Thursday, July 31, 2014

தமிழ் கலாச்சாரமும் ஜப்பானிய கலாச்சாரமும்



நான் டோக்கியோவில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஏறக்குறைய ஐந்தாண்டுகள் வசித்திருக்கிறேன். அங்கே சில விஷயங்கள் என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது. அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், அவர்களுடைய சில பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களின் பழக்கவழக்கங்களோடு ஒத்துப்போவது தான். எனக்குத் தெரிந்த அளவில் அவர்கள் எவ்வாறு நம்மோடு ஒத்துப்போகிறார்கள் என்று சொல்கிறேன்.
முதலில் வீட்டிலிருந்து பார்க்கலாம்:

     நம்மைப்போல் அவர்களும் வீட்டிற்கு வெளியே தான் காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே வருகார்கள்.




     நாம் தரையில் விரிப்பதற்கு பாயை பயன்படுத்துவோம்  (இப்பொழு தெல்லாம் பாயை அருங்காட்சியகத்தில் காண முடியும்). அவர்கள் தரையின் மீதே பாயை பதித்து விடுகிறார்கள். அதற்கு ததாமி (Tatami) என்று பெயர்.




     எனக்குத் தெரிந்து நிறைய பேர் கட்டில் இல்லாமல் மெத்தை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் படுத்து, காலையில் அதனை மடித்து வைப்பதுண்டு. அதே மாதிரி, அங்கும் மெத்தை மட்டும் பயன்படுத்துகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நாங்கள் அங்கு இருக்கும்போது, எங்களுக்கு அது ஒன்றும் வித்தியாசமாக தெரிந்ததில்லை.

                நமக்கு அரிசி எவ்வாறு முக்கியமான உணவோ, அவர்களுக்கும் அரிசி தான் முக்கியமான உணவு. நாம் அந்த சாதத்தில் சாம்பார், ரசம், மோர் என்று கலந்து சாப்பிடுவோம். ஆனால் அவர்கள் சாதத்தை வைத்து என்னவெல்லாம் செய்வார்கள் என்றால்,
           ஒரு கிண்ணம் சாதம் – இதில் மிசோ சூப் (miso soup) மற்றும் ஊருகாயை வைத்து சாப்பிடுவார்கள்.




                         சுஷி ரைஸ் (sushi rice)
          

          

                           ஒனிகிரி(onigiri)



           கரே ரைஸ் (curry rice)




     நாம் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். அவர்களும் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள். என்ன, அவர்கள் உயரம் கம்மியான ஒரு மேசையை போட்டு அதில் எல்லா உணவு வகைகளையும் வைத்து, அதன் அருகில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.

     அடுத்து திருமணம் – அங்கு பல வருடங்களுக்கு முன்பு வரை பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் இருந்ததாம். காலப்போக்கில், மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால், அந்த நடைமுறை அழிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் பெண் பார்க்க மூன்று நாட்கள் பெண்ணின் வீட்டிற்கு மணமகன் வீட்டார் போவார்களாம். மூன்றாவது நாளில், பெண் வீட்டார் இனிப்பு பண்டம் கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருளாம். மூன்று நாட்கள் பெண் வீட்டிற்கு சென்று பெண் பார்க்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால், மாப்பிள்ளை வீட்டார்கள், மூன்று நாட்களும் பெண் வீட்டில் நன்றாக சாப்பிட்டே அவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

     நாம் பின்பற்றும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை அவர்களும் அந்த காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள். மாமியார் – மருமகள் பிரச்சனை அங்கேயும் இருந்ததாம்.

     இந்த பெண் பார்க்கும் படலம்,கூட்டுக்குடும்பம் இவையெல்லாம் எங்களுக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுத்த அம்மையார் அவர்கள் சொன்னது தான். அவர்கள் எங்களை விட வயதில் மூத்தவர்கள். அவர்களுடைய தாயார் காலத்து வரைக்கும் இந்த முறைகள் எல்லாம் இருந்தது என்றும், அவர்களுடைய தாயார், தன் மாமியாரைப் பார்த்து பயந்து வாழ்ந்ததை எல்லாம் சொல்லியிருக்கிறார்களாம். (எல்லா இடங்களிலும் இந்த மாமியார்-மருமகள் பிரச்சனை இருக்கும் போல)

     இன்னொரு மிகப்பெரிய ஒற்றுமை நமக்கும் ஜப்பானியர்களுக்கும் என்னவென்றால், நாம் பொங்கலை தை ஒன்றாம் தேதி(jan-14/15) கொண்டாடுவோம். அதே நாட்களில் கோஷோகட்சு (“koshogatsu”) அதாவது சிறிய புத்தாண்டு என்ற பெயரில் பொங்கலை கொண்டாடுகிறார்கள்.



     நாம் எவ்வாறு நம்முடைய முன்னோர்களை வழிபடுகிறோமோ, அதே மாதிரி அவர்களும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, காண்டோ(kanto region) பகுதிகளில் ஜூலை மாதம் 15ஆம் தேதி முன்னோர்களை வழிபடுகிறார்கள்.

இதுவரை நம்முடைய கலாச்சாரத்திற்கும், ஜப்பானிய கலாச்சாரத்திற்கும் எனக்குத் தெரிந்த ஒற்றுமைகளை சொல்லியிருந்தேன். இன்று இவ்விரு கலாச்சாரங்களும் மேற்கத்திய மோகத்தினால் அழிந்து கொண்டு வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.


     சரி, தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஒருவருக்கு ஜப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டிருக்கும் விஷயம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி தெரியாதவர்கள் இங்கே சென்று படிக்கவும் - தமிழருக்கு கௌரவம்



Tuesday, July 29, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நான்காம் அதிகாரம் - கல்விகற்பித்தல்




சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நகர் வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்

ஐயா அவர்கள் பாடஞ்ச்சொல்லுந் தன்மையில் மாணாக்கரிடத்துப் பொருள் அபேஷை இன்றி அவர்கள் தமக்குத் தொண்டேனுஞ் செய்யவேண்டு மென்னும் நோக்கமும் இல்லாமல், பாடஞ்ச் சொல்லுதல் உத்தம சிவதருமம் என்னும் ஒன்றே கருதி, வந்த மாணாக்கர்கட்கு உரிய காலந்தோறும் அவர்கள் சௌகரியத்தை அனுசரித்தும், சலியாமலும், மிகுந்த பற்றுடன் முகமலர்ச்சியோடிருந்து தமிழில் ஆரம்பக்கல்வி முதல் இலக்கணம், நீதிநூல், இதிகாசம், புராணம், சித்தாந்த சாத்திரம் வரை பாடஞ்ச் சொல்லி வந்தார்கள்.

     “குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
     கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
     நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
     உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
     அமைபவ னூலுரை யாசிரி யன்னே.”

என்ற ஆசிரியராகத் தக்கவர் இலக்கணத்துக்கும்,

     “ஈத லியல்பே யியம்புங் காலைக்
     காலமு மிடனும் வாலிதி நோக்கிச்
     சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
     உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
     விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
     கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
     கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப”.

என்ற பாடஞ்சொல்லும் இலக்கணத்துக்கும் இலக்கியமாகவுள்ளவர்கள், மேலும் மற்கட சம்பந்த நியாயமாகத் தொடர்ந்து வருகின்ற மாணாக்கர்கட்கு அதிப்பிரியத்தோடு பாடஞ் சொல்வது மன்றி, அவ்வாறு வாராத மாணாக்கர்களையும் மார்ச்சார சம்பந்த நியாயமாக வலிந்தழைத்து அவர்களுக்கும் பிரியத்தோடு பாடஞ் சொல்லுவார்கள். பாடஞ்சொல்லி வரும்பொழுது காலம் மிகுதியானாலும் சலிப்பின்றிச் சந்தோஷமாகவே பாடஞ் சொல்லுவார்கள். மேன்மேலும் அநேகர் வந்து பாடங்கேட்டு நன்னிலைமைக்கு வரவேண்டும் என்ற அவாவே இவற்றிற்கெல்லாங் காரணமாமென்க.

பெரியபுராணம் ஆராய்ந்து அதன் திட்பநுட்ப நோக்கக் கருத்துக்களை யறிந்து போதிப்பதில் ஐயா அவர்கள் அதிமேதாவி யானவர்கள் என்பது யாவரும் நன்கறிந்ததே! அவ்வாறு மாணாக்கர்களுக்குப் பெரியபுராணம் பாடஞ் சொல்லும்பொழுது பாட முறையில் வேண்டிய அளவு சொல்லுவதுமன்றி சில சமயங்களில் அந்தப் புராணத்திலுள்ள அரிய பெரிய விஷயங்களைப் பக்தி மேலீட்டால் பிரசங்காமிருத வருஷமாகப் பொழிந்து, மாணாக்கர்களுக்கும், சபையிலிருப்பவர்களுக்கும் மனதிற் சாத்திரப் பொருளாகிய அமிர்தம் நிறைந்து தங்கிக் குளிர்ந்திருக்கும்படி செய்வார்கள்.

ஐயா அவர்களிடத்திற் பாடங்கேட்டுக் கொண்ட மாணாக்கர்கள் பிராமணர், தேசிகர், முதலிமார், பிள்ளைமார், தனவைசியர் முதலிய எல்லா வகுப்பினருமுள்ளார். அவர்களில் அநேகர் வித்துவசிரோண்மணிகளாகவும், உபன்நியாசகர்களாகவும், தமிழ் பண்டிதர்களாகவும், உபாத்தியாயர்களாகவும் சிறப்புற்றிருக்கின்றனர்.

நான்காம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-----------------------------------
ஐந்தாம் அதிகாரம்

பிரசங்கம் 

Wednesday, July 23, 2014

அலுவலக நேரத்தில் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்


 
 


நான் சிறுவயது முதல் கிரிக்கெட் மீது அதீத பற்று கொண்டிருந்தேன் (இப்பொழுது முற்றிலுமாக அது குறைந்து விட்டது). கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், கிரிக்கெட் மேட்ச் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினால், தொலைக்காட்சியே கதி என இருப்பேன். அந்த சமயத்தில் வெளி வேலைகளை தவிர்த்து விடுவேன். அப்படியும் சில சமயம் வெளியே போக வேண்டியிருந்தால், ஏதாவது கடைகளில் இருக்கும் தொலைக்காட்சியில் அந்த போட்டியை பார்ப்பதற்கு,  அந்த கடைக்கு முன் நின்று கொண்டு பார்க்க ஆரம்பித்துவிடுவேன். நான் மட்டும் அப்படியிருந்ததில்லை, இந்தியாவில் ஒரு பெரிய கூட்டமே தங்களின் பொன்னான நேரத்தை இப்படியெல்லாம் வீணடித்திருக்கிறது. சென்னையில் தொலைக்காட்சி பெட்டி விற்கும் பெரிய பெரிய ஷோரூம்களின் வெளியே கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டு அந்த வீணாப்போன விளையாட்டை நேரம் காலம் பார்க்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நான் வேலையில் சேர்ந்த பிறகு, அம்மாதிரி கடைக்கு வெளியே நின்று பார்க்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் (பொறுப்பா வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம் இல்ல... ). அப்பொழுதெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் மக்கள் தங்கள் நேரத்தை இப்படி வீணடிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஆஸ்திரேலியாவிலும் அந்த மாதிரி மக்கள் இருக்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு தான் உணர்ந்தேன். என்ன! இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு பார்க்கிறார்கள், இங்கு கால்பந்த்தாட்டத்தை அவ்வாறு பார்க்கிறார்கள்.

  




 

மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது, இரு வாரங்களுக்கு முன்பு அர்ஜென்டீனாவிற்கும் நெதர்லேண்ட்ஸ்க்கும் நடைப்பெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை, அலுவலகத்துக்கு செல்லும் மக்கள் நின்று அந்த போட்டியை ரசித்துக்கொண்டிருப்பது தான்.

 அன்று நான் எப்பொழுதும் போல் அலுவலகம் வருவதற்காக, புகைவண்டி நிலையத்தில் இறங்கி ஷாப்பிங் மாலுக்குள் நடந்து வந்த பொழுது அந்த கடையின் முன்பே ஒரே கூட்டமாக இருந்தது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, அரையிறுதிப் போட்டியைத்தான் மக்கள் வேலைக்கு செல்லாமல் கால்கடுக்க நின்று கொண்டு பார்க்கிறார்கள் என்று. நம் ஊரில் தானே மக்கள் வேலைக்கு போகாமல் தொலைக்காட்சி முன்னாடி நின்றுக்கொண்டு பார்ப்பார்கள், இங்கேயும் அப்படியா என்று ஆச்சிரியப்பட்டுக்கொண்டே, இந்த காட்சியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அலைப்பேசியில் பயந்துக்கொண்டே புகைப்படம் எடுத்தேன். நான் எடுப்பதை யாராவது பார்த்து ஏன் எடுக்கிறாய் என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே ஓரிரு படங்களை மட்டும் எடுத்தேன்.

 இந்த மாதிரியான காட்சிகளுக்கு எந்த நாட்டிலும் பஞ்சம் இருக்காது போல….  

Sunday, July 20, 2014

ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 2 (விசா வழிமுறைகள்)




முதலில் ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்வது எப்படி என்று பார்ப்போம்.


ஐம்பது வயதுக்கு கீழ் இருப்பவர்களால் எந்த நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவிற்கு யாருடைய உதவியுமின்றி எளிதாக புலம் பெயர முடியும். “Points Based Skilled Migration (Subclasses 189, 190 and 489) visa” மூலம் permanent resident(PR) ஆக ஆஸ்திரேலியாவில் புலம் பெயருவது. PR விசாவின் மூலம் வருபவர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழலாம். படிக்கவும், வேலை பார்க்கவும் முடியும். வேலைகளை மாற்றிக்கொள்ளவும் முடியும். Medicare(ஆஸ்திரேலியாவின் உடல் ஆரோக்கியத்திற்கான திட்டம்) பதிவு செய்து கொள்ள முடியும். ஆஸ்திரேலிய குடிமகனாக மாற முடியும். இன்னும் பல உரிமைகளை இந்த விசா பெற்றுத்தரும். ஆனால் ஒரே ஒரு உரிமையைத் தவிர, அது ஓட்டுப் போடும் உரிமை. அந்நாட்டு குடிமகன்களாக இருந்தால் தான் ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும். அவ்வாறு குடிமகன்களாக இருந்து ஓட்டுப்போடாமல் இருந்தால், அவர்கள் அபராதம் செலுத்தவேண்டும்.

சரி, நம் விஷயத்திற்கு வருவோம். இந்த Points Based Skilled Migration விசாவிற்கு அடிப்படைத் தகுதியானது, points based test இல், குறைந்தது 65 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். (இது தற்சமயம் உள்ள நிலவரம்).  அது என்ன points based test:

இந்த தேர்வில், நம்முடைய வயது, ஆங்கில அறிவு, கல்வித்தகுதி, வேலை போன்றவற்றிலிருந்து குறைந்தது 65 புள்ளிகளை எடுத்தால், தைரியமாக இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு மேல் அதிக விவரங்களை அளிக்கும்.


Factor
Description
Points
Age
18-24
25 points
25-32
30 points
33-39
25 points
40-44
15 points
45-49
0 points
English language
Competent English - IELTS 6
0 points
Proficient English - IELTS 7
10 points
Superior English - IELTS 8
20 points
Australian work experience in nominated occupation or a closely related occupation
One year Australian (of past two years)
5 points
Three years Australian (of past five years)
10 points
Five years Australian (of past seven years)
15 points
Overseas work experience in nominated occupation or a closely related occupation
Three years overseas (of past five years)
5 points
Five years overseas (of past seven years)
10 points
Eight years overseas (of past 10 years)
15 points
Qualifications
(Australian or recognised overseas)

                Offshore recognised apprenticeship
                AQFIII/IV completed in Australia
                Diploma completed in Australia

10 points
Bachelor degree (including a Bachelor degree with Honours or Masters)
15 points
PhD
20 points
Recognition of Australian Study
Minimum two years fulltime (Australian study requirement)
5 points
Designated language
5 points
Partner skills
5 points
Professional Year
5 points
Sponsorship by state or territory government
5 points
Sponsorship by family or state or territory government to regional Australia
10 points
Study in a regional area
5       


இந்த பட்டியலைப் பார்த்தால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விசாவை விண்ணப்பிதற்கு தான் அனுமதி, மற்றபடி வயதுக்கான புள்ளிகள் ஒன்றும் கிடையாது. 

அது போல், ஆங்கில அறிவிற்கு – IELTS (International English Language Testing System), தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது Reading, Writing, Listening and Speaking என்ற நான்கு திறன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு திறனிலும் 8 புள்ளிகள் (Band 8) எடுத்தால் தான் (அதிகப்பட்சமே 9 புள்ளிகள் தான்), ஆங்கில அறிவுக்கான 20 புள்ளிகளை எடுக்க முடியும். இதில் Band 6க்கு கீழ் இருந்தால், இந்த விசாவிற்கு அனுமதி கிடையாது.

“Australian work experience” என்று போட்டிருக்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம் என்று பார்த்தால், வேலை விஷயமாக ஆஸ்திரேலியாவில் வந்து வேலை பார்த்திருந்தாலோ, அல்லது அஸ்திரேலியாவில் வேலை விசாவில் (work visa) வேலை பார்த்துக்கொண்டிருந்து, இந்த PR விசாவை விண்ணப்பித்தால் அதற்கான புள்ளிகள் கிடைக்கும்.

Designated Language” இதற்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தால், அந்த புள்ளிகள் கிடைக்கும். www.naati.com.au (National Accreditation Authority for Translators and Interpreters)  – இதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Subclasses 189 – அதாவது சொந்த முயற்சியில் இந்த விசாவை விண்ணப்பிப்பது. இந்த முறையில் கடைசி மூன்று பட்டியலும் உதவாது.

“Sponsorship by state or territory government” மற்றும் “Sponsorship by family or state or territory government to regional Australia” விசாக்களில், எந்த மாநில அரசாங்கத்தின் உதவியாக இந்த விசாவை விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநிலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும். பிறகு தான் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுட்டியை கிளிக் செய்தால் மேல் விவரங்களை அறிய முடியும் - http://www.immi.gov.au/allforms/pdf/1119.pdf

மேற்கண்ட புள்ளிகளிலிருந்து, 65 புள்ளிகள் கிடைத்து விட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லலாம். முதலில் EOI (Expression of Interest) யை விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான சுட்டி - http://www.immi.gov.au/Work/Pages/SkillSelect/SkillSelect.aspx 

இங்கு (submit an EOI) என்ற சுட்டியை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் உங்களைப் பற்றிய தகவல்கள் (வேலை, படிப்பு போன்றவைகள்) கேட்கப்படும். பிறகு உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்திற்குள், விசாவை விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விசாவிற்கான இந்திய ரூபாய் முதன்மை விண்ணப்பத்தாரருக்கு (Primary Applicant) – ரூ207,600.00. மேலும் ஒரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18+)  - ரூ. 103,800. மேலும் ஒவ்வொரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18வயதிற்கு கீழ்) – ரூ. 51,900.00 ஒரு குடும்பத்திற்கு( 2+2) விசாவிற்கான செலவு  - ரூ. 415,200.

என்னடா, விசா கட்டணமே ரூபாய் நான்கு இலட்சமா என்று யோசிக்க வேண்டாம். கண்டிப்பாக அது ஒரு முதலீடு தான்.

அடுத்த பகுதியில், மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) பார்க்கலாம்.


-தொடரும்

 


Wednesday, July 16, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்





மூன்றாம் அதிகாரம்
கல்வி கற்றல்

ஐயா அவர்கள் இளைமைப் பருவத்தில் பள்ளிக்கூடத்து உபாத்தியாரிடத்துப் படித்துக்கொண்ட பின், 17ஆவது வயசில் வியாபார முறையை உத்தேசித்து யாழ்பாணம் போயிருந்த காலத்தில், அங்கே சுத்தாத்து வைத சைவ சித்தாந்த வியவஸ்தாபகராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானையடுத்து அத்தியந்த பக்தி விசுவாசத்துடன் சிஷ்யராக விருந்து, அவர்களிடத்தும், அவர்களுடைய மருகரும், முதன் மாணவருமாகிய வித்துவ சிரோமணி ஸ்ரீமத் பொன்னம்பல பிள்ளையவர்களிடத்தும், தமிழ் இலக்கண, இலக்கிய புராண இதிகாச முதலியவைகளை முறையாகப் பாடங்கேட்டுக் கொண்டார்கள்.


(ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்)

மேற்படி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் தம்மையடுத்த மாணாக்கராயுள்ள மற்றைத் தனவைசிய நகரத்தார்களை அழைக்கும் பொழுது அவர்கள் பெயருடன் “செட்டியார்“ என்று சேர்த்து அழைப்பார்கள். ‘ஐயா அவர்களை மட்டும் அவர்கள்பால் வைத்த அன்புரிமை மேலிட்டால் “சொக்கலிங்கம்” ‘ என்று பெயர் மாத்திரையாகவே சொல்லியழைப்பார்கள்.
ஐயா அவர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களுடைய திருவடிப் பாதுகையை பத்திர புஷ்பங்களால் பூசித்து வந்தார்கள். பின்பு நாவல குரு வணக்கம் என்று ஒரு பதிகமும் பாடி வணங்கியிருக்கிறார்கள். எப்பொழுதும் அவர்களுடைய மேன்மையையும், தீரத்தையும், கீர்த்தியையும் அடிக்கடி புகழ்ந்து பேசி வருவார்கள்.

மேலும், சிறந்து விளங்குகின்ற தேவகோட்டை மாநகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, புகழிடங் கொடுத்த பட்டினம் பூம்புகார்க்காணியாகவும், இருப்பைக் குடிக்கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவும் உடைய சூடாமணிபுரமுடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே), திருப்பெருந்துறை அண்ணாமலைச் செட்டியாரவர்கள் குமாரராகிய நாராயணச் செட்டியார் என்னும் ஸ்ரீலஸ்ரீ வன்றெண்ட தேசிகரவர்களையடுத்து சிஷ்யராக இருந்து அநேக இலக்கண இலக்கியங்களும், சாஸ்திரங்களும் பாட முறையிற் கேட்டுக்கொண்டார்கள். பின்பு, “வன்றெண்ட குருஸ்துதி” என்னும் நூலியற்றி அதில் அவர்களது தேக வியோகத்தைக் குறித்துத் தமக்குள்ள பிரிவாற்றாமையை விளக்கியிருக்கின்றார்கள். ஐயா அவர்கள் தாமியற்றி வெளியிட்ட நூல்களிலெல்லாம் தம்மை ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள் மாணாக்கரென்றே  வெளியிட்டமையின், வன்றெண்டரவர்களிடத்திலேயே பல நூல்களும் நிரம்பக் கற்றுப் புலமை நிரம்பப் பெற்றார்கள் என்பது தெரிகிறது.

ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்களிடம் பாடங்கேட்டுக்கொண்ட பின்பு; சிறப்புற்றேங்கிய காரைமா நகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, குலசேகரபுரம் பூம்புகார்க்காணியாகவும் , இளையாற்றக் குடிக் கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவுமுடைய கழநிவாசற் குடியார் கோத்திரத்திலே  (பட்டத்திலே), “சாலக்கரையார்” வீடு என்னும் குடும்பத்திலே, ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் செய்த அரும் பெருந் தவத்தால் அவதரித்த ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் உத்தமோத்தம  துவாதசாந்தபுரமாகிய மதுரைமா நகரத்தையடைந்து ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு நால்வகை மலரெடுத்து அத்தியற்புத விசித்திரக் கட்டுமாலை முதலிய புஷ்பப் பணிவிடைகள் செய்துகொண்டும், அமராபதிபுதூர் நகர தனவைசிய ஸ்ரீமான்கள் வயி.நாக.ராம. வகையார்களைக் கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலில் விமானம், மண்டபம், கோபுரம், திருமதில் முதலிய திருப்பணிகளை நடப்பித்து வருங்காலத்தில், அவற்றை அதி நுட்பதிட்ப    தீட்சண்யமாகிய பார்வையுடன் நடத்தியும், மேலும், தேவிக்கோட்டை ஸ்ரீமான்களாகிய, மெ. வகையாரைக் கொண்டும், அமராபதிபுதூர் வயி. நாக. ராம. வகையாரைக் கொண்டும் மற்றும் அன்பர்களைக் கொண்டும், அத்தலத்தில் அறுபத்துமூவர் குருபூசை மடம், திருநந்தனவனம் முதலியவைகளை தாபனஞ் செய்வித்தும் ,  முப்பத்தைந்து வருடகாலம், அம் மதுரைமா நகரின் எல்லையை விட்டு நீங்காது இருந்து, சுவர்ணகஞ்ச ஸ்நானானுட்டான  நித்திய நியம சிவபூஜை ஜெப தபத்தியான பாராயண பிரதக்ஷிண விரதசீலராய்ச் சாஸ்திர விற்பன்னராய் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவர தரிசனானந்தப் பெருவாழ்வுடையராய் நிர்மலானந்தக்கரண சிவத்தியான ஞானயோகச் சிவானுபூதிச் செல்வராய் விளங்கிக் கொண்டிருக்கு நாளில், ஐயா அவர்கள் அடுத்துச் சிஷ்யராக இருந்து, அவர்களுடைய நியமமேலீட்டால்  அவர்களுக்கு அவகாசங் கிடைப்பது அருமையாயிருந்தமையால், பக்தி விசுவாசத்துடன் நிழல்போல் விடாது பின் பற்றி நின்று கேட்பன கேட்பாரானார்கள்.  மேற்படி சுவாமிகளும் ஐயா அவர்களுடைய அத்தியந்த பக்தி சிரத்தை முதலியவைகளை நோக்கி, சிவாஸ்த்திர பாடஞ் சொல்லுதலும் சிவதருமம் என்று கருதி, திருமாலை கட்டும்பொழுதும், பிரதக்ஷினம்  வரும்பொழுதும், முறை வழுவாது பெரிய புராணம், சித்தாந்த சாஸ்திரம் முதலிய நூல்களை பாடஞ் சொல்லி வந்தார்கள்.

ஐயா அவர்கள் அவ்வாறு பாடங்கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் மூத்த மனைவியார் சிவபதம் அடைந்தமை தெரிந்தும் பாடங் கேட்குதலில் மிகுந்த சிரத்தையுடையவர்களாய் மதுரைமா நகரிலேயிருந்து, பின்பு கொஞ்சநாட் சென்று, சுவாமிகளால் வற்புறுத்தப்பட்டு ஊருக்கு வந்தார்கள்.

பின்பு, மேற்படி சுவாமிகள் நிரதிசயானந்தப்பெரும் பேறு பெற்றபின், ஐயா அவர்கள் மேற்படி சுவாமிகள் பேரில் “மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி” என்னும் ஒரு தோத்திர நூலும், மேற்படி சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும் இயற்றிப் பாராட்டினார்கள். அந்த சுவாமிகளுடைய திருவடிப் பாதுகையை ஐயா அவர்கள் பூஜை செய்கிற வேதிகைக்குப் பக்கத்தில் வைத்து நித்தியமும் பத்திர புஷ்பங்கொண்டு அருச்சித்து வந்தார்கள்.

முற்கூறிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் , ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள், ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் ஆகிய மூன்று குருமூர்த்திகளிடத்திலும் ஐயா அவர்கள் எப்பொழுதும் பக்திவிசுவாசத்துடனிருந்து, சமயம் வாய்த்த போதெல்லாம் அம்மூன்று குரவர்களுடைய குணாதிசயங்களையும், அருமை பெருமைகளையும் பாராட்டிப் பேசிக்கொண்டாடி வருவார்கள்.   அப்பெரியார்களுக்கும், ஐயா அவர்களுக்கும் புந்தியிற் பதிந்துள்ள உரிமை மகிழ்ச்சியைப் பற்றி:-
திருப்புத்தூர்ப் புராணத்தில்

     “மாற்றமொன்று சொலச்சொலித்தம் மகவம் மாற்றம்
           வயங்காமை யுரைப்பமகிழ் பிதாக்கண் மானத்
     தேற்றமிலேற் குணர்த்தியவன் ரெண்ட நாதன்
           றிருவால வாயர்மெய் யப்ப னெம்மான்  
     ஆற்றுபணி கொண்டடியென் முடியிற் சூட்டு
           மாறுமுக நாவலர்கோ னவன்றாட் கன்பே
     போற்றுவழி வந்தவிமற் சரமெய்ச் சீலர்
           புந்திமகிழ் வுறுவரென்சொற் புன்மை நோக்கி”.

எனவரும் செய்யுளால் நன்கு விளக்கியுள்ளார்கள். ஐயா அவர்கள் தங்களுடைய ஆசிரியர் மூவர்க்கும் அவரவர் சிவபத மடைந்த திருநக்ஷத்திரத்திலே குருபூசை நடத்தியும், நடப்பித்தும் அவர்களுடைய சரித்திரங்களை எடுத்து விரிவாகப் பிரசங்கித்தும் பாராட்டி வருவார்கள்.


மூன்றாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-----------------------------------
நான்காம் அதிகாரம்

கல்விகற்பித்தல்