Saturday, September 21, 2013

பாரதியார் vs. ஷெல்லி

பாரதியார் vs. ஷெல்லி
ஸ்வேத்தா மணிவாசகம், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி இந்த கட்டுரையில் மஹாகவி பாரதியாரைப் பற்றியும் காதல் புலவர் ஷெல்லி பற்றியும் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  பாட்டுக்கொரு புலவன் பாரதி, இவர் பாரதியார் என்றும், மகாகவி பாரதியார் என்றும் அழைக்கப்படுகிறார். பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி  ஒரு ஆங்கிலக் கவிஞர்(1) கற்பனையியல் இயக்கத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர்.  

பாரதியார் திசம்பர் 11, 1882(1882-12-11) எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியாவில் பிறந்தார்(2). தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.        

இவருடைய கவித்திரனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது. தம் தாய் மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்புகொண்டவர். பன்மொழிப்புலமை பெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " எனக் கவிதை புனைந்த கவிஞர். சமஸ்க்ருதம், வங்காளம்,ஹிந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிபுலமை பெற்றவர்.  அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புக்களைத் தமிழாக்கம் செய்தவர். 
    
ஆங்கில அறிவும் புலமையும் இருந்த காரணத்தால் ஆங்கில கவிஞர்கள் பலரையும் அவர் கற்றிருந்தார். ஆங்கில கவிஞர்களான ஷேக்ஸ்பியர், டென்னிசோன், வோர்ட்ஷ்வர்த் முதலானவர்களை அறிந்திருந்தார். ஆங்கில கவிஞர்களில் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமது அழியாத கவிதைகளை படைத்து அற்பாயுளில் மாண்டுபோன கவிஞர்களான பைரன், கீட்ஸ், ஷெல்லி ஆகிய மூவரிடத்திலும் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த காலத்தில் அவர் “ஷெல்லி தாசன் என்னும் புனைப் பெயரில் பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார் (3).

இளமையில் தமது ஊரில் ஓர் சங்கம் ஏற்படுத்தி ஷெல்யின் நூல்களைப் படித்துக் காட்டி அங்கு உள்ளவர்களைக் ரசிக்கும்படி செய்து வந்தார்.

வெயிலொளி எந்த பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாக தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கில கவிஞர் கூறுகின்றார்.  எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன.

ஷெல்லியின் ஏபிசைக்கிடியன் என்ற அற்புதமான காதல் கவிதையில் காணப்படுகின்ற

“.................. as in the splendour of the Sun,
All shapes look glorious which thou gazest on!”

என்ற வரியைதான் பாரதி மேலே குறிபிட்டுள்ளார் என்பதையும் இதன் மூலம் பாரதி ஷெல்லியை மிகவும் ஆழமாக கற்றிருக்கிறார் அன்பது தெரியவருகிறது. ஷெல்லியின் புரட்சிகரமான கருத்துக்களை ஒப்புக் கொள்ள மறுப்பவரும் ஒதுக்கிதள்ளிவிடுபவருமான எட்மண்ட்ஸ் என்ற விமர்சகர் ஷெல்லியைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.

“வேறு எந்த ஒரு பெருங் கவிஞனைக் காட்டிலும் ஷெல்லி தன் கவிதையாகவே வாழ்ந்தான். அது தங்கு தடையற்ற ஆர்வ உணர்ச்சிகளும், அற்புதமான கனவுகளும் நிறைந்ததாக   இருந்தது.  “அவன் எப்படி வாழ்கையில் தனித்து நின்றானோ , அதே போல் ஆங்கிலக் கவிஞர்கள் மத்தியிலும் தனித்தே நின்றான்.” என்றும் கூறுகிறார்.

மேலும் இருவரது வாழ்க்கையிலும் கூட நாம் பல்வேறு ஒற்றுமைகளைக் காண முடியும். அவற்றைக் காண்பதமூலம். இருவரையும் நாம்  நன்கு புரிந்துகொள்ள இயலும்.  பாரதியின் வாழ்க்கையை நாம் அறிவோம்; ஆனால் ஷெல்லியின் வாழ்க்கையை தமிழ்  மக்கள் பலரும் அறிந்திருக்க வாய்பில்லை.  எனவே ஷெல்லி, பாரதி ஆகியோரின் வாழ்க்கயையும், அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளையும் இங்கு சுருக்கமாக காண்பது அவசியம்.

பாரதியும், ஷெல்லியும் இரு வேறு புரட்சிகளின் விளைவாக உருவான கவிக்குழந்தைகள். ஷெல்லி 1789 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை; பாரதி 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த ருஷ்யப் புரட்சியின் குழந்தை. 

ஷெல்லியின் வாழ்க்கையோடு பாரதியின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது இருவருக்குமுள்ள சில ஒற்றுமை வேற்றுமைகள் நமக்கு தெரிய வரும்.  ஷெல்லியைப் போலவே, பாரதியின் பள்ளிப்படிப்பும் நீண்டகாலம்  நீடிக்கவில்லை; இருவருக்குமே அன்றைய கல்வி முறை பிடிக்கவில்லை. இருவரது வாழ்க்கையுமே போராட்டமாகத்தான் இருந்தது. பாரதியிடமும், ஷெல்லியிடமும் கருணையுள்ளத்தையும், தாராள மனப்பான்மையையும் காணமுடியும்.

மேலும் நேர்மையிலும் மானவுணர்ச்சியிலும் இரு கவிஞர்களுமே ஒத்த மனப்பான்மை கொண்டவர்களாக  இருந்தார்கள். தமக்கு உண்மை என்று பட்டதை மறுக்கவோ , அல்லது மறைக்கவோ முற்பட்டதில்லை. பாரதியும் ஷெல்லியும் குறைந்தவயதிலேயே மறைந்துபோனவர்கள்; எனினும் அந்த குறுகிய காலத்தால் அழியாத பல படைபுக்களையும் வழங்கிச் சென்றவர்கள். ஷெல்லி இளமையிலேயே நாவல்,அரசியல் கட்டுரைகள், துண்டு பிரசுரங்கள், இலக்கிய விமரிசனங்கள்,  முதலிய ஏராளமான கவிதைகளையும் படைத்துள்ளான். பாரதியும் அவ்வாறே வசன இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் புதிய சிந்தனைகளைத் தரும் பல படைப்புகளைத் தந்து, அத்துடன் சிறந்த கவிதைகளையும் வழங்கினார் என்பதை நாம் அறிவோம்.

ஷெல்லி பல்வேறு கவிதைகளிலும் சமத்துவத்தின் மேன்மையையும் இன்றியமையாமையையும் வற்புறுத்திச் செல்கிறார். பாரதியும் அவரது கவிதைகளில் சமத்துவக் கொள்கையை வற்புறுத்துகிறார். பாரதியும், ஷெல்லியும் வாழ்ந்த காலத்தில் இவர்களை அவரவரின் நாடு சரிவர உணர்ந்து கொள்ளவில்லை.  ஷெல்லியின் புரட்சிப் படைப்புகள் பலவும் அவரது மரணத்திற்குப் பின்னரே அச்சிடும் வாய்ப்பைப் பெற்றன. ஷெல்லியைப்போல் பாரதியின் புகழும் அவனது மரணத்திர்க்குப் பின்னர்தான் ஓங்கத் தொடங்கியது.  ஷெல்லி பாரதி இருவரும் மனித குலத்தின் சகலவிதமான விடுதலைகளுக்காகவும் பாடி, மனித குலத்தை உயர்ந்த நிலைக்குக்  கொண்டு செல்லக் கனவு கண்டு அந்த லட்சிய வேட்கையோடு  இலக்கியப் படைப்புகளை எழுதிச் சென்ற காரணத்தால் இருவருமே உலகதின் சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்கள். அதன் மூலம் அழியாப்புகழுடன் வாழ்கிறார்கள்.

மஹாகவி பாரதியையும், ஷெல்லியையும் பற்றி ஒப்பிட்டுப் பார்த்து கட்டுரை எழுதும் வாய்புக் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இரு பெரும் கவிஞர்களை பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோல் நமது நாட்டின் மற்ற புகழ் மிக்க கவிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

சான்றுக்குறிப்புகள்
1. http://en.wikipedia.org/wiki/Percy_Bysshe_Shelley
2. http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathi
3. http://www.openreadingroom.com/wp-content/uploads/2011/11/பாரதியும்-ஷெல்லியும்.pdf

(ரகுநாதன்)

1 comment:

  1. Very good , congrats for your great efforts dear , keep on going 😃

    ReplyDelete