Tuesday, January 27, 2015

ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை



இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும் ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆசிரியர்கள்,அறிஞர்கள் வந்திருந்தார்கள். அடியேனும் எங்கள் பள்ளி (பாலர்மலர் தமிழ் பள்ளி ஹோல்ஸ்வோர்தி கிளையின்) சார்பாக, 
மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் 
என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அதற்கான பவர் பாயிண்ட் பிரசன்டேஷனோடு அன்று மதியம் நடைபெற்ற அமர்வில் படைத்தேன். இந்த கட்டுரையில் நான் கூறியுள்ள யுத்திகள் அனைத்தும், என்னுடைய வகுப்பில் நான் பின்பற்றிய யுத்திகளாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையை தயார் செய்திருந்தேன். அதனை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் யுத்திகளை பின்பற்ற முடியும் என்றால், தயவுகூர்ந்து,பின்னூட்டத்தில் தெரிவித்தால், எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டில் தமிழ் பயிற்றுவிக்கும் நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இங்கே நான் வெளியிட்டுள்ள படங்களைக் கொண்டு தான் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாகியிருந்தேன்.

மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
-சொக்கன் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி ஹோல்ஸ்வொர்தி சிட்னி

அறிமுகம்

புலம்பெயர்ந்த நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் மத்திமப் பருவத்தில் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஆஸ்திரேலியாவில் இந்தப் பருவத்தில் தான்> அவர்கள் செலக்டிவ் (selective ) பாடசாலைகளுக்கான தேர்வை எதிர்கொள்வதற்காக> ஓராண்டோ அல்லது இரண்டாண்டுகளோ தமிழ் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்தச் செய்கையால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. அத்தேர்வு முடிந்த பிறகு> பெற்றோர்களின் தூண்டுதலால் தமிழ் பள்ளிக்கு வந்தாலும் அவர்களால் முழுமையாக ஆர்வம் செலுத்த முடிவதில்லை. அவ்வாறு வரும் மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான கற்பிக்கும் வழி முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் கருவாகும். இந்த கட்டுரையில் நான் மற்றும் எனது சக ஆசிரியர்கள் வகுப்பில் கையாண்ட பல யுக்திகளைப்  பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனைத் திறன்> எழுத்துத் திறன்> பேச்சுத்  திறன்> உற்றுக்கேட்டு பதில் அளிக்கும் திறன்> வாசித்து பதில் அளிக்கும் திறன் மற்றும் குழுத்திறன் போன்ற திறன்களை எவ்வாறு  மேம்படுத்த இயலும் என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம். 


கணினி வழிப்பாடம்


1. வீட்டுப்பாடம்

இப்பொழுதெல்லாம் பொதுப் பாடசாலைகளில்> மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பாடங்களை பேனாவைக்கொண்டு எழுதாமல்> கணினியில் தட்டச்சு மூலமாகத்தான் செய்கிறார்கள். அதனால் தமிழ் பள்ளியிலும் கணினி மூலமாக வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கலாம். ஐம்பது சதவீத வீட்டுப்பாடங்களை பேனாவைக்கொண்டும் மீதி ஐம்பது சதவீதத்தை கணினி வழியில் செய்யச் சொல்வதால்அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழை தட்டச்சு செய்யும் முறையை  அறிந்து கொள்ள முடியும். தட்டச்சு மூலம் செய்யப்பட்ட வீட்டுப்பாடங்களை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்புவதால் ஆசிரியர்களுக்கு அதனை திருத்தும் வேலை எளிதாகி விடுகிறது. இதற்கு முதலில் அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வதை கற்றுக்கொடுக்க வேண்டும்(1)

2. ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தல்

ஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் சமூக அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு மாநாட்டை நடத்தி>அதில் வெளியிடப்படும் மாநாட்டு மலர்களில் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். அந்த கட்டுரைகளை சமர்பிக்க மாணவர்களை தயார் செய்து>அவர்களின் கட்டுரைகளை அந்த மாநாட்டு மலரில் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்> வருங்காலத்தில் அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு மாநாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து ஆறு மாணவ மாணவியரின் கட்டுரைகள் வெளிவந்தன(2)
இவ்விரண்டு முறைகள் மூலமாக மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் அதிகரிப்பதோடு அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும்; முடியும்.

3. தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளுதல்   

மாணவர்களை வாரத்திற்கு அரை மணி நேரம் கணினியில் தமிழ்ப்; பத்திரிக்கைகளை படித்து தாயகச் செய்திகளில் மிக முக்கிய தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ளச் செய்து> அந்த செய்திகளை வகுப்பில் பேசும் நேரத்தில் (speaking time) இரண்டு மணித்துளிகள் பேசச் செய்தல். இதன் மூலம் அவர்களின் படிக்கும் திறனையும்>பேசும் திறனையும் உயர்த்த முடியும். மேலும் அவர்கள் தாயகத்தில் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள்.

4. விடுமுறையில் தமிழ் படிப்பு

பள்ளி விடுமுறைகளில் மாணவர்கள் புத்தகத்தை எடுத்து தமிழ் படிப்பது அபூர்வம்.அதே சமயம் கணினி மூலமாகத் தமிழ் படிக்கச் சொன்னால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (3) அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் இணையத்தளம் (4), (5)

இதில் ஏதாவதொரு ஒரு இணையத்தளத்தில் ஒரு பகுதியை வீட்டுப்பாடமாக விடுமுறை நாட்களில் படித்து வரச் செய்யலாம்.
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மாணவர்கள் வரை உள்ள குழுவாகப் பிரித்து ஏதாவதொரு திட்டப்பணியை விடுமுறையில் குழுவாக செய்து வருமாறு சொல்லலாம்.
நான் என்னுடைய வகுப்பில் இம்மாதிரி குழுக்கள்; அமைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆறு முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்லலாம்> தங்கும் வசதி> அங்கு முக்கியமாகப் பார்க்கக்கூடியவைகள்> எந்த மாதத்தில் செல்லலாம்> அந்த இடத்தின் வரலாறு என்று விரிவாக எழுதி> அதனை பவர்பாயிண்ட்டில் படைக்கச் சொல்லியிருந்தேன். மாணவர்களும் ஆர்வமாக பங்குக்கொண்டு படைத்தார்கள்.

மற்றுமொரு திட்டப்பணியாக மாணவர்களிடம் ஏதாவதொரு தலைப்பில் உதாரணமாக தங்களின் பெற்றோர்கள் தாயகத்தில் எவ்வாறு பள்ளிப் படிப்பை படித்தார்கள் என்பதைப் பற்றி பேட்டி  எடுத்து அதனை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டு வரச் சொல்லலாம்.
இவ்வாறு விடுமுறையில் அவர்களை தமிழ் படிக்கச் செய்வதோடு அவர்களின் குழுத்திறனையும் திட்டப்பணிகளை படைக்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.


வகுப்பறையில் பின்பற்றப்படும் யுக்திகள்



மத்திம பருவத்தில் மாணவர்களின் தொடர்ச்சியாக தமிழ் பள்ளிக்கு வருவதற்கும்தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் வகுப்பறையில் கையாளப்படும் புதிய முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. என்னுடைய வகுப்பில் நான் கையாண்ட சில யுத்திகளை இங்கு பார்க்கலாம்.

1. பட்டிமன்றம்



பொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் கூறும் கருத்துக்கள் தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெற்றோர்களோ நண்பர்களோ மாற்றுக் கருத்து கூறினால் அவற்றை எதிர்த்து தங்களின் கருத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக பதிலுரைப்பார்கள். இந்த எண்ணத்தை உபயோகித்து அவர்களின் பேச்சுத் திறனை அதிகரிக்க வகுப்பில் பட்டிமன்றம் நடத்தலாம். என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகுப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவேன். எந்தெந்த மாணவர்கள் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் தயார் செய்வதற்கு இரு வாரங்களும் அளித்துவிடுவேன்.

இந்த யுக்தி மூலம் அவர்களின் சிந்தனைத் திறன்> குழுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவைகளை மேம்படுத்த முடியும்.

2. மாணவர்களே பாடங்களுக்குப் பயிற்சியைத் தயாரித்தல்

வகுப்பில் பாடங்களை நடத்தி முடித்த பிறகு அந்த பாடத்திற்கான பயிற்சியை மாணவர்களையே தயாரிக்க சொல்லுதல். அவர்களும் ஆர்வமாக தங்களின் சிந்தனைத் திறனை உபயோகித்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆறாம் வகுப்பை எடுத்தபொழுது> பாடப்புத்தகம் தான் இருந்தது> பயிற்சி புத்தகம் வெளியிடப்படவில்லை . அதனால் நான் பாடத்தை எடுத்து முடித்த பிறகு> வீட்டுப்பாடமாக மாணவர்களை அந்த பாடத்திலிருந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொண்டு வரச்சொல்லி, கேள்விகளை தயாரிப்பதற்கும் சில விதிமுறைகளை கூறினேன். உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான விடை ஒரு வரியிலும் மற்றொரு கேள்விக்கான விடை குறைந்தது இரு வரிகளிலும் மற்றுமொரு கேள்வி ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் தாம் எழுதிக்கொண்டு வரும் கேள்விகளை பலகையில் எழுதச் சொல்லி மற்றவர்களை அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வகுப்பில் எழுதினார்கள் இவ்வாறு செய்ததால் அந்த பாடத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை  அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது பயிற்சி புத்தகங்கள் இருந்தாலும் இந்த யுக்தியை வகுப்பில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

3. உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் பயிற்சி


மேல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு தேர்வானது உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் தேர்வாகும் (listening and responding). இதற்கான பயிற்சியை தொடங்கும் முன்> அன்றைக்கு எடுக்கப்பட பாடத்திலிருந்து ஒரு பத்தியை ஆசிரியர் ஒரு நிமிடத்துக்கு வாசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த ஒரு நிமிடமும் கவனமாக கேட்க வேண்டும். ஒரு நிமிடம் முடிந்தவுடன் அவர்கள் அடுத்த ஒரு நிமிடத்திற்கு தாங்கள் கேட்ட சொற்களை எழுத வேண்டும். இப்படி சில வாரங்கள் பயிற்சி அளித்து விட்டு பிறகு தெரியாத பாடத்திலிருந்து இந்த பயிற்சியை மேலும் சில வாரங்களுக்கு தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு மேல்நிலை வகுப்புகளில் நடக்கும் இந்த தேர்வு மாதிரி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

4. ஒரு நிமிட தேர்வு



வகுப்பில் அடிக்கடி ஒரு நிமிட தேர்வை நடத்தினால்> மாணவர்களும் தேர்வா! என்று யோசிக்கமாட்டார்கள். மேலும் ஆசிரியருக்கு மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். அதாவது வகுப்பின் இடையே தெரிந்த பாடத்தையும் பிறகு தெரியாத பாடத்தையும் ஒரு நிமிடம் அனைவரையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் எத்தனை வார்த்தைகளை படித்தார்கள் என்று அவர்களையே எண்ணிப்பார்க்கச் செய்து குறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ செய்தால் மாணவர்களின் வாசிக்கும் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு இது ஒரு தேர்வு என்ற எண்ணம் தோன்றாது. இதில் மற்றுமொரு விஷயத்தையும் ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக வாசிக்கச் சொல்லாமல், மாற்றி மாற்றி வாசிக்கச் சொன்னால்>  மாணவர்கள் வகுப்பை உன்னிப்பாக கவனிக்கிறார்களா என்று கண்டு பிடித்து விடமுடியும். இதே போல் எழுத்துத் தேர்வை நடத்தினால், ஒரு நிமிடத்தில் அவர்களால் எத்தனை வார்த்தைகள் எழுத முடிகிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.


5. பேச்சுப் பயிற்சி


பொதுவாக இந்த வயது மாணவர்கள் அதிகம் தமிழில் பேசமாட்டார்கள். எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற பய உணர்ச்சி அவர்களிடம் அதிகமாக இருக்கும். அந்த பய உணர்ச்சியைப் போக்கி> அவர்களை சரளமாக தமிழில் பேச வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வார கால அவகாசமாளித்து அவர்களுக்கு பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகள் முதல் ஐந்து மணித்துளிகள் வரை அவர்களை பேசr; சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்திற்கான விமர்சனம்> மிகவும் பிடித்த நடிக நடிகையர்> மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற தலைப்புகளில் பேச வைக்கலாம்.

6. புதிர் விளையாட்டுக்கள்

வகுப்பில் மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடச் செய்வதே இந்த புதிர் விளையாட்டுக்கள் தான். ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் இதற்காக ஒதுக்கினால் மாணவர்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வருவார்கள். குழுக்களாக பிரித்து இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் குழுத்திறனை மேம்படுத்த முடியும்.

     சொல்வளத்தை அதிகப்படுத்துதல்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து சொல்வளத்தை அதிகப்படுத்தும் விளையாட்டை விளையாடுதல். அதாவது வீடு என்று சொன்னவுடன் உங்களுக்குத் தெரிந்த சொற்களை இரண்டு நிமிடத்திற்குள் எழுதுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அந்த குழு எழுதிய சொற்களின் எண்ணிக்கையை புள்ளிகளாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி காய்கறிகள்> குடும்பம் என்று கூறி இறுதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கலாம்.

     தனித்தனியாக உள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்

     இரண்டு அல்லது மூன்று திருக்குறளை தாளில் எழுதி ஒவ்வொரு சொல்லாக வெட்டி எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு  ஒவ்வொரு குழுவிடமும் தந்து திருக்குறளை கண்டுப்பிடிக்கச் செய்வது. திருக்குறள் என்று தான் இல்லை வேறு ஏதாவது நீள வாக்கியங்களையும் இவ்வாறு செய்யலாம்.  

முடிவுரை

மேற்குறிப்பிட்டுள்ள யுக்திகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் மத்திம பருவத்து மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில யுக்திகள் மேல்நிலை வகுப்புக்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. இக்கட்டுரையானது தமிழ் தெரியாத இளைஞர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


சான்றுக் குறிப்புகள் / References
3.      http://tamilvu.org/

  



46 comments:

  1. வந்து விட்டேன் படித்துக்கொண்டு இருக்கிறேன்.............

    ReplyDelete
    Replies
    1. நானும் நன்றி கூற வந்துவிட்டேன்

      Delete
  2. நண்பருக்கு வணக்கம்,
    தங்கள் தமிழுக்காக எடுக்கும் சிரத்தை கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது... தமிழ் நாட்டில் உள்ளவர்கள் பலரும் தமிழை வைத்து ஏமாற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், வாழ்க உமது தமிழ்த்தொண்டு தங்களுக்கு இந்த வகையில் யோசனை சொல்லும் பக்குவம் எமக்குப்போறா..

    தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ.

    தமிழ் மணம் – 100 (தங்களிடம் இருந்தால் ? போட்டிருப்பேன்)
    (மற்ற இணைப்புகளுக்கும் போனேன்)

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபித் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு என்னைப் போன்று பலரும் இருக்கிறார்கள். நான் கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சொல்லிக்கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் பார்க்கும்போது, நான் ஒன்றும் பெரிதாகா சாதித்து விடவில்லை.

      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. அருமையான கட்டுரை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  4. எல்லாமே நல்ல யுக்திகள். இதற்குமேல் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. எல்லாமே நல்ல யுக்திகள். இதற்குமேல் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  6. அருமையான வழிமுறைகள் அசத்துங்கள்... வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிங் சார்

      Delete
  7. நல்ல கட்டுரை..
    பலவிதமான யுக்திகள்....சபாஷ்
    வெளிநாட்டுவாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள்.
    வாழ்க வளர்க..உங்களின் தமிழ் தொண்டு.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பிராயத்தனம் செய்தும் தமிழ் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. தமிழ் பள்ளியின் முக்கியத்துவம் பெற்றோர்களின் பார்வையில் கடைசியாக காணப்படுவதால்,படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. அரிதாரம் பூசி ஆளத் துடிக்கும் உலகத்தில்
    அரிச் சுவடி தாசித் தட்டி எடுத்து தாய் மொழி கல்வியின்
    சிறப்பை சிரமாகக் கருதி செயல் படும் உள்ளத்தை
    உலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு போற்றுகிறோம்.
    சீரியப் பணி க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
    வருங்காலம் வளம் பெறும்!
    நன்றிகள்!
    (இங்கு பிரான்சு தேசத்தில் நானும் (புதுவை வேலு,), நண்பர் சாமானியனும்
    தமிழ் பயிற்றுவிக்கின்றோம் வருங்கால தமிழ் தலைமுறையினருக்கு)
    நன்றியுடன்,
    புதுவை வேலு,

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்
      "தூசித் தட்டி" என்று திருத்தி படிக்கவும்
      தவறுக்கு மனம் வருந்துகிறேன்.
      நன்றி

      Delete
    2. எழுத்துப்பிழைக்காக எல்லாம் மனம் வருந்த வேண்டாம் நண்பரே.

      தங்களுக்கும் "சாமானியன்" நண்பருக்கும் வாழ்த்துக்கள். தாங்களும் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  9. தங்களின் கட்டுரையை மிகவும் லயித்துப்படித்தேன். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள உத்திகள். பெற்றோர்கள்கூட இவற்றிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். தங்களின் பணி மென்மேலும் சிறப்பாக அமையவும், பலருக்குச் சென்று சேரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற அறிஞர்கள் வாழ்த்தும்போது, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது ஐயா.

      தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. சிறப்பான வழிமுறைகள்... தங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  11. சிறப்பான எண்ணங்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி டிடி

      Delete
  12. தங்களின் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடி

      Delete
  13. படிக்க பிரமிப்பாக இருக்கிறது தங்களின் முயற்சியைப் பார்க்கும்போது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  14. Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிநேதாஜி சார்.

      Delete
  15. அருமை! அருமை! அருமை! மிக மிகச் சிறப்பான வழிமுறைகள்! தங்கள் முயற்சிகள் எல்லாமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! வேறு வார்த்தைகள் அகராதியில் இல்லையே! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
  16. யுக்திகள் அருமை சார்... நான் படிக்கும் ஜப்பான் பள்ளியில் கூட இதே முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஜப்பான் மொழியைப் படிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்க ஸ்பை.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  17. சிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்விற்கு நன்றி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  18. தங்களின் கட்டுரை மிக அருமை. நான் அடுத்து இதைச் சொல்லலாம் என்று நினைக்கும் போது உங்கள் கட்டுரையில் அது உள்ளது.நம்முடைய பழைய விளையாட்டுள் இதற்கு பயன்படும் என்று நினைக்கிறேன். அவற்றை நினைவு கூர்ந்தது போலும் இருக்கும். எத்துனை பெரிய செயல்களை மிக எளிதாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  19. ஆசானே,
    வணக்கம். உங்களைப் போல் பல்திறஆளுமை பெற்றவனல்ல நான்.
    தமிழாசிரியனும் அல்லன்.
    இருப்பினும் தமிழ்ப்படிப்பிக்க நீங்கள் கூறியுள்ள முறைகள் இங்குத் தமிழாசிரியர்கள் பின்பற்றாதவை என்பதோடு மிகச்சிறந்த மொழிபயிற்று முறைகளும் ஆவன. இவை உங்கள் ஆர்வத்தினால் அனுபவத்தினால் நீங்கள் கண்டறிந்தவை என்பதை அறியமுடிகிறது.
    உண்மையில் என் ஆசிரியப் பயிற்சியின் போது ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
    மொழி கற்பித்தல் முறைகள் எத்தனை?
    நான் சொன்னது “ கணக்கிலங்காதவை“ ( infinity )
    மதிப்பெண்கள் இவ்விடைக்குக் கிடைக்கவில்லையெனினும், அது சரிதான் என்று இன்றுவரை எண்ணுகிறேன்.
    உலகில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை கற்பிக்கும் முறை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை.
    என் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். பொடிடப்பா என்பது அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர்.
    பாடம் நடத்தும் போது, அவர் பொடி போட மாட்டாரா என்று நாங்கள் ஏங்குவோம்.
    பொடி போட்டராரென்றால், ஆவேசம் கிளம்பிவிடும் அவருக்கு.
    சிலப்பதிகாரம் என்றால், பாண்டியனாய், கோவலனாய், கண்ணகியாய், வாயிற் சேவகனாய்,
    கம்பராமாயணம் என்றால், இராமனாய் வாலியாய்,
    திருக்குறள் என்றால் பல்வேறு நீதி இலக்கியங்களில் இருந்து மடையுடைத்து வரும் செய்யுள் வெள்ளப் பெருக்காய், மாறிப்போவார்.
    இலக்கணப்பாடம் என்றால், பவணந்தியும், காப்பியனும் எல்லாம் அவர் முன் மண்டியிட்டிருப்பர்.
    அவரது கற்பித்தல் முறை இவர்கள் புத்தகத்தில் காட்டியிருக்கும் எம்முறைகளுக்குள்ளும் அடங்காது.
    பின் இக்கற்பித்தல் முறை வேலிகளுக்கு இடையில் நாம் மாணவர்களை மேய்க்க வேண்டும் என்பதும் அபத்தமே.........!

    தொடர்கிறது....................

    ReplyDelete
    Replies
    1. ஓஒ..............உங்களின் பதிவின் பின்னூட்டத்திற்கான எல்லையிலிருந்து நழுவிப்போகிறேன்.

      மீண்டும் நான் தமிழாசிரியர் இல்லாவிடினும், மத்திமப் பருவத்தினருக்கு இன்னொரு மொழியைக் கற்பிப்போன் என்கிற முறையில் பரிசோதனையாகச் சில விடயங்களைச் சொல்ல முடியும்.
      மொழிகற்பித்தலின் ஆரம்ப நிலைக்கு அத்தியாவசியமானதாக நான் கருதுவது,
      பாட்டும் கதையும்
      உண்மையில் குழந்தைகள் மிக விரும்பி இரசித்தலின் ஊடாகவே நாம் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
      பாட்டு கதை என்னும் இவ்விரண்டுமே மாணவர்களின் தரத்திற்கேற்றார் போல, மாணவர்களின், மனவயதிற்கேற்றார்போல நாம் அமைத்துக் கொள்ள முடியும்.
      என் ஊரில் அருமையான கதைசொல்லியை நான் அறிவேன்.
      ஒரு நிமிடத்தில் மாணவர்களை கொல் எனச் சிரிக்கவும், கண்ணீர் வைத்து அழவும், சிலிர்க்வும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய ஆளுமை அவர்.
      அவரைப் பார்த்த பொழுது என் மனதில் தோன்றியது இதுதான்,
      எதைக் கற்கிறோம் என்று தெரியாமலேயே இவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
      மாணவர்களும் தாங்கள் மாணவர்கள் என்று அறியாமல் அக்கதை சொல்லியின் கூடுகளினுள் இரைகொண்டுவரும் தாய்ப்பறவைமுன் நெடுநேரம் பசியுடன் காத்திருக்கும் குஞ்சுகள் அலகுயர்த்துவதைப் போல் தங்கள் அலகுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.
      ஆசானே........உண்மையைச் சொல்வதானால் அது போன்ற ஒரு வகுப்பறையை, கற்பித்தலை, கல்வியை நான் கண்டதில்லை
      அவர் பெயர் ஜெயராமன்.
      அறியப்படாத வலைப்பூ ஒன்றை நடத்தி வருகிறார்.
      நான் தான் அவருக்கு அதைத் தொடங்கிக் கொடுத்தேன்.
      நான் சொல்ல வருவது, கதைகள், எத்துணை முக்கியமானது என்பதையும் வாசிப்பின் ருசியை அதன் மூலம் அறிந்து கொள்ளும் ஒரு குழந்தையை மொழி எப்படிச் சிக்கெனப் பிடித்துக் என்பதைத்தான்.
      அடுத்து பாடல்களும் அதைப் போலத்தான்,
      இசைப்படுத்தி ஒரு மொழியைக் கற்பிப்பது என்பது பாலொடு தேன் கலந்தாற் போல!
      கசப்பெனக் கருதுவோர்க்கு, இனிப்பு மேற்பூச்சுடன் கூடிய மருந்து அது.
      லயங்களில் தன்னை மறக்கும் குழந்தை பின் பொருளின் பெரும்பரப்பில் கால்வைக்கத் தன்னை உள்ளிழுக்கும் அனுபவத்தைப் பெறும்.

