Wednesday, June 20, 2012

முதல் விமான பயணம்

செப்டெம்பர் 12,1997 அன்னைக்கு தான் நான் மஸ்கட் போக வேண்டிய நாள். சென்னையிலிருந்து பாம்பேக்கு உள்ளூர் விமானத்திலும் பாம்பேலேருந்து மஸ்கட்டுக்கு சர்வதேச விமானத்திலும் போகனும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே புதுசா துணிமணிகளை எல்லாம் வாங்கி தைச்சு, ஒரு பெட்டிய புதுசா வேற வாங்கி, அதுல எல்லாம் வச்சு வெளிநாடு போறதுக்கு தயாராயிட்டேன். சாப்பாடுக்கு அங்க மெஸ் இருக்கிறதுனால மத்த மூட்டை முடிச்சுக்கு எல்லாம் வேலை இல்லாம போயிடுச்சு. என்னைய வழி அனுப்ப, மாமா, மாமி, சித்தி, சித்தப்பான்னு சொந்தக்காரங்க எல்லாரும் வந்து இருந்தாங்க. நானும், சென்னை விமான நிலையத்தை ஒரு பட்டிக்காட்டான் பட்டினத்தை சுத்திப் பார்த்த மாதிரி சுத்திப் பார்த்துட்டு, பாம்பே போற “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானதுக்குள்ள போயி ஏறி உட்கார்ந்தேன். எல்லோரும் கொண்டு வந்திருந்த கைப் பெட்டியை, தலைக்கு மேல உள்ள இடத்துல வச்சாங்க. எனக்கோ, இந்த பெட்டிங்க எல்லாம் கணம் தாங்காம நம்ம மேல விழுந்தா என்னாகுறதுன்னு பயம் வந்துடுச்சு. மனசுக்குள்ள இருந்த பயத்தை வெளியே காட்டாம என்னோட இருக்கைல உட்கார்ந்துக்கிட்டு இருந்தேன். அப்பத்தான், எல்லோரும் இருக்கைல இருக்கிற பெல்ட் போட்டுக்குங்கன்னு அறிவிச்சாங்க. எனக்கோ அந்த பெல்ட்ட போட்டுக்கத் தெரியலை. அப்ப, விமான உதவியாளர்கள் எல்லோரும் எதையோ பிடிக்கப் போற மாதிரி ரொம்ப வேகமா நடந்துக்கிட்டு இருந்தாங்க. அழகான இளம் பெண்கள் எல்லாம் உதவியாளர்களாக இருப்பாங்கன்னு மற்ற நண்பர்கள் மூலமா கேள்விப்பட்டிருந்தேன். ஆனா, இந்த விமானத்துல அப்படி யாருமே இல்லை. எல்லோரும் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிற வயசுல இருந்தாங்க. பரவாயில்ல, ஏதோ ஒரு பெண் உதவியாளரை கூப்பிட்டு, நமக்கு அந்த பெல்ட்ட போட்டு விடச் சொல்லலாம்னு நினைச்சு,  பக்கத்துல யாராவது வறாங்களான்னு வழி மேல் விழி வச்சு காத்துக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள என் பக்கத்து இருக்கைல உட்கார்ந்திருந்தவரு, நான் திரு திருன்னு முழிச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து, என்ன தம்பி, பெல்ட்ட போடத் தெரியலயான்னு கேட்டு, எனக்கு அதை இப்படித்தான்  போடணும்னு சொல்லி போட்டு வேற விட்டுட்டாரு. எனக்கோ ச்சைன்னு போச்சு. அவரை நான் உதவிக்கு கேட்கவே இல்லை. ஆனா என்னமோ மற்றவர்களுக்கு உதவி புரிவதற்காகவே தான் பிறந்த மாதிரி, அந்த மனிதர் எனக்கு உதவி பண்ணி, என் ஆசைல மண்ணை அள்ளிப் போட்டுட்டாரு.  கடைசில எப்படியோ நல்ல படியா மஸ்கட் வந்து சேர்ந்தேன். மஸ்கட் விமான நிலயத்துல இறங்குனவுடனே, திரும்பவும் உள்ளுக்குள்ள இருந்த பட்டிக்காட்டான் வெளியில வந்துட்டான். முதல் முதல்ல ஒரு சர்வதேச விமான நிலயத்தை பார்க்கும்போது ரொம்பவும் பிரமிப்பா போச்சு. புதுசா ஒரு இடத்துக்கு யாராவது போனங்கன்னா, அவரை கூப்பிடறதுக்கு வந்தவரு கைல அவர் பேரு எழுதின அட்டைய வச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி எத்தனை படங்கள்ல பார்த்திருப்போம், நானும் வெளியில வந்தவுடன,யாராவது நம்ம பேர் உள்ள அட்டைய வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காங்களான்னு சுத்தி சுத்தி பார்த்தேன். அப்பத்தான் ஒரு விசில் சத்தம் கேட்டு திரும்பினேன். ஓரத்துல இந்தியர் ஒருத்தர் நின்னுக்கிட்டு, சைகைல என்னைய கூப்பிட்டாரு. கிட்ட போனா, நீங்க தானே சம்பந்தம்னு கேட்டாரு. ஆமான்னு சொன்னவுடனே, என் பின்னாடி வாங்கன்னு வண்டிக்கு கூட்டிக்கிட்டு போனாரு. வண்டில போய்க்கிட்டு இருக்கும்போது, எப்படிங்க என்னைய அடையாளம் கண்டுப் பிடிச்சீங்கன்னு கேட்டேன். அதென்ன பிரமதாம்னு, என்னோட பாஸ்போர்ட் காப்பியை காண்பிச்சாரு. அட! பய புள்ளைங்க ரொம்பவே உஷாராக தான் இருக்கங்கான்னு நினைச்சுக்கிட்டேன்.
வேற ஒரு பதிவுல நான் அந்த மஸ்கட் வாழ்க்கையைப் பத்தி எழுதிறேன். உண்மையிலே ராஜ வாழ்க்கையின்னா, அது தாங்க. வேலைக்கு போக ஆரம்பிச்சு கிட்டதட்ட20 வருஷ வாழ்க்கைல அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை திரும்பவும் எனக்கு கிடைக்கலை. அந்த வாழ்க்கையைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி, என்னோட முதல் அமெரிக்க அனுபவத்தை உங்களுடன் அடுத்த பதிவுல பகிர்ந்துக்கிறேன்.  

1 comment:

  1. ராஜ வாழ்க்கையா ? !!! ... ம் ... ஹீம் ... பெருமூச்சு விடுவதைத்தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே ! .... ஒரு சிங்கிள் பிஸ்கட்டுக்கே வழியில்லாத நானெல்லாம் எங்கே மஸ்கட் போறது ...ம் ... உங்க அனுபவத்த சொல்லுங்க அதையாவது கேப்போம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete