Saturday, December 1, 2012

காதல் கீதம் - 6

       பகுதி - 5
காரைக்குடி வந்தவுடன், ஜானகியும் அடைக்கப்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் தஞ்சாவூர் செல்லும் பஸ்ஸில் ஏறப் போனாள். அவள் பின்னாடியே சென்ற அடைக்கப்பன், ஜானகியை பார்த்து,

ஜானகி, அடுத்த பஸ்ல போறீங்களா என்றான்.

ஜானகியும், அடைக்கப்பனை கேள்வியோடு பார்த்தாள்.

அடைக்கப்பனோ, உங்க கூட கொஞ்சம் பேசனும் என்றான்.

“என்னிடம், பேசுவதற்கு என்ன இருக்கிறது” என்றாள் ஜானகி.

“உங்க கூட தனியா பேசனும், அப்படியே அந்த ஹோட்டல்ல காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா” என்றான்.

எனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லைங்க என்றாள்.

“ஒரு பேச்சுக்கு காபின்னு சொன்னேங்க. சரி, ஜூஸ் குடிச்சுக்கிட்டே  பேசலாம்” என்று கூறி நடந்தான்.

ஜானகியும் அவன் பின் தொடர்ந்தாள்.

அந்த ஹோட்டலில் கூட்டம் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. இருவரும் கடைசியில் இருந்த இருக்கைகளில் எதிர் எதிரே அமர்ந்தனர்.

“ஜானகி எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. நான் உங்களை கல்யாணம் பண்ணிக் விரும்புகிறேன்” என்றான் அடைக்கப்பன்.

ஜானகி அடைக்கப்பனையே கொஞ்ச நேரம் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அடைக்கப்பனோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாளோ என்பதை விட, அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு,

ஜானகி, “இதை சொல்றதுக்கா உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சு” என்றாள்.

“என்ன சொல்றீங்க” என்று முதலில் புரியாமல் கேட்டு, பிறகு அவள் சொன்னதோட அர்த்தம் புரிந்து ரொம்பவும் சந்தோஷம் அடைந்தான் அடைக்கப்பன். “அப்ப, உங்களுக்கும் என்னைய பிடிச்சிருக்குன்னு சொல்றீங்களா” என்றான்.

“அதான் சொல்லிட்டேனே, இன்னும் வேற சொல்லனுமா. எப்ப உங்களை முதல் முதல்ல பார்த்தேனோ, அப்பவே உங்களை எனக்கு பிடிச்சுப் போச்சு. ஆமா, அந்த கல்யாணத்துல என்னைய விட எவ்வளவோ பேர் அழகா இருந்தாங்களே, ஏன் என்னைய மட்டும் அப்படி பார்த்துக்கிட்டு இருந்தீங்க”? என்று கேட்டாள்.  

“இங்க பாருங்க ஜானகி, உண்மையான காதல் அழகை பார்த்து வர்றது இல்லை. ஒரு பெண்ணை பார்த்தவுடன், இந்த பெண் நமக்கு மனைவியா வந்தா நல்லா இருக்குமேன்னு மனசு சொல்லும். நானும் எத்தனையோ பொண்ணுங்களோட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். ஆனா உங்களை  முதல் முதல்ல பார்த்த அந்த நொடியிலேயே, கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என் மனசு சொன்னுச்சு”.   

“என் விழிகளுடன் உன் விழிகள்
கலந்த அந்த நொடியில்,
என் இதயத்தில்
மொட்டாக இருந்த காதல் பூ
மலர்ந்தது”.

என்று ஒரு கவிதையை வேற சொன்னான்

“அட! அருமையா கவிதை எல்லாம் சொல்றீங்க. உங்களுக்கு கவிதை எல்லாம் எழுத வருமா? எனக்கு கவிதைன்னா ரொம்ப பிடிக்கும்” என்றாள் ஜானகி.

அதற்கு அடைக்கப்பன், “நீங்க வேற ஜானகி, உங்களை பார்த்த பிறகு தான், எனக்குள்ள கவிதையே ஊற்றெடுக்க ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி எல்லாம் கவிதையை படிக்க மட்டும் தான் தெரியும்” என்றான்.

“அருமையா கவிதை எல்லாம் சொல்ல தெரியுது, ஆனா காதலை சொல்றதுக்கு மட்டும் சீக்கிரமா சொல்லத் தெரியலை” என்றாள் ஜானகி.

“நான் தான் சீக்கிரமா சொல்லலை. நீங்களாவது முதல்ல சொல்லியிருக்கலாம் இல்ல” என்றான் அடைக்கப்பன்.

“அது எப்படி நான் முதல்ல சொல்றது. என்ன தான் பொண்ணுங்க முன்னேறியிருந்தாலும், சில விஷயங்கள்ல ஆம்பிளைங்க தான் முதல்ல இருக்கனும்னு நினைப்பாங்க. அதனாலதான் என்னால உங்க கிட்ட என் காதலை சொல்ல முடியலை. இப்ப நீங்க என் பின்னாடியே வந்தபோதே நினைச்சேன், காதலை தான் சொல்லப் போறீங்கன்னு. ஆனால் காதலிக்கிறேன்னு சொல்லாம, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க பாருங்க, அதுலேயே எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சு போச்சு” என்றாள் ஜானகி.

“நீங்க இன்னமும் படிச்சுக்கிட்டு இருக்கீங்க. இதுல, நான் காதலிக்கிறேன்னு சொல்லி, உங்க மனசை கலைக்க கூடாது. இப்ப உங்களுக்கு படிப்பு தான் ரொம்ப முக்கியம். அதனால தான் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். உங்க படிப்பு முடியுற வரைக்கும் காத்திருப்போம்” என்றான் அடைக்கப்பன்.

“அப்ப, நம்ம பார்க்க, பேசிக்க முடியாதா” என்றாள் ஜானகி.

“அப்படியில்லை, நாம பார்க்கலாம், பேசலாம். ஆனா அடிக்கடி பேசிக்க வேண்டாம். நீங்க என்கிட்ட பேசனும்னு நினைச்சீங்கன்னா, இந்தாங்க இது எங்க கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்டோட நம்பர். இதுல கூப்பிட்டு, பூங்குழலிக்கிட்ட பேசி, பக்கத்துல யாரும் இல்லன்னா என்கிட்ட கொடுக்க சொல்லுங்க” என்றான்.

“ஓ! உங்க கூட வந்திருக்காங்களே அவுங்க பேரு தான் பூங்குழலியா!!. அவுங்களுக்கு நீங்க என்னைய காதலிக்கிறது தெரியுமா” என்றாள் ஜானகி.

“அவளுக்கு நல்லா தெரியும். இன்னமும் சொல்லப் போனா, நான் இன்னைக்கு உங்க கூட பேசிக்கிட்டு இருக்கிறதுக்கு அவ தான் காரணம். தைரியமா, நீங்க அவ கிட்ட பேசலாம். அவ யாருக்கிட்டேயும் சொல்லமாட்டாள்” என்றான் அடைக்கப்பன்.

“நான் பேசனும்னு நினைச்சா, இந்த மாதிரி பண்ணலாம். ஆனா, நீங்க பேசனும்னு நினைச்சா, எப்படி பேசுவீங்க” என்று கேட்டாள்.   

“அதற்கும் ஒரு வழி வச்சிருக்கேன். நீங்க பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூணாவது வருஷம் தானே படிக்கிறீங்க. உங்களுக்கு “Digital Principles” எடுக்குற மைதிலியும் நானும் கிளாஸ்மேட்ஸ் தான். அதனால வெள்ளிக்கிழமையே அவளுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். நீங்க ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டல்லேருந்து அவ வீட்டுக்கு வந்துடுங்க. நாம பேசிக்கலாம்” என்றான்.

“அட! அட! என்ன ஒரு முன்னேற்பாடு, பயங்கிரமான ஆளா இருக்கீங்க. ஆமா, இன்னும் என்ன, என்னைய நீங்க, வாங்கன்னுக்கிட்டு. சும்மா நீ, வான்னே சொல்லுங்க” என்றாள். 

“சரிடி ஜானகி, இனிமே உன்னைய நீ, வான்னே கூப்பிடுறேன்” என்றான் அடைக்கப்பன்.

“ஏய், இதானே வேணாங்குறது, இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான், இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்க. இந்த “டி” போடுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க” பொய் கோபம் காட்டினாள்.  

“அப்பா!, என்னமா கோபம் வருது. சும்மா விளையாடினேன். தப்பா எடுத்துக்காதே” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நான் கிளம்புறேன்” என்று கிளம்பினாள் ஜானகி.

“சரி ஜானகி, போயிட்டு வா, ஒழுங்கா படி, நான் அடிக்கடி எல்லாம் உன்னோட பேச மாட்டேன். முதல்ல மைதிலி கிட்ட பேசி . அப்புறமா உன்னோட பேசுறேன். 3 மாசத்துல உனக்கு ஸ்டடி ஹாலிடேஸ் வரும் இல்ல, அப்ப நாம சந்திக்கலாம்” என்றான் அடைக்கப்பன்.

ஜானகியை தஞ்சாவூருக்கு பஸ் ஏற்றிவிட்டு, அடைக்கப்பனும் படமாத்துருக்கு சந்தோஷமாக திரும்பிச் சென்றான்.

பூங்குழலி அவனிடம், “என்ன அடைக்கப்பா, என்ன ஆச்சு, “காயா, பழமா” என்றாள்.

அதற்கு அடைக்கப்பன், “எல்லாம் பழம் தான். அவ எப்போதாவது போன் பண்ணுவா, பக்கத்துல யாரும் இல்லன்னா, என்னிடம் கொடு” என்றான்.

“அப்படி போடு அரிவாளை, எப்படியோ அவ படிப்பை முடிச்சவுடனே கல்யாணத்தை பண்ணிக்கோ” என்றாள் பூங்குழலி.

“சரிம்மா, நீ சொன்னபடியே நடக்குறேன். இந்த விஷயத்தை யாருக்கிட்டேயும் சொல்லாதே, நான் போயி சுரேஷுக்கு  போன் பண்ணி சொல்லிட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பி போனான்.

மறு நாள் பூங்குழலி, “அடைக்கப்பா உனக்கு போன்” என்றாள்.

“யாரு, ஜானகியா” என்றான் அடைக்கப்பன்.

“அடாடா, காதலிக்க ஆரம்பிச்சவுடனே, பெத்தவங்களை மறந்துடுவீங்களே!. போன்ல ஜானகியோட மாமியார்” என்றாள்.

உடனே, “அடைக்கப்பன் போனை வாங்கி, சொல்லுங்கம்மா” என்றான்.

“அடைக்கப்பா எப்படி இருக்கே? வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா”?

“நல்லா இருக்கேன்மா, ஆமா என்ன திடீர்னு போன் பண்றீங்க”?

“ஆமா நேத்து நீ, காரைக்குடிக்கு போயிருந்தியா”?

(மனதுக்குள்) நம்ம போனது எப்படி அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும் என்று எண்ணிக் கொண்டு, “ஆமாம்மா ஒரு ஃப்ரெண்ட்டை பார்க்க போயிருந்தேன்”.

“நீ காரைக்குடி பஸ் ஸ்டண்ட்ல நின்றுக்கொண்டிருந்ததை, நம்ம பங்காளி வீட்டு மணி ஐயா பார்த்திருக்காங்க. அவுங்க தான் போன் பண்ணி சொன்னாங்க. நம்ம வீட்டுக்கு போயிட்டு வந்தியா”?.

“இல்லம்மா, எனக்கு நேரம் இல்ல. அடுத்த தடவை போனா, கண்டிப்பா வீட்டுக்கு போயிட்டு வரேன். சரிம்மா, அப்பாவை கேட்டதா சொல்லுங்க, நான் போனை வச்சுடுறேன்”.

அடைக்கப்பன் போனை வைத்தவுடன், “என்ன அதுக்குள்ள வில்லன் வந்தாச்சா” என்றாள் பூங்குழலி.

“ஆமாம் பூங்குழலி, நல்ல காலம், நான் ஜானகி கூட இருந்ததை அவரு பார்க்கலை. இந்த வயசானவங்களுக்கு இதுவே பொழப்பா போச்சு. யாரு வந்தா என்ன, போனா என்ன. நான் வந்ததை மெனக்கட்டு போன் பண்ணி சொல்லியிருக்காரு. இனிமே காரைக்குடிக்கு போகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும்” என்றான் அடைக்கப்பன்.

மூன்று மாதங்கள் சென்றது. இந்த மூன்று மாதத்தில், அடைக்கப்பனும், ஜானகியும் மாறி மாறி போன் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் மதியம், அடைக்கப்பன் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது, ஜானகியின் தந்தை நாராயணனிடமிருந்து போன் வந்தது.

“அடைக்கப்பன், இன்னைக்கு வேலை முடிச்சு ரூமுக்கு போகும்போது, கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா. உங்க கூட கொஞ்சம் பேசனும்”.

“சரிங்க நான் வீட்டுக்கு வரேன்” என்று சொல்லி போனை கட் பண்ணினான். (மனதுக்குள்) நாம ஜானகியோட பழகுறது தெரிஞ்சிருக்குமா? நேத்து தானே ஜானகி ஸ்டடி ஹாலிடேசுக்கு வீட்டுக்கு வந்திருக்கா. சரி, தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிப்போம் என்று எண்ணிக்கொண்டான்.

[தொடரும்]                                                          பகுதி - 7                                                 

No comments:

Post a Comment