Friday, September 5, 2014

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்னி சைவ மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை
அடியேன் முதன் முதலாக ஒரு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு இறைவனுடைய அனுக்கிரகத்தால் ஒரு கட்டுரையை சமர்பிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையானது விழா மலரிலும் வெளி வந்திருக்கிறது. இப்படி ஒரு ஆன்மிக மாநாட்டை இங்கு நடத்தப்போகிறார்கள் என்று ஆரம்பத்தில் தெரிந்தபொழுது, நம்முடைய சைவ சமயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதே, அதனால், நம்மால் கட்டுரை எல்லாம் எழுத முடியாது என்று தான் எண்ணியிருந்தேன். ஈசனின் கருணையால், சமயக்கல்வி பற்றிய கட்டுரைகளும் எழுதலாம் என்று தெரிய வந்த போது,நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதலாம் என்று முடிவெடுத்தேன். என்ன தான், நான் கணிணித்துறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த காலத்து தொழில் நுட்பங்களான ஜாவா (java...) போன்றவைகளில் எனக்கு பரிச்சயம் கிடையாது (நான் ஆதி காலத்து தொழில்நுட்பமான cobol தொழில் நுட்பத்தில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்). அதனால் சமயக்கல்விக்கு இணையத்தளத்தை உருவாக்குவதை பற்றி கூறவில்லை. ஆனால் வருங்காலத்தில், அவ்வாறான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு இக்கட்டுரை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இக்கட்டுரையை படைத்தேன். 
அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்
                            சிட்னி சொக்கன்
முன்னுரை

     “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
     யாண்டும் இடும்பை இல.”

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திடுவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவர்க்கு உலகத்தில் துன்பம் ஒரு போதும் இல்லை என்று திருக்கறளில் சொல்லியிருப்பது போல், துன்பக்கடலானது நம்மை சூழாமல் இருப்பதற்கு இறைவனை நினைக்க வேண்டும் என்று அடுத்த தலை முறையினருக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தாயகத்திலும் சரி, புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் சரி, சமயப் பள்ளிகள் மூலம் சமயக்கல்வியை நாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகில், சமயத்தை சொல்லிக்கொடுப்பதற்கு சமயப்பள்ளிகள் மட்டும் போதுமா என்று பார்த்தால், கண்டிப்பாகப் போதாது . தொழில் நுட்பத்தையும்  பயன்படுத்தி சமயக் கல்வியை சொல்லிக்கொடுத்தால் தான், ஓரளவிற்கு நாம் வெற்றி பெற முடியும். இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியால், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு இணையம். சமயக்கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் இணையம் எவ்வாறு பயன்படுகிறது என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இணையம் வழி கற்றுக்கொள்ளுதல்
     சமயம் சார்ந்த தகவல்களை இன்று ஏராளமான இணையத் தளங்களில் (website) காணமுடிகிறது. அவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, “சமய இணைய நூலகம்” என்று ஒன்றை சமய அமைப்புகள் நிர்வாகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியேனின் கருத்தாகும். இதனால் எதிர்காலத்தில் சமயம் சார்ந்த அனைத்து இணையத்தளங்களும் ஒரே இடத்தில் காணப்படும். இனி, சமயத் தகவல்களை அளித்து, சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளகளைப் பார்ப்போம்.

இறை வழிப்பாட்டைப் பற்றி இத்தளத்தில் காணமுடிகிறது. அதாவது, இறைவனை தொழும் முறை, திருநீற்றை பயன்படுத்தும் முறை, உருத்திராக்கம், சிவலிங்கங்கள், சரியை, கிரியை, யோகம் ஞானம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, வழிபாடு, சிவ ஆகமகுறிப்புகள், ஆன்மீக வகுப்பறை போன்றவற்றை இத்தளத்தில் காணலாம்.

இத்தளத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் புராணம் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் காண முடிகிறது.

பன்னிரு திருமுறைகளையும் படிக்கவும், கேட்கவும் இத்தளம் உதவுகிறது.

ஒளி, ஒலி வடிவத்தில் நாயன்மார்களின் கதைகளை இத்தளத்தில் காணலாம். குழந்தைகளுக்கு நாயன்மார்களின் கதையை, இத்தளத்தைக் கொண்டு காண்பித்தால், அவர்கள் எளிதில் நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.  

