நான் ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்கு
சென்று வரும்போது, குறைந்தது இரண்டு கