Tuesday, July 23, 2013

தமிழகத்தில் – தமிழும்,ஆங்கிலமும்


இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் “பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது” பற்றி நீயா நானாவில் விவாதிக்கப்பட ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த கொடுமையை என்னத்த சொல்றது. அதாவது பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழை படிப்பதால் என்ன பயன்,அதற்கு ஆங்கிலத்தை படித்தாலாவது வாழ்கையில் முன்னேறலாம் என்றும், மேலும், பிறர் முன்பு ஆங்கிலம் பேசினால் தான் தன்னுடைய செல்வாக்கு உயரும் என்றும் எண்ணுகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் பெற்றோர்களும் சரி, கல்வியை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளும் சரி, இந்த ஒரு தப்பான எண்ணத்தை தான் அவர்களின் மனதில் பதிய வைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய குழந்தைகள், வெளியிடங்களில் ஆங்கிலத்தில் தான் பேசுவோம், அப்பொழுது தான் தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்று கூறினார்கள். பெற்றோர்களும், நாங்கள் அவ்வாறு தான் அவர்களை பேசச் சொல்லி வலியுறுத்துகிறோம் என்று கூறியது தான் கொடுமையே. இன்னும் ஒரு பெண் குழந்தை, நான் என்னுடைய வீட்டிற்குள் செல்வதையே வெறுக்கிறேன். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள், நான் ஆங்கிலத்தில் பேசினால், என்ன, இப்படி பேசுற,ஒழுங்காக ஆங்கிலத்தில் பேசு என்று ஒவ்வொருவரும் ஆங்கில வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளித்த அந்த பெண்ணின் தாயாரும், ஆமாம், நாங்கள் அவளின் எதிர்காலத்தை(?) கருத்தில் கொண்டு தான் இப்படி நடக்கிறோம் என்று கூறியதை கேட்டபொழுது, இவர்களின் அறியாமையை நினைத்து அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியின் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால், கிராமப்புற பகுதியிலிருந்து வந்த ஒரு பெண்மணி (அவருக்கு தமிழ் மட்டும் தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது), தனக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் என் மகன் ஆங்கிலத்தில் பேசும்போது எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது என்று கூறினார். இது பரவாயில்லை, தனக்கு தெரியாத ஒன்றை தான் மகன் தெரிந்து வைத்திருக்கான் என்று நினைக்கும்போது, பெற்றோருக்கு ஒரு பூரிப்பும், பெருமையும் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அந்த பெண்மணி அடுத்த சொன்ன விஷயம் இருக்கிறதே, அது தான் உண்மையிலேயே தமிழர்களாகிய நம்மை தலை குனிய வைக்கிறது. அதாவது, அவருடைய மகனுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும், எழுதப் படிக்க தெரியாதாம். அவன் தமிழ் எழுதப் படிக்க மிகவும் சிரமப்பட்டான், அதனால் அவனை பள்ளியில் தமிழ் மொழியை படிப்பதற்கு பதில், பிரெஞ்ச் மொழியைப் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இப்போது அவன் பிரெஞ்ச் மொழியை தான் படிக்கிறான் என்று கூறினார். இப்படியுமா இருப்பார்கள்?. எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்று கூறுவது தான் தமிழகத்தில் நாகரீகமாகிவிட்டது. இன்றைய சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் தான். ஆனால் அதற்காக தாய் மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தையும் மற்ற மொழிகளையும் கற்றுக்கொல்வது என்பது பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை புறக்கணித்துவிட்டு மற்றவர்களை “தாயே” என்று போற்றுவது போலாகும்.  இங்குள்ள என்னுடைய நண்பர்கள் சிலர் தமிழ் வழிக் கல்வியில் தான் படித்து முன்னறியவர்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால், “எவன் ஒருவன் தாய் மொழியை நன்றாக கற்கிறானோ,அவனால் தான் மற்ற மொழிகளையும் நன்றாக கற்க முடியும்” இது கண்டிப்பாக சத்தியமான வார்த்தை.
 
 

என்னடா இது! நாம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றும், தமிழ்நாட்டில் மக்கள் ஆங்கில மொழிக்கு அடிமையாகி விட்டார்களே என்று வருத்தப்பட்டுக்கொண்டே, விஜய் தொலைக்காட்சியில் வேறு என்ன நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று பார்த்துக்கொண்டு வரும்போது தான் கண்ணில் பட்டது “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி.  அந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. எல்லோரும் அருமையாகவும்,  உணர்ச்சிப்பூர்வமாகவும்  தமிழில்  பேசினார்கள். கொந்தளித்த மனதை இந்த நிகழ்ச்சி சாந்தமடைய வைத்து விட்டது. இந்த நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது, இந்த நிகழ்ச்சியை பார்த்தோமேயானால், நாமும் தமிழுக்கு ஏதோ ஒரு சிறிய வகையில் உதவி புரிகிறோம் என்ற ஒரு திண்ணம் மனதில் ஏற்படும்.

 

No comments:

Post a Comment