Saturday, August 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 4

 
மறு நாள் காலைல எந்திரிச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்(இதை தான் ரூம் போட்டு யோசிக்கிறதன்னு சொல்லுவாங்க போலயிருக்கு). ஏன்னா எனக்கு எப்பவுமே தனியா போயி ஊர் சுத்திப் பார்க்க பிடிக்காது. மதியம் மூன்று மணிக்கு தான் அந்த கல்வி மாநாடு ஆரம்பமாகும். சரி    அதுவரைக்கும் ஷாப்பிங்காவது பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி எல்லோரும் வால் மார்ட்ன்னு ஒரு கடை இருக்கும். அங்க எல்லா பொருளும் ரொம்ப மலிவா கிடைக்கும், அதனால கண்டிப்பா அங்க போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க. இந்த தகவலை சொன்னவுங்க என்கிட்ட தனியா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, வீட்டு அம்மணியை வச்சுக்கிட்டு வேற சொல்லிட்டாங்களா, அதனால வீட்டு அம்மணி, நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடி மூச்சுக்கு முன்னூறு தடவை, நீங்க கண்டிப்பா வால் மார்டுக்கு போயிட்டு வாங்கன்னு என் காதுல மந்திரம் ஓதி, மனசுல பதிய வச்சுட்டாங்க. அதனால இன்னைக்கு வால் மார்ட்டுக்கு போயிடணும்னு முடிவு பண்ணி, ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்ககிட்ட வால் மார்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க அந்த கடை “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்ல இருக்குது. இங்கேருந்து நீங்க போகனும்னா, இரண்டு train மாறி, ஒரு பஸ் பிடிச்சு போகனும். உங்களால போக முடியுமான்னு கேட்டாங்க. நானும் ஜப்பான்ல மொழி தெரியாத போதே, இந்த மாதிரி நிறைய இடத்துக்கு போயிருக்கோம், இது வெறும் ஜூஜிப்பின்னு நினைச்சு, போக முடியும்னு சொன்னேன். உடனே அவுங்க ஒரு மேப்பை கையில கொடுத்து, எந்த trainனை எடுக்கனும், எங்க மாறனும், அப்புறம் எந்த பஸ்ஸை எடுக்கனும்னு சொன்னாங்க. நானும் அதே மாதிரி இரண்டு train மாறி, பஸ் எடுத்தேன். நான் போக வேண்டிய இடம் தான் கடைசி நிறுத்தம். அதனால நிம்மதியா நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கீட்டு போனேன். ஆனா சும்மா சொல்லக் கூடாது, இரண்டு டாலருக்கு நல்லாவே ஊரை சுத்திக் காட்டுனாரு அந்த டிரைவர் அண்ணாத்தே. ரொம்ப நேரத்துக்கு அப்புறம் “McCarthy Ranch”ன்னு ஒரு நுழைவு வாயிலுக்குள்ள பஸ் போனுச்சு. நானும் இதுக்குள்ள தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கும் போலன்னு நினைச்சு இறங்குறதுக்கு தயாரா இருந்தேன். ஆனா, நான் நினைச்சது ஒண்ணு, அங்க நடந்தது ஒண்ணு. அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                           பகுதி-5

No comments:

Post a Comment