Thursday, February 14, 2019

காதலர் தினம்





இது ஒரு மீள்பதிவு. இந்த பதிவு எழுதியே ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த பதிவுல அடுத்த வருஷம்   சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லியிருந்திருக்கிறேன். இன்னைக்குத்தான் மறுபடியும் இந்த பதிவை படிக்கும்போது அப்படி சொன்னதே நியாபகத்துக்கு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மணி இந்த நாளைப் பற்றி நினைக்கிறது எல்லாம் இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்ல. 


இனி இந்த மீழ் பதிவுக்குள் போகலாம். 

எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. 

இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன்.

ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா, ஆ,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. 

உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு என் கோணத்தில் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். 

விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்


எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். 

20 comments:

  1. கடைசியா சொன்னதுதான் செம .100 வீதம் காதலை கொண்டாட நாம் வெயிட் பண்ணுவோம் :)
    அதுக்குள்ளே அந்த ரோஜா செடிகளுக்கு மறக்காம தண்ணி ஊத்திடுங்க .

    ReplyDelete
    Replies
    1. நாம வெயிட் பண்ணுவோம். அந்த செடிகளுக்கு குழந்தைகள் தண்ணி ஊத்த ஆரம்பித்து விட்டார்கள்
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. இன்னும் ரெண்டு மூணு மாசத்தில் அன்னையர் தினம் வருது :) பிள்ளைங்களோட சேர்ந்து அசத்திடுங்க

    ReplyDelete
    Replies
    1. அசத்திட்டா போச்சு

      Delete
  3. இளமையிலே காதல் வந்தால், எது வரையில் கூட வரும்...?
    முழுமை பெற்ற காதல் என்றால், முதுமை வரை ஓடி வரும்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க டிடி.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. நூறு சதம் காதலை மட்டுமே கொண்டாடும் நாள் இன்னுமா வரல?!

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய உறவுகள்,சுற்றத்தார்கள் வட்டத்தில் நூறு சதவீத காதலை கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்குத்தான் தெரியலை.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. உங்க அனுபவத்தை அழகா சொல்லிருக்கீன்றீர்கள். அதுவும் இறுதியில் சொன்னவை அருமை!! உண்மை...

    ஆனால் இறுதி வரை தொடர்வதுதான் உண்மையான காதல்...அன்பு!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. ஐயோ, என்னுடைய அனுபவம் இல்லை. வெறும் கற்பனை தான். என்னைப்பற்றி தெரிந்ததனால், வீட்டு அம்மணி எது ஒன்றும் என்னிடம் கேட்பதில்லை.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. அதை மீ'ள்' பதிவு என்று திருத்தி விடுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. திறுத்திவிட்டேன். எழுத்துப்பிழையை திருத்தியதற்கு மிக்க நன்றி

      Delete
  8. வயதோடு வந்தாலும் காதல்...
    அது வயதாகி வந்தாலும் காதல்...

    ReplyDelete
    Replies
    1. என்னோட கருத்தை சொன்னேன் சார்

      Delete
  9. உங்கள் கவிதை உண்மையைச் சொல்கிறது. ஆனால் கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பொய் சொல்ல வராதே(??). அது தானே பிரச்சனை

      Delete
  10. கவிதை அருமை. சரியாய் சொன்னீர்கள்! இந்த பதிவை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் மீள்பதிவாக போடலாம். பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  11. நல்ல பகிர்வு. இந்த வருடமும் வாங்கிக் கொடுக்காம ஏமாத்திட்டீங்க போல. :(

    ReplyDelete
  12. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    நாம யாரு!!! எல்லா நாளும் நமக்கு காதலர் தினம் தானே

    ReplyDelete