ஒலி வடிவில் தேவாரத்திருமுறைகளை பதிவிறக்கம் செய்வதற்கு இத்தளம் உதவுகிறது.

தேவாரப்பாடல் பாடப்பெற்ற 276 திருத்தலங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் காண முடிகிறது. மேலும் அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்கள், முகவரி போன்றவைகள் இதில் இருக்கிறது. இந்த இணையத்தளத்தைக் கொண்டு, அத்திருத்தலங்களுக்கு எல்லாம் எளிதாக சென்று இறைவனை தரிசிக்க முடியும்.

முருகக் கடவுளுக்கான ஒரு இணையத்தளமாக இந்த இணையத்தளம் காணப்படுகிறது.

சமயம் சம்பந்தமான புராண கதைகளை இத்தளத்தில் காண முடிகிறது.
இத்தளங்களின் மூலம் வீட்டிலிருந்தபடியே சமயம் சார்ந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள இணையம் வழி வகுக்கிறது. இது போல் இன்னும் பல தளங்கள், சமயம் சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது.

இணையம் வழி கற்பித்தல்
      மேற்சொன்ன அனைத்து இணையத்தளங்களும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கிறது. அவர்கள் அவற்றைப் படித்து, தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். சமயப்பாடசாலைக்கும் குழந்தைகளை அனுப்பலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் அவ்வாறு படிப்பதைக் காட்டிலும் கணினி வழியாக தாங்களே படிப்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிக்கூடங்களிலும் அதனைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். மேலும் எல்லா நாடுகளிலும் சமயப்பாடசாலை இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் சமயத்தை கற்பிப்பதற்கு, இணையத்தின் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. தமிழையும், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கும் இணையத்தளங்களைப் போல், சமயக்கல்விக்கு அம்மாதிரியான இணையத்தளங்களை உருவாக்கி கற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். மொழிகளை கற்றுக்கொடுக்கும் சில இணையத்தளங்களை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் “bug club” என்கிற இணையத்தளம் பிரபலமாக இருக்கிறது. அந்த இணையத்தளத்தில் பெரிய புத்தகம்(big book) வடிவிலான புத்தகங்களை வாசித்து அல்லது கேட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இதனுடைய பயன்பாடு பெரும்பாலும் சிறிய குழந்தைகளுக்குத்தான்.இம்மாதிரியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கி, அதில் இறைவனை வழிபடும் முறை, கடவுளின் படங்கள் போன்றவைகளையெல்லாம் ஏற்றி அதற்கேற்ப கேள்வி பதில்களை தயாரிக்கலாம். இதன்மூலம் சிறிய குழந்தைகள் சமயக்கல்வியை படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த தளம், சிறு குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் எல்லாம் பயிற்சியுடன் அமைக்கப்பெற்றிருக்கிறது. இம்மாதிரி ஒரு தளத்தை வடிவமைத்து, நாயன்மார்களின் கதைகள், திருவிழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதில் ஏற்றி, அதற்கேற்ப பயிற்சிகளை உருவாக்கலாம்.
சமயக்கல்வியை நடத்தும் பாடசாலைகள் அங்கு நடத்தப்படும் பாடங்களை இணையத்தளத்திலோ அல்லது குறைந்தபட்சம் வலைப்பூவிலோ பதிவேற்றம் செய்தால், உலகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். உதாரணமாக http://www.southasia.sas.upenn.edu/tamil/les.html இந்தத்தளத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தை எல்லோராலும் படிக்க முடியும்.

http://anbujaya.com/index.php/2013-06-07-10-15-17/2013-06-07-10-17-17 இந்தத்தளத்திலும் தமிழ் கற்றுக்கொடுப்பதற்கான உத்திகள் கையாளப்பட்டிருக்கிறது. இந்த தளங்களை மாதிரி சமயக்கல்வியை சொல்லிக்கொடுப்பதற்கான பாடத்திட்டங்களை இணையத்தளத்தில் ஏற்றினால் எல்லோராலும், எங்கிருந்தும் சமயக்கல்வியை இணையத்தின் மூலம் கற்க முடியும்.

முடிவுரை
     இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தின் மூலம் தமிழ் மொழி அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அதுபோல் சமயக்கல்வியும் அடுத்தக்கட்டத்தை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் இக்கட்டுரை உதவியாக  விளங்கும் என்று நம்புகிறேன்.  

16 comments:

 1. நண்பரே தங்களின் செயல் போற்றதலுக்குறிய மிகப்பெரிய தொண்டு இதனைக் குறித்து தங்களைப் பாராட்டுவதற்க்கு எமக்கெல்லாம் தகுதியுண்டோ ? என ஆலோசிக்கிறேன் தங்களின் அனைத்து செயல்களுக்கும் இறைவன் துணை நிற்பானாக...
  வாழ்க வளர்க உமது தொண்டு.

  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  குறிப்பு - நண்பரே நிறைய வேலையை கொடுத்து விட்டீர்கள், எனது மூளைக்கு(ம்) கடைசி இணைப்பு திறக்க முடியவில்லை கவனிக்கவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே.

   "தகுதியுண்டோ" என்றெல்லாம் நண்பர்களிடத்தில் சொல்லக்கூடாது. அதேபோல், குறைகள் தென்பட்டாலும் சுட்டிக்காட்டுவது தான் நல்ல நண்பனுக்கு அழகு.

   தங்களின் வாக்குப்படியே அந்த இறைவன் எனக்கு மட்டும் இல்லை எல்லோருடைய செயல்களுக்கும் அந்த இறைவன் துணை நிற்பான் என்று நம்புகிறேன்.

   கடைசி இணைப்பு எனக்கு திறக்கிறது. திறக்க வில்லை என்றால் http://anbujaya.com/ என்று முயற்சி செய்யுங்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   Delete
 2. அய்யா,
  ஆன்மீகத்தைத் தேடுபவர்கள் அங்கிருந்தால் என்ன இங்கிருந்தால் என்ன
  எல்லார்க்குமான பதிவு,
  தங்களின் முயற்சியும் ஆர்வமும் நிச்சயம் வெல்லும்!!

  யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
  யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!"

  ஆம்! யாவர்க்கும் ஆகும்படி பிறருக்கு நீங்கள் தந்துள்ள இன்னுரை கூட திருமந்திரத் திருமூலன் சொன்னதுபோல் தெய்வ வழிபாடுதான்!
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.

   உண்மையில் இனிமேல் தான் நான் தேவாரத் திருமுறைகளையெல்லாம் படிக்க வேண்டும்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   Delete
 3. தங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். இணையத்தில் நமது ஆவணங்களைப் பதித்துவிட்டால் அழியாமல் நிற்கும். பழங்காலத்தில் கல்வெட்டுக்கள் மாதிரி, இக்காலத்திற்கு இணையம் இருப்பது நம் நல்வினைப்பயனே.-இராய செல்லப்பா, சென்னை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 4. தங்களின் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 5. சிறப்பான முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

   Delete
 6. சிட்னியில் சைவ மன்றம் நடத்திய ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு கட்டுரையை சமர்ப்பித்து அந்த கட்டுரையும் விழா மலரிலும் வெளி வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்! தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்.

  சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளங்களின் முகவரியை தந்தமைக்கு நன்றி! இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் தங்களின் கட்டுரை உதவியாக விளங்கும் என்பதை நாங்களும் நம்புகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 7. உண்மையில் எல்லோராலும் விரும்பத் தக்க மிகவும் பயனுள்ள பதிவு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் மேலும் தங்கள் சேவைகள் வளரவேண்டும் நற்புகழ் கிட்டவேண்டும். சகோ வாழ்த்துக்கள் ....!

  ஆமா போட்டிக்கு கவிதைகள் போட்டிருந்தேன் பார்க்கலையா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   தாமதமாகத்தான் அந்த கவிதைகளை சென்று பார்த்து கருத்திட்டிருக்கிறேன் சகோ.

   Delete
 8. மிக மிக அருமையான ஒரு முயற்சி சொக்கன் சார்! நல்ல பதிவு! தங்களது சேவை மிக மிகப் போற்றற்குரியது! தாங்கள் கொடுத்துள்ள தளங்கள் மிகச் சிறந்த தளங்கள். தங்களின் முயற்சி நிச்சயமாக நிறைவேற ஈசன் அருள் புரிவார்! சமயக் கல்வி அவசியம் வேண்டும் ! பதியுங்கள் நண்பரே! நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.
   தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது, நம்முடைய சமயத்துக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

   Delete