ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
“மவம்பர் (Movember Foundation)” என்னும் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் , இங்கு ஆஸ்திரேலியாவில்
ஆண்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும்
மீசையை மழிக்காமல் வளரக்கச் சொல்லி இதில் பங்குப்பெறுமாறு
அழைக்கிறது. அதன்படி இந்த விழிப்புணர்வில் பங்குபெறும் ஆண்கள், முதலில் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு , அந்த இணையத்தளத்தில் , ”MO SPACE” என்று ஒரு பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, நவம்பர் மாதம்
முழுவதும் மீசையை வழிக்காமல் இருப்பார்கள். இப்படி அவர்கள் தங்களின் முக அழகை மாற்றிக்
கொண்டு,இந்த விழிப்புணர்வில் பங்குபெறுவதால். அவர்களை ஊக்குவிக்கும்
விதமாக அவர்களின் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என எல்லோரும் அவரின் அந்த இணையத்தள பக்கத்திற்கு சென்றோ
அல்லது அவரிடம் நேரிடையாகவோ பணத்தை அன்பளிப்பாக அளிப்பார்கள். இப்படி இந்த விழிப்புணர்வில்
பங்குபெற்ற அனைவரின் மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்த தொண்டு நிறுவனம், ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கு
அளித்துவிடும். இதில் ஆண்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை, பெண்களும் பங்குக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள், ஓட்டு மீசையை வைத்துக்கொண்டு,
இந்த விழிப்புணர்வில் பங்குக்கொள்கிறார்கள். இதில் பங்குபெறும் ஆண்களை “MOBROS” என்றும் பெண்களை “MOSISTAS” என்றும் அழைக்கிறார்கள்.
இந்த விழிப்புணர்வில் எனக்கு தெரிந்த
தமிழ் நண்பர்கள் யாராவது பங்கேற்றிக்கிறார்களா என்று பார்த்த பொழுது, இதோ நான் இருக்கிறேன்
என்று கூறி நண்பர் திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் சென்ற ஆண்டு இந்த விழிப்புணர்வு மாதத்தில்
கலந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். (இவர் பொதுவாக மீசையை மழிப்பவர்).
பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று
நோயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு வரும் இந்த புரோஸ்டேட் புற்று
நோயைப் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. இந்த நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்
என்பதைப் பற்றி இணையத்தளத்திலும், மருத்துவ நண்பரிடமும் படித்து கேட்டதை உங்களுடன்
பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஆண்களுக்கு வயதாகும்போது, இந்த புரோஸ்டேட்
சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு பிரச்கனைகள் ஏற்படாமலிருக்க அந்த மருத்துவ
நண்பர் கூறிய அறிவுரைகள் என்னவென்றால்,
·
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். (இந்த தண்ணீர் தான் நம்முடைய
உடம்புக்கு எவ்வளவு நல்ல வேலைகளை செய்கிறது)
·
இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இறுக்கமான
உள்ளாடைகளை அணிந்து கொண்டு,ஜீன்ஸ் பாண்ட் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
(இதுக்குத்தான் நம்மூரில் அந்த காலங்களில் பட்டாப்பட்டி டிரௌசரை அணிந்து வேட்டியை அணிந்துகொண்டார்களோ!!!)
·
சில படங்களில், நகைச்சுவை என்ற பெயரில்,”நான் உள்ளாடையை அணியவில்லை என்று கூறுவார்கள்” அப்படி உள்ளாடை அணியாமல் இருக்க்மான
பாண்ட் அணிந்தாலும் இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாம்.
·
ஆண்களாகிய நாம் எப்பொழுதும் அலைப்பேசியை பாண்ட் பாக்கெட்டில்
தான் வைத்திருப்போம். அலைப்பேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூலமாகவும் இந்த
நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது (அடக்கடவுளே. அப்புறம் எங்க தான் அந்த போனை வைத்துக்கொள்வதாம்!!!)
·
புகைப்பிடிப்பதுனாலும் இந்த நோய் வருமாம்(புகைப்பிடிப்பதால்
எந்த நோய் தான் வராது!!!!)
·
கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்து விட
வேண்டும். அதாவது இந்த ஜங்க் உணவுகளை தவிர்க்து விட வேண்டும்.
·
பழங்கள்,காய்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.
·
உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது BMI (Body Mass Index) சரியாக இருக்க வேண்டும்.
இங்கு, வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும்
இந்த நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை
பேர் இந்த விழிப்புணர்வை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
பின்குறிப்பு:
பல வருடங்களுக்கு முன் நான் லண்டனுக்கு
சென்றபோது, அங்குள்ளவர்களைப் பார்த்து, எனக்கும் மீசையை எடுத்தால்
என்ன என்று ஒரு விபரீத ஆசை தோன்ற, நானும் உடனே மீசையை எடுத்துவிட்டேன்.
எடுத்த பிறகு தான் தெரிந்தது, ஏண்டா எடுத்தோம்னு, ஏன்னா, என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே சகிக்கலை.
போதாக்குறைக்கு என்னுடன் பணிபுரிந்த தமிழ் நண்பர்கள் எல்லாம், “டேய், நாங்க தினமும் உன்னைய பார்த்து, அணு அணுவாக செத்துக்கிட்டு இருக்கோம். ஏதாவது செய்து, சீக்கிரம் மீசையை வளர்த்துக்கோன்னு சொல்லி கடுப்படித்தார்கள்”. இப்ப அதை நினைச்சு
பார்க்கும்போது, நண்பர் கில்லர்ஜி தான் நியாபகத்துக்கு வந்தாரு.
அவருடைய புகைப்படத்தை பார்த்தபோது, எப்படித்தான் இப்படி மீசையை
உரம்போட்டு வளர்க்கிறாரோன்னு தோணுச்சு. இவர் நவம்பர் மாதம் மட்டும் இங்கு வந்தால், இவர் தான் அதிகமான அன்பளிப்பை அந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பார். அவரை புகைப்படத்தில் பார்க்காதவர்கள் இங்கு சென்று அவரைப் பார்க்கவும் - கில்லர்ஜியின் புகைப்படம்












