதி கரூர்க்கு போய் (மாமனார் வீட்டுக்கு போகாமல் போனால் என்னவாவது!!) அங்கேயிருந்து 9ஆம் தேதி மதியம் தேவகோட்டைக்கு சென்று, இரண்டு நாட்கள் அங்கே தங்கிவிட்டு, 11ஆம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பி 12ஆம் தேதி கடைசி நேர ஷாப்பிங் முடித்துவிட்டு அன்று இரவு சிட்னிக்கு விமானம் ஏறுவது தான் பயணத்திட்டம். நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தமாக 9 நாட்கள் அம்மணியிடம் வியாபாரத்தையும், வீட்டையும் ஒரு விதமான தைரியத்தில் ஒப்படைத்தேன்.

5ஆம் தேதி இரவு சென்னை வந்தவுடன் மறு நாள் நண்பர் செல்லப்பவை மட்டும் சந்தித்துவிட்டு (20 ஆண்டுகள் கழித்து இவரை சந்தித்தேன்), பர்சேஸ் எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவில் உறவினர்களையும் சந்தித்து முடித்தேன். 7ஆம் தேதி இரவு நண்பர் சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்தேன். சிதம்பரத்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரின் மாமனார் ஊரும் கரூர் தான். (செல்லப்பா,சிதம்பரம், மற்றும் முத்துகுமார் சென்னையில் வசிக்கிறார்கள்.) செல்லப்பாவும், முத்துக்குமாரும் அசோக் நகரிலிருக்கும் சரவண பவனுக்கு வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதனால் சிதம்பரம் வீட்டில் மாலை பலகாரத்தை(?) மட்டும் முடித்துக்கொண்டு நேராக சரவண பவனுக்கு சென்றோம். அங்கு நால்வரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் மலரும் நினைவுகளை எல்லாம் அசைபோட்டுவிட்டு மற்ற மூவரும் என்னை கரூர் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பினார்கள்.

 8ஆம் தேதி காலை கரூர் சென்றடைந்தேன். அங்கு அடுத்த நாள் மதியம் வரை இருந்துவிட்டு, தேவகோட்டைக்கு கிளம்பினேன். கரூரிலிருந்து காரைக்குடி,தேவகோட்டைக்கு செல்வதற்கு பொதுவாக எல்லோரும் திருச்சி வழியாகத்தான் செல்வார்கள். ஆனால் நான் அவ்வாறு செல்லாமல் வேறு மார்க்கமாக சென்றேன். நண்பர்கள் சிலர், கல்லூரி நாட்களில் என்னையும் இன்னொருவரையும் இணைத்து காதல் பறவைகள் வந்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அந்த காதலியை பார்பதற்காகத்தான் நான் வேறு மார்க்கமாக  சென்றேன். அந்த காதலி யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன். 

பி.கு: இந்த பதிவை சென்ற வாரத்தில் இருந்து எழுத வேண்டும் என்று நினைத்து எழுத முடியாமல் போய் விட்டது . கண்டிப்பாக இன்றைக்கு எவ்வளவு நேரமானாலும் எழுதிட  வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நாளைக்கு ஒரு மணி நேரம் கூட தூங்கலாம் (நாளைக்கு டே லைட் சேவிங்க் முடிவடைகிறது, அதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும்). கடந்த இரண்டு நாட்களாக நண்பர்களின் தளத்திற்கு செல்ல இயலவில்லை. நாளை முதல் எல்லோரின் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன்.   

                           ---தொடரும்


Saturday, March 30, 2019

கல்லூரியின் 25ஆம் ஆண்டு-நினைவுகளின் ஓர் சங்கமம் - 1

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, கணினித்துறை  - 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நான் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயாரானோம்.  சிலர் முதுநிலை படிப்பு படிப்பதற்கும், சிலர் வேலை தேடுவதற்கும் பிரிந்து சென்றார்கள். நானும் வேலை தேடுவதற்காக அவர்களை விட்டு பிரிந்து  சென்றேன். அப்படி இப்படி என்று இப்போது 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. 25ஆண்டுகள்  முடிந்ததையொட்டி,  எங்களுடன்  படித்த அனைத்துத் துறை நண்பர்களும் இதனை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி கொண்டாடினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன்.  அந்த விழாவைத்தான் ஒரு குறுந்தொடராக பதிவிடுகிறேன்.




இந்த இடைப்பட்ட 25 ஆண்டுகளில் ஏறக்குறைய முதல் 15 ஆண்டுகள் வரை ஒரு சில நண்பர்களுடன் தொடர்பில் இருந்தேன். அதுவும் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாவாகவும் தான். நேரில் சந்திக்கவில்லை.  கடைசி 10 ஆண்டுகள் , வெறுமையின் காரணமாக (அப்பொழுது தான் என்னுடைய தாயார் என்னை விட்டு பிரிந்த காலம்) அந்த ஒரு சில நண்பர்களோடும் நான் தொடர்பை துண்டித்துக்கொண்டேன். மனது வேறு எதிலும் ஈடுபாடு இல்லமல் இருந்த காலகட்டம் அது. அந்த துக்கத்திலிருந்து வெளியே வருவதற்காக, தமிழை மட்டும் நண்பனாக ஆக்கிக்கொண்டேன். அதாவது தமிழ் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துக்கொண்டும், குறுநாடகங்களை எழுதி மேடைகளில் நெறியாள்கை செய்து கொண்டும், வலைப்பூவில் எழுதிக்கொண்டும் இருந்தேன். 

சென்ற வருடம் ஆரம்பத்தில் எங்கள் கல்லூரியின் இயற்பியல் துறை, கணிதத்துறை, கணிணித்துறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து 25ஆம் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு whatsup குழுவை ஆரம்பித்து, தங்களுடன் பயின்ற மாணவர்களை எல்லாம் அதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். 

இந்த சமயத்தில் தான் இங்கு இருக்கும் நண்பரின் முலமாக  சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்  பழனியப்பனோடு மீண்டும் தொடர்பில் இருக்க ஆரம்பித்தேன். பழனியப்பன் என்னையும் அந்த குழுவில் இணைத்து விட்டார்.  ஒவ்வொரு துறையில் இருந்து குறைந்தது இரண்டு பேரை விழா ஏற்பாட்டாளர்களாகவும், அந்த துறையின்  பிரதிநிதிகளாகவும் நியமித்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள். விழா நாளன்று ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான டிஷர்ட்டும், பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான புடவையையும் அணிய வேண்டும் அன்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும், மறுபுறம் அன்றைக்கு காலை,மதியம்,மாலை நேரங்களில் என்ன மாதிரியான உணவு வகைகள்  இருக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும், அடுத்து ஆசிரியர்களுக்கு  என்ன மாதிரியான நினைவுப்பரிசை வழங்க வேண்டும் என்று வேலைகள் அனைத்தையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த  வேலைகள் எல்லாம் கூட அவர்களுக்கு கடினமாக இருந்திருக்காது, ஒரே ஒரு வேலையைத் தவிர, அது என்னவென்றால்....
---தொடரும் 

Friday, March 22, 2019

மறக்க முடியாத ஆசிரியர்




எல்லோருக்கும் பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் தங்களுக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எனக்கும் என்னுடைய கல்லூரி காலத்தில் ஆசிரியர் மாணிக்கம் மிகவும் பிடித்தமான ஒரு ஆசிரியர். இன்றைக்கும் நினைவில் இருந்து நீங்காத ஒரு ஆசிரியரும் கூட. 

மாணிக்கம் ஆசிரியர் இவ்வாண்டு ஓய்வு பெறுகிறார் அவரைப் பற்றி எழுதிக்கொடுங்கள் என்று நான் படித்த கல்லூரியிலிருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. ஓய்வு பெறுகிற அளவிற்கு அவருக்கு வயதாகி விட்டதா என்று நினைக்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் 1990ஆம் ஆண்டு நான் கல்லூரியில் அடிஎடுத்து வைத்த முதல் நாள், கணினித் துறை தலைவர் என்று அவர் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டபோது, ஒரு முதுகலை படிப்பு பயிலும் மாணவரைப்போல் தான் அவருடைய தோற்றம் இருந்தது. அப்படி ஒரு மாணவர் போல் அன்று தோற்றமளித்த அவர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்று நினைக்கும்போது, எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.

அவரைப் பற்றி சில வரிகள் உங்களின் பார்வைக்காக....

மிகவும் கடினமான பாடங்களைக்கூட அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக அவர் வகுப்பு எடுக்கிற விதமே தனி அழகு தான். எனக்குத் தெரிந்து அந்த மூன்று ஆண்டுகளில் அவர் யாரையும் மிகவும் கோபமாக திட்டியது கூட கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லாவற்றையும் (எங்களின் குறும்புகள் உட்பட)அனைத்தையும் சுலபமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக எங்களுக்கு புரிகிற மாதிரி அறிவுரை வழங்குவார். எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. 

இரண்டாம் ஆண்டு விடுமுறையில் நானும், நண்பன் ரமேஷும் “சக்தி சுகர்ஸ்” கரும்பு ஆலையில் குறுகிய கால பயிற்ச்சிக்காக (Inplant Training) கல்லூரியிலிருந்து முன் அனுமதி பெறாமல் சென்றிருந்தோம். அந்த பயிற்சியானது, கல்லூரி தொடங்கிய பின்பும், இருபது நாட்களுக்கு தொடர்ந்ததனால் கல்லூரியின் வருகைப்பதிவிற்கு பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்து நாங்கள் இருவரும் மாணிக்கம் ஆசிரியரிடம் சென்று சூழ்நிலையை விளக்கினோம். அப்போது அவர் எனக்குத் தெரியாமல் நீங்கள் எவ்வாறு இந்த மாதிரி செயலில் இறங்கலாம் என்று கோபிக்காமல், எந்த ஒரு ஈகோவையும் பார்க்காமல், நான் முதல்வரிடம் சொல்லி உங்களின் வருகைப்பதிவிற்கு ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் ஆரம்பித்த பயிற்சியை செவ்வனே முடித்துவிட்டு கல்லூரிக்கு வாருங்கள் என்று கூறி தான் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உயர்வுக்கு என்றும் காரணமாக இருப்பவர் என்று நிருபித்தார். 

ஒவ்வொரு முறையும் கோபால் செய்முறை வகுப்பில் (cobol programming) நான் தடுமாறியபொழுது எல்லாம், என்னுடன் அமர்ந்து, பொறுமையாக நான் செய்கின்ற தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, தவறுகள் வராமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பலமுறை எனக்கு விளக்கி வகுப்பு எடுத்தார். அவருடைய அந்த அடித்தளம் தான், பிற்காலத்தில் கோபால் ப்ரோக்ராம்மிங்கில் (cobol programming) கிட்டதட்ட 23 ஆண்டு காலம் என்னால் கோலோச்ச முடிந்தது.
  
அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த இரண்டு விஷயங்களே போதுமானது அவர் எப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு.

அவரை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை. அதனால் இறைவனிடம் அவருடைய ஓய்வு காலம் மிகவும் ஒரு சிறந்த காலமாக விளங்க வேண்டும், மேலும் அவர் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடும், மிகவும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


பின் குறிப்பு: சென்ற ஆண்டு தான் எங்களின் 25ஆம் ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. வேறொரு பதிவில் அதனை பற்றி  எழுதுகிறேன். அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் மேல உள்ள புகைப்படம் 

Sunday, March 3, 2019

எங்கள் வீட்டில் குடியிருந்த Blue Tongue Lizard - அரணை




நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் (backyard) இந்த அரணை இருக்கிறது, இது ஒன்றும் பண்ணாது, மேலும் இது இருந்தால் பூச்சிகள் எல்லாம் வராது என்று கூறியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் அதனை ஆச்சிரியமாக கேட்டிருக்கோமேயொழிய பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் நான்கைந்து நாட்களுக்கு முன்பு, இந்த அரணை எங்கள் வீட்டு பின்புறத்தில் காற்றுவாங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். இது என்னடா நம்ம வீட்டுக்கும் வந்துவிட்டதே என்று ஒரு நிமிடம் பயந்து போனேன். நான் அதை பார்த்து பயந்ததை விட, இந்த அரணை தன்னுடைய திருமுகத்தை அம்மணிக்கு  காட்டினால் என்ன பண்றதுன்னு தான் எனக்கு பெரிய பயமே. ஏன்னா அம்மணி ஒரு சின்ன பல்லியை பார்த்தாக்கூட பத்து வீட்டுக்கும் கேக்கிற மாதிரி ஒரு கத்து கத்துவாங்க. பல்லின்னா அப்படி ஒரு அலர்ஜி. அப்படியிருக்கும்போது இந்த அரணையை பார்த்துட்டா, அதனால எல்லா சாமிக்கிட்டேயும், அம்மணி இதை பார்த்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். என்னோட வேண்டுதல்  வெறும் ரெண்டு நாளைக்கு மட்டும் தான் பலிச்சுது. அந்த ரெண்டு நாளும் அவுங்க கண்ணுக்கு அது தட்டுப்படவே இல்லை. நானும் நிம்மதியா இருந்தேன். 


மூன்றாவது நாள்,  நான் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன். அம்மணி காயப்போட்ட துண்டை எடுப்பதற்காக பின் பக்கம் போயிருக்கிறார்கள்.  திடீரென்று  "என்னங்க இங்க வாங்க" என்று ஒரு பெரிய சத்தம். நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு போய் பார்த்தா, அவுங்க நின்ற  இடத்துலேயே நின்றுகிட்டு இருந்தாங்க . என்னைய பார்த்தவுடன், ஏங்க அந்த "blue tongue" நம்ம வீட்டுக்கும் வந்துடுச்சுங்கன்னு ஒரே புலம்பல். சரி உள்ள வா பார்த்துக்கலாம்னு சொன்னா, நான் உள்ள வரமாட்டேன்னு ஒரே அடம். அப்புறம் அவுங்களை கையை பிடிச்சு உள்ள கூட்டிக்கிட்டு வந்தா, இனிமே நான் பின் பக்கம் போக மாட்டேன், காயப்போட்ட துண்டு துணிங்க எல்லாம் நீங்களே போய் எடுத்துக்கிட்டு வாங்கன்னு ஒரே அழிச்சாட்டியம். நானும் உள்ளுக்குள்ள பயத்தை வச்சுக்கிட்டு வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டு, போய் காயப்போட்டிருந்த துணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன். 

இதுக்குத்தான் பேசாம ஒரு யூனிட்டை (அபார்ட்மெண்ட்டை) வங்கியிருக்கலாம். நீங்க தான் வீடா வாங்கணும் அப்பத்தான் நல்லதுன்னு சொல்லி இந்த வீட்டை வாங்குனீங்கன்னு ஒரே புலம்பல். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, அந்த ஜந்து வீட்டை விட்டு சீக்கிரம் போயிடனும்னு வேற ஒரு ஆர்டர். 

நானும் மறு நாள் எங்கள் கடையில் இருந்துக்கிட்டு, blue tongue rescue நிறுவனத்தை கூப்பிட்டு, இந்த மாதிரி, இந்த மாதிரி எங்கள் வீட்டில அந்த ஜந்து வந்துடுச்சு, என் மனைவி வீட்டு பின் பக்கத்துக்கே போக மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ரொம்ப கூலா, அது ஒரு அப்பிராணிங்க. யாரையும் ஒண்ணும் பண்ணாது. உங்க வீட்டுல அது இருக்குதுன்னா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்.  நீங்க சொல்றதை பார்த்தா, அது ஒரு குழந்தை தான். பேசாம நீங்க உங்க வேலையை பாருங்க. அது ஒரு தொந்தரவும் கொடுக்காது. இன்னும் சொல்ல போனா, அது இருக்கிறதுனால உங்கள் வீட்டுக்கு பூச்சி, சிலந்தி எல்லாம் வராதுன்னு சொன்னாங்க. நான் உடனே, நீங்கள் சொல்றது எல்லாம் எனக்கு புரியுதுங்க, ஆனா என் மனைவி அதை பார்த்து ரொம்ப பயப்பிடுறாங்களே, அதனால  நீங்கள் யாரையாவது அனுப்பி அதை பிடிச்சுக்கிட்டு போயிடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவுங்க நோ, நோ, நாங்கள் எல்லாம் யாரையும் அனுப்ப முடியாது. நீங்களே  ஒரு பெரிய டப்பாவிலோ இல்ல பிளாஸ்டிக் கவர்லேயோ அதை பிடிச்சு பூங்கா மாதிரி உள்ள எடத்துல ஒரு ஓரமா விட்டுடுங்கன்னு சொன்னாங்க.  ஐயையோ இது என்னடா, நம்மளையே பிடிக்கச் சொல்றாங்களேன்னு ஒரே கவலையாயிடுச்சு. நமக்கு சின்ன வயசிலிருந்தே இந்த விலங்கியல் பாடம்னாலே பெரிய அலர்ஜி. விலங்குகளை எல்லாம் படம் வரையிறதே பிடிக்காது, இதுல அதை தொட்டு எப்படி தூக்குறது. என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. 

சரிங்க, நானே புடிச்சு தூக்கி போட்டுடுறேன்ன்னு சொல்லி போனை கட் பண்னினேன். உடனே அம்மணிக்கிட்டேயிருந்து போன். எங்கள் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிற மராட்டிய நண்பர்  வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை அம்மணி சொல்லியிருக்காங்க. அந்த நண்பரும் அவரோட மனைவியும்,  எங்க வீட்டுக்கு பின்னாடி பெரிய ரெண்டு அரணை இருக்குது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாங்க ஒண்ணும் அதைப் பத்தி கண்டுக்க மாட்டோம். நீங்க என்னடான்னா அந்த சின்ன குழந்தைக்கு போய் இப்படி பயப்பிடுறீங்க. அது ஒண்ணும் பண்ணாதுங்க. அதனால நீங்க கவலைப்படமா போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எங்க அம்மணி யாரு, அதை பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்குது, என்னைய விட எங்க வீட்டுக்காரருக்கு அது கிட்ட ரொம்ப பயம், அதனால நீங்க கொஞ்சம் வந்து அதை தூக்கி போட்டுடுறீங்களான்னு கேட்டிருக்காங்க. அந்த நண்பரும் நான் இதுக்கு சரியான ஆள் இல்ல, என் மகன் தான் சரியான ஆளு, அவன் பள்ளிக்கூடத்திலுருந்து வந்தவுடனே உங்க வீட்டுக்கு அனுப்புறேன்னு சொல்லியிருக்காரு. அவுங்க பையன் பதினோராம் வகுப்பு படிக்கிறவன்.  கொஞ்ச நேரத்துல அவனும் அவனுடைய மற்ற இரண்டு நண்பர்களும் (சீன மாணவன் மற்றும் வெள்ளைக்கார மாணவன்) மூவரும் எங்கள் வீட்டிற்கு வந்து ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக்கொண்டு அதைப் பிடிக்க முயன்று, கடைசியில் அதை வெற்றிக்காரமாக பிடித்து  பக்கத்திலுள்ள பூங்கா ஓரமாக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். (இவர்கள் அல்லவா தைரியசாலிகள்..) 

ஒரு வழியாக அந்த அரணை எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அன்றைக்கு இரவு நான் வீட்டுக்கு வந்தவுடன், அம்மணியிடம் அவுங்க அதை பிடிக்கும்போது நீ சில புகைப்படங்களை எடுத்திருக்கலாமே என்று கேட்டேன். நான் அந்த புகைப்படங்களை எடுத்து என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டார்கள். நீ புகைப்படம் எடுத்திருந்தால், நான் வலைப்பூவில் எழுதுவதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன். உடனே அவர்கள் அப்படி எழுதணும்னு நினைத்த நீங்கள் நம் வீட்டிலிருந்த அந்த அரணை மட்டுமாவது புகைப்படம் எடுத்திருக்க வேண்டியது தானே என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது நல்ல கேள்வி தான், ஆனால் எனக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. பின்ன அவுங்களிடம் நான் பயப்பிடாத மாதிரி நடிச்சேன்னு சொல்ல முடியுமா?

பி.கு: அப்ப மேல உள்ள இரண்டு படங்களும் உங்கள் வீட்டில் இருந்த அரணை இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்கு கேக்குது. அந்த படங்கள் எல்லாம் கூகிள் ஆண்டவர் உபயம். ஹி.. ஹி... 

Friday, February 22, 2019

கருப்பு பணம் - ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா மீட்குமா?



உலகத்தில் பல  நாடுகளில் கருப்பு பணப்புழக்கம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்கிறது. அதற்கு  சீனாவும் விலக்கல்ல.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு புள்ளிவிவரத்தின் படி, கருப்பு பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனா தான் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியா நான்காவது இடம் தான்.