      இப்படிகளில் கால் வைக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் வாசிப்பு, அதற்கான சிறு சிறு நூல்கள் (ஆரம்ப நிலையில் நிச்சயம் அவை திருக்குறளாகவோ, நீதிநூற் களஞ்சியமாகவோ, கடினநடைக் காப்பியங்களாகவோ இருத்தல் கூடாது)
      குழந்தைக்கு, மாணவர்க்கு பரிச்சயமான மொழியில் ஒரு புத்தகம் குழந்தையை வாரிச் சேர்த்தணைக்க வேண்டும்.
      தன்னை அணைப்பதன் இதயத் துடிப்பை அது செவிமடுக்கக் கற்க வேண்டும்.
      இதன் மூலம் நிகழும் மடைமாற்றம், தானே கற்றலின் முதல் படி.
      குறித்த இடை வெளிகளில் அதைப் பகிர்தல்.
      அது பற்றிச் சிந்தித்தல்.
      கதையின் முடிவு இப்படி இருக்காமல் இப்படி இருந்தல் என்னாகும் என்று விவாதித்தல்
      போன்றவை குழந்தையின் மொழியாளுமையை வளர்க்கும்.
      சிறு சிறு சூழல்களை உருவாக்கி ( அச்சூழல்கள் குழந்தையின் மாணவரின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.) அவைபற்றி கருத்தை எழுதி வரல். ஒரு பொருள் குறித்த வேறு கோணப் பார்வைகளை உருவாக்குதல் ( உ தா. நிலாவைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது? உத்தேச பதில் - தோசை ) அதை எழுதிவருமாறு செய்தல் போன்றவற்றை கற்பித்தல் அடைவுகளைத்தீர்மானித்து கற்பிக்கும் நாம் வகுத்துக் கொள்வதும், அவ்விலக்கு குறிப்பிட்ட மாணவர் அடைய முடியாமல் போனால் , உத்திகளை மாற்றி மீண்டும் முயல்வதும், நல்ல மொழிக்கல்விக்கு வழி வகுக்கும்.
      கேட்டல் - பேசல் - படித்தல் - எழுதுதல்.
      என்னும் மொழிகற்றல் படிநிலைகளுக்கும் பொருந்தி வரும்.
      ஆரம்ப நிலையில் இது போன்ற செயல்பாடுகள், மாணவரின் ஆர்வத்தைப் பெருக்குவதாக அமைத்துவிட்டோமானால் பின் நாம் நினைத்தாலும் அவர்கள் நம்மைச் சும்மா இருக்க விடமாட்டார்கள்.
      இவ்விடயத்தில் இராமருக்கு அணில் செய்த உதவி போலத்தான் என்றாலும் என்னாலான உதவிகளை அங்குத் தமிழ்க் கல்வி பயில்வோர் செம்மையுறச் செய்யக் காத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால்.
      தங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
      உங்கள் பதிவுகளில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன்
      நன்றி

      Delete
  20. அட! இனி தமிழ் மெல்ல வளர்ந்துடும்ன்னு நம்பிக்கை துளிர்க்குது சகோ.

    ReplyDelete
  21. மாநாட்டை முடித்து விட்டு வாருங்கள் நண்பரே........

    ReplyDelete
  22. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகை தாருங்கள்.
    நன்றி.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html

    ReplyDelete
  23. என்னவாயிற்று நண்பரே..... பதிவைக்காணோம்......

    ReplyDelete
  24. என்ன நண்பரே ஆளையே காணோம்?!!! வேலைப் பளுவா...சுகம் தானே! எல்லோரும்....??

    நேரம் கிடைத்தால் கோவை ஆவியின் குறும்படம் "காதல் போயின் காதல்" பாருங்கள்...யூட்யூபில் உள்ளது...

    ReplyDelete
  25. அய்யா,
    நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?
    அடுத்தடுத்த பதிவுகளைப் பார்ப்பதெப்போ..?

    ReplyDelete
  26. நீங்களும் அங்கனைவரும் நலம்தானே?ஆளையே காணோம்? என்னவாயிற்று? வருகை தாருங்கள்.

    ReplyDelete