Friday, April 5, 2013

செல்போன் காதல் – சிறுகதை


இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

“ஹலோ, நான் குமார் பேசுறேன். மாலா இருக்காங்களா”?

“மாலான்னு யாரும் இல்லைங்களே, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்”?

“9444763801 தானே”?

“இல்லைங்க, ராங் நம்பருங்க” என்றபடியே செல்போனை கட் பண்ணினாள் கீர்த்தனா.

“யாருக்கிட்டேயிருந்து போன் என்று கேட்டபடியே அவளிடம் டிபன் பாக்ஸை கொடுத்தாள் மரகதம்.

“ஏதோ ராங் நம்பரும்மா” என்று சொல்லி கல்லூரிக்கு கிளம்பினாள் கீர்த்தனா.

கல்லூரிக்குள் சென்றவுடன் மீண்டும் அவள் செல்போன் அழைத்தது. திரையில் பார்த்தால், அதே ராங் நம்பர் தான். கட் பண்ணலாமா என்று ஒரு நொடி யோசித்தவள், கட் பண்ணாமல் ஆன் செய்தாள்.

மறுமுனையில், “மாலா இருக்காங்களா”?

“ராங் நம்பருங்க” என்றாள்.

“ஐயையோ, நீங்களா, ரொம்ப சாரிங்க. நான் 9444763801 தான் போட்டேன். ஆனா உங்களுக்கு போகுது. ரொம்ப சாரிங்க” என்றது மறுமுனை.

“ஆமாம், நான் தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க”? என்று ஆர்வமாக கேட்டாள் கீர்த்தனா.

“உங்க குரலை எப்படிங்க மறக்க முடியும். உங்க குரல் மாதிரி ஒரு இனிமையான குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. அதான், நீங்க பேச ஆரம்பிச்சவுடனே கண்டுபிடிச்சுட்டேன்” என்று வழிந்தது மறுமுனை.

“என்னைய ரொம்பவும் புகழாதீங்க” என்று கூச்சப்பட்டாள்.

“இல்லைங்க, நான் உண்மையை தான் சொல்றேன். ஏங்க நாம நண்பர்களாக இருக்கலாமா” என்று மறுமுனை கேட்டது.

“ஐயோ, என்ன ஒரு டெலிபதி. நானும் இப்ப அதை தாங்க கேக்கலாம்னு நினைச்சேன். சரிங்க, நீங்க நாளைக்கு போன் பண்ணுங்க” என்று போனை தூண்டித்தாள்.

அதற்கு பிறகு இருவரும் தினமும் போனில் மணிக்கணக்காக பேச ஆரம்பித்தார்கள். கல்லூரியில் அவள் தோழி காயத்ரி,

“தினமும் அப்படி யாருக்கிட்டடி போன்ல பேசுற” என்று கேட்டாள்.

அதற்கு கீர்த்தனாவோ, “குமார்னு ஒருத்தர் கிட்ட பேசுறேன். அவரை தான் நான் விரும்புறேன் என்றாள்.

“ஆமா அவரோட உனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சு” என்று வினவினாள் காயத்ரி.

“ராங் கால்ல ஆரம்பித்து, இப்ப காதல்ல வந்து நிக்குது” என்றாள் கீர்த்தனா.

“உன் ஆளை, என்னைக்கு கண்ல காட்ட போற” என்று கேட்டாள் .

அதற்கு கீர்த்தனாவோ, “அடிபோடி, நானே இன்னமும் அவரை பார்ததில்லை” என்றாள்.

“பார்க்காமலே செல்போன்ல காதலா , நடக்கட்டும், நடக்கட்டும். ஆமா எப்ப ரெண்டு பெரும் சந்திக்கப்போறீங்க”?

“கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்னு தான் இருக்கோம். ஆனா, என்ன தான் சொல்லு, பார்க்காமலே காதலிக்கிறதுல இருக்கிற திரில்லே தனி தான்” என்றாள் கீர்த்தனா.

“என்ன திரில்லோ” என்று கூறிவிட்டு நகர்ந்தாள் காயத்ரி.

சில நாட்கள் கழித்து, கீர்த்தனா குமாரிடம் செல்போனில்,

“ஏங்க, நாம இன்னைக்கு ஐந்து மணிக்கு உழைப்பாளர் சிலைக்கிட்ட சந்திக்கலாமா” என்று கேட்டாள்.

“அதுக்குள்ள அவசரமா, இப்பதானே நாம காதலிக்க ஆரம்பிச்சு மூணு மாசம் ஆகுது” என்றான் குமார் மறுமுனையில்.

“எனக்கு உங்களை பார்க்கணும்போல இருக்கு. அதனலாதான்” என்றாள்.

“சரி, நான் வெள்ளை கலர் அரைக்கை சட்டையும், கருப்பு கலர் பேன்ட்டும் போட்டுக்கிட்டு வரேன், நீ என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வர போற” என்று கேட்டான்.

“நான் ஊதா கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வரேன். சரியா ஐந்து மணிக்கு, உழைப்பாளர் சிலை” என்று கூறி போனை கட் பண்ணினாள்.

குமாரை சந்திக்க போகிற சந்தோசத்தில், புதிதாக வாங்கியிருந்த ஊதா நிற சுடிதாரை அணிந்து கொண்டு, கண்ணாடி முன் நின்று, தன் அழகை தானே ரசித்து, பிறகு 4.45 மணிக்கெல்லாம் மெரினா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையின் அருகே வந்து, குமாரின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தாள். சரியாக ஐந்து மணிக்கு வெள்ளை சட்டை, கருப்பு பேன்டில் குமார் கீர்த்தனாவிடம் வந்து,

“நீங்க கீர்த்தனா தானே” என்றான்.

கீர்த்தனாவோ, அவனுக்கு பதில் சொல்லாமல், அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.

அவள் மயங்கி கீழே விழுந்ததற்கு காரணம், அவள் 25 வயது வாலிப குமாரை எதிர்பார்த்து நின்றாள், ஆனால் வந்ததோ 65 வயது முதியவரான குமார்.

பின் குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு, இந்த மாதிரி ஒரு பெண் ஏமாற்றப்பட்டாள் என்று பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. இதனையே கருவாக கொண்டு, இந்த கதையை எழுதினேன். பெண்களே! அன்னியரிடம், அனாவசியமாக உங்களின் செல்போன் நம்பரை கொடுக்காதீர்கள். அதேபோல், ராங் கால் வந்தால், பேச்சை வளர்க்காமல் உடனே கட் பண்ணி விடுங்கள்.

No comments:

Post a Comment