Saturday, September 21, 2013

முத்தமிழும் சமுதாயமும்

முத்தமிழும் சமுதாயமும்

சஞ்சய் கிருஷ்ணா ஆலபாக்கம், ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி

முன்னுரை

இயல், இசை மற்றும் நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் முத்தமிழாகும். அதன் சிறப்புகள் பற்றியும், அது எவ்வாறு சமுதாயத்திற்கும், எனக்கும்.  உதவுகிறது என்பதை பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


இயற்றமிழ்

முத்தமிழில் ஒன்று இயல், இயல்பாக பேசப்படுகின்ற மற்றும் எழுதப்படுகின்ற தமிழை இயற்றமிழ் என்பர். தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது.  மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும் ,    எழுதப்படும் செய்யுளும் அடங்கும். இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன .  
தமிழ் மொழியில் ’, ’, போன்ற எழுத்துகள் வேறு எந்த மொழியிலும்  இல்லை. தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இவை வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்று வகைப் படுத்தப்பட்டவை.


இசைத்தமிழ்

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்(6).  இசை ஒரு  உலகப் பொது மொழி ஆகும். இதற்கு எல்லைகள் கிடையாது. எல்லாக் கலாசாரத்திலும் இசை மிக முக்கியமானது. எல்லா உயிரினங்களையும் அசையவைப்பது இசையே. திருமணங்களில் இசைப்பது மங்கள இசை,  விளயாட்டுப் போட்டிகளில் இசைப்பது வெற்றி இசை, மற்றும் இசை நிகழ்ச்சிகளில்  இசைப்பது இனிய இசை. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுக்கு ஏற்றவாறு  உணரச்செய்வது இசையே.

திருமணங்களில் மங்கள இசையை இசைப்பது நாதஸ்வரம் மற்றும் தவில். நாதஸ்வரம், துளைக்கருவி வகையைச் சேர்ந்த  ஓர் இசைக்கருவியாகும். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்றது.

“காலையில் எழுந்தவுடன் படிப்பு” என்று பாரதியார் கூறினார். ஔவையார், தன் பெற்றோரிடம் கோபம் கொண்ட முருகப் பெருமானை வசியம் செய்யத் தன் இசையைப் பயன்படுத்தினார்.

நாடகத்தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகள் சேர்ந்த ஒரு கூட்டு. மக்களுக்கு எளிய முறையில் உணரவைக்கும் ஓர் அபூர்வக் கலை. இதற்குத் தேவை கதாப்பாத்திரங்கள், ஒலி, ஒளி, ஒப்பனை, ஓவியம் மற்றும் மேடை அலங்காரம்.
தமிழ் நாடகங்களில் தெனாலி  ராமன், மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் மற்றும்  திருவிளையாடல்  மிகவும்  பிரபலமானவை . அவற்றின் கருத்தும், உணர்ச்சிபூர்வ  உரையாடல்களும் மக்களின் மனதில் இன்றும் நிலைத்து உள்ளன. கண்ணகியின் சிலப்பதிகாரம் அறியாத தமிழன் உண்டோ? பொய்யான ஒரு வழக்கில் தன் கணவனை இழந்த கண்ணகி, பாண்டிய மன்னனின் அரண்மனையில் வாதம் செய்து பாண்டிய மன்னனின்  முடியைச் சாய்த்த  கூற்று இன்றும்  நம் மனதில்  உள்ளது . 

முத்தமிழின்  பலன்கள்
முத்தமிழானது தொன்று தொட்டுப் பல தலைமுறைகளாக நம் தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்து வருகிறது. இயல், இசை, நாடகம், ஆகிய மூன்று பிரிவுகளிலும் பணியாற்றியவர் பலர்.

முத்தமிழானது சமுதாயத்திற்கு எவ்வாறு உதவும் என்று பார்க்கலாம். உலக மக்களை ஒன்று சேர்ப்பது இசையே. நாம் நம் விருப்பு, வெறுப்புக்களை விடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் நம் கலைகளைப் பரிமாறிக் கொண்டு கலாச்சாரத்தின் சிறப்புகளை மதித்து, உணர்ந்து செயல் படவேண்டும். இதற்கு இயல், இசை, நாடகம் நமக்குப் பெரிதும் உதவும்.  ஒரு செய்தியை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நாடகம் பெரிதும் உதவும். பெரும் காப்பியங்களை எளிய முறையில் நமக்குப் புரியவைப்பது இயல், இசை, மற்றும் நாடகமே. நம் முன்னோர் நமக்குக் கூறியவற்றை மறவாமல் நம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு முத்தமிழ் பயன்படுகிறது. முத்தமிழில் ஒரு பிரிவையாவது  நம் வாழ்கையில் நாம் படித்தால் நமக்கு நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகும். இசை நிகழ்ச்சிகள், பேச்சுரைகள் மற்றும் நாடகங்களை நாம் ஒன்று  கூடிக் கேட்டு, கண்டு,  மகிழும் போது நம் சமுதாயம் ஒன்று சேருகிறது . நம் நாடு முன்னேறச் சமுதாயத்தின் ஒற்றுமை முக்கியமானது.

எனக்கு எவ்வாறு இசை உதவுகிறது என்று பார்த்தால், மன அமைதியையும், பிறருடன் பழக வாய்ப்பையும் அளிக்கிறது. மேலும், என்னால் புதுக் கலைகளையும், கலாச்சாரங்களையும்  அறிந்து அதன் பெருமைகளையும் உணரமுடிகிறது. நான் பாடல்களைக் கேட்கும்பொழுது அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். இந்தப் பழக்கத்தை நான் கதைகளுக்கும் மற்றும் கவிதைகளுக்கும் உபயோகப்படுத்துகிறேன். இசைக் குடும்பத்தில் பிறந்ததால், நான் இசையின் பெருமையை உணருகிறேன்.

முடிவுரை
ஆக முத்தமிழின் பயன்கள் பற்பல என நாம் உணருகிறோம் . வெவ்வேறு கலைகளின் பிரதிபலிப்புத் தான் இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழ். நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அவை மிக மிக முக்கியமானவை என்று உணர்ந்து நாமும் நம் பிள்ளைகளையும் அக்கலைகளில் பயிற்சி பெற்றுப் பிறருடன் அதனைப் பரிமாறிக் கொள்ளவேண்டும் .

சான்றுக் குறிப்புகள்:


No comments:

Post a Comment