Tuesday, May 22, 2012

வெளிநாட்டு வேலைக்கான ஒரு இன்டர்வியூ

4 வருஷமா இந்தியாவில வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது (அப்ப நான் செட்டிநாடு சிமெண்ட் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டு  இருந்தேன்), ஏன் நாம வெளிநாடு போக முயற்சி பண்ணக்கூடாதுன்னு ஒரு விபரீதமான எண்ணம் தோணுச்சு. இந்த ஈமெயில், இன்டர்நெட், லொட்டு, லொசுக்கு  எல்லாம் பிரபலமடையாத காலம் அது. அதனால போஸ்டல் டிபார்ட்மெண்ட் தான் என்னோட அந்த விபரீதமான எண்ணத்தை செயல் படுத்துறதுக்கு உதவியா இருந்துச்சு. ஹிந்து பத்திரிக்கையை, புதன் கிழமையும்,சனிக்கிழமையும் வாங்கி, அதுல வர்ற வெளிநாட்டு வேலைக்கான விளம்பரங்களுக்கு, சலிக்காம அப்ளை பண்றதே ஒரு வேலையா வச்சிருந்தேன். ஒருத்தனுக்கும் நம்ம மதிப்பு தெரியலை. என்னடாது, யாருமே கூப்பிட மாட்டேன்கிறாங்க, நாம வெறும் உள்ளுர்ல மட்டும் தான் வெல போற மாடான்னு சந்தேகம் வந்துடுச்சு. அப்படியெல்லாம் மனசு ஓடிஞ்சு போகாதேன்னு சொல்ற மாதிரி, சிங்கப்பூர்லேருந்து ஒரு போன். டெலிபோன் இன்டர்வியூ பண்ணுனாங்க. ஒரு மணி நேரம் நோண்டி நொங்கெடுத்துட்டு, கடைசியில நீங்க எங்க வேலைக்கு ஒத்து வரமாட்டீங்கன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டானுங்க. இந்த இன்டர்வியூ பற்றி இரண்டு மூன்று நண்பர்களுக்கு தெரிஞ்சதுனால, ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிற மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுல, அவுங்களோட அறிவுரை வேற, “பங்காளி, நமக்கு எல்லாம் வெளி நாடெல்லாம் ஒத்து வராது, பேசாம நீ உள்ளூர்லேயே வேற வேலைய தேடிக்கோன்னு”. அதனால நானும், சீச்சீ, இந்த பழம் புளிக்கும்னு கொஞ்ச நாளைக்கு வெளி நாட்டு வேலைக்கு அப்ளை பண்றதை விட்டுட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு புதன்கிழமை பேப்பர்ல, “மஸ்கட் நாட்டுல” இருக்கிற மிகப் பெரிய கம்பெனி, சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் கோயம்புத்தூர்ல இருக்கிற “Holiday Inn” ஹோட்டல்ல “walk in Interview” நடத்துறாங்கன்னு போட்டிருந்துச்சு. மறுபடியும் மனசுக்குள்ள சைத்தான் புகுந்துடுச்சு. போன தடவை அந்த இன்டர்வியூக்கு எல்லார் கிட்டேயும் சொன்னோம், ஒண்ணும் நடக்கலை, அதனால இந்த திடவை யாருக்கிட்டேயும் சொல்லாம, காதும் காதும் வச்ச மாதிரி, அந்த இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணிடலாம்னு முடிவு பண்னினேன். ஆனா, சனிக்கிழமை போறதா, ஞாயிற்றுக்கிழமை போறதான்னு சந்தேகம். சரி, நம்மளோட ரொம்பவும் நெருங்கிய நண்பர்கிட்ட மட்டும் யோசனை கேட்டுக்கலாம்னு நினைச்சேன். அந்த நெருங்கிய நண்பர் வேற யாரும் இல்லைங்க, கடவுள் தான். கடவுள் கிட்ட சீட்டு எழுதி போட்டதுல, ஞாயிற்றுக்கிழமை போகலாம்ன்னு வந்துச்சு. அதன்படி, அம்மாக்கிட்ட, திண்டுக்கல்ல இருக்கிற ஒரு நண்பனை பார்த்துட்டு வறேன்னு சொல்லி கோயம்புத்தூர் போயிட்டேன். அந்த ஹோட்டலுக்கு போனா, ஒரே திருவிழா கூட்டம் தான். ஜே,ஜேன்னு இருந்தாலும்,ஒரு பசுமையே இல்லாம, வெறும் காஞ்சு போயி இருந்துச்சு. பொதுவா, எந்த ஒரு இன்டர்வியூலையும், இளம் பெண்களின் கூட்டம் அலை மோதும். ஆனா இங்க மட்டும் தான் பெண்கள் இல்லாம வெறும் ஆண்கள் கூட்டம் மட்டும் இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல என்னோட முறையும் வந்துச்சு, பயபக்தியோட, அந்த ரூமுக்குள்ள போயி, அவுங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில் சொல்லிக்கிட்டு வந்தேன், திடீர்னு அவுங்க, உங்களுக்கு “AS/400” தெரியுமான்னு கேட்டாங்க. என்னாது “AS/400”, சரி தான் நமக்கு இன்னமும் ஆப்பு வரலையேன்னு நினைச்சேன்,இந்த “AS/400” ரூபத்துல வந்துடுச்சேன்னு, சோகமா முகத்தை வச்சுக்கிட்டு, தெரியாதுன்னு சொன்னேன். அவுங்களும் உடனே, கொஞ்ச நேரம் வெளியில இருங்கன்னு சொல்லி வெளியே அனுப்பினாங்க. என்னடா, இவனுங்க நமக்கு வேலை கொடுப்பாங்களா, மாட்டாங்களான்னு ஒரே குழப்பமா ஆயிடுச்சு. ஆனா, ரொம்ப நேரம் என்னைய மண்டைய போட்டு உடைச்சுக்க விடாம, கூப்பிட்டாங்க, உள்ள போனா, இந்தாங்க “offer letter”ன்னு சொல்லி, இவ்வளவு சம்பளம், தங்கிக்கிறதுக்கு, உங்களுக்கு “bachelor accommodation”  இலவசமா கொடுப்போம். உள்ளுக்குள்ளேயே சாப்பாட்டுக்கு மெஸ் இருக்கும். ஆபிசுக்கு போய்வர கம்பெனி பஸ்ல போயிட்டு வரலாம்,அதுக்கப்புறம் நாங்களே உங்களுக்கு “AS/400” ட்ரைனிங் கொடுப்போம். அப்படி, இப்படின்னு அவுத்து விட்டாங்க. நானும் அவுங்க சொன்னதுக்கு எல்லாம் வாயை மூடாம, தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தேன். கடைசியா அவுங்க கொடுத்த காண்ட்ராக்ட்ல கையெழுத்தைப் போட்டுட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மஸ்கட் போற நாளும் வந்துச்சு (12/09/1997), பட்டிக்காட்டான் பட்டினத்தை சுத்திப் பார்த்த மாதிரி நானும் மெட்ராஸ் ஏர்போர்ட்குள்ள போயி, முதல் முதலா விமானதுக்குள்ள போயி உட்கார்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவுல விளக்கமா எழுதிறேன்.

1 comment:

  1. “AS/400” ன்னா என்னன்னு அங்கேயே கேட்டுற வேண்டியதுதான பிரதர். மஸ்கட் போனப்புறம் ஒட்டகத்த கையில கொடுத்துட்டு வாங்க டிரைனிங் ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிடப் போறானுங்க ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete