Saturday, September 22, 2012

அமெரிக்காவில் அடியேன் – 8

பகுதி-7

தோசா உணவகத்துல போயி உட்கார்ந்தோம். அப்பத்தான் எங்க பக்கத்து டேபிள்ல உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார குடும்பத்துக்கு தோசையை கொண்டாந்து வச்சுட்டு அந்த சர்வர் போயிட்டாரு. அந்த சர்வருக்கு பின்னாடியே வந்த இன்னொருத்தர் அந்த தோசையை எப்படி முள்கரண்டியும், தேக்கரண்டியையும் வச்சு சாப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்க  ஆரம்பிச்சார். அதாவது, முள்கரண்டியால பிச்ச தோசையை அந்த சாம்பார் கிண்ணத்துல போட்டு, அப்புறம் தேக்கரண்டியால அதை எடுத்து சாப்பிடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு அவர் போயிட்டாரு. நான் கூட அந்த வெள்ளைக்காரங்களுக்கு கையால எப்படி தோசையை பிச்சு சாப்பிடணும்னு சொல்லிக்கொடுப்பாங்களோண்ணு நினைச்சேன். அடப்பாவிகளா! எதை எதை தான் தேக்கரண்டி, முள்கரண்டியெல்லாம் வச்சு சாப்பிடறதுன்னு இல்லையா. என்னதான் தேக்கரண்டியால எடுத்து சாப்பிட்டாலும், சாம்பாரை எடுத்து தோசை மேல ஊத்தி, அதை நம்ம கையால பிச்சு சாப்பிடுற மாதிரி வருமா என்ன! இதெல்லாம் அந்த வெள்ளக்காரங்களுக்கு எங்க புரியப் போகுது. நாங்களும் சாப்பிட்டு முடிச்சு, அறைக்கு திரும்பின பிறகு, நண்பரும் அவர் மனைவியும் வேற ஊருக்கு போறதுக்கு கிளம்பி போனாங்க. மறு நாள் காலைல நான் அறையை காலி பண்ணிக்கிட்டு, மறுபடியும் ஒரு உள்ளூர் விமானத்துல லாஸ் ஏஞ்சல்ஸ் போனேன். சிட்னிலேருந்து போறதுக்கு முன்னாடி, என்னோட இன்னொரு நண்பர் நீங்க  லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஏன் தனியா தங்குறீங்க, நாங்க தங்குற அறையிலே தங்கிக்கலாம்னு சொன்னதுனால, நானும் அங்க தங்கிக்கலாம்னு முடிவெடுத்தேன்.  லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே போயி, எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு தெரியலை. ஏன்னா, அந்த ஹோட்டல் இருக்கிற இடமோ டிஸ்னி லாண்டுக்கு பக்கத்துல இருக்கு. நல்ல காலம் அந்த விமான நிலையத்துக்குள்ள ஒரு தகவல் மையம் இருந்துச்சு. அதுல, தன்னார்வலர்கள் தான் அங்க இருந்து உதவி கேக்குறவுங்களுக்கு, உதவுறாங்க. நான் அப்ப போனப்போ ஒரு வயசான தாத்தா தான் இருந்தாரு. அவரு என்னைய பார்த்து “வாங்கோ, வாங்கோன்னு” வாய் முழுக்க கூப்பிட்டு, எனக்கு எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு சொன்னாரு. நானும் அவர் சொன்னபடி வெளியில வந்து டிஸ்னி லாண்ட் போற ஷட்டில் வேன் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அந்த வண்டி வந்துச்சு. நானும் அதுல ஏறி உட்கார்ந்தேன். என்னோட சேர்த்து 3 பேரு அந்த வண்டிக்குள்ள உட்கார்ந்திருந்தோம். அந்த வண்டியும் புறப்பட்டுச்சு. நானும் பட்டிக்காட்டான் வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டேன் (ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்து வாயை பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தேன்). ரொம்ப நேரமா அந்த வண்டி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாதிரி தெரியலை. நானும், இந்த விமான நிலையம் ரொம்ப பெருசு போல, அதான் இதை விட்டு வெளியே வர ரொம்ப நேரமாவதுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் தான் என் மரமண்டைக்கு உரைச்சுது, இந்த வண்டிக்காரன் விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருக்கான்னு. அந்த வண்டிக்குள்ள நாங்க 3 பேரு தான் இருந்கோம். அதனால இன்னும் 10 பேரையாவது வண்டிக்குள்ள ஏத்திடலாம்னு நினைச்சிருப்பான் போல. அதனால நவக்கிரகத்தை சுத்துற மாதிரி  அந்த விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருந்தான். அடப்பாவிகளா, சென்னைல தான், இந்த ஷேர் ஆட்டோக்காரனுங்க பண்ற தொல்லை பெருந் தொல்லையா இருக்கும்னு பார்த்தா, இங்க கூடவா இப்படின்னு கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் சரி, ஊர் எந்த ஊரா இருந்தா என்ன, எல்லா மனுசனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே, பாவம் இந்த டிரைவரும் என்ன பண்ணுவான்னு நினைச்சு, உடனே மனசு  அவன் மேல இரக்கப் பட ஆரம்பிச்சுது. ஒரு வழியா எப்படியோ டிஸ்னி லாண்ட்ல இருக்கிற ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்னைக்கு, தனியா மறுபடியும் பஸ் எடுத்து, அந்த ஊரை எப்படி சுத்தினேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                  பகுதி-9

2 comments:

  1. வேடிக்கையான பயண அனுபவங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழமையே.

      Delete