Friday, March 2, 2012

நான் லைசென்ஸ் எடுத்த கதை

சிட்னி வந்து தான் நான் கார் ஓட்டவே கத்துக்கிட்டேன். 13 வருஷத்திற்கு முன்னாடி மஸ்கட்ல இருக்கும் போது, கார் ஒட்டக் கத்துக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைச்சுது. நான் அங்க வேலை பார்த்த எடத்துல, எல்லோருக்கும் கார் ஒட்டக் கத்துக்க 15 வகுப்புகளுக்கு கம்பெனியே பணம் கொடுத்துடும். அப்புறம் லைசென்ஸ் எடுக்குற டெஸ்டுக்கு அதிகப் பட்சமாக 3 டெஸ்ட் வரைக்கும் டெஸ்ட் பீஸும்   கொடுத்துடுவாங்க. இதனால நிறைய பேர் அவுங்க பாக்கெட்லேருந்து செலவு செய்யாமல் லைசென்ஸ் எடுத்தாங்க. ஆனா எனக்கு தான் இந்த டெஸ்ட்ன்னு சொன்னாலே அலெர்ஜி ஆச்சே, அதனால எப்படியோ லைசென்ஸ் எடுக்காம, வண்டியும் ஓட்டக் கத்துக்காம ஒப்பேத்துனேன். அதுக்கப்புறம் ஜப்பான்ல இருந்த 5 வருஷமும் கார் ஓட்டுறதுக்கு வேலையே இல்லாம போச்சு. அங்க எங்க வேனாலும் போறதுக்கு train வசதி ரொம்ப நல்லா இருக்கும் (நான் பார்த்த 6 / 7 நாடுகளில், இந்த அளவுக்கு train வசதி வேறு எங்கேயும் இல்லை). அப்படியும் நண்பர்களோட சுற்றுலா இடங்களுக்கு போகும்போது அவுங்களோட கார்லேயே போய்விடுவோம். அதனால அங்கேயும் கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்கலை. 5 வருடங்களுக்கு முன்னாடி சிட்னி வந்தபோது, சரி இங்கேயும் கார் இல்லாம ஒப்பேத்திடலாம்னு நினைச்சேன். ஆனா நண்பர்கள் வீட்டுக்கு போறதுக்கு கார் இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பவெல்லாம் நண்பர்கள் அவுங்க கார்ல எங்களை கூட்டிக்கிட்டு போனாங்க. இது சரி வராது, நாம லைசென்ஸ் எடுத்தே ஆகனும்னு முடிவு பண்னினேன். சிட்னில முதல்ல கார் “ஒட்டக் கத்துக்குற” லைசென்ஸ்(Learner’s license) எடுக்கனும். அத எடுக்கிறதுக்கு, கம்ப்யூட்டர் முன்னாடி ஒரு டெஸ்ட்(Driver Knowledge Test) எழுதனும். அது ஒரு multiple choice test. 600 கேள்விகள்ள இருந்து அந்த பாழாப் போன கம்ப்யூட்டர் 45 கேள்விகளை கேக்கும். 4 பதிலுக்கு மேல தப்பா சொன்னா நாம அந்த டெஸ்ட்ல ஃபெயில். திருப்பியும் பணம் கட்டி அந்த டெஸ்ட் எழுதனும். அதனால முத தடவையே பாஸ் பண்ணணும்னு முடிவு பண்னி, அந்த டெஸ்ட் எழுதுற அன்னைக்கு சாமிய நல்லா கும்பிட்டு போயி டெஸ்ட் எழுதி எப்படியோ  பாஸ் பண்ணி, learner license வாங்கிட்டேன். அதுக்கப்புறம் தான் பிரச்சனையே, 50 மணி நேரம் நாம கார் ஓட்ட கத்துக்கிட்டு இருந்தா தான் ரோட்ல ஓட்டிக் காமிச்சு, டிரைவிங் லைசென்ஸ்  வாங்க முடியும் (நான் லைசென்ஸ் எடுத்த கொஞ்ச நாள்ளயே 50 மணி நேரத்தை 120 மணி நேராம மாத்திட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, என்னைய மாதிரி நிறைய அறிவு ஜீவிங்க 50 மணி நேரம் ஓட்டிக் கத்துக்கிட்டு லைசென்ஸ் எடுத்ததுனால தான் 120 மணி நேராம மாத்திட்டாங்கன்னு!!) கார் ஓட்டக் கத்துக்கிறதுக்கு,ஒரு மணி நேரத்துக்கு $40, அப்படின்னா 50 மணி நேரத்துக்கு $2000. அதுக்கப்புறம் டெஸ்ட்க்கு பணம், அப்படி இப்படின்னு ஒரு $2500 வந்துடும் போல இருக்கேன்னு நினைச்சேன். உடனேயே, எனக்கு தலையை சுத்திடிச்சு. அடியாத்தி, கார் ஓட்டக்கத்துக்க இவ்வளவு பணம் செலவாகுமான்னு ரொம்பவே பயந்துட்டேன். சரி, என்ன பண்றது, நாய்க்கு வாழ்க்கைப்பட்டா , குரைச்சு தானே ஆகனும், கார் ஓட்டக் கத்துக்க முடிவு பண்ணியாச்சு, செலவுக்கு பார்த்தா என்ன பண்றதுன்னு மனசை தேத்திக்கிட்டு, கார் ஓட்டக் கத்துக்க ஆரம்பிச்சேன். விடியற்காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை கார் ஓட்டக் கத்துக்குற நேரமா அமைஞ்சுது. இதுல என்ன கூத்துன்னா, 8 மணிக்கு ஆபீசுக்கு கிளம்புறதுக்கு, 7.30 மணிக்கு எந்திரிச்சு, அடிச்சுப் புடிச்சு வேகவேகமா கிளம்புவேன். இதுல 6 மணிக்கு டிரைவிங் கிளாஸ், என்ன பண்றது. அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 5.50க்கு எந்திரிச்சு,வெறும் பல்லை மட்டும் விளக்கிட்டு டிரைவிங் கத்துக்க போவேன். கடைசில எப்படியோ டிரைவிங் டெஸ்ட் போற நாளும் வந்துச்சு. இந்த ஊர்ல தான் யாரும் லஞ்சம் வாங்க மாட்டாங்கன்னு, சாமிக்கு லஞ்சம் கொடுத்துட்டு, டெஸ்டுக்கு போனேன். எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்தவரோ, நல்லா பண்ணுங்க, முத தடவையே லைசென்ஸ் வாங்கிடணும்னு ஒரு பிட்டப் போட்டாரு. நானும் நம்பிக்கையா இருந்தேன். எனக்கு வந்த கண்காணிப்பாளரை பார்க்க சாதுவா இருந்தாரு. சரி, நம்ம காட்டுல இன்னைக்கு மழைதான்னு நினைச்சுக்கிட்டு அவர் சொல்ற எடத்துக்கு எல்லாம் ஒழுங்கா போனேன். “reverse parking”, “angle parking” எல்லாம் சரியா பண்ணுனேன். ஆனா பாருங்க கஷ்டமான parking எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டு, ரொம்ப ஈசியான பார்கிங்கான “kerbside parking” தான் கொஞ்சம் சொதப்புனேன். அதாவது கண்காணிப்பாளர்,  மின் கம்பத்துக்கு கிட்ட வண்டிய ஓரங்கட்ட சொன்னாரு. நான் சரியா மின் கம்பத்துக்கிட்ட தான் ஓரம் கட்டனும்னு, ரிவர்ஸ் கியர போட்டு போட்டு எப்படியோ ஓரங்கட்டிட்டேன். கடைசில, எனக்கு சொல்லிக் கொடுக்கிறவரை கூப்பிட்ட அந்த கண்காணிப்பாளர், என்னோட சர்விஸ்லேயே, வண்டிய ஓரம் கட்டுறதுக்கு ரிவர்ஸ் கியர போட்ட முத ஆள இப்பத்தான் பார்க்கிறேன். அதுவும் 6 தடவை ரிவர்ஸ் கியர போட்டு போட்டு, வண்டிய ஓரம் கட்டுனாருன்னு சொல்லி எனக்கு லைசென்ஸ் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. அப்புறம் திருப்பியும் கொஞ்ச நாள் போயி, 2வது தடவையா டெஸ்டுக்கு போனேன். இந்த தடவை சாமியையே கும்பிடலை (போன தடவை சாமி லஞ்சம் வாங்கிட்டு ஏமாத்திட்டாருன்னு கோபம்). இந்த தடவை என்னாச்சுன்னா, ஒரு அம்மா கண்காணிப்பாளரா வந்தாங்க. ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருந்த எனக்கு, இந்த அம்மா கொஞ்சம் கூட சிரிக்காம, மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு(காலைல வீட்டுல புருஷன் கூட சண்டை போல) வந்தாங்களா, நான் ஏகப்பட்ட தப்பு பண்ணி, அந்த அம்மா, ஒரு எடத்துல,ஆவுங்க சைட்ல இருக்கிற பிரேக்ல காலை வச்சு வண்டிய நிறுத்தி, போதாக்குறைக்கு இன்னொரு எடத்துல, ஸ்டீயரிங்ல புடிச்சு வண்டிய திருப்பி, கடைசில அவுங்க என்னைய விட டென்ஷன் ஆயிட்டாங்க. அதனால அப்பவும் எனக்கு லைசென்ஸ் கிடைக்கலை. எனக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறவருக்கு எம் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு. சரி இவன் கஜினி முஹம்மது பரம்பரைல வந்தவன் போலன்னு முடிவு பண்ணிட்டாரு. அப்புறம் திருப்பியும் கொஞ்ச நாள் கழிச்சு, டெஸ்டுக்கு போனேன். இந்த தடவை மறுபடியும் சாமிக்கு லஞ்சம் கொடுத்து, இந்தியாவுக்கு போனவுடனே ஒரு கோவிலுக்கு போயி தேங்காய உடைக்கிறேன்னு வேண்டிக்கிட்டு போனேன். இந்த தடவை கண்காணிப்பாளரா வந்தவரு, நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு வந்தாரு. அவர் சொன்னதை எல்லாம் ஒழுங்கா செஞ்சுட்டு, திரும்பி RTA ஆபிசுக்கு போகும்போது, ஒரு roundaboutல வந்து மாட்டினேன். இந்த ஊர் roundabout, நமக்கு வலது பக்கத்துல வர்ற வண்டிக்கும்,எதிர்ல வர்ற வண்டிக்கும் வழிவிட்டுட்டு தான் நாம போகணும். அன்னைக்குன்னு பார்த்து, என்னோட 3 சைடுலேயும் வண்டி வந்து நின்னுச்சு. வலதுப் பக்கத்துல இருக்கவனும் வண்டியை எடுக்கலை, எதிர்ல இருக்கவனும் வண்டிய எடுக்கலை. கிரகம் புடிச்சவனுங்க, என்னமோ சிக்னல்ல நிக்கிற மாதிரி நின்னுட்டானுங்க. எனக்கோ, என்ன பண்றதுன்னு தெரியலை. சரி, துனிஞ்சு வண்டியை எடுப்போம்னு நான் பிரேக்லேருந்து கால எடுத்தேன், வண்டி ஒரு இன்ச் முன்னாடி நகர்ந்துச்சு. அவ்வளவுதான், உடனே திருடன புடிக்கப் போற மாதிரி வேகமா எனக்கு வலது பக்கத்துல இருக்கிறவன் வண்டிய எடுக்க ஆரம்பிச்சுட்டான். எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, உடனே சடால்னு பிரேக்ல காலை வச்சு ஒரே அமுக்கு, வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. எனக்கு பக்கத்துல இருந்த கண்காணிப்பாளரோ, தம்பி, நீ இன்னும் இந்த ஆட்டத்துல இருக்கன்னு சொன்னவுடன் தான் எனக்கு மூச்சே வந்துச்சு. கடைசில அந்த மகராசன் தன்னோட பொன்னான கைகளால எனக்கு லைசென்சை கொடுதாரு. அண்ணே!, நீங்க மகராசனா ரொம்ப நாள் வாழனும் (அப்பத்தானே என்னை மாதிரி ஆளுங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கலாம்), இந்தியாவா இருந்தா உங்களுக்கு கோவில் கட்டி, “லைசென்ஸ் கொடுத்த தானைத் தலைவர்னு” ஒரு பட்டத்தையும் கொடுத்திருப்பேனேன்னு மனசுல நினைச்சுக்கிட்டு(அவருக்கு கொடுப்பினை அவ்வளவுத்தான்), ரொம்ப நன்றின்னு ஒரு ரெண்டு, மூணு தடவை அவருக்கு சொல்லிட்டு லைசென்ஸோடு வீடு வந்து சேர்ந்தேன்.

2 comments:

  1. இனிமேல் உங்கள் வண்டியில் ஏறமாட்டேன் சாமி - அன்பு

    ReplyDelete
  2. என்ன அன்பு சார், ஒரேடியா பயந்துட்டீங்க போல. உங்கள மாதிரி தான் எங்க வீட்டு அம்மணியும் சொல்வாங்க, ஆனா அவுங்களுக்கு வேற வழி இல்ல. என் வண்டில ஏற கொடுத்து வச்சிருக்கனும். என்ன! நீங்களே அந்த கொடுப்பினையை கெடுத்துக்கிறீங்க - சொக்கன்

    ReplyDelete