கோடிக்கணக்கான பணம் சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா   போன்ற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறது. அவ்வாறு வெளியேறிய பணத்தை உள்ளே கொண்டு வருவதற்கான வேலையை சீன அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் தான் பெரும்பாலான அந்த கறுப்புப் பணம்  ரியல் எஸ்டேட்  தொழிலில் முடக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தவுடன் , சீன அரசாங்கம்  கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளை ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் மூலமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அந்த அதிகாரிகளின் வேலையானது கறுப்புப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, அந்த சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை திரும்பி சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டத்திற்கு பெயர் தான் "ப்ராஜெக்ட் டிராகன் (Project Dragon )"

இதுவரைக்கும் $80 மில்லியனுக்கான சொத்துக்களை கண்டறிந்திருக்கிறோம். எங்களின் உத்தியானது மிகவும் எளிமையானது மற்றும் சட்டத்துக்கு உட்பட்டதாகும் என்று அந்த இரண்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். 


பார்ப்போம் இவர்கள் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, அந்த பணத்தை சீனாவிற்கே திருப்பி அனுப்புகிறார்களா இல்ல நம்ம மோடிஜியின் கறுப்புப் பண மீட்பு திட்டத்ததைப் போல் வெறும் புஸ்வானமாகி விடுமா என்று!!








Thursday, February 14, 2019

காதலர் தினம்





இது ஒரு மீள்பதிவு. இந்த பதிவு எழுதியே ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த பதிவுல அடுத்த வருஷம்   சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லியிருந்திருக்கிறேன். இன்னைக்குத்தான் மறுபடியும் இந்த பதிவை படிக்கும்போது அப்படி சொன்னதே நியாபகத்துக்கு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மணி இந்த நாளைப் பற்றி நினைக்கிறது எல்லாம் இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்ல. 


இனி இந்த மீழ் பதிவுக்குள் போகலாம். 

எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. 

இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன்.

ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா, ஆ,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. 

உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு என் கோணத்தில் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். 

விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்


எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். 

Sunday, February 10, 2019

அரசுப் பள்ளிக்கு படிப்புச் சீர் வழங்கிய பெற்றோர்

அரசாங்கம் கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. ஆனால் தனியார் பள்ளிகள் புற்றிசல்  போல் முளைத்த பிறகு மக்களிடம் அரசுப்பள்ளியா  என்று ஏளனம் இருந்து வருகிறது. சமீப காலங்களில் அந்த ஏளனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து விட்டது,அதற்கு மிக முக்கிய காரணம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான். இருந்தும் நிறைய பெற்றோர்கள் தனியார் பள்ளி தான் நல்ல பள்ளி என்கிற எண்ணத்தை  மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான் இலட்சம் இலட்சமாக பணத்தை தனியார் பள்ளிகளிடம் வாரி இறைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பதிவில் வரும் பெற்றோர்களைப் பார்த்து, அரசுப் பள்ளிகளைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 


இந்த  செய்தியை   எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று  தெரியவில்லை.ஒரு நல்ல விஷயத்தை செய்தவர்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு.  





நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர் வரிசையாக வழங்கினர்.  கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இந்த பள்ளியில் தான் கல்வி கற்று பின்னர் ஆசிரியராக  பயின்றவராம். 



இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களாக மடி கணினி,பென்சில், தண்ணீர் தொட்டி , இன்வெர்டர், அலமாரி, மின் விசிறி போன்ற 7 இலட்ச ரூபாய்க்கான பொருட்களை பெற்றோர்களும், ஊர் மக்களும்  பட்டாடை உடுத்தி மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கினார்கள். இப்படி ஊர்வலமாக வந்த பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் . 





இவ்வளவையும் செய்த அந்த ஊர் மக்கள் கடைசியில் சொன்ன அந்த வாக்கியம் தான் அவர்கள் எந்த அளவிற்கு அரசுப் பள்ளியின் மீது பாசத்தையும், உரிமையையும் வைத்திருக்கிறாரகள் என்று தெரிகிறது. 

"அரசு மட்டுமே பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் அரசு பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தாயான நாங்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருட்களை அளித்து இருப்பதாக தெரிவித்தனர்."

நான் முன்பு சொன்ன மாதிரி நிறைய பெற்றோர்கள் பணத்தை கொட்டிக்கொடுத்து, பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சந்தோசம்  அடைகிறார்கள். இந்த பெற்றோர்களும் அரசுப் பள்ளிக்காக பணத்தை செலவழித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அடைந்த சந்தோஷமும் , மனத்திருப்தியும் அந்த பெற்றோர்கள் அடைந்திருப்பார்களா என்றால் கேள்விக்குறி தான்.