Saturday, November 3, 2012

காதல் கீதம் - 1

இந்த தொடர்கதை, இங்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பத்திரிக்கையில் வெளி வந்தது. இதனை மற்றவர்களும் படிப்பதற்காக, மீண்டும் இந்த வலைப்பூவில் பதிக்கிறேன்.


பொழுது புலர ஆரம்பிக்கும் பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலை 4.30 மணிக்கு, அடைக்கப்பனுக்கு விழிப்பு ஏற்பட்டது. கட்டிலை விட்டு இறங்கி, குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணியை எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தான். ஆனால் தூக்கமோ வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. பக்கத்தில் படுத்திருக்கும் தன் மனைவியைப் பார்த்தான்.  தூக்கத்திற்குத்தான் தெய்வானையின் மீது என்ன ஒரு பாசமோ, அவளை அப்படியே ஆட்கொண்டிருந்தது. இன்று இரவு இந்தியாவிற்கு போக போகிறோம் என்ற நினைப்பே அவனுக்கு தூக்கம் வராமல் செய்து விட்டது. கட்டிலை விட்டு கீழே இறங்கி, பக்கத்து அறைக்கு சென்றுப் பார்த்தான், அங்கே 11 வயதான தன் மகன் அருண் தலையணை ஒருபுறமும், போர்வை  மறுபுறுமாக  தூங்கிக் கொண்டு இருந்தான். அந்தக் கதவைச் சாத்திவிட்டு, தன் அறையிலுருந்த ஜன்னலைத் திறந்தான். பனிக்காற்று மிக வேகமாக அவன் முகத்தில் அறைந்தது. காற்று எப்படி வேகமாக வீசியதோ, அதை விட வேகமாக அவன் மன ஓட்டம் 15 வருடங்கள் பின்னோக்கி சென்றது.

அப்போது, அடைக்கப்பன் பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருந்தான். அங்கு நிறைய இளம் பெண்களும் வேலை பார்த்து வந்தனர். அவனும் அவர்களிடம் எல்லாம் அடிக்கடி பேசிக் கொண்டும், வழிந்துக் கொண்டும், தன் நண்பர்கள் மத்தியில் “கடலை மன்னன்” என்ற பட்டப் பெயரோடு வலம் வந்தான். ஒரு நாள் மும்முரமாக cobolலில் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருக்கும்போது,

உயிர் நண்பன் சுரேஷ் அவனிடம், “டேய் மாப்பிள்ளை, வாடா கேண்டீன் போயி ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்” என்றான்.

“நான் இப்ப வரலை சுரேஷ், நீ போயிட்டு வா . நான் இந்த ப்ரோக்ராம்மை இன்னைக்கு முடிச்சுடனும், இல்லன்னா அந்த முசுடு PM என்னை      நொங்கெடுத்துவான்” என்றான் அடைக்கப்பன்.  

“பெரிய இவன், நீ மட்டும் தான் வேலை பண்றதா நினப்பா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும், நான் காதலில் விழுந்து விட்டேன், அதுவும் கண்டவுடன் காதல்” என்றான் சுரேஷ்.

“என்னது கண்டவுடன் காதலா, என்ன சொல்ற”, என்று கேட்டுகொண்டே அடைக்கப்பன் சுரேஷோட கேண்டீனுக்கு சென்றான்.

“நான் சொல்லுவேன் இல்லை, தினமும் வேலைக்கு வர்ற பஸ்ஸுல ஒரு பெண்ணை பாத்துக்கிட்டு வர்றேன்னு, திடீர்னு அவளும் என்னை பாக்க ஆரம்பிச்சா. ஆஹா, நம்மளையும் ஒருத்தி பாக்கிறான்னு தெரிஞ்சவுடனே, மனசு அப்படியே இறக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுது. ஒரு நாள் கூட, அவளை பார்க்காமையோ, நினைக்காமையோ இருக்க முடியலை. அப்புறம் தான் தெரிஞ்சது, இது காதல்ன்னு. சரி இனிமே இந்த காதலை மூடி வைக்க கூடாதுன்னு, நேத்து சாயந்திரம் அவ கிட்ட பேசி, என் மனசை திறந்து காட்டினேனா, பதிலுக்கு அவளும் உங்களை எனக்கு புடிச்கிருக்கு, நீங்க எப்ப வந்து பேசுவீங்கன்னு தான் காத்துக்கிட்டு இருந்தேன்னு சொல்லி ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தா” என்றான் சுரேஷ்.

