Wednesday, November 21, 2012

வந்துட்டான்யா... வந்துட்டான்!!!

பொதுவா எல்லோருக்கும் நகைச்சுவை படங்கள் ரொம்ப பிடிக்கும். இரண்டரை மணி நேரம் ஒரு படத்தை பார்த்தோமா, வயிறு குலுங்க சிரிச்சோமான்னு தான் எல்லோரும் நினைப்போம். சில படங்கள்ல படத்தை ஒட்டியே நகைச்சுவை காட்சிகள் வரும். சில படங்கள்ல, நகைச்சுவை காட்சிகள்னு தனியா வரும். நகைச்சுவை காட்சிகள் எப்படி வந்தாலும், நாம முழுமையா அந்த நகைச்சுவை காட்சிகளை ரசிப்போம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஆர். ராமச்சந்திரன்,  'டணால்”தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ், சந்திரபாபு, லூஸ் மோகன்னு இப்படி நிறைய பேர் அந்தக் காலத்துல நகைச்சுவை நடிகர்களாக, நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப பிடிச்ச பழைய நகைச்சுவை படங்கள் எதுவென்றால், தங்கவேலு நடித்த “கல்யாணப் பரிசு”, நாகேஷ் நடிச்ச “சோப்பு சீப்பு கண்ணாடி”,”பட்டணத்தில் பூதம்”, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கவேலு நடிச்ச “அடுத்த வீட்டுப் பெண்”, அப்புறம் “காசேதான் கடவுளடா”, இப்படி நிறைய படங்களை சொல்லலாம். அதற்கு பிறகு, கவுண்டமணி, செந்தில் நடித்த கால கட்டத்தில், அவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்றாலே, அந்த படம் ஒரு குப்பை படமாக இருந்தா கூட பார்த்திருக்கிறேன். கவுண்டமணியிடம் உதை வாங்கியே பிரபுலமானவர் செந்தில். அவர்கள் இருவரின் நகைச்சுவையும் ரசிக்கும்படியாக இருக்கும். இன்னமும் “கரகாட்டக்காரன்” படத்தின் நகைச்சுவை காட்சிகளை மறக்க முடியாது. பிறகு வந்தவர் தான் வடிவேலு. தன்னுடைய உடல் மொழியாலும், இரட்டை அர்த்தம் கொண்ட  வசனங்கள் இல்லாததுனாலும், மிகவும் பிரபலமடைந்தார். அதிலும் குழந்தைகள் பட்டாளத்தையே தன்னுடைய ரசிகர்களாக வைத்திருந்தார். சிறு குழந்தைகள் எல்லாம் எந்த அளவுக்கு அவருடைய ரசிகர்கள் என்றால், இங்கு நாங்கள் ஒரு இரண்டு வருடத்திற்கு முன் ஒரு நண்பரின் வீட்டிற்கு இரவு போனோம். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒன்பது மணியாகி விட்டபடியால், நண்பர் தன் நான்கு வயது குழந்தையிடம், “உனக்கு இன்னமும் தூக்கம் வரலையா” என்று கேட்டார் . அதற்கு அந்த வாண்டு, “தூக்கம் வருது...... ஆனா வரலை” அப்படின்னு வடிவேலு பாணியில பதிலை சொல்லிவிட்டு, விளையாட போய்விட்டது. அந்த குழந்தைக்கு வெறும் நான்கு வயது தான். இந்த குழந்தைன்னு இல்லை, இங்கு நான் பார்க்கின்ற நிறைய குழந்தைகள் தங்களுக்கு பொழுது போகவில்லையென்றால், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை டி‌வி‌டியில் போட்டு பார்க்கிறார்கள். இப்படி எல்லா தரப்பு மக்களையும் ரசிகர்களாக கொண்டிருந்த ஒரு நல்ல கலைஞன், நுணலும் தன் வாயால் கெடும்” என்பது போல, தன் வாயால் கெட்டு, தமிழ் சினிமா உலகில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார். சரி, இவர் இல்லை என்றால் என்ன, இன்னமும் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்களே என்று பார்த்தால், யாராலும் இவருடைய இடத்தை நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை. அதற்கு முக்கிய காரணம், மற்ற நகைச்சுவை நடிகர்கள் நகைச்சுவையில், முகம் சுழிக்க வைக்க கூடிய இரட்டை அர்த்த வசனங்களும், அருவருக்கத்தக்க உடல் அசைவுகளையும் கையாளுவது தான். என்னதான் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல், அந்த படங்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை.
இப்போது தான், வடிவேலு வனவாசத்தை விட்டு வெளியே வந்து பத்திரிக்கைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது, விரைவில் நான்கு படங்களில் தான் நடிக்கப்போவதாக கூறியிருக்கிறார். வடிவேலுவின் ரசிகர்கள், இவருடைய படங்களுக்குக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். பார்ப்போம், நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி வருகின்ற வடிவேலு எந்த அளவுக்கு நம்மையெல்லாம் சிரிக்க வைக்க போகிறார் என்று!.

1 comment:

  1. உண்மையிலேயே வடிவேலு இல்லாதது மிக பெரிய இழப்பே !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete