Wednesday, September 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 6

பகுதி-5

நான் பயந்த மாதிரியே, அங்க மாநாட்டுக்கு வந்தவுங்க எல்லோரும் போயிட்டாங்க. என்னைய மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மாநாடு நடத்துறவங்களுக்கும் தெரியும் போல, அதனால, ஊரை சுத்திட்டு லேட்டா வருகிறவர்களையும் கூப்பிட்டுகிட்டு போறதுக்காக இரண்டு பேர் காத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களும் என்னைய கருத்தருங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. அது ஒரு இந்திய உணவகம். அங்க போனவுடனே, நல்லா சூடா ஒரு காபியை குடிச்சேன். அப்புறம் முதல் நாள் நிகழ்ச்சியா, “வெளி நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள் இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பது” என்பதை பற்றியெல்லாம் பேசினோம். ஒரு அருமையான கலந்துரையாடலா அமைஞ்சது. செவிக்கு ஒரு நல்ல உணவாகவும் அது அமைஞ்சதுல எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. செவிக்கு நல்ல உணவு கிடைச்ச மாதிரி, வயிற்றுக்கும் நல்ல உணவு கிடக்குமான்னு ஒரு சந்தேகம். பொதுவா, வெளி நாடுகள்ள இருக்கிற பெரும்பாலான உணவகங்கள் வடக்கத்திய உணவகமா தான் இருக்கும். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் தென்னிந்திய உணவகங்கள் இருக்கும். இந்த வடக்குக்கு வேலையே, நம்ம தமிழை போட்டு அமுக்குறது தான். சாப்பாட்டுலேயும் சரி, சினிமாலேயும் சரி, வெளிநாடுகளில் வடக்கோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும். அதனால தான் எனக்கு அப்படி ஒரு சந்தேகம். சரி, இங்கேயும் இந்த “naanu”, லொட்டு லொசுக்குன்னு தான் இருக்கபோதுன்னு நினைச்சேன். ஆனா, அது ஒரு பக்கா தென்னிந்திய உணவகம். வாயிக்கு நல்லா ருசியா, நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கேருந்து கிளம்பி எங்க ஹோட்டலுக்கு வந்தோம். மறு நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் (பின்ன, முதல் முதலா ஒரு சர்வதேச கருத்தரங்கில் பேசுன நாளாச்சே!). அன்னைக்கு காலைல எந்திரிச்சு, மனசுக்குள்ளேயே சாமி எல்லாம் கும்பிட்டுக்கிட்டு, வீட்டு அம்மணி சொன்ன மாதிரியே அந்த புது சட்டையும் பேண்ட்டையும் போட்டுக்கிட்டு, எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வரோடு ஹோட்டலுக்கு வெளியே வந்தேன். முதல் நாளே அந்த மாநாடு நடக்கிற இடம் எங்கேன்னு போய்ப் பார்த்துட்டு வந்ததுனால, அந்த வழியாகவே போகலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்லேருந்து இரண்டு பேர் வேக வேகமா எங்களை தாண்டி போனாங்க. சரி, இவுங்க போற வேகத்தைப் பார்த்தா, ஏதோ குறுக்கு வழி இருக்கும் போலன்னு நினைச்சுக்கிட்டு நூல் பிடிச்ச மாதிரி, நாங்களும் அவுங்களை தொடர்ந்துக்கிட்டே போனோம். நாங்க தங்கி இருக்கிற ஹோட்டலை ஒட்டி சைடுல ,ஒரு ரோடு போகும் அந்த ரோட்டுலேயே ஒரு ஐந்து நிமிஷம் நடந்து எதிர் பக்கம் போனா அந்த மாநாடு நடக்கிற “convention centre” வரும். ஆனா எங்களுக்கு முன்னாடி நடந்தவுங்க, அந்த மாதிரி போகாம, பக்கத்துல இருக்கிற “hyatt” ஹோட்டலுக்கு பின் பக்கமா போயி, அதோட கார் பார்க்கிங்கை ஒரு சுத்து சுத்தி, அந்த பார்க்கிங்கோட படிக்கட்டெல்லாம் ஏறி இறங்கி (ஏழு கடல், ஏழு மலையை தாண்டி!!!) அந்த convention centreக்கு நேர் வழியா வராம எப்படியோ உள்ள போனாங்க. எங்களுக்கோ, இவுங்க பின்னாடி வராம ஒழுங்கா தெரிஞ்ச வழியில வந்திருந்தா கூட, இவ்வளவு சுத்து சுத்தியிருக்க வேண்டாமேன்னு தோனிச்சு (இதுக்குத்தான் சொந்த புத்தியை உபயோகப் படுத்தனுங்கிறது!!). சரி, இங்க பக்கத்துல எந்த கோவிலும் இல்லையா, அதனால அந்த “hyattயை சுத்துனதை, பிள்ளையாரப்பா, உன்னைய சுத்தினதா நினைச்சு, எங்க புண்ணியக் கணக்குல சேர்த்துக்கோன்னு வேண்டிக்க வேண்டியதாப்போச்சு. அங்க போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டு மணி நேரம், அங்க படிக்கிற குழந்தைங்க வித்தியாசமா சிந்திச்சு, ரொம்ப அருமையா கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணினாங்க. மதிய உணவுக்கு பிறகு எங்களோட ஆய்வரங்கம் இருந்துச்சு. நானும் உள்ளுக்குள்ள இருக்கிற பயத்தை எல்லாம் வெளியே காட்டாம, ஒரு வழியா என்னோட ஆய்வுக் கட்டுரையை படிச்சு முடிச்சேன்.

 மறு நாளும் எங்களுக்கு தேவைப்படுகிற ஆய்வரங்கத்துல எல்லாம் போயி உட்கார்ந்து, நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு வந்தோம். இரண்டு நாள் மாநாடும் முடிஞ்சது. அன்னைக்கு இரவு உணவுக்கு, நானும் சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரும்(எங்கள் தமிழ் பள்ளியின் முன்னாள் முதல்வர்),அவர் துணைவியாரும் ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டோம். அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                 பகுதி-7
 

No comments:

Post a Comment