“எப்படிடா சுரேஷ், உங்களால ஒரு பொண்ணைப் பார்த்தவுடனே காதலிக்க முடியுது. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லப்பா. காதல்னா பேசி, பழகி வரனும்” என்றான் அடைக்கப்பன் .

“ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே, மனசுக்குள்ள பூப்பூக்கும். ஒரு இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும். இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு புத்தி சொல்லும். இதுக்கு பேர் தான் காதல். இந்த மாதிரி உனக்கு ஒரு நாள் வரும் பார். அப்பத் தெரியும் இந்த சுரேஷ் சொன்னது எவ்வளவு உண்மைன்னு” என்றான் சுரேஷ்.

“சீ! சீ! நான் எல்லாம் காதலிக்க மாட்டேன்பா. வீட்டுல பார்க்கிற பெண்ணை கல்யாணம் பண்ணி அதுக்கு அப்புறம் அவளை காதலிப்பேன்” என்றான் அடைக்கப்பன்.

“போ! மகனே! போ!, இந்த மாதிரி சொல்றவங்க தான் சீக்கிரம் காதல்ல விழுந்துடுவாங்க. அதுவும் நீ கண்டதும் காதல்ல தான் விழப்போற பாரு” என்றான் சுரேஷ்.

“சரி மச்சி, அதையும் பாக்கலாம். இப்ப ஆளை வீடு”, என்று கூறி சுரேஷை அனுப்பிவிட்டு, அவனுடைய வார்த்தை எவ்வளவு சீக்கிரம் பலிக்கப்  போகுது என்பதை அறியாமல் அடைக்கப்பன் வேலையில் மூழ்கினான்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு நாள் அடைக்கப்பனுடைய அம்மா, “அடைக்கப்பா,  அடுத்த வாரம் மணியோட கலியாணம் இருக்கு, நானும் அப்பாவும் சனிக்கிழமை ஊருக்கு போறோம். நீ கலியாணத்துக்கு முத நாளாவது வந்துடு” என்றாள்.

அதற்கு,“ஏம்மா, கண்டிப்பா நான் வரணுமா? ஆபிஸ்ல லீவு வேற கிடைக்காது” என்றான் அடைக்கப்பன்.

“ரெண்டு நாள் மட்டும் லீவு போட்டுட்டு வா. இந்த மாதிரி எடத்துக்கு நீ வந்தாதான், நான் உனக்கு கலியாணம் பேசறதுக்கு ஈசியா இருக்கும். அதனால ஒழுங்கா ஆபிஸ்ல லீவு சொல்லிட்டு வந்து சேரு” என்றாள் அடைக்கப்பனின் தாய்.

அடைக்கப்பன் மனதுக்குள் ஆமா, எனக்கு ஏத்த பொண்ணுங்க... அங்க நிறையப் பேர் வரப் போறாங்க பாரு. ஒரு பொண்ணும் வராது. அதுக்கு இங்க இருந்தாலாவது, பொண்ணுங்களோட கடலையாவது போட்டுக்கிட்டு இருக்கலாம்.  

“என்னடா முணுமுணுக்குற?” என்றாள்.

“ஒண்ணும் இல்லம்மா, லீவு எப்படி கேக்குறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றான் அடைக்கப்பன்.

கடைசியில், அடைக்கப்பன் தன் மாமாவின் மகன் மணியின் திருமணத்தன்று, மணப்பெண்ணின் ஊரான உலகம்பட்டிக்குச் சென்றான். திருமண வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தவுடன், அந்த தெருவே ஒரு  ஒரு அழகான சோலையில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை போல் அடைக்கப்பனின் கண்களுக்கு காட்சியளித்தது. ஆறேழு இளம் கன்னிகைகள் பட்டுச் சேலையிலும், தாவணியிலும் திருமண வீட்டிலிருந்து வெளியே வந்து தெரு முனையில் இருக்கும் இன்னொரு வீட்டிற்கு செல்வதற்காக வந்தார்கள். அந்த வீட்டில் தான் சாமான் எல்லாம் பரப்பி இருந்தார்கள்.  

ஆஹா! அம்மா சொன்னதுக்காக வந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு என்று நினைத்துக் கொண்டான் அடைக்கப்பன்.

அந்த இளம் நங்கைகளை எல்லாம் பார்த்து பரவசமடைந்த அவன் கண்கள், ஒரு குறிப்பிட்ட இளம் பெண்ணை பார்த்ததும், வேறு யாரையும் பார்க்க முடியாமல் அந்த பெண்ணிடமே நின்று விட்டது. கண்கள் இமையை மூட கூட மறந்து விட்டது. அந்த பெண் ஒன்றும் அங்கு வந்திருந்த மற்ற பெண்களையெல்லாம் விட அழகி என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு முறை பார்த்தா, கண்டிப்பாக மறு முறை திரும்பி பார்க்க வைக்க கூடிய அடக்கமான அழகு அவளிடம் குடி கொண்டிருந்தது.

சீ, நாம இந்த மாதிரி பார்க்கிறதை யாராவது பார்த்தா என்னாவது என்று மனதுக்குள் எண்ணினாலும்,  முடியலையே! என்று திரும்பவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நாம எத்தனையோ பெண்களை பாத்திருக்கோம், ஆனா இவளை மட்டும் நம் மனசு திரும்ப திரும்ப பார்க்க சொல்லுதே. இவளை விட அழகா இருக்கிறவங்க போறாங்களே, ஆனால் இவளை மட்டும் நம்ம மனசுக்கு பிடிச்சிருக்கே. ஏன்னு புரியலையே. இது தான் சுரேஷ் சொன்ன மாதிரி காதலா இருக்குமோ? சீ, சீ, அப்படி எல்லாம் இருக்காது என்று அவன் மனசு நினைத்தாலும், அவனை அறியாமல் அவன் உதடு ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தது .

     “அன்பே! அன்பே! கொல்லாதே! கண்ணே, கண்ணை கிள்ளாதே!

     ஐயோ உன் அசைவில் உயிரை குடிக்காதே!

     இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீ தான் நீ தான் அழகியடி!”.

   
இதற்குள் அந்த இளம் பெண்கள் அடைக்கபபனை தாண்டி, சாமான்கள்  பரப்பி இருந்த வீட்டிற்குள் சென்று மறைந்து போனார்கள். அப்படி அவர்கள் அடைக்கப்பனை தாண்டும் போது, அந்த இளம் பெண் மட்டும் அவனை திரும்பி பார்த்து விட்டு சென்றாள்.

 
அந்த இளம் பெண்ணின் பார்வையை தாங்கக்கூடிய சக்தி இல்லாத அடைக்கப்பன், தூக்கத்திலிருந்து நடக்கிற மாதிரி நடந்து அந்த திருமண வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது அடைக்கப்பனின் பின்னாடியிருந்து ஒரு குரல்.

அந்த குரலை கேட்டவுடன் தான், அடைக்கப்பன் சுய உணர்வு பெற்றான்.

நாம அந்த பொண்ணுங்களை பாத்ததை பாத்திருப்பாங்களோ,  அப்படி பார்த்திருந்தா எப்படி சமாளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டே திரும்பினான். 

[தொடரும்]                                                                                               பகுதி - 2

No comments:

Post a Comment