முதல்ல,
அமெரிக்காவில் அடியேனின் கடைசி பாகத்தை தான் எழுதணும்னு உட்கார்ந்தேன். ஆனா பாருங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி
பார்த்த இந்த படம், விமர்சனத்தை எழுது,எழுதுன்னு
என்னைய ரொம்ப தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்துச்சு. அதனால முதல்ல விமர்சனம் அப்புறம்
அந்த அமெரிக்கவோட கடைசி பாகத்தை எழுதலாம்னு முடிவு பண்ணி, இதோ
உங்களுக்காக சுந்தர பாண்டியன் விமர்சனம்.
நட்பு, காதல், துரோகம் என்று ஒரு கலவை தான், இந்த சுந்தர பாண்டியன்.
ஒரு பெண்ணை இருவர் ஒரு தலையாக காதலிப்பதும், அந்த பெண்ணின் பெற்றோரோ, அவரை தங்கள் மூத்த மாப்பிள்ளையின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும், அந்த பெண்ணோ மற்றொருவரை காதலிப்பதும், இறுதியில் அவர்
யாரை கைப் பிடித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. அந்த பெண்ணுக்காக, அடிதடி, கொலைன்னு படம் பயணிக்குது. ஒரு பெண்ணுக்காக
கொலை வரைக்கும் போகணுமான்னு யோசிக்க தோணும். ஆனா, அந்த யோசைனையை
கூட , மிக அழகாக தன்னுடைய நடிப்பால் லக்ஷ்மி மேனன் மறக்க வைக்கிறார்.
வெட்கப்படும்போதும் சரி, கண்களை உருட்டி அதட்டும் போதும் சரி
மிக அழகாக நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அவருடைய கண்களும் நடித்திருக்கிறது.
தனக்கு நகைச்சுவையாகவும் நடிக்க தெரியும் என்று சசிகுமார் நிருபித்திருக்கிறார். தன்
அத்தைப் பெண்களை வம்புக்கு இழுப்பதும், அதுவும் திருமணமான அந்த
அத்தைப் பெண் ஜானகியை அடிக்கடி வம்புக்கிழுப்பதும், நண்பனின் காதலுக்கு உதவி புரிவதும்னு
ஒரு பக்கா வெட்டி ஆபிசராக வாழ்ந்திருக்கிறார். இடைவேளை வரை, அந்த
“தாமரை” பஸ்லேயே திரைக்கதை பயணம் செஞ்சாலும், நமக்கு அலுப்பே
வரலை. அதற்கு முக்கிய காரணம் அவருடைய நண்பனாக வரும் பரோட்டா சூரி தான். அவர் வாயைத்
திறந்தாலே போதும் சிரிப்பு மழை தான். பஸ்ஸில் வருகிற பெண்களை
கவருவதற்கு, இயக்குனர் PH.D. பட்டமே வாங்கியிருப்பாரு
போலயிருக்கு.
தன் நண்பனின்
காதலுக்கு சசிகுமார் உதவி பண்ணப்போய், தானே அவளுடைய காதலில் விழுந்து, இறுதியில் தன் நண்பர்களின்
துரோகத்தால் கொல்லப்பட்டாரா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லுகிறது. அந்த க்ளைமாக்ஸ்
சண்டை தான், சினிமாத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அப்பாவியாக
அறிமுகமாகி, பிறகு வில்லனாக அவதாரம் எடுக்கும் அப்புக்குட்டியின்
நடிப்பு மிக அருமை. இன்னொருவரையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும், அது லக்ஷ்மி மேனனின் நண்பியாக வரும் அந்த பெண். அவருடைய பேர் தெரியல. அவரும் அழகாக இருக்கிறார்,மிக அருமையாகவும் நடித்திருக்கிறார். அதுவும், பஸ்ஸில், சசிகுமாரின் நண்பன்,இனிகோ பிரபாகரன், லக்ஷ்மி மேனனிடம்
காதலை சொல்லுவதற்காக நின்றுக் கொண்டிருக்குக்கும்போது, எங்கே
தன்னிடம் மாற்றி காதலை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில், எண்ணையில்
போட்ட கடுகாட்டம் பொரி பொரின்னு அந்த இனிகோ பிரபாகரனை பொரித்து எடுப்பாரே அருமை. சசிகுமாரின்
அப்பாவாக வரும் நரேனும் சரி, லக்ஷ்மி மேனனின் அப்பாவாக வரும்
தென்னவனும் சரி, உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். “ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி தான்,
இந்த படத்துல வர ஒரு காட்சி. அது சசிகுமாரின் தந்தை நரேன், தனியாக
தன் மகனுக்கு பெண் கேட்கும் காட்சி. அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமே, அழகு தான். அந்த காட்சியில் பங்குப்பெற்றிருந்த நடிகர்களும் தங்கள் பங்கை
மிக நேர்த்தியாக செய்து அந்த காட்சியை தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.
படத்தில நச்சுன்னு சில வசனங்கள் வரும்.
"எதிரியை அழிக்க நினைக்கக்
கூடாது... ஜெயிக்க நினைக்கணும்!"
"எதிரியே
இல்லைன்னா, நாம வாழலாம். ஆனா,
வளர முடியாது",
"வீட்டுல இருந்து வெளியில
போறப்ப எல்லாம், 'பார்த்துப் பழகு... பார்த்துப் பழகு’னு சொல்லுவாங்க. பழகுன
நீங்களே இப்படிப் பண்ணினா யாரைடா நம்புறது?"
"குத்துனது நண்பனா இருந்தா
செத்தாக்கூட சொல்லக்கூடாது, அதாண்டா நட்பு" இப்படி ஆங்காங்கே வரும் வசனங்கள், நம்மை யோசிக்கச் செய்கின்றன.
இந்த படத்தை
பார்த்த பிறகு, ரொம்ப நாளைக்கு அப்புறம் கலகலப்பா ஒரு படத்தை பார்த்தோம்னு திருப்தி ஏற்படும்.
அது தான் இந்த படத்தோட வெற்றியே.
யார் குத்தினாலும் செத்த பிறகு சொல்ல முடியுமா சாமி???? உண்மையிலேயே அபத்தமான வசனங்கள் யோசிக்கத்தான் வைக்கின்றன!!!!! - அன்பு
ReplyDeleteஆஹா, தமிழ் ஆசிரியர் அப்படிங்கிறதை நிரூபிக்கிறீங்களே! ஐயா, எல்லாம் சரியா சொன்னா, தமிழ் சினிமா என்னாகுறது. அப்புறம் அதோட மதிப்பு கெட்டுப் போயிடுமே. அதனால ஒண்ணு ரெண்டு அப்படிதான் இருக்கும். அதெல்லாம் கண்டுக்க கூடாது - சொக்கன்
ReplyDelete