இந்த தலைப்பு
ஒரு வேடிக்கையான தலைப்பு இல்லீங்க. உண்மையான தலைப்பு தான். பேப்பர்ல எப்பவுமே 10ஆம்
வகுப்பு,12ஆம்
வகுப்பு மாணவர்களின் பரீட்சை முடிவுகளை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு, ஆசிரியர்களின் தகுதித் தேர்வு முடிவுகள் ரொம்பவும் வித்தியாசமாக தெரிந்தது.
மாணவர்கள் ஒழுங்காக படிக்காமல் பெயில் ஆவார்கள். அது தெரிந்தது தான். ஆனால் நன்றாக
படித்து பட்டம் வாங்கி, மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய
ஆசிரியர்களே, தங்களுக்கான தகுதித் தேர்வில் மிக மிக மோசமான முறையில், அதாவது
இலட்சக் கணக்கில் தேர்வு எழுதி, வெறும் ஆயிரக் கணக்கில் தேர்ச்சி
அடைந்திருக்கிறார்கள். இதனால் தான் நம் கண்களுக்கு அது ஒரு வித்தியாசமான செய்தியாக
தெரிந்தது.
எனக்கு
தெரிஞ்சு, நிறைய
பேர் பி.எட் முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
விட்டு அரசு பள்ளிகளில் தான் வேலைக்கு சேர்வேன் என்று காத்திருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு
எல்லாம் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் எப்போது கிடைத்தது
என்பது தான் இதில் முக்கியம். பி.எட். முடித்து ஒரு பத்து பதினைந்து வருடம் கழித்து
தான் அவர்களுக்கு அந்த வேலை கிடைத்தது. இந்த இடைவெளியில் அவர்கள் தாங்கள் படித்ததை எல்லாம்
மறந்திருப்பார்கள். பிறகு இவர்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அந்த மாணவர்கள் எப்படி முன்னேறுவார்கள். இதனை கவனித்த மத்திய அரசு, அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்
என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, 2010 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அரசுப் பள்ளியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத வேண்டும்.
அவர்கள் ஆறு வருடங்களுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதுபோல், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த ஆசிரியர்
தகுதித் தேர்வில், கிட்டதட்ட ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள்.
அதில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக உங்களால் யூகிக்கவே முடியாத எண்ணிக்கையில் அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்.
இந்த தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்கள், அதில் 90 மதிப்பெண்கள்
எடுத்தால் தேர்ச்சி என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. அதாவது 60 விழுக்காடு
பெற்றால் தான் தேர்ச்சி பெறமுடியும். கடைசியில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால், வெறும் 2500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். மற்றவர்களால் ஏன் தேர்ச்சி
பெற முடியவில்லை என்றால், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்துப்
பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு, ஒரு பாடத்தை முதன்மையாக
எடுத்து பட்டம் பெற்றவர்களால், மற்ற பாடங்களில் மதிப்பெண்கள்
எடுப்பது சிரமம். அதோடில்லாமல், தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம்
தான். அது மிகவும் குறைவு. யோசித்து பதிலளிக்க அவகாசம் இல்லை. இதனால் தான் எங்களால்
தேர்ச்சி பெற முடியவில்லை என்று பெயில்(!) ஆனவர்கள் கூறும் காரணங்கள்.
நாங்கள்
படிக்கும் காலத்தில், “மார்ச் போனா, இருக்கவே இருக்கு அக்டோபர்” என்று சொல்வதுண்டு.
அதே மாதிரி இந்த ஆசிரியர் தேர்வில் பெயில் ஆனவர்களுக்கும், அக்டோபர்
மாதத்தில் மறு தேர்வு நடந்தது. சரி, ஏற்கனவே ஒரு முறை தேர்வு
எழுதின அனுபவம் இருக்கு, அதனால, இந்த முறை கண்டிப்பா நிறைய ஆசிரியர்கள் தேர்ச்சி
அடைவார்கள்னு பார்த்தா(!!!!!!), அது எப்படி நீங்களா ஒரு தப்பான
எண்ணத்தை மனசுல வளர்த்துக்கலாம், நாங்க பசங்களை விட மோசாமாச்சேன்னு
திரும்பவும் நிருபிச்சிருக்காங்க. இந்த முறையும் கிட்டதட்ட ஏழு லட்சம் பேர் தேர்வு
எழுதினார்கள். அதில் போன தடவையை காட்டிலும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்து, கிட்டதட்ட 17000 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இந்த தடவையும் பெயில் ஆனவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், 23
கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாம, வெளியிலிருந்து கேட்கப்பட்ட
கேள்விகள், அதனால் தான் எங்களால் தேர்ச்சி பெற முடியவில்லை அன்று
சொல்லியிருக்கிறார்கள்.
ஆஹா, இப்படியே போனா, மாணவர்களின் நிலமை(?), அதை விட்டுத்
தள்ளுங்கள், முதல்ல இந்த ஆசிரியர்களின் நிலமை (???????). பொதுவா எந்த ஒரு நிறுவனமே, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி
வாய்ந்த ஊழியர்களை தான் எடுக்க வேண்டும் என்று
பல அடுக்குகள் கொண்ட நேர்முகக்காணலை நடத்தி, ஊழியர்களை தேர்வு
செய்வார்கள். ஆனால் இந்தியாவின் வருங்கால தூண்களை உருவாக்கும் கல்வித்துறை நிறுவனமோ, இப்போது தான் அந்த மாதிரியான ஒரு தகுதித் தேர்வை நடத்த ஆரம்பித்திருக்கிறது.
இந்த தேர்வுகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிறுத்தாமல் தொடர வேண்டும். அதே மாதிரி, ஆசிரியர்களும், தங்களால் மட்டும் தான் வருங்கால இந்தியாவை
இன்னும் நல்ல நிலமைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற ஒரு நம்பிக்கையோடு செயல்பட்டார்களேயானால், கண்டிப்பாக அவர்களுக்கு இந்த தேர்வு எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.
No comments:
Post a Comment