Thursday, September 5, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – ரோஸ் கொடுப்பதற்காக நிற்கும் காட்சி


இயக்குனரும், உதவி இயக்குனர் கிருஷ்ணாவிடம், எல்லோரும் வந்தாச்சான்னு கேட்டார். அதற்கு கிருஷ்ணாவும் இன்னும் இரண்டு பேர் தான் காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வரணும்னு சொன்னாரு. இயக்குனர் உடனே,ஏற்கனவே லேட்டாயிடுச்சு (இப்ப தான் அவருக்கு லேட்டாயிடுச்சுன்னு தெரிஞ்சிருக்கு. ஏன்னா அப்பவே மணி 9.30 ஆகியிருந்தது) அதனால உங்களுக்கு நான் இந்த காட்சியை சொல்றேன்னு எங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சாரு. அதாவது, நாங்க மொத்தம் 10பேரு இந்த ஏரியாவில இருக்கிற கல்யாணமாகாத கட்டை பிரம்மச்சாரிகள். ஒரு நல்ல தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன்(!!) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இப்படி இலவு காத்த கிளியாக வாழ்ந்து கொண்டிருப்பதால், எங்களுக்கு வயதாகி விட்டது. இந்த சமயத்தில் தான், மீரா அதாவது அமலாபால் எங்கள் ஏரியாவிற்கு வருகிறார். அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், நாங்கள் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்கிறோம். இதில் எங்களுக்கு போட்டியாக சந்தானமும் அவரை பின் தொடருகிறார் என்று சொல்லி முடித்தார். எங்களிடம் சந்தனாம்னு சொன்னவுடனே தான், இயக்குனருக்கு சந்தானம் பற்றிய நியாபகம் வந்திருக்கும் போல, உடனே கூட இருந்த இணை இயக்குனர் பிரசன்னாவிடம், சந்தானம் வந்தாச்சான்னு கேட்டார். அவரும் இதோ போய் பார்த்துட்டு வறேன்னு சொல்லி, ரெண்டு நிமிஷத்துல திரும்பி வந்து, சந்தானம் சார் கார்ல தான் உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு, காஸ்ட்யூம் மாற்றுவதற்கு பக்கத்துல யார் வீடாவது இருக்குமான்னு கேட்கிறாருன்னு சொன்னாரு. இயக்குனரும், அவரை ரெஸ்டாரெண்ட்டுக்குள்ளேயே மாத்திக்கிட்டு வரச் சொல்லுங்கன்னு,இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷிடம் சொன்னாரு. மறுபடியும் பிரசன்னாவிடம், சந்தானம் வருவதற்க்குள்ள, இவங்களுக்கு ஆளுக்கு ஒரு வசனத்தை சொல்லிக்கொடுங்கன்னு சொன்னாரு. பிரசன்னாவும், கையில வச்சிருந்த பேடைப் பார்த்து, ஒரு ஏழு பேருக்கு வசனத்தை சொல்லி காமிச்சாரு. கொஞ்ச  நேரத்திற்கெல்லாம், சந்தானம் வந்து சேர்ந்தார். உடனே இயக்குனர் அவரிடம் போய் காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. கூடவே அந்த பிரசன்னாவும். பிரசன்னா வசனத்தை சொல்லிக்காட்டும்போது, சந்தானம் நடுவுல நிறுத்திஇயக்குனரிடம் சார், இப்படி சொல்லலாமா,அப்படி சொல்லலாமான்னு கிட்டதட்ட அவர்கள் எழுதி வைத்திருந்த வசனத்தை எல்லாம் மாத்தினாரு. கடைசில பிரசன்னா,அந்த பேப்பர்ல இருந்த வசனத்தையெல்லாம் அடித்துவிட்டு, சந்தானம் சொன்ன வசனங்களை எழுதிக்கிட்டாரு. அதற்கு பிறகு இயக்குனர் எங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக சந்தானத்திடம், இவுங்க எல்லாம் இந்த ஊர்க்காரங்க, உங்களுக்கு போட்டியா அமலா பாலை சைட் அடிக்கிறதுக்கு வந்திருக்காங்கன்னு அறிமுகப்படுத்தினாரு. அவரும் நீங்க எல்லாம் இங்க தான் இருக்கீங்களா, எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க, அப்படி,இப்படின்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு. இதுக்கு நடுவுல இயக்குனர், எல்லோரிடமும் நாம ரிகர்சல் பார்த்துடலாமான்னு சொல்லி, ரிகர்சல் பார்க்க ஆரம்பிச்சோம். எங்க எல்லாருக்கும் ஒரு ரோஸ் அப்புறம் ஒரு வாழ்த்து அட்டையை கொடுத்தாங்க. 


முதல்ல சந்தானத்தை கைல ரோஸையும் வாழ்த்து அட்டையையும் வச்சுக்கிட்டு அந்த மரத்துல உட்கார்ந்துக்கிட்டு,திரும்பி ரெஸ்டாரண்ட்டை பார்க்கிற மாதிரி ஒரு காட்சியை படம் பிடித்தார்கள். அந்த காட்சியே ஒரு மூணு டேக் எடுத்து தான் ஓகே பண்ணினார்கள். அதற்கு பிறகு இயக்குனர் எங்களிடம் வந்து, 4 பேரை வலது பக்கமாகவும், 4 பேரை இடது பக்கமாகவும் 2 பேரை காமிராவிற்கு எதிரே நிக்க சொல்லி, ஒளிப்பதிவாளர் நீரஷாவிடம், நாங்கள் எவ்வாறு பிரமேக்குள் நிற்கிறோம் என்று கேட்டார். அதற்கு அவரும் ஒரு சில மாற்றங்களை சொல்லி, அதன்படி எங்களை நிற்கச் சொன்னார். பிறகு இயக்குனர் எங்க எல்லோரையும் பிரமேக்கு வெளியே போகச் சொல்லிவிட்டு,1,2,3 என்று சொன்னவுடன், எங்களை முதலில் நின்ற இடத்துக்கு வந்து நிற்கச் சொன்னார். அதாவது உட்கார்ந்திருந்த சந்தானம் எழுந்து ஒரு அடி நடக்க ஆரம்பிக்கும்போது, நாங்கள் பிரமேக்குள் எங்கள் இடத்தில் வந்து நிற்க வேண்டும். இதுக்கே நாங்கள் 7,8 டேக் வாங்கினோம். என்ன பிரச்சனை என்றால், 10 பேரும் சரியாக நிற்க வேண்டிய இடத்தில் வந்து நிற்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் சரியாக நிற்காமல் டேக் வாங்கும்படியாகிவிடும். ஒரு வழியா எல்லோரும் சரியாக வந்து நின்றபிறகு, இயக்குனர் என்னைப் பார்த்து சார், இங்க பாருங்க, நீங்க பாட்டுக்கு வேற எங்கேயோ பார்க்கிறீங்கன்னு கேட்டார். நானும் ஒழுங்காதான் சார் பார்க்கிறேன்னு சொன்னேன், அதனால மறுபடியும் ஒரு டேக். அடுத்த முறையும், இயக்குனர் திருப்பியும் சார், இங்க பாருங்க, இங்க தான் அமலா பால் நிப்பாங்க, அதனால அவுங்களை பார்க்கிற மாதிரி பாருங்க, நீங்க வேற எங்கேயோ பார்க்கிறீங்கன்னு சொன்னாரு. நானும் இல்ல, சார் நான் ஒழுங்காக தான் பார்க்கிறேன்னு சொன்னேன். உடனே சந்தானம், அவர் உண்மையாகவே அமலாபாலை தேடுகிறார் போலன்னு ஒரு கமெண்ட் அடிச்சாரு. மறுபடியும் ஒரு டேக். ஒரு வழியா அந்த காட்சியை எடுத்தார்கள். எனக்கு என்ன பிரச்சனையானதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.  

பின் குறிப்பு: இதெல்லாம், அந்த ரெஸ்டாரண்ட் பக்கத்தில் நடக்கும் காட்சிகள்.

தலைவா திரைப்பட அனுபவம் – ரோஸ் கொடுப்பதற்காக நிற்கும் காட்சியின் அடுத்த பகுதி

-    இன்னும் சொல்கிறேன்


No comments:

Post a Comment