இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து கிட்ட தட்ட 65 ஆண்டுகள் ஆகி விட்டது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று எல்லாத்திலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள், ஆதரவற்ற குழந்தைகள் போன்றவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் ஜூனியர் விகடனில் வெளியான “மீட்கப்பட்ட கொத்தடிமைகள்” என்ற கட்டுரையின் மூலம் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில், வட இந்தியாவில் கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பேட்டியை படித்த போது, நெஞ்சு அப்படியே பதறி விட்டது. இந்த அளவுக்கா மனிதாபிமானம் இல்லாமல் அந்த முதலாளிகள் நடந்து கொண்டார்கள் என்று அந்த முகம் தெரியாத அந்த கல்நெஞ்சக்காரர்கள் மீது ஆத்திரமும், கோபமும் வருகிறது. ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், நாம் சுதந்திரமடைந்து விட்டோம் என்று பெருமை பட்டுக் கொள்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்பதே கேள்வி. வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மக்கள் கடனை வாங்கி இந்தியாவில் இருக்கும் இடைத்தரகர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு, வெளிநாடுகளில் போய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் வாங்கிய கடனை அடைப்பதற்கே தங்கள் வாழ் நாளை வெளிநாட்டில் அடகு வைக்கிறார்கள். சரி, வெளிநாட்டிற்கு போய் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தியாவிலேயே கொத்தடிமைகளாக போய் மாட்டிக்கொள்கிறார்கள். இதனை என்னவென்று சொல்வது. பாரதி மீண்டும் நம் மண்ணில் பிறந்து “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று இந்த கொத்தடிமைப்பட்டவர்களுக்காக பாட வேண்டும்.
கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்டவர்களில், ஒரு சிறுவனுடைய பேட்டி, நம் மனதை மிகவும் கல்லாக்கச் செய்யும். காலையில 4 மணிக்கு எழுந்து, ராத்திரி 12 மணி வரை வேலை. சாப்பாடு ரெண்டு நேரம் தான் அதுவும் காலையில 8 மணிக்கும், அப்புறம் படுக்க போகும் முன்னர் அதாவது இரவு 12 மணிக்கும் தான்(நடுவுல சாப்பாடு கொடுத்தா தூங்கி விடுவார்களாம்). வேலை பார்க்குற இடம் பலகாரக் கடை என்பதால், குடிக்க தண்ணீர் இருக்காதாம். தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் சிறுநீர்/மலம் கழிக்கும் இடத்துக்கு போய் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்(வேலை செய்யும் இடத்தில் தண்ணீர் குடித்து, சிந்தினால் மிட்டாயும், சீனிப்பாகும் சீக்கிரம் கெட்டுப் போய்விடுமாம்). இன்னும் ஒரு மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், மகள் இறந்த தகவலைக் கூட ஒரு தந்தையிடம் சொல்லாமல் வேலை வாங்கி இருக்கிறார்கள் என்பது தான்.
இந்த மாதிரி ஒவ்வொருவரிடமும் ஏராளமான கதைகள். அதை எல்லாம் உண்மையிலேயே படிக்க மனதில் தெம்பு இல்லை. இவை அனைத்தும் நடப்பது நம் தாய் நாட்டில் தான் என்று அறியும் போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.
நம் தமிழக காவல் துறை 42 பேர்களை மீட்டிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், அவர்களையும் விரைவில் மீட்போம் என்று நம் காவல் துறை அந்த பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அது சீக்கிரம் நடந்தால், அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். சீக்கிரம் நடக்கும் என்று நம்புவோம்.
இதில் கொடுமை என்னவென்றால், மீட்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் என்பது தான். இலங்கையிலும் தமிழன் கஷ்டபடுகிறான். இந்தியாவிலும் காவிரி பிரச்சனை என்றால், உடனே பாதிக்கபடுவது தமிழன் தான். முல்லை பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், தமிழன் தான் பாதிக்கப்படுகிறான். கொத்தடிமைகளிலும் தமிழன் தான் அதிகமா இருக்கிறான்.
தமிழனா பிறந்த ஒரே பாவத்துக்காக அவன் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிக்கிறான்.
இதில் எனக்கும் அனுபவம் உண்டு .... ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்யவேண்டும். எல்லா இடங்களிலும் 500 ரூபாய் சம்பளம் எனில் இங்கு சம்பளம் வெறும் 80 ரூபாய்தான். சாப்பாடு வெறும் கஞ்சியும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும்தான். கம்பெனி காம்பவுண்ட்டை விட்டு வெளியில் செல்ல கூடாதென கட்டுப்பாடு வேறு. அதேபோல ஒரு நாள் பணியாளர் குறைவு என்பதால் 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete