Tuesday, July 9, 2013

அலுவலக நண்பரின் அனுபவம் – ஒரு பாடம்

என்னோட அலுவலகத்துல பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் ஒருத்தர் வேலை பார்க்கிறார். அவர் சிட்னிக்கு வந்து மூணு வருடம் கழித்து தான் தன்னோட நாட்டுக்கு விடுமுறைக்காக போயிருக்காரு. ஆனா ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இருக்கே, அது உண்மையிலேயே நாம கத்துக்க வேண்டிய ஒரு பாடம்தான்னு நான் சொல்லுவேன்.

ஒன்றரை மாசம் முன்னாடி, அவர் ஊருக்கு போறதுக்காக ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ற சமயத்துல, தன்னோட மனைவிக்கிட்ட போன் பண்ணி பாஸ்போர்ட் வேலிடிட்டி எல்லாம் சரியா இருக்கான்னு கேட்டிருக்காரு. அவுங்களும் 2015 வரைக்கும் இருக்குனு பாஸ்போர்ட்டை பார்க்காம சொல்லியிருக்காங்க. இவரும் டிக்கெட்டுக்கு பணம் எல்லாம் கட்டிட்டாரு. அப்புறம் ஒரு வாரம் கழித்து,அவர் பாஸ்போர்ட் எடுத்து பார்த்திருக்காரு. அப்ப தான் தெரிஞ்சிருக்கு, பாஸ்போர்ட் காலாவதியான விஷயமே. அதுவும் அவுங்க மூணு பேருக்குமே(அவர்,அவுங்க மனைவி,மற்றும் மகன்) பாஸ்போர்ட் ஒரே தேதியில காலாவதியாயிருக்கு. மறு நாள் இங்க இருக்கிற பிலிப்பைன்ஸ் எம்பஸ்ஸில போய் பாஸ்போர்ட்டை புதிப்பிக்க அப்ளை பண்ணியிருக்காரு. என்ன பிரச்சனைன்னா, புது பாஸ்போர்ட் வருவதற்கு ஒரு மாசமாவது ஆகும். அவரு ஊருக்கு போற தேதியும், பாஸ்போர்ட் கைக்கு வர்ற தேதியும் கிட்டதட்ட ஒரே சமயம். அவருக்கு எப்படியும் ஊருக்கு போறதுக்குள்ள பாஸ்போர்ட் வந்துடும்னு கொஞ்சம்  நப்பாசை இருந்துச்சு. அதனால அலுவலகத்துல அப்ளை பண்ணின லீவையும் கான்சல் பண்ணலை. சரி, அதுக்குள்ள பாஸ்போர்ட் வரலைன்னா, டிக்கெட்டை மாத்தியாகனுமே, அதனால என்ன பண்ணலாம்னு டிக்கெட்டை புக் பண்ணின டிராவல் ஏஜெண்டு கிட்ட கேட்டிருக்காரு. அவுங்களும் டிக்கெட்டை வேற தேதிக்கு மாத்தணும்னா, ஒரு ஆளுக்கு இருநூறு டாலர் செலவாகும்னு சொல்லியிருக்காங்க. என்ன பண்றது பாஸ்போர்ட் வரலைன்னா, கூட அறநூறு டாலர் செலவு பண்ணி டிக்கெட்டை மாத்திக்கவேண்டியது தான்னு மனசை தேத்திக்கிட்டாரு. ஊருக்கு போறதுக்கு மூணு நாள் இருக்கும்போதும் பாஸ்போர்ட் வரலை. வேற வழியில்லை, டிக்கெட்டை மாத்தவேண்டியது தான்னு டிராவல் ஏஜெண்டுக்கு, அலுவலகத்திலிருந்து போன் பண்ணி கேட்டிருக்காரு. அவுங்க டிக்கெட்டை மாத்துறதுக்கு ஒரு ஆளுக்கு அறநூறு டாலர் ஆகும்னு சொல்லியிருக்காங்க (தொள்ளாயிரம் டாலருக்கு தான் டிக்கெட்டே வாங்கியிருக்காரு!!). இவருக்கு முதல்ல ஒண்ணுமே புரியலை. 

அப்புறம் தான் தெரிஞ்சுது,இவரு வாங்கும்போது இருந்த அந்த ஆஃபர் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் முடிஞ்சுப்போயிருக்கு, இவரு, அவுங்களுக்கு ஒண்ணும் சொல்லாம போனை வச்சுட்டு, வீட்டுக்கு போனை போட்டு மனைவியை ஒரு பிடி பிடிச்சிருக்காரு. இது எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு பார்க்கிறீங்களா(!), அவர் என்னோட எதிர் சீட்ல தான் உட்கார்ந்திருப்பாரு. என்ன தான் வேற மொழியில பேசுனாலும், கோபப்பட்டு பேசும்போது என்னமோ லடாய்ன்னு நமக்கு புரிஞ்சிடுமே. போனை வச்சிட்டு, என்கிட்ட நான் டிக்கெட் புக் பண்ணும்போதே என் மனைவிக்கிட்ட கேட்டேன், அப்பவே ஒரு நிமிஷம் பாஸ்போர்ட்டை பார்த்திருந்தாங்கன்னா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுன்னு ஒரே புலம்பல். அப்ப தான் பெண்கள் எந்த நாடாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியா தான் இருப்பாங்கன்னு எனக்கு ஒரு பெரிய உண்மை தெரிஞ்சுது. அப்புறம் ஊருக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணி, போன்ல டிக்கெட்டை கேன்ஸல் பண்ணப்பார்த்திருக்காரு. 

அந்த டிராவல் ஏஜெண்டுகாரங்க, நீங்க டிக்கெட்டை கேன்ஸல் பண்ண வேண்டாம், அதுக்கு பதிலா, நாளைக்கே , எம்பஸ்ஸிக்கு போய் டிராவல் டாக்குமென்டை வாங்கிக்கிட்டு ஊருக்கு போங்கன்னு சொல்லியிருக்காங்க. இவரும் மறு நாள் எம்பஸ்சிக்கு போய், இந்த மாதிரி, இந்த மாதிரின்னு சொல்லி, டிராவல் டாக்குமென்டை($360 கொடுத்து) அன்னைக்கே வாங்கிக்கிட்டு மறு நாள் ஊருக்கு குடும்பத்தோட கிளம்பி போயிட்டாரு. இன்னொரு சிக்கல் என்னன்னா, இவரோட புது பாஸ்போர்ட்டை பிலிப்பைன்ஸ்லேருந்து சிட்னிக்கு அனுப்பிடக்கூடாது. அதனால இவரு ஊருக்கு போன அடுத்த நாளே, அங்க இருக்கிற பாஸ்போர்ட் ஆபிஸ் போயி, பாஸ்போர்ட்டை சிட்னிக்கு அனுப்பிடாதீங்க, நானே இங்க வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லணும். மூணு வாரம் கழிச்சு, இவரு சிட்னி திரும்புறதுக்குள்ள, புது பாஸ்போர்ட் ரெடி ஆகலைன்னா, மறுபடியும் இந்த மாதிரி டிராவல் டாக்குமென்டை வாங்கிக்கிட்டு, பாஸ்போர்ட்டை சிட்னிக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிட்டு வரணும்.

இவரோட அனுபவத்திலிருந்து, நான் கத்துக்கிட்டது என்னன்னா, வெளிநாடு போறதுக்கு முன்னாடி, பாஸ்போர்ட் எல்லாம் சரியா இருக்குதா, விசா எல்லாம் இருக்குதான்னு செக் பண்ணிட்டு தான் டிக்கெட்டை புக் பண்ணணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். நண்பர்களே! நீங்களும் அவசரப்பட்டு முதல்லயே டிக்கெட்டை புக் பண்ணிடாதீங்க. இதெல்லாம் சரியா இருக்குதான்னு பார்த்துட்டு உங்கள் பயண ஏற்பாடுகளை கவனியுங்கள்.

   

No comments:

Post a Comment