Tuesday, October 14, 2014

சங்க காலப் பாடல்களும் இந்தக் காலப் பாடல்களும் - ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி




சென்ற வாரம் கொஞ்சம் பிசியான வாரமாகிவிட்டது. சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை மாலை,சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறு மாலை ஆகிய மூன்று நாட்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினரால் “சங்கத்தமிழ் மாநாடு நடத்தப்பெற்றது. சென்ற வருடம் போல், இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை இதில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழங்கினார்கள். நான் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அதில் பங்குப் பெற்ற ஆறு மாணவர்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால், அவர்களாக ஸ்கைப் மூலம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பயிற்சி செய்திருக்கிறார்கள் (தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வசதியளித்திருக்கிறது என்று தெரியும்போது ஆச்சிரியமாக இருக்கிறது).

விழா நிர்வாகத்தினர், உங்கள் பள்ளியிலிருந்து “சங்க கால இலக்கியங்களைப்” பற்றி ஒரு நாடகம் போடுங்கள் என்று கேட்டார்கள். நானும் நாடகத்திற்கு பதில் கலந்துரையாடலாக ஒரு நகழ்ச்சியை வழங்குகிறேன் என்று கூறி, “சங்க கால பாடல்களும், இந்த கால பாடல்களும்னு” ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை எழுதினேன். வெறும் சங்ககால பாடல்கள்னு மட்டும் கலந்துரையாடினால், பார்ப்பவர்களுக்கு போர் அடித்துவிட்டால் என்ன பண்ணுவது என்பதாலும், இந்த கால குழந்தைகளை ஈடுபடுத்துவதாலும் அவர்களின் ரசனைக்கேற்ப ஒரு சில திரைப்பட பாடல்களையும் சொல்லி, சங்ககால பாடல்கள் மூலம் தமிழ் எவ்வளவு இனிமையானதுன்னு புரிய வைப்போம் என்ற நோக்கத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை எழுதினேன். இதில் இன்னும் ஒரு புதுமையாக தமிழ் தாய் என்ற ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அவள் எவ்வாறு சங்க கால பாடல்களையும், இந்த கால பாடல்களையும் ரசிக்கிறாள் என்று கூறியிருந்தேன்.

இதோ, அந்த கலந்துரையாடல் உங்களின் பார்வைக்கு.....

சங்க காலப் பாடல்களும் இந்தக் காலலப் பாடல்களும்

தமிழ் தாய்: வணக்கம். நான் தான் உங்களின் தமிழ் தாய். சங்க காலப்  புலவர்கள் என்னை போற்றி வளர்த்தார்கள். என் அருமையை தரனியெங்கும் பரப்பினார்கள். ஆனால் இன்றோ திரைப்பட பாடலாசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்னை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்று உங்களின் முன் சங்க கால பாடல்களைப் பற்றியும், இந்த கால பாடல்களைப் பற்றியும் என்னுடைய குழந்தைகள் பேச இருக்கிறார்கள். இனி அவர்களின் பேச்சை, நானும் உங்களுடன் சேர்ந்து கேட்கப்போகிறேன்.

(பாரதியும்,மதுவும்  உட்கார்ந்துக்கொண்டு மடிக்கணினியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.)

பாரதி – மது, புறநானூறு தானே பார்த்துக்கிட்டு இருக்க, அதுல 95வது பாடலை பாரேன்.  

மது – எது, அந்த இவ்வே, பீலின்னு ஆரம்பிக்கிற பாட்டா.?

பாரதி – ஆமாம், அந்த பாட்டு தான்.

மது – நானும் அந்த பாட்டையும் பொருளையும் படிச்சேன், அப்பப்பா, என்ன அருமையா ஔவையார் பாடியிருக்காங்க. நடக்க இருந்த ஒரு பெரிய போரையே, இந்த பாட்டின் மூலமா தடுத்துட்டாங்களே.

(அப்போது கவிதா,ஸ்வேதா,சிரஞ்சீவி,சஞ்சய் எல்லோரும் வருகிறார்கள்)

 




சிரஞ்சீவி – என்னது போரை தடுத்துட்டாங்களா?

கவிதா – மூணாவது உலக போரையா?

மது – அது எல்லாம் இல்ல, புறநானூறுல சங்க கால போரை பற்றி பாடியிருக்காங்களா, அதை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.

சஞ்சய் – புறநானூற்றுல சங்க கால போரை பத்திய  பாடியிருக்காங்க

பாரதி – ஆமா பாடியிருக்காங்க, சரி, என்ன! எல்லோரும் ஒண்ணா வந்திருக்கீங்க? என்ன விஷயம்?

ஸ்வேதா – வீட்டில போர் அடிச்சுது, அதான் எல்லோருமா சேர்ந்து உங்க வீட்டில உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம்னு கிளம்பி வந்தோம்.

கவிதா – நீங்க என்னடான்னா, புறநானூறு, சங்க கால போர்ன்னு எல்லாம் சொல்லி இன்னும் போர் அடிக்க வச்ச்சுடுவீங்க போல!!!

மது – என்னது!! புறநானுரை படிச்சா போர் அடிக்குமா?

சிரஞ்சீவி – பின்ன! போர் அடிக்காம என்ன பண்ணுமா?

சஞ்சய் – நமக்கு அந்த பாட்டை முதல்ல படிக்க தெரியணும், அப்புறம் அதுக்கு பொருள் தெரியணும். இதெல்லாம் நடக்கிற காரியமா?

பாரதி – ஏய், நாம இவ்வளவு கஷ்டப்பட எல்லாம் வேண்டாம், இப்ப internetலேயே அந்த பாட்டெல்லாம் போட்டு, அதுக்கு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்காங்க.

மது – அதுவும், அந்த பாட்டுல வர்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தமும் கொடுத்திருக்காங்க. அதனால நமக்கு அந்த பாட்டை படிக்கிறதுக்கும், புரிஞ்சுக்கிறதுக்கும், ரொம்ப ஈசியா இருக்கு.

ஸ்வேதா – அப்படியா சொல்றீங்க!, சரி நீங்க எந்த போரை பத்தி பேசிக்கிட்டு இருந்தீங்க?

பாரதி -  அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே நடக்க இருந்த போரை ஔவையார் ஒரு பாட்டு பாடி தடுத்திருக்காங்க.

கவிதா – என்னது ஒரு பாட்டு பாடி, போரை நிறுத்தியிருக்காங்களா? அது என்ன பாட்டு?

பாரதி - “இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.   

(அப்போது தமிழ் தாய் சந்தோசத்தில் குதிக்கிறார்)

சிரஞ்சீவி – சத்தியமா, எனக்கு ஒண்ணுமே புரியலை.

(மற்றவர்களும், எங்களுக்கும் ஒண்ணுமே புரியலை)

மது – கரெக்ட், வெறுமன, இந்த பாட்ட மட்டும் படிச்சா, நமக்கு ஒண்ணுமே புரியாது. ஆனா, இதோட பொருளையும் படிச்சா, தமிழ் எவ்வளவு இனிமையானது, சக்தி வாய்ந்ததுன்னு புரிய வரும்.

ஸ்வேதா – முதல்ல இந்த பாட்டுக்கு பொருள் சொல்லுங்க.

பாரதி – அதியமானும், தொண்டைமானும் பக்கத்து பக்கத்து நாட்டை ஆட்சி புரிந்து வந்தாங்க. தொண்டைமானுக்கு இருந்த பேராசையில, அதியமான் மீது போர் தொடுக்க நினைச்சான். ஆனா அதியமானுக்கு தொண்டைமானோட போர் புரிவதற்கு விருப்பம் இல்லை.

சஞ்சய் – ஏன் அவன் தோத்து போயிடுவோம்னு பயந்துட்டானா?

மது – அது தான் இல்லை, தொண்டைமானை காட்டிலும் அதியமான் கிட்ட தான் படைபலம் அதிகமாயிருந்துச்சு, கண்டிப்பா தொண்டைமான் தோத்துபோய்விடுவான்னு, தெரிஞ்சதுனால வீணாக போர் புரிய வேண்டாம்னு ஔவையாரை தூதுவரா தொண்டைமான் கிட்ட அனுபினான்.

பாரதி – தொண்டைமான் கிட்ட போன ஔவையார், அவனோட படைபலத்தை பார்த்துட்டு, இந்த பாட்டை பாடியிருக்காங்க. இந்த பாட்டோட அர்த்தம், இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் இரகாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாக இருக்கிறது. ஆனால் அதியமானின் படைக்கலத்தில் இந்த மாதிரி எல்லாம் காட்சி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்கள் உடம்பிலிருந்த சதைகள் எல்லாம் ஆயுதங்களில் ஒட்டி கூர் மங்கி போய் கொல்லனிடத்தில் சரி செய்வதற்காக வைக்கப்ப்ட்டிருக்கிறதுன்னு பாடியிருக்காங்க.

மது – இந்த பாட்டை நீங்க பார்த்தீங்கன்னா தொண்டமானுடைய படைப்பலத்தை புகழ்கிற மாதிரி பாடி, அவனை மறைமுகமாக நீ அதியமனோடு போரிட்டா, தோத்துப்போவது நிச்சயம்னு சொல்றாரு.

பாரதி – இதை தொண்டைமானும் புரிஞ்சுக்கிட்டு அதியமானோட போரிடும் எண்ணத்தை விட்டுவிட்டு, நட்பு பாராட்டியிருக்கிறான்.

கவிதா – சரி, இதுல ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன பொருள்?

மது – நான் ஒரு சில வார்த்த்தைக்கு மட்டும் பொருள் சொல்றேன்.

இவ்வே – இவை, பீலி – மயில் தோகை, கடி – காவல், வியன்நகரம் – பெரிய அரண்மனை, கொல்துறை – கொல்லனுடைய இடம்

ஸ்வேதா – அப்ப, அவ்வேன்னா – அங்கேன்னு அர்த்தமா?

பாரதி – கரெக்ட் ஸ்வேதா. பாரு, உனக்கே தெரிய ஆரம்பிக்குது.

ஸ்வேதா – ஏதோ ஒண்ணு சொல்லிட்டா, எனக்கு இந்த பாட்டு முழுக்க புரிஞ்சிடுமா என்ன?

மது – அப்படியில்ல, ஆர்வத்தோடு, பாட்டையும் பொருளையும் படிக்க ஆரம்பிச்சா, சங்க கால பாடல்கள் எல்லாம் புரிய ஆரம்பிச்சிடும்.

சிரஞ்சீவி – இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு புரியிறதுக்கு, இப்ப வர்ற படங்கள்லேருந்து பாட்டை download பண்ணி  கேட்டுக்கிட்டு போகலாம்.

சஞ்சய் – சரியா சொன்ன சிரஞ்சீவி. பாரு, (மான் கராத்தே படத்திலிருந்து “Darlingu Dumbakku..பாடல்”)(அப்போது தமிழ்தாய் வருத்தமடைந்து அழுகிறார். பாரதியும்,மதுகும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்))

கவிதா – இது எவ்வளவு ஈஸியா புரியுது.

மது – அட! கடவுளே, இதெல்லாம் ஒரு பாட்டா? கர்மம், கர்மம்.

பாரதி – சஞ்சய், இப்பத்தான் நாங்க எவ்வளவு அழகான, இனிமையான ஒரு தமிழ் பாட்டையும் அதோட பொருளையும் சொன்னோம். நீ, என்னடான்னா, இப்படி ஒரு பாட்டை பாடுற.

சஞ்சய் – நான் ஒண்ணும் தப்பா பாடலையே, நமக்கு ஈஸியா புரியிர மாதிரி ஒரு தமிழ் பாட்டை தானே பாடினேன்.

மது – இது தமிழ் பாட்டா! கஷ்டம்டா சாமி. சரி, உங்களுக்கு இந்த சங்க பாட்டு ஈஸியா புரியும்னு நினைக்கிறேன்.

பாரதி – புறநானூறுல 9வது பாட்டை தானே நீ சொல்ற மது?

மது – ஆமாம் பாரதி. அந்த பாட்டு கண்டிப்பா இவுங்களுக்கு கொஞ்சமாவது புரியும் பாரேன்.

      “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்

     பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

     தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

     பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

     எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்என

     அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

     கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

     எங்கோ, வாழிய குடுமி!

(அப்போது தமிழ் தாய் சந்தோசத்தில் குதிக்கிறார்)

ஸ்வேதா – இந்த பாட்டுல பார்ப்பன மாக்களும் – அப்படின்னா bhramins?

பாரதி – ஆமா, பசுவை போன்ற குணமுடைய அந்தணர்கள்

கவிதா – பெண்டிரும்னா – பெண்கள் அப்புறம் புதல்வர்ப் பெரா ஆ தீரும்னா – குழந்தை இல்லாதவர்களா?

மது – நான் சொன்னேன் இல்ல, இந்த பாட்டு உங்களுக்கு கொஞ்சமாவது புரியும்னு. பாருங்க எத்தனை வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க. இந்த பாட்டோட முழு அர்த்தம் என்னன்னா, பசுக்களும், பசுவை போன்ற குணமுடைய அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், பிதிர்க்கடன் ஆற்ற ஆண்குழந்தை இல்லாதவர்களும் கேளுங்கள், என்னுடைய அம்புகள் விரைவாக பாய உள்ளன. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு போய்விடுங்கள் என்று அறிவுறுத்திப் போர் புரியும் அறநெறியாளனாம் எம்முடைய வேந்தனாகிய குடுமி என்பது தான்.

பாரதி - அதாவது, குடுமி என்ற இயற்பெயரை கொண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன், தான் போருக்கு போகும்போது முதலில் போரில் பங்குகொள்ளதாவர்களை, விலகச்  செய்த பின்புதான் அறப்போர் செய்யத் துவங்குவான். நெட்டிமையார் எனும் புலவர், புறநானூற்றில் ஒன்பதாவது பாடலாக இந்த மன்னனை பற்றி இவ்வாறு பாடியிருக்கிறார்.

சிரஞ்சீவி – சஞ்சய், இங்க பாரு, இவுங்க பெண் புலவர்களை மட்டுமே பேசுறாங்க. அவுங்களோட பாட்டுல, நமக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை தான் புரியுது. இதுக்கு நம்ம சினிமா பாட்டு எவ்வளவோ மேல்.

சஞ்சய் – இந்த பாட்டு ஒரு பெண் கவிஞர் தான் எழுதியிருக்காங்க. இந்த பட்டடை கேக்கும்போதே எவ்வளவு சூப்பரா இருக்குதுன்னு பாருங்க. (விண்ணை தாண்டி வருவாயா படத்திலிருந்து “Hosaanna... Hosaanna..பாடல்”)

(அப்போது தமிழ்தாய் வருத்தமடைந்து அழுகிறார். பாரதியும்,மதுவும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்)

பாரதி,மது – இதெல்லாம் தமிழ் பாட்டுன்னு சொல்லாதீங்க பிளீஸ்.

ஸ்வேதா – ஏய், இப்படியெல்லாம் பாட்டு இருந்தா தான் அது தமிழ் பாட்டுன்னே சொல்ல முடியும்.

சஞ்சய் – அப்ப, இந்த பாட்டை கேளுங்க (“why this kolaiveri” பாடலை பாடுகிறார்)
பாரதி – ஐயோ, பிளீஸ் தமிழை கொலை பண்ணாதே!.  இந்த பாட்டை எல்லாம் தமிழ் தாய் கேட்டா அவுங்க கண்லேருந்து இரத்த கண்ணீரே வரும்.
சஞ்சய் – இந்த காலத்து பாட்டு எவ்வளவு நல்லா இருக்குனு சொன்னா, உடனே தமிழ் தாய்க்கு ரத்த கண்ணீர் எல்லாம் வரும்னு சொல்றீங்க?

மது – பின்ன, நீங்க என்ன ஆங்கில பாடல்களா பாடுறீங்க? தமிழ் பாட்டுல ஆங்கில வார்த்தைகளை எல்லாம் சேர்த்து இல்ல நீங்க பாடுறீங்க.

சிரஞ்சீவி – சஞ்சய், கொஞ்சம் சும்மா இரு, இந்த சண்டையை அப்புறம் வச்சுக்கலாம்.  

கவிதா – கரெக்ட் சிரஞ்சீவி, இந்த சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். மது, பாரதி நீங்க என்ன தான் சொல்ல வரிங்க?

பாரதி – பொழுது போகலைன்னு தானே எங்க வீட்டுக்கு வந்தீங்க, உருப்படியா சங்க கால பாடல்களை பத்தி நாம பேசுவோமா?

ஸ்வேதா – ok. முதல்ல சங்ககால பாடல்கள்ன்னா என்னன்னு சொல்லுங்க.

மது – அந்த காலத்துல தமிழ்நாட்டை சேர,சோழர்,பாண்டியர் என்ற மூன்று மன்னர்களும் அவர்களோடு பல குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தாங்க. இதுல பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியை போற்றி வளர்ப்பதற்கு தமிழ் சங்கங்கள் அமைச்சிருக்காங்க. அந்த சங்கங்களில், புலவர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்து, நிறைய செய்யுள்களை இயற்றி இருக்காங்க. அது போக நிறைய புலவர்கள் பல்வேறு இடங்களிலும், பல காலகட்டங்களிலும் பாடல்கள் எழுதியிருக்காங்க. இவையெல்லாம் தான் சங்க கால பாடல்களாகும்ன்னு நினைக்கிறேன்.

பாரதி – அப்புறம் சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டிருக்கு.

சஞ்சய் – எட்டுத்தொகைன்னா – எட்டு பாடல்களாக இருக்குமா?

பாரதி – ஆமாம். எட்டுத்தொகையில் உள்ளவை எட்டு, தொகை நூல்களாகும். இவற்றைக் குறிக்கும் ஒரு பாடல் ஒண்ணு இருக்கு.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.” இந்த பாட்டிலிருந்து யாராவது அந்த 8 நூல்களையும் சொல்றீங்களா?

கவிதா – நற்றிணை, குறுந்தொகை அப்புறம்...

சிரஞ்சீவி – ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு அப்புறம் பரிபாடல்

மது – மொத்தம் ஏழு தானே வருது. இன்னொன்னு கலித்தொகை.

பாரதி - இவற்றுள் நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.

ஸ்வேதா – இந்த அகப்பாடல், புரபாடல்ன்னா என்ன?

மது - காதலைப் பற்றிப் பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிறசெய்திகளைப் பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர்.

பாரதி - அகப்பாடல்கள் கற்பனையான தலைவன், தலைவியின் காதலைப்பற்றி விளக்குகின்றன. புறப்பாடல்கள் நாட்டை ஆளும் அரசனின் வீரம், கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்றன.

மது - அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப் பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.

சஞ்சய் – இந்த காலத்துல தான், காதல் பாடல்களை, கொஞ்சம் கூட நம்புற மாதிரி எழுத மாட்டாங்கன்னா, அந்த காலத்திலேயும் அப்படி தானா!!! சரியாப் போச்சு.

பாரதி – அகப்பாடல்கள் தான் அந்த மாதிரி. புறப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனையாகப் பாடப்படவில்லை. அதேமாதிரி இயற்கைக்கு மீறிய செய்திகளும் கூறப்படவில்லை. இந்த பாடல்கல்லெருந்து அரசர்கள் புலவர்களைப் எவ்வாறு மதிச்சிருக்காங்கன்னு தெரியும்

கவிதா – என்னது அரசர்கள் புலவர்களை மதிச்சிருக்காங்களா?

மது - ஆமா, எந்த அளவுக்கு அவர்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்திருக்காங்கன்னா, நாம முதல்ல பார்த்த மாதிரி இரு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் போது புலவர்கள் தலையிட்டுப் போரைத் தடுத்திருக்காங்க அப்புறம் அரசன் மக்களிடம் அளவுக்கதிகமாக வரி வாங்கும் போது புலவர்கள் தலையிட்டு அரசனுக்கு அறிவுரை கூறியிருக்காங்க. யாருமே தொட அஞ்சும் முரசு கட்டிலில் ஏறிப்படுத்து உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரைத் தண்டிக்காம, அவர் தூங்கி எழும் வரை கவரி கொண்டு அவருக்கு வீசியிருக்கான் சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.  

பாரதி – மன்னர்கள் தான் புலவர்களை மதிச்சாங்கன்னு இல்ல, புலவர்களும் மன்னனிடத்தில் ஆழமான நட்பு கொண்டிருந்தாங்கன்னு சொல்றதுக்கு புலவர் பிசிராந்தையார் ஒரு பெரிய எடுத்துக்காட்டா விளங்கியிருக்கார்.

ஸ்வேதா – மன்னன் பரிசு கொடுத்தா எல்லா புலவர்களும் அவனுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது தானே!!

பாரதி – அப்படியில்லை ஸ்வேதா, பிசிராந்தையர், அரசன் கோப்பெருஞ்சோழன் மேல்  கொண்டிருந்த ஆழமான நட்பின் காரணமாக, மன்னன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நேரத்தில் புலவரும் உயிர் துறந்தார் என்ற செய்தியும் புறநானூறுல இருக்கு.

சிரஞ்சீவி – இந்த மாதிரி பபுலவர்கள் இருந்ததுனால தான், மன்னர்கள் சங்கம் அமைச்சு அதில் புலவர்களை தமிழ் ஆய்வு செய்ய வச்சிருக்காங்க.

சஞ்சய் – இந்த காலத்துலேயும் அரசவை கவிஞர்கள்னு இருக்காங்களே!

கவிதா – இப்ப எங்க இருக்காங்க?

ஸ்வேதா – இப்ப இல்ல, கொஞ்ச வருஷம் முன்னாடி வரை இருந்தாங்கன்னு நினைக்கிறேன்.

சஞ்சய் - நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், முத்துலிங்கம், புலமைபித்தன் போன்றவர்கள் அரசவைக்கவிஞர் ஆக இருந்திருக்காங்க.

மது - இப்ப பாட்டு எழுதுறவங்க யாரும் அந்த பதவிக்கு தகுதியில்லை.

அதனால தான், அந்த பதவிக்கு இப்ப யாரும் கிடையாது போல.

ஸ்வேதா – அடாடா, நாம புறநானுரை மட்டும் பேசுனதுக்கே இவ்வளவு நேரம் ஆயிடுச்சே.

பாரதி – புறநானூறே, இன்னும் முடியலை. அதுல 400 பாட்டு இருக்கு. நாம வெறும் ரெண்டு,மூணு பாட்டை தான் பார்த்தோம். இன்னும் எட்டுத்தொகை நூல்கள்ள மத்த நூல்கள் எல்லாம் இருக்கு, அப்புறம் பத்துப்பாட்டு எல்லாம் இருக்கு. இந்த சங்க பாடல்களைப் பத்தி மட்டும் பேசும்னா, நாள் கணக்குல பேசிக்கிட்டு இருக்கலாம். இப்ப புரியுதா, தமிழ் எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு.

சிரஞ்சீவி – இவ்வளவு நாள் நாங்க இதை தெரிஞ்சுக்காம போயிட்டோமே. இன்னொரு நாள் நாம மற்ற பாடல்களைப் பற்றி பேசலாம்.

மது – “சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தார்கள்”  அடுத்த வருஷமும் இந்த மாதிரி இலக்கிய மாநாடு நடத்துவாங்க, அப்ப இன்னும் நிறைய பாடல்களை பத்தி பேசுவோம்.

ஸ்வேதா – அதுவும் சரி தான், அதுக்குள்ள நாங்களும் இன்னும் இந்த சங்க இலக்கியங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறோம்.

சஞ்சய் – கடைசியா நான் ஒண்ணு சொல்ல நினைக்கிறேன். 2010ல “உலகத் தமிழ் மாநாட்டுல” கலைஞர் கருணாநிதி எழுதி, AR. ரஹ்மான் இசையமைச்ச அந்த மாநாட்டுப் பாடல் மாதிரி, நம்முடைய சங்க இலக்கிய பாடல்களை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இசையமைச்சு பாடினா எவ்வளவு நல்லா இருக்கும்.

எல்லோரும் – ஆமா ரொம்ப நல்லா இருக்கும்.

கவிதா,சஞ்சய்,ஸ்வேதா,சிரஞ்சீவி – சரி, நேரம் ஆயிடுச்சு. நாங்க கிளம்புறோம்.

பாரதி – ok. நாம அடுத்த வருஷம் இன்னும் நிறைய சங்கப்பாடல்களை பத்தி பேசுவோம்.

தமிழ் தாய் – இவுங்க சங்கப்பாடல்களை எல்லாம் படிச்சு என்னுடைய இனிமையை சுவைக்க போறாங்க.  அப்ப நீங்க?        
                          நன்றி வணக்கம்


 
 
1. சிரஞ்சீவி மணிவாசகம் - சென்ற ஆண்டு மாநாட்டு மலரில் வெளிவந்த இவரின் கட்டுரை - எட்டுதொகை நூல்கள்
 
2. சஞ்சய் கிருஷ்ணா நேரு - சென்ற ஆண்டு மாநாட்டு மலரில் வெளிவந்த இவரின் கட்டுரை - முத்தமிழும் சமுதாயமும்
 
3. ஸ்வேதா மணிவாசகம் - சென்ற ஆண்டு மாநாட்டு மலரில் வெளிவந்த இவரின் கட்டுரை - பாரதியார் vs. ஷெல்லி
 
4. கவிதா சத்யகுமார்
 
5. மதுமித்தா சொக்கலிங்கம் - சென்ற ஆண்டு மாநாட்டு மலரில் வெளிவந்த இவரின் கட்டுரை - தமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்
 
6. வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் - சென்ற ஆண்டு மாநாட்டு மலரில் வெளிவந்த இவரின் கட்டுரை - முத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்
 
7. தமிழ் தாயாக - ஓவியா
 
 
 

28 comments:

  1. ஆஹா... அற்புதம். மாநாட்டில் குழந்தைகள் பங்கேற்று நிகழ்த்திய கலந்துரையாடல் அபாரமாக உள்ளது. ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாத நிலையிலும் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அவர்கள் பயிற்சியெடுத்துப் பங்கேற்றது பாராட்டுக்குரியது. தமிழ்த்தாய் ஓவியாக்குட்டிக்கும் இனிய பாராட்டுகள்.

    மாநாட்டில் கலந்துகொள்ள சூழ்நிலை எனக்கு இடங்கொடுக்காமல் போனதற்காய் பெரிதும் வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      அடுத்த வருடம் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

      Delete
  2. உரைக்கும் உண்மைகளை போகிற போக்கில் காண்பித்திருக்கிறீர்கள் சார், ஆனால் என்னைப் பொறுத்த வரை தமிழ் வார்த்தைகளோடு பாடப்படும் பாடல்கள் இன்னும் நன்றாக இருக்குமே தவிர ராகத்துடன் கலந்து பாடும் போது சில தவறுகள் நடந்துவிடுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கூற்றை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இன்றும் தமிழ் வார்த்தையோடு பாடல்களை எழுதுகிறார்கள் தான். ஆனால் பல பாடல்களில், ஆங்கிலமும், இரைச்சலான இசையும் தான் மேலோங்கி இருக்கிறது.
      அதனை சுட்டிக்காட்டும் விதமாகத்தான் இந்த கால பாடல்களில் இருந்து ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி எழுதப்பட்ட பாடல்களை உதாரணமாக எடுத்துக்கொண்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயசீலன்

      Delete
  3. சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினரால் நடத்தப்பட்ட சங்கத்தமிழ் மாநாட்டில் ஆறு மாணவர்களின் கலந்துரையாடல் அருமை. அயல் நாட்டில் இருந்தாலும் அன்னைத் தமிழை மறக்காமல் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். மறந்து போனவைகளை இப்பதிவின் மூலம் நினைவூட்டியமைக்கு நன்றி. பங்கு பெற்ற குழந்தைகள் அருமையாக உரையாடலை எடுத்த் செல்ல உதவிய உங்களுக்கு வாழ்த்துக்கள். அந்த குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்! தமிழ்த்தாய் எப்போதும் இளமையாக இருப்பதாக சொல்வதுண்டு. அதை செல்வி ஓவியா நிரூபித்துவிட்டார். அவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  4. குழந்தைகளின் கலந்துரையாடல்...அற்புதம். குழந்தைகள் எவ்வளவு ஈடுபாட்டுடன் செய்து இருக்கிறார்கள். சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினருக்கு பாராட்டுக்கள். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.தமிழ் தாய் அழகு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  5. Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  6. தமிழ் நாட்டில் நாங்கள் இதையெல்லாம் செய்வதில்லை.
    மாணவருக்கு ஒன்றின் மீது வெறுப்பு வர வேண்டுமா?
    அதைப் பாடமாக வைத்து விடுகிறோம்
    நீங்கள் கூறும் புறப்பாடல் “ இவ்வே பீலி அணிந்து “
    இங்கு ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ பாடமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை எழுதும் போதும் படிக்கும் போதும் குத்திக் கொடுநுனி சிதைத்துத் தான் விடுகின்றனர்.
    அவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி தமிழ்த்தாயென வழிபடுகிறீர்கள்!
    “மது“வின் தமிழ்பற்றிய தகவல்களிலிருந்து நானும் பல கற்றேன்.
    தங்கள் குழந்தைகளால் தமிழ் தழைக்கட்டும்.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். நானும் படிக்கிற காலத்தில் தமிழ் செய்யுள்களை எல்லாம் மனப்பாடம் பண்ணி எப்படியோ வாந்தி எடுத்து விடுவேன்.
      ஆனால் இப்போது தான் அந்த தப்பு புரிகிறது.

      தாங்களும் பல தகவல்களை கற்றேன் என்று கூறியிருப்பது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.

      தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  7. ஆகா அற்புதம் நண்பரே
    ஒவ்வொருவரும் பாராட்டிக்கு உரியவர்கள்
    தங்கள் மகள் தமிழ்த்தாயாக அருமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  8. குழந்தைகளின் கலந்துரையாடல் அருமை! தங்கள் படைப்பும் அருமை நண்பரே! வியக்கின்றோம்! அதே சமயம் ஒரு ஆதங்கமும். இங்கு இதெல்லாம் நடை பெறுவதில்லை. ஏனென்றால் நாங்கள் செய்வதில்லை. ஆனால் கடல் கடந்தும் ஒரு அன்நிய தேசத்தில் தாங்கள் இத்தனை முயற்சி எடுத்து செய்வதைப் பாராட்டாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்!? கை கொடுங்கள் நண்பரே! அன்நிய தேசத்தில் வாழும் அந்தக் குழந்தைகள் எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அவர்களாலாவது தமிழ் பெருமை அடையட்டும்!

    வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி துளசி சார்.

      Delete
  9. இதை அப்படியே பிரிண்ட் செய்து
    எமது மாணவர்களுக்கு தர ஆசை
    பாப்போம் முடிகிறதா என ...
    வாழ்த்துக்கள் உணமையானவரே..
    தொடரட்டும் தமிழ்ப்பணி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே.
      கண்டிப்பாக மாணவர்களுக்கு பிரிண்ட் செய்து கொடுங்கள்.

      தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  10. தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி.

    சிறு குழந்தைகளாக இருந்தாலும் தமிழ் மேல் பற்று கொண்டிருக்கும் இந்த மாணாக்கர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    தமிழ்த் தாயாக ஓவியா - அழகு....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  11. Arumiyana padaippu thiru chokkan aiyaa. Unmaiyileye sanga kaala ilakkiyangalin moolam naam katrukkondathu yeraalam yeraalam.. Kaalangal maarum bothu, manithargalin rasanaiyum,sinthanaigalum maarikonde irukkindrana.. Nandri aiyaa..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  12. கலந்துரையாடல் மிக அருமை. அதில் பங்குப்பெற்ற அனைத்து மாணவ மாணவியரும் மிக தெளிவாகவும் அருமையாகவும் பேசினார்கள். தமிழ் தாய் ஓவியா வயதில் சிறியவளாய் இருந்தாலும் மிக அருமையாக பேசினாள்.
    பங்குப்பெற்ற அனைவருக்கும், இக்கலந்துரையாடலை மிக நன்றாக எழுதி பயிற்சி கொடுத்த உங்களுக்கும், இதனை ஊக்குவித்து தங்கள் பிள்ளைகளை பங்கு பெற செய்த அவர்களின் பெற்றோருக்கும் எங்களது பாராட்டுகள்.
    மென்மேலும் தங்கள் தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள் திரு. சொக்கன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  13. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    ReplyDelete
  14. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நம்பி அவர்களே.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
    எப்படி இதை தவறவிட்டேன் என்று தெரியவில்லையே. ம்..ம்.. வருகிறேன் பின்னர் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete