Sunday, March 11, 2012

மழையும் சிட்டி ரயிலும்

இது 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு வாரமா சிட்னில சரியான மழை. சிட்னிக்கு வெளியே நிறைய இடத்துல வெள்ள அபாயம்னு வேற அறிவிச்சிருந்தாங்க. அன்னைக்கு சிட்னில மழை பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு. எப்பவும் நான் காலை 7.00 மணிக்கு எழுந்து, அரக்க பறக்க கிளம்பி 7.45 மணி trainயை பிடிக்கிறது வழக்கம். அன்னைக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு . அதனால 8 மணி வண்டியை பிடிச்சேன். ஒரு 40 நிமிஷம் போனதுக்கு அப்புறம், வண்டி  2 ஸ்டேஷனுக்கு நடுவுல (நட்ட நடுக் காட்டுல) நின்னுச்சு. சரி ரெண்டு. மூணு நிமிஷத்துல கிளம்பிடும்னு நினைச்சா, வண்டி கிளம்பாம, பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் அங்கேயே நின்னுக்கிட்டு இருந்துச்சு. இந்த மாதிரி வண்டி நிக்கும் போதெல்லாம், நடத்துனர் காரணத்தை அறிவிப்பாங்க. அதாவது, சிக்னல் கிளியர் ஆகலை, முன்னால போன வண்டி சண்டித்தனம் பண்ணிக்கிட்டு நிக்குதுன்னு, இப்படி ஒண்ணுக்கும் உதவாத காரணத்தை சொல்லுவாங்க. அன்னைக்கு என்னடான்னா, அவுங்க சொன்னது எதுவுமே புரியவே இல்லை. நமக்கு தான்  ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மியாச்சே, அதனால பக்கத்துல இருக்கவுங்களை கேக்கலாம்னு, அவுங்க கிட்ட, ஏங்க, இப்ப என்னங்க சொன்னாங்கன்னு கேட்டேன். அவரும் எனக்கும் ஒண்ணுமே புரியலைன்னாரு. அடப்பாவி மனுசா, என்னமோ அவுங்க சொல்றதை வார்த்தைக்கு வார்த்தை புரிஞ்சுக்கணும்னு, காதுல மாட்டிக்கிட்டிருந்த பாட்டு கேக்குற மெஷின் எல்லாம் கழட்டி, மேல இருந்த ஸ்பீக்கரையே வச்ச கண்ணு வாங்கமா பார்த்த, கடைசில உன் பருப்பு அவ்வளவுதானான்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். சரி அடுத்த அறிவிப்பு வரும்போது, நம்மோட காதை நல்லா தீட்டி, உன்னிப்பா கவனிக்கணும்னு இருந்தேன். மணியோ பத்தே கால் ஆயிடுச்சு. இன்னும் வண்டியை எடுக்கலை. அப்புறம் திருப்பியும் அறிவிப்பு செஞ்சாங்க. இந்த தடவை காதை நல்லா தீட்டி வச்சு, ஆடாம அசையாம ஒழுங்கா கேக்கணும்னு பார்த்தா, இந்த ஸ்கூல் போற பசங்கள்ள ஒருத்தன், அப்பத்தான் சாமி வந்து கத்துறவன் மாதிரி பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டான். சுத்தம், நமக்கு அமைதியான இடத்துலேயே, இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் ஒழுங்கா புரியாது, இதுல இவனுங்க இப்படி கத்துனா, ஒண்ணும் விளங்காதுன்னு இந்த அறிவிப்பு கேக்குறதை  விட்டுட்டேன். அந்த அறிவிப்பு முடிஞ்சவுடனே, வண்டி கொஞ்சம் நகர்ந்துச்சு. அப்பாடா, வண்டி போக ஆரம்பிச்சிடுச்சு, இனி ஆபீசுக்கு 11 மணிக்கெல்லாம் போயிடலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள வண்டி வேற ஒரு ஸ்டேஷன்ல நின்னுடுச்சு. சரி, ஆளுங்க எல்லாம் ஏறுவாங்கன்னு பார்த்தா, எல்லா ஆளுங்களும் இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. சரி நம்மளும் இறங்குவோம்னு, முன்னாடி நின்னுக்கிட்டிருந்த ஒரு தாய்குலத்துக் கிட்ட , ஏங்க எல்லாரும் இறங்குறாங்கன்னு? கேட்டேன். அந்த தாய்குலமோ, அலட்டிக்காம, எனக்கு தெரியலைங்க, எல்லோரும் இறங்குறாங்க, நூனும் இறங்குறேன்னு சொன்னாங்க. சரி தான், எல்லாரும் நம்மளை மாதிரி தான்னு நினைச்சுக்கிட்டு இறங்குனேன். அப்பத்தான் தெரிஞ்சுது, இந்த மழைல, சிக்னல் சிஸ்டம் வேலை செய்யலைன்னு. எப்படி வேலைக்கு போறதுன்னு கேட்டா, எதிர்ல நிக்கிற வண்டில வந்த வழியயே திரும்பி போயி glenfield ஸ்டேஷன்ல இறங்கி, வேற வழியா வேலைக்கு போங்கன்னு சொன்னாங்க. இதுல கொடுமை என்னன்னா, அந்த glenfield ஸ்டேஷன் வந்து, நாங்க இருக்கிற Ingleburn ஸ்டேஷனுக்கு 2 ஸ்டேஷன் முன்னாடி இருக்கு. அப்புறம் அந்த வண்டில ஏறி, என்னடா பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டே திரும்பி போனேன். இவுங்க சொல்றபடி ஆபீசுக்கு போனா, 1.30 மணிக்கு தான் போயி சேர முடியும். அப்புறம் நம்ம சீட்ல போயி உக்கார்ந்த உடனே, சாப்பாடு பொட்டலத்தை பிரிக்கனும். அவ்வளவுதான், ஆபீசுல இருக்கிறவன் எல்லாம், என்னடா, இவன் பாட்டுக்கு வரான், வந்த உடனே ஒரு வேலையும் செய்யாம சாப்பாட்டு மூட்டையை பிரிச்சுட்டானேன்னு கடுப்பாயிடுவானுங்க. சரி, என்ன பண்றதுன்னு ரொம்ப மண்டையை போட்டு குடைஞ்சு, கடைசில, என்னோட மேனேஜருக்கு போன் போட்டு, ஐயா, இப்படி, இப்படி ஆச்சு, திரும்பி ஆபீசுக்கு வந்தா பாதி நாள் வேஸ்ட் ஆயிடும்(பெருசா 8 மணி நேரமும் ஒழுங்கா வேலை பாக்குறதா மனசுல ஒரு நினைப்பு) அதனால, நான் வீட்டிலிருந்து வேலை பார்க்குறேன்னு ஒரு பிட்டைப் போட்டு, கடைசில அன்னைக்கு வேலைக்கே போகாம, கிட்டதட்ட மூன்றரை மணி நேராம trainலேயே சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன். என்னடா, இந்த நாள் இப்படி ஆயிடுச்சு, நாம யார் மூஞ்சில முழிச்சோம்னு யோசிச்சுப் பார்த்தேன். எப்பவுமே படுக்கைக்கு பக்கத்து டேபிள்ல இருக்கிற ஒரு குட்டி பிள்ளையாரை தான் முழிச்சவுடனே பார்ப்பேன். ஆனா அன்னைக்கு லேட்டா எந்திரிச்சதுனால, பிள்ளையாரை பார்க்காம நேரா பாத்ரூம்குள்ள போயி அங்க இருக்கிற கண்ணாடிய பார்த்தேன்னு நியாபகத்துக்கு வந்துச்சு. ஆனா பாருங்க, இந்த பிள்ளையாருக்கு தான்  எவ்வளவு கோபம் எம் மேல, எந்திரிச்சவுடனே அவரை பார்க்கலைகிறதுக்காக, என்னைய எப்படி அலைய விட்டிருக்காரு.  

1 comment:

  1. ஐயா, பிள்ளையாரை மதிக்காத்து இல்லை காரணம். பாத்ரூம்ளே உங்கள் முகத்தை பார்த்த்துதான் உங்கள் சிரமத்திற்கெல்லாம் காரணம்!!!!!!!
    அன்பு

    ReplyDelete