Tuesday, January 8, 2013

புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி

காதல் கீதம் தொடர்கதையை தான் முடிக்க வேண்டும் என்று எண்ணிக்
கொண்டிருந்த வேளையில், வீட்டு அம்மணிக்கு, தானும் எதையாவது எழுத வேண்டும் என்று ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிவிட்டது. அவர்கள் எதையாவது எழுதியிருந்தால் மட்டும் பரவாயில்லை, அதை என்னுடைய வலைப்பூவில் பதிய வேண்டும் என்று கட்டளையிட்டது தான் என்னை பயமுறுத்தியது. அதனால் தான் நான் விபரீதமான எண்ணம் என்று சொன்னேன்.  நானும் விட்டுக்கொடுக்காமல், நீ பாட்டுக்கு கண்டதையும் எழுதினால் எப்படி பதிவது என்றேன். உடனே, நீங்க தத்துபித்துன்னு எழுதுறதை விட நான் நல்லா தான் எழுதுவேன் என்று கூறி, ஒரு கட்டுரையையும் எழுதி கொடுத்தார்கள், அதை படித்தவுடன் தான் தெரிந்தது, ஆஹா, நமக்கு போட்டி வெளியில் எல்லாம் இல்லை,வீட்டுக்குள்ளேயே இருக்காங்கன்னு. ஏதோ என் பொழப்புல மண்ணை அள்ளிப்போடாம இருந்தா சரி தான்னு நினைச்சுக்கிட்டு , நானும் அந்த கட்டுரையை இந்த பதிவுல பதியுறேன்.  


இந்திய நாடு நிறைய விஷயங்களில் உலகத்திற்கு,முன்னோடியாக இருந்திருக்கிறது. இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்தில் நவீன விஷயமாக நாம் கருதுவது, கருவை வெளியே வைத்து வளர்க்கும் முறை, அதாவது ஆங்கிலத்தில் “IVF” முறையை தான். ஆனால், இந்த முறை நம் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு என்று, தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கருகாவூரில் “கர்ப்பரட்சாம்பிகை” கோவிலின் தல வரலாறு சொல்கிறது.


முல்லைவதனம் என்னும் ஊரில் கௌதமர், கார்த்திகேயர் என்று இரண்டு முனிவர்கள் தவம் செய்தார்கள். குழந்தையில்லை என்ற குறையை சொல்லி அவர்களிடம் நித்திருவர் – வேதிகை தம்பதியினர் முறையிட்டனர். அதற்கு அந்த முனிவர்கள், அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன நாதரையும், அம்மனையும் வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உபதேசித்தார்கள். அவ்வாறே அந்த தம்பதியினரும் உபதேசிக்க, வேதிகா கருவுற்றாள்.
கணவர் ஊரில் இல்லாமல், வேதிகை மட்டும் தனித்து இருந்த சமயத்தில், தாய்மையின் அடையாளமான கருவை சுமந்திருந்த காரணத்தால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்திருந்ததினால் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதனை அடைந்த வேதிகை மீண்டும் அந்த அம்பாளிடம் சென்று முறையிட்டாள். அம்பாளும், வேதிகையின் மேல் இறக்கம் கொண்டு, அன்னை கர்ப்பரட்சாம்பிகையாக தோன்றி, கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து, குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி “நைந்துருவன்” என்று பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.


கரு காத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம், இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவலகில் கருத்தரிக்காதவர்களை, கருத்தரிக்க வைக்கவும், கருத்தரித்தவர்களின் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்று பிராத்தனை செய்ய, அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்று, இத்தலத்தில் வீற்றிருந்து, நமக்கெல்லாம் அருள் புரிகிறாள். இதனால் தான், கருவை ரட்சித்த அந்த அம்மனுக்கு “கர்ப்பரட்சாம்பிகை” என்று பெயர் வந்தது.
என்னதான், இந்த நிகழ்ச்சி ஒரு புராண கதையாக இருந்தாலும், இன்றும் இந்த அம்மனை, குழந்தை பேறு இல்லாதவர்கள் வணங்கினால், கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம். எனக்கு திருமணமாகி சரியாக பத்து வருடங்கள் முடிந்து தான் ஓவியா பிறந்தாள். அதுவும் இந்த அம்மனை வணங்கி, அங்கு கொடுக்கப்பட்ட நெய் பிரசாதத்தை, சாப்பிட்ட பிறகு தான், நான் கருவுற்றேன். அதே மாதிரி, ,குழந்தை தங்காதவர்களும், குழந்தை தங்க வேண்டும் என்று வேண்டினாலும், நல்லபடியாக சுகப் பிரசவம்  ஆகி குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்று வேண்டினாலும் கண்டிப்பாக நடக்கிறது. எனக்கு ஓவியா கொடுக்கப்பட்ட தேதிக்கு நான்கு வாரத்திற்கு முன்பே பிறந்தாலும், சுகப்பிரசவத்தில் தான் பிறந்தாள். எனக்கு தெரிந்த சில தோழிகள், தங்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு இந்த அம்மனை வணங்கி, சுகப்பிரசவத்துக்கான ஸ்லோகத்தை தினமும் படித்து, இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார்கள். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் கவலைப் பட வேண்டாம். ஒரு முறை இந்த கோவிலுக்கு போய் வணங்கி வாருங்கள், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் இறந்த ஒருவரின் இதயத்தையோ, கண்ணையோ மற்றொவருக்கு பொருத்தி,அவரின் வாழ்கையில் விளக்கேற்றி வைக்கிறோம். ஆனால் இதற்கு இன்னும் ஒரு படி மேல போய், நம் சித்தர்கள் “கூடு விட்டு கூடு பாயும்” கலையில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இறந்த ஒருவரின் உடலில் தங்களின் ஆன்மாவை உள்ளே செலுத்தி, இறந்தவரையே நடமாடவிட்டிருக்கிறார்கள். அதே போல் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது, மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கஸ்ருதா என்ற முனிவர் காடராக்ட் ஆபரேஷன் செய்து, அதை பற்றிய விவரங்களை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று. ஆக மொத்தத்தில், அந்த காலத்தில் நம் சித்தர்கள், ஞானிகள் செயத்தை தான், நாம் இன்றைய நவீன மருத்துவத்தில் செய்துக்கொண்டிருக்கிறோம்.  
- கீதா சம்பந்தம் 

10 comments:

 1. Good Starting Geetha.Kamban veetu thariyum kavi padum, Sam sir wife a irunthutu irhu koda ezhuthalana epadi?

  ReplyDelete
  Replies
  1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி ஹரிதா. கீதாவிடம் தங்களின் வாழ்த்துக்களை தெரியப்படுத்தி விட்டேன்.

   Delete
 2. சரியான போட்டி! அருமையான தகவல்.

  சொக்கன் நீங்க bowled ஆயிட்டீங்க சாமி!!

  ReplyDelete
  Replies
  1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 15 வருடத்திற்கு முன்பே தான் நான் கிளீன் bowled ஆகிவிட்டேனே!!!

   Delete
 3. தங்கள் இல்லத்தரசிக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 4. முதல் பத்தி....ஹாஹாஹா....உங்களுச் சபாஷ் சரியான போட்டி.......

  நல்ல ஒரு பதிவு. கர்பரக்ஷ்காம்பிகையின் பெயரில் மிகப் பெரிய ஆஸ்பத்திரி தொடங்கி பெண்கள் மருத்துவத்தில் நிபுணராக, டாக்டர் ஜெயம் கண்ணன் அவர்கள் செய்து வருகின்றார்கள். அவர் இக் கோயிலுக்குப் பல சேவைகள் செய்கின்றார்.

  இந்தக் கதையை மிக அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி கீதா....மகா பாரதத்திலும் கூட காந்தாரியின் கரு அப்படி வைக்கப்பட்டு கௌரவர் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் உடனே படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி துளசி சார்.

   Delete
 5. அந்தக் காலத்தில் ஆயுர்வேதத்தில் பல அறுவைசிகிச்சைகள் செய்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. ஏன் அகத்தியரே தேரையருக்குக் கபாலத்தை ஓபன் சர்ஜரி செய்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. சித்தர்களின் பல குறிப்புகள் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவை யாவும் சிறந்த சித்த வைத்தியரால் மட்டுமே டிகோட் செய்ய முடியும். இப்போதுள்ள அலோபதி போன்று ஒபனாக, நேரடியாகச் சொல்லப்படாததால். நவபாஷாணம்...9 விஷங்களைக் கலந்து உயிர் வாழ வைக்கும் மருந்தைத் - மாஸ்டர் மெடிசினை - தாயாரித்து அதை வைத்தே பழனி முருகன் சிலையை வடித்ததாகச் சொல்லப்படும் போகர் சித்தரின் (பெரிய மருத்துவர்) போகர் 7000 எனும் புத்தகம் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றோம். எப்படிக் கிடைத்தது என்பது தனிக் கதை. அதை ஒரு பதிவாகவே எழுதலாம். அதில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும் எல்லாமே அக்காலத் தமிழில் மிகவும் மறைமுகமாகச் சொல்லபட்டிருக்கின்றது. சரியான முறையில் பிரித்துப் படித்தால் மட்டுமே மருத்துவக் குறிப்புகள் நாம் அறிய முடியும்.

  மாணிக்கவாசகரரின் பாடல்களில் கைனகாலஜி அலசப்படுகின்றது. திருமூலர் மந்திரம் முழுவதும் மருத்துவக்குறிப்புகள் அடங்கியது என்பதும் எல்லோரும் அறிந்ததே. ஆனால் இதை எல்லாம் நல்ல முறையில், நேர்மையாக, சிறந்த மனதுடன், இறை உணர்வுடன், பிரித்துப் பொருள் அறிய முடிந்தால் மட்டுமே நாம் சிறந்த மருத்துவக் குறிப்புகளை உள்வாங்க முடியும். சரிதானே நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. பழனி முருகன் சிலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மை தான் என்று தெரிந்து கொண்டேன்.

   போகரின் புத்தகம் எவ்வாறு கிடைத்தது என்று எழுதுங்கள். அறிய ஆவலாக உள்ளேன்.
   அன்றைய தமிழை, நீங்கள் சொல்வது போல் சரியான முறையில் பிரித்து படிக்க வேண்டும். அவ்வாறு படிப்பது என்பது பலருக்கும் கடினமான காரியமாகும். அதனால் தானோ என்னவோ, நம்முடைய பல பொக்கிஷங்கள் இன்று எல்லோராலும் படிக்க இயலாமல் இருக்கிறது.

   தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி துளசி சார்.

   Delete