Saturday, May 18, 2013

பதினோராவது திருமணப்பொருத்தம்

நான் அப்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது, பத்துப்பொருத்தம், பத்துப்பொருத்தம்னு சொல்றாங்களே, அது என்னன்னு எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு ஒரே மண்டை குடைச்சல். அப்ப எல்லாம், இந்த “கூகுள் சாமியாரை” பற்றி யாருக்கும் தெரியாது.அதனால எந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கணும்னா, ரொம்பவும் சிரமப்பட்டு தான் தெரிஞ்சுக்க முடியும். யாராவது ஒரு ஜோசியர் கிட்ட பத்துப்பொருத்தத்தை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னா, மனசுக்குள்ள கொஞ்சம் தயக்கம். இதை போய் எப்படி ஒரு ஜோசியர் கிட்ட கேட்கிறதுன்னு(அந்தாள் நம்மளை பத்தி தப்பா நினைச்சுட்டா!!!!). அதனால ஒரு நாள் நூலகத்துல போய், திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படின்னு ஒரு புத்தகத்தை தேடி கண்டுபிடிச்சு படிச்சுப்பார்த்தேன். ஆனா நம்ம மரமண்டைக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் மனசுக்குள்ள இருந்த தயக்கத்தை தூக்கிப்போட்டுட்டு, என் நண்பன் தங்கியிருந்த மான்சன்ல, தங்கியிருந்த ஒரு ஜோசியர்கிட்ட போய், தயங்கி தயங்கி அதை கேட்டேன். உடனே என்னைய அவர் ஒரு லுக் விட்டாரு பாருங்க. அட! கிரகமே! இந்த கருமத்துக்கு தான், இதையெல்லாம் கேக்கக்கூடாதுன்னு நினைச்சேன். ஆசை யாரை விட்டதுன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு, நானும் அப்பாவியா முகத்தை வச்சுக்கிட்டு அவர் முகத்தை பார்த்துக்கிட்டு இருந்தேன். அவரும் என்னைய பார்த்து என்ன நினைச்சாரோ, என்ன தம்பி, அதுக்குள்ள திருமணப் பொருத்தத்துக்கு வந்துட்டீங்கன்னு கேட்டாரு. அவரு சாதாரணமா தான் கேட்டாரு. ஆனா எனக்கு தான் அவரு நக்கலா கேக்கிற மாதிரி தோணுச்சு. எனக்கு ஜாதகம் பார்க்கிறதுக்கு கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எனக்கு தெரிஞ்சவுங்க எல்லோரும் நீ முதல்ல திருமணப் பொருத்தம் பார்க்க கத்துக்க, அப்புறம் ஜாதகம் பார்க்க கத்துக்கலாம்னு சொன்னாங்க, அதனால தான் நான் திருமணப் பொருத்தத்தை கத்துக்கலாம்னு வந்தேன்னு ஒரு பிட்டை போட்டேன். அந்த ஜோசியரும் நான் சொன்னதை நம்பி, அப்படியா தம்பி, ஜாதகம் பார்க்கிறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல, நிறைய கூட்டல், கழித்தல், அப்புறம் முக்கியமா நட்சத்திரங்கள்,ராசிகள்ன்னு தெரிஞ்சிருந்தா போதும், சுலபமா கத்துக்கலாம்னு சொல்லி, நாளான்னிக்கு வாங்க, நிறைஞ்ச அமாவாசை. முதல்ல திருமணப்பொருத்தம் பார்க்கிறது எப்படின்னு சொல்லித்தறேன்னு சொன்னாரு.

அமாவாசை அன்னைக்கு, நானும் என்னோட ஒரு நண்பன் சேகரும் அவரோட அறைக்கு போனோம். அவருக்கிட்ட என்னோட நண்பனும் கத்துக்கணும்னு ஆசைப்படுறான்னு சொன்னேன். அதுக்கென்னா, பேஷா கத்துக்கொடுத்தா போச்சுன்னு சொல்லி முதல்ல அந்த பத்துப்பொருத்தம் என்னன்னு சொன்னாரு.

நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி) 
கணப்பொருத்தம்:  (மங்களம்)
மகேந்திரப் பொருத்தம்:  (சம்பத்து விருத்தி)
ஸ்திரீ தீர்க்கம்:   (சகல சம்பத் விருத்தி)
யோனிப் பொருத்தம்:  (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
ராசி அதிபதிப்-பொருத்தம்:   (சந்ததி விருத்தி)
வஸ்யப்-பொருத்தம்:   (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
 ரச்சுப் பொருத்தம்:  (தீர்க்க சுமங்கையாய் இருப்பது)
வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)

அவர், இந்த பொருத்தம் அனைத்துக்கும் விரிவா விளக்கம் கொடுத்தவுடனே, என் கூட இருந்த நண்பன் என்னிடம், டே!, பார்த்தியா அந்த பொருத்தத்தை சொல்லவே இல்லை அப்படின்னான். நானும் ஆமாண்டா, நீ அப்பவே சொன்னே, நான் தான் உன் பேச்சை கேக்கலை அப்படின்னேன். அந்த ஜோசியருக்கு நாங்க பேசுறது ஒண்ணும் புரியலை. என்ன தம்பி இன்னொரு பொருத்தம்ன்னு கேட்டாரு. என் நண்பனும், அது உங்களுக்கு தெரிஞ்சிருக்காதுன்னு சொன்னான். உடனே, அந்த ஜோசியரும், தம்பிகளா, மொத்தம் 12 பொருத்தம் இருக்கு, ஆனா, பொதுவா எல்லோரும் இந்த பத்துபொருத்தம் தான் பார்ப்பாங்க. அந்த இரண்டு பொருத்தம் வந்து – நாடிப்பொருத்தம் அப்புறம் விருஷம்னு சொல்லி அதுக்கு விளக்கமும் வேற கொடுத்து, நான் ஒண்ணும் ஒரு சாதாரண ஜோசியன் இல்லைன்னு சொல்லாம சொன்னாரு. அப்புறமும், நான் ஐயா, பேர் பொருத்தம்னு ஒண்ணு இருக்கு, அது உங்களுக்கு தெரியலைன்னு சொன்னேன். அவர் ரொம்ப குழம்பி போய், அப்படி ஒரு பொருத்தம் இல்லையே, நீங்க numerology பத்தி சொல்றீங்களா, அதுல கூட இந்த மாதிரி கிடையாதேன்னு சந்தேகமா சொன்னாரு.

உடனே, என் நண்பனுக்கு ரொம்பவும் கோபம் வந்துடுச்சு, இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், கேட்டியா நீன்னு கோவிச்சுக்கிட்டான். நானும், எனக்கு மட்டும் என்னடா இவரைப் பத்தி தெரியும்னு கோபமா சொன்னேன். எங்க ரெண்டு பேரோட கோபத்தை பார்த்து அவருக்கும் ரொம்ப கோபம் வந்துடுச்சு, இப்ப அந்த பேர் பொருத்தம்னா என்னன்னு சொல்லுங்க, இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்கன்னு சத்தமா  சொன்னாரு. நான் உடனே, அது வந்து ஐயா, ஆங்கிலத்துல FLAMESன்னு இருக்குல்ல அதை வைச்சு தான் இந்த பேர் பொருத்தம் பார்க்கிறதுன்னு சொல்லி அதை விளக்க ஆரம்பிச்சேன். புதுசா ஒண்ணு கத்துக்க போற நம்பிக்கையில அவரும் நான் சொல்றதை எல்லாம் ரொம்பவும் கவனமா எழுத ஆரம்பிச்சாரு.

முதல்ல ஒரு பேப்பர்ல FLAMESன்னு எழுதுங்க. அப்புறம் ஆங்கிலத்துல பையனோட பேரை எழுதி, கீழே பொண்ணோட பெயரையும் எழுதுங்க. அப்புறம் ரெண்டு பேர்ல உள்ள பொதுவான எழுத்துக்களை எல்லாம் அடிச்சிடுங்க.அப்புறம் மிச்சம் இருக்கிற எழுத்துக்களையெல்லாம் கூட்டி, என்ன தொகை வருகிறதோ, அந்த தொகைக்கான எழுத்தை வைத்து, அவர்களுக்கு திருமணம் செய்யலாமா, அவர்கள் எவ்வாறு குடும்பம் நடத்துவார்கள்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு சொன்னேன். உதாரணமாக அந்த கூட்டுத்தொகை 12 வந்தால், அந்த எழுத்து "S" - அவர்களுக்குள் திருமண பந்தம் கூடவே கூடாது.

F  - FRIEND
L  - LOVE
A  - AFFECTION
M  - MARRIAGE
E  - ENEMY
S  - SISTER

இதுல
Friend - திருமணத்துக்கு பிறகு இருவரும் நல்ல தோழமையோடு பழகுவார்கள்
love - ரெண்டு பேரும் திருமணம் செய்துக்கொண்டு காதலிப்பார்கள்
Affection - இருவரும் தன் துணையின் மீது அதிக பாசம்,அன்பு வைத்திருப்பார்கள்
Marriage - இருவரும் எல்லோரையும் போல குடும்பம் நடத்துவார்கள்
Enemy - இருவருக்குள்ளேயும் அடிக்கடி சண்டை வரும்
Sister - இருவருக்கும் திருமணம் செய்யவே கூடாது
  
இப்படி அவருக்கு, நாங்கள் புரிய சொல்லி முடித்தோம், அவ்வளவு தான் அவருக்கு வந்ததே கோபம், என்னைய என்ன கேனப் பயல்னு நினைச்சீங்களாடா, ஏதோ சின்னப் பசங்களாக இருக்கீங்க, இப்பவே ஜாதகத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோனியிருக்கேன்னு சந்தோசப்பட்டா, என்னைய வச்சு காமெடியா பண்றீங்கன்னு ஒரே சத்தம். முதல்ல இடத்தை காலி பண்ணுங்க, இன்னொரு தடவை என்னோட ரூமுக்கு வாங்க அப்புறம் தெரியும் சேதின்னு, சரியான காட்டு கத்தல். நாங்களும் எங்களோட வேலை முடிஞ்சுதுன்னு சத்தம் போடமா வெளியே வந்துட்டோம்.

உண்மையிலேயே, எங்க நண்பர்களுக்குள்ள ஒரு சின்ன பந்தயம், அதாவது அந்த ஜோசியரை கலாயிக்க முடியுமா,முடியாதான்னு. நானும் சேகரும்,அவரை கலாயிச்சு காட்டுறோம்னு கோதாவுல இறங்கிய சம்பவம் தான் மேல சொன்ன விஷயம். நாங்க அந்த FLAMESயை எப்படி உபயோக படுத்துவோம்னா, எங்க பேரோட, எங்களுக்கு பிடிச்ச பொண்ணு பேரை போட்டு, பொதுவான எழுத்துக்களை எல்லாம் அடிச்சு, மிச்சம் உள்ள எழுத்துக்களை கூட்டி, அந்த தொகைக்கான எழுத்துக்கு என்ன பயன்னா -

Friend - அந்த பெண்ணோடு வெறும் நட்பு மட்டும் தான்
love - கண்டிப்பாக அந்த பெண்ணும் நம்மை காதலிப்பாள்
Affection - ஒரு தலை காதலில் தான் முடியும்
Marriage - அந்த பெண் நம் வாழ்க்கை துணைவி ஆவாள்               
Enemy – நட்பு கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாது
Sister - அந்த பெண் நம்மோடு பழகி, கடைசியில் அண்ணா என்று சொல்லிவிடுவாள்.

இதையே, நானும் என் நண்பனும் கொஞ்சம் மாற்றி அந்த ஜோசியரை கலாயித்தோம்.

பி.கு: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அந்த ஜோசியர் எங்கள் இருவரையும் பார்க்கும்போது எல்லாம், ஏண்டா, உங்க போதைக்கு என்னைய ஊறுகாயா ஆக்கிட்டேங்களேன்னு ஒரே புலம்பல். அப்புறம் அவரிடம் போய் ஒரு பெரிய மன்னிப்பை போட்டு, சமாதானப் படுத்தியது தனி கதை.





1 comment:

  1. எல்லா பொருத்தமும் சரிதான் ... ஆனா ஜோசியருக்கும் உங்களுக்குமான பொருத்தம்தான் கொஞ்சம் ஆட்டம்கண்டுபோய் இருந்திருக்கு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete