Friday, January 3, 2014

இப்படி ஒரு மாமியார் – அப்படி ஒரு மருமகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தி, என்னை அப்படியே நெகிழச் செய்துவிட்டது. 

              
             புகைப்படம் நன்றி - தட்ஸ்தமிழ்
      
மாமியார் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுத்து தன் மருமகளுக்கு மறு வாழ்வு அளித்தார் என்று. அந்த மருமகளும் தனக்கு உயிர் பிச்சை அளித்த தன் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். அந்த மருமகள் மாமியாரிடம் எவ்வளவு அன்பாக நடந்துக்கொண்டிருப்பார் என்று நமக்கு இந்த ஒரு செய்தியே விளக்குகிறது. அது போல் அந்த மாமியாரும் மருமகளிடத்தில் பாசமாக தன் சொந்த மகளைப் போல் பார்த்துக்கொண்டிருப்பார் என்று தெரிகிறது. இந்த மாதிரி ஒவ்வொருவர் வீட்டிலும் மாமியாரும் மருமகளும் இருந்து விட்டால் அந்த வீட்டில் மகனாகவும் கணவனாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த ஆண் மகனுக்கு, உலகில் இதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்.

அன்றைக்கு அந்த செய்தியை படித்தவுடன், இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி இன்று ஜூனியர் விகடனில் “உதவி செய்யாத மாமியார்.. தீர்த்துக்கட்டிய மருமகள்” என்ற ஒரு செய்தியை படிக்கும் வரை தான் நீடித்தது.

ஒரு வயதான தம்பதியருக்கு இரண்டு மகள்கள்,மற்றும் ஒரே ஒரு மகன். அந்த மகனுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கு,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அந்த குடும்பத்தலைவர் அவருடைய சொந்த வீட்டை தன் மகனுடைய பேரில் எழுதி வைத்து இறந்து விட்டார். ஆனால் அந்த அம்மாவோ, தன்னுடைய மகனை அந்த வீட்டில் தங்க அனுமதிக்கலை. காரணம் மருமகளின் குடும்பத்தாரோடு ஏற்பட்ட வரதட்சணை தகராறு. அதனால அந்த மகன் பக்கத்துல வாடகை வீட்டில குடியிருந்திருக்காரு. அந்த வயதான அம்மாவிற்கு கணவன் இறந்தபிறகு, வாடகைப் பணமாக மாதம் 15,00 ரூபாய் வந்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஒத்த ரூபாயை கூட தன் மகனுக்கு கொடுக்கலை. இதனால் கடுப்பாகிப்போன அந்த மருமகள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயம் பார்த்து கூலிப்படையை அமைத்து கொலை செய்திருக்கிறார். இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கார்.

இந்த செய்தியைப் படித்தவுடன், இப்படியும் ஒரு மருமகள் இருப்பாரா என்று எண்ணினேன். இதில் தவறு அந்த மருமகளிடம் மட்டும் இல்லை, அந்த மாமியாரிடமும் இருந்திருக்கிறது. அவர்களும் தன் மகனின் மீது உள்ளார்ந்த அன்பு வைத்திருந்திருந்தால்,மருமகள் வீட்டில் போடுவதாக சொன்ன நகையை போடவில்லை என்பதை பெருந்தன்மையோடு மன்னித்திருந்திருப்பார். அவர் அப்படி மன்னித்திருந்திருந்து, தன் மகனுக்கு உதவி செய்திருந்தால், ஒரு வேளை அந்த மருமகள் இப்படிப்பட்ட ஒரு கொலைப்பாதகத்தை செய்திருக்கமாட்டாரோ என்னவோ.

சரி, மாமியார் தான் தங்கள் கஷ்டங்களுக்கு உதவில்லை என்றாலும், அவர் காலத்துக்கு பிறகு, தாங்கள் தான் அந்த சொத்தை அனுபவிக்கப்போகிறோமே என்று எண்ணியிருந்தால், இந்த கொலைச் செயலிலிருந்து விடுப்பட்டிருக்கலாம். இப்படி இருவருமே ஒத்துப்போகாமல், கடைசியில் மாமியார், மருமகள் கையால் கொல்லப்பட்டதும், அந்த மருமகளும் கம்பி எண்ணிக்கொண்டிருப்பதும் தான் மிச்சம். அவர்கள் இருவராலும் அந்த சொத்தை கடைசி வரை அனுபவிக்க முடியவில்லை.


மாறி வரும் உலகில், நம்முடைய பாரம்பரியம் மிக்க கலாச்சாராமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை திரும்பி வந்தால் தான், இன்றைக்கு நடக்கும் அதிகமான விவகாரத்துக்களும், இம்மாதிரியான கொலைகளும் குறையும். ஆனால் அந்த நாள் என்றைக்கு வரும் என்று தான் தெரியவில்லை. 

6 comments:

  1. காலம் மாறிப் போச்சு சுயநலம் கூடிப் போச்சு அதனால் பிரச்சனைகளும் மலைகளாய் குவிந்து குற்றங்கள் கூடி போச்சு

    ReplyDelete
  2. மருமகளை மகளாக பாவித்த அந்த மாமியார் மிகவும் போற்றப்பட வேண்டியவர்...

    ReplyDelete
  3. இருவேறு தகவல்கள் - இரண்டுக்கு எவ்வளவு வித்தியாசம்......

    ReplyDelete
  4. முதல் தகவல் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.

    இரண்டாவது நேர் விரோதமாக அல்லவா உள்ளது. உலகம் பலவிதம், என்ன செய்வது? அவரவர்களாகவே யோசித்துத் திருந்தினால் தான் நல்லது.

    ReplyDelete
  5. நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியும் ,கலாச்சாரச்சீரழிவுகள் ஒருபக்கமுமாக செய்திகள்...!

    ReplyDelete
  6. கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அர்த்தமுள்ள தாத்பரியங்கள் இன்றைக்கு சுத்தமாக மறைந்து விட்டதற்கு அடையாளம் தான் இரண்டாவது செய்தி. மாமியாரைக்கொல்வது மட்டுமல்ல, கணவரை ஆட்க்ள் வைத்து கொல்வதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அதனால்தான் முதலாம் செய்தி கூடுதலாக மனதை நிறைவடையச் செய்கிறது!

    அர்த்தமுள்ள‌ பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete