Tuesday, November 26, 2013

புகைவண்டி அனுபவம்

பொதுவா நான் தினமும் காலை 7.55 மணிக்கு புகைவண்டியை எடுத்து 9.00/9.05க்கு அலுவலகத்துக்குள் நுழைவேன். போன மாதத்தில் இருந்து புகைவண்டிகளுக்கான நேர அட்டவணையை மாற்றிவிட்டார்கள். எனக்கு இந்த புது அட்டவணை முழுமையாக பிடிபடாததால 7.51 வண்டியை தான் எடுக்கிறேன். அதை விட்டால் 7.54க்கு ஒரு வண்டி இருக்கும் என்று தெரியும். இன்று காலை எந்திரிக்கவே கொஞ்சம் லேட்டாகி விட்டது. அதனால அடிச்சு புடிச்சு கிளம்பினேன். அப்பவே தெரியும் 7.51 வண்டியை பிடிக்க முடியாதுன்னு. சரி எப்படியும் 7.54 வண்டியையாவது பிடித்துவிடலாம்னு வேக வேகமா வீட்டிலிருந்து காரை எடுத்துக்கிட்டு போனேன். சிக்னல் கிட்ட வரும்போது தான், சரியா சிகப்பு விளக்கு விழுந்துச்சு. நடக்கிறவங்களுக்கான சிக்னல் வந்துச்சு. பார்த்தா யாரும் ரோட்டை கடக்கிற மாதிரி தெரியலை. யாரோ ஒரு பிரகஸ்பதி, ரோட்டை கடக்கிறதுக்கான பொத்தானை அமுக்கிவிட்டுட்டு, சிக்னல் வருகிற வரைக்கும் காத்திருக்காமல் வண்டிகள் வராத நேரம் பார்த்து சாலையை கடந்து போய் விட்டார் போல இருக்கு (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அபராதம் போட மாட்டேங்குறாங்க!!!). ஒரு வழியா நான் காரை கொண்டு போய் நிறுத்திட்டு, புகைவண்டி நிலையத்துக்குள்ள நுழையும்போது, ஒரு வண்டி வந்து நின்னுச்சு. நானும் 7.54 வண்டி தான் வந்துடுச்சுன்னு, ஓடிப்போய் உள்ளே ஏறி உட்கார்ந்தேன். எனக்கு எப்பவுமே அலுவலகத்துக்கு போகும்போதும்,வரும்போதும் தமிழ் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. அது மாதிரி, இன்னைக்கு காலையிலும் இங்கு உள்ள நூலகத்திலிருந்து எடுத்த “பாண்டிமா தேவி” புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரம் போன பிறகு தான் தலையை தூக்கி வெளியே பார்த்தேன். அப்ப வண்டி ஒரு ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு. பார்த்தா அது “லிவர்பூல்” ஸ்டேஷன். நான் இருக்கும் “இங்கில்பர்ன்” ஸ்டேஷன்லேருந்து சிட்டிக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்கும். ஒரு வழி ஏர்போர்ட் வழியா செல்லக்கூடிய வழி. மற்றொன்று சுற்றிக் கொண்டு போகும் வழி. இரு வழிக்கும் கிட்டதட்ட 20 நிமிடம் வித்தியாசம் இருக்கும். அதனால சிட்டிக்கு போறவங்க எல்லோரும் ஏர்போர்ட் வழியில தான் போவாங்க. ஆனா நான் இன்னைக்கு ஏறிய வண்டியோ சுற்று வழியில செல்லக்கூடிய வண்டி. இந்த மாதிரி தப்பா எறிட்டா, “கிளென்பீல்ட் ஸ்டேஷன்ல” (எங்க ஸ்டேஷன்லேருந்து ரெண்டாவது ஸ்டேஷன்) இறங்கிக்கிட்டு மாறிப்போகலாம். ஆனா நானோ புத்தகம் படிக்கிற ஆர்வத்துல, அந்த ஸ்டேஷனை விட்டுட்டேன். இனி ஒண்ணும் பண்ண முடியாது, லேட் ஆனது, ஆனது தான்னு மறுபடியும் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு முன்னாடி உள்ள சீட்ல ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தாங்க. 

நானும் மும்முரமா அந்த கதையை படிச்சுக்கிட்டு இருக்கும்போது, யாரோ தமிழ்ல பேசுற மாதிரி சத்தம் கேட்டுச்சு. புத்தகத்திலிருந்து தலையை தூக்கி, சுத்தி பார்வையை ஓட விட்டா, தமிழ்க்காரங்க யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. மறுபடியும் புத்தகத்துல தலையை நுழைச்சுட்டேன். திருப்பியும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம், “வேணாம், வேணாம், சொல்றேன் கேளு” அப்படின்னு சினிமால பேசுற மாதிரி வசனம் கேட்டுச்சு. ஒரு வேளை நம்ம போன் தான் அன்லாக் ஆகி, யூடியூப் ஏதாவது ஓபன் ஆயிடுச்சான்னு ஒரு சின்ன சந்தேகம். போனை எடுத்துப்பார்த்தா, அது ரொம்ப சமர்த்து பாப்பாவா லாக் ஆகியேயிருந்தது. கொஞ்ச நேரம் காதை தீட்டிக்கிட்டு உத்துக்கேட்டேன், சந்தேகமே இல்லை யாரோ தமிழ் படம் பார்த்துக்கிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது. சுத்திப் பார்த்தா எந்த முகமும் தமிழ் முகமாட்டம் தெரியலை. அப்புறம் யாருடா தமிழ் படத்தை பார்த்துக்கிட்டு வராங்கன்னு, முன்னாடி சீட்டை எட்டிக்கிட்டு பார்த்தா, அந்த பெண்மணி சின்னதா இருக்கிற டி‌வி‌டி ப்ளேயர்ல படம் பார்த்துக்கிட்டு வந்தாங்க. இத்தனைக்கும் அவுங்க அந்த ஒயரை காதுல தான் மாட்டி இருந்தாங்க. ஆனாலும் அவுங்களுக்கு சத்தம் பத்தலை போல, அதனால சத்தம் எவ்வளவுக்கெவ்வளவு வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு வச்சிருக்காங்க. நல்ல காலம், அவுங்களை யாரும் ஒண்ணும் கண்டுக்கலை. சரி, ஏதாவது ஒரு புது படமா இருக்கும், கொஞ்ச நேரம் அதை பார்த்துக்கிட்டு போகலாம்னு நினைச்சு, நானும் புத்தகத்தை மூடி வச்சுட்டு, எட்டிக்கிட்டு அந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சம் பழைய படம். எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்ன்னு ஒரு காமெடி ஸீன் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நானும் நல்லா ரசிச்சு பார்த்துக்கிட்டு வந்தேன். அப்ப தான் வண்டி, “கிரான்வில் ஸ்டேஷன்ல” நின்னுச்சு. உடனே அந்த பெண்மணி, அப்படியே அந்த டி.வி.டி. ப்ளேயரை மூடிட்டு எந்திரிச்சாங்க. 

நானும், அடடா, அந்த அம்மா எந்திரிச்சிட்டாங்களே, சரி எந்த ஸ்டேஷன்ன்னு பார்த்தா, ஆஹா, நம்ம இறங்கி வேற வண்டி மாற வேண்டிய ஸ்டேஷன் ஆச்சேன்னு, இறங்கப் பார்த்தா, கதவு மூட ஆரம்பிச்சுடுச்சு. நம்ம உருவம் தான் ரொம்ப சின்ன உருவம் ஆச்சே, அதனால கதவு மூட, மூட நான் வண்டிக்கு வெளியே குதிச்சுட்டேன் (ஒல்லியா இருக்கிறதுனால நிறைய வசதி!!!). அப்பாடான்னு அடுத்த வண்டியை பிடிச்சு ஒரு வழியா 9.30 மணிக்கு ஆபிஸ் போய் சேர்ந்தேன். எங்க டீம்ல எப்பவுமே ஒண்ணு ரெண்டு பேர் கொஞ்சம் லேட்டா வருவானுங்க, இன்னைக்குன்னு பார்த்து எல்லாரும் சீக்கிரமா வந்துட்டானுங்க போல, நான் தான் கடைசியா வந்து என் சீட்ல உட்கார்ந்தேன். 

நான் உட்கார்ந்த உடனே போன், பார்த்தா வீட்டு அம்மணி. “என்னங்க கரெக்டா ஆபிஸ் போய் சேர்ந்திட்டீங்களான்னு” ஒரு விசாரணை. நம்ம வண்டி மாறி ஏறுன விஷயம் தெரிஞ்சு தான் கேக்கிறாளான்னு, மண்டைக்குள்ள ஒரு குடைச்சல். அதெல்லாம் தெரிஞ்சிருக்காதுன்னு மனசை சமாதானம் பண்ணி, “இல்ல இப்பத்தான் ஆபிஸ்குள்ளேயே போறேன்ன்னு” சொன்னேன். “உடனே, ஏங்க அவ்வளவு லேட்ன்னு” ஒரு கேள்வி. நான், “இல்லம்மா, வண்டியை வர்ற வழியில, ரொம்ப நேரம் நிறுத்தி போட்டுட்டாங்கன்னு, அதான் லேட்டு (இங்க அடிக்கடி அந்த மாதிரி நடக்கும்). அதனால  இன்னைக்கு வீட்டுக்கு வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்னு ஒரு பிட்டை போட்டேன். சரி, சரி ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லி வச்சாங்க. நான் மட்டும், கதை படிச்சுக்கிட்டு போனதால வண்டி மாறி ஏறிட்டேன்ன்னு சொல்லியிருந்தேன், அவ்வளவு தான், உங்களுக்கு இதே பொழப்பா போச்சு, கதை புக் படிக்க ஆரம்பிச்சீங்கன்னா, வெளி உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கதைக்குள்ளேயே மூழ்கிடுவீங்களேன்னு ஒரே டோஸ் மழை பொழிஞ்சிருக்கும்.


என்னங்க பண்றது, வீட்டு அம்மணிக்கு அப்படி பயப்படுறதுனால தான், இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியதாக இருக்கு. 

7 comments:

  1. எனக்கும் நிறைய இந்த மாதிரி நடந்திருக்கு.... அதை தனிப்பதிவா சொல்றேன்....

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்கள் நண்பரே, நாங்களும் அந்த அனுபவத்தை தெரிந்து கொள்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. தமிழ்ப்படம் பார்த்த பொண்ணை விசாரிக்காம விட்டுட்டீங்களே சார்....

    ReplyDelete
    Replies
    1. அட! நீங்க வேற, அந்த அம்மா எந்திரச்ச பிறகு தான், நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன்ன்னு தெரிஞ்சுது. இதுல நான் எங்க போய் அவுங்களை விசாரிக்கிறது.

      Delete
  3. இத உங்க அம்ம்ணி படிக்கமாட்டாங்க என்ற தைரியமா? மாட்டினீங்க ஐயா! பாவம், எழுதும்போதும் அரிச்சந்திரனா இல்லாம சிலத மறைக்கனும்னு உங்க வாத்தியார் சொல்லித்தரலையா???

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது. எல்லாருக்கும் உண்மையானவனாக இருக்கிறதுனால மறைக்க தெரிய மாட்டேங்குது. பேசாம உங்க கிட்டேயிருந்து, சிலதையெல்லாம் எப்படி மறைக்கணும்னு கத்துக்கலாம்னு இருக்கிறேன் அன்பு ஜெயா சார்.

      Delete
    2. பயிற்சி குடுத்துட்டா போச்சி!

      Delete