Tuesday, April 24, 2012

அலுவலக கட்டிடத்தில் நெருப்பு


இரண்டு வாரத்துக்கு முன்னாடி, ஈஸ்டர் விடுமுறைக்கு பிறகு ஆபிஸுக்கு போனேன். பொதுவாவே சனி ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை ஆபிஸ் போறதுக்கு 9.15 மணி ஆயிடும். இதுல 4 நாளு விடுமுறை முடிந்து லேட்டா போகலாம்னு நினைச்சா, கடன்கார மேனேஜர் அன்னைக்கு தான் சரியா 9மணிக்கு மீட்டிங் வச்சிருந்தாரு. அதனால அடிச்சு புடிச்சு சீக்கிரமா எந்திரிச்சு, சரியா 8.55க்கு எல்லாம் ஆபிஸ் போயி சேர்ந்தேன். மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ போட்டு குடிச்சிடலாம்னு, பேன்ட்ரிக்கு போயி டீ போட ஆரம்பிச்சேன். நமக்கு தான் டீ ரொம்ப சூடா இருக்கனுமே, அதனால டீயை கலந்து மைக்ரோவேவ்ல வச்சு சூடு பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஃபயர் அலாரம் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. நான் ரொம்ப பயந்து போயி, என்னடாது தினமும் தானே டீ போட்டு மைக்ரோவேவ்ல சூடு பண்ணுவோம். இன்னைக்கு என்னடா ஃபயர் அலாரம் அடிக்குதுன்னு உடனே டீ கப்பை வெளியில எடுத்துட்டேன். எல்லோரும் கீழே இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. அடப் பாவிகளா, போட்ட டீயை கூட குடிக்காம முடியாம பண்ணிட்டாங்களேன்னு நொந்து போயி அந்த டீயை கீழே கொட்டிட்டுட்டு, நானும் படிக்கட்டுல கீழே இறங்கி போக ஆரம்பிச்சேன். இறங்குறோம், இறங்குறோம், அனுமார் வால் மாதிரி படிக்கட்டு வந்துக்கிட்டே இருக்கே ஒழிய, கடைசிப் படிக்கட்டு வந்த பாடில்லை. ஏன்னா, நாங்க இருந்தது 18வது மாடியில. கொடுமை என்னன்னா, மீட்டிங்குக்காக அரக்க பறக்க 9மணிக்கெல்லாம் வந்தா, இந்த மாதிரி 18வது மாடியிலிருந்து கால் கடுக்க இறங்குனது தான். அதுலேயும் ரொம்ப கொடுமை போட்ட டீயை கூட குடிக்காம போனது தான். இதுல 18மாடி இறங்குனது கூட பெருசில்லை, அதுக்கப்புறம் கிட்டதட்ட 1km நடந்து, ஃபயர் எவாகுவேஷன் இடத்துக்கு போகனும். நடந்து போகும் போது , தீ அணைக்கும் வண்டி வேற போனுச்சா, சரி எந்த மாடியில நெருப்பு புடிச்சுக்குச்சுன்னு தெரியலையேன்னு எல்லோரும் பேசிக்கிட்டே போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது, 14வது மாடியில ஒரு பிரகஸ்பதி, சாண்ட்விச் மேக்கர்ல பிரட்டை வச்சுட்டு, வேலை பார்க்க போயிட்டாராம். (அந்த அளவுக்கு வேலைல ஒரு ஈடுபாடு போல!!!) சாண்ட்விச் மேக்கர்லேருந்து புகையா வந்து, ஃபயர் அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்த பிரகஸ்பதிக்கும் நம்மலால தான் ஃபயர் அலாரம் அடிக்குதுன்னு தெரியலையாம். என்னத்தை சொல்றது.
இந்த கூத்து நடக்குங்குறது கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் பொறுமையா வீட்டிலிருந்து கிளம்பி லேட்டா ஆபிஸ் போயிருப்பேன்.

No comments:

Post a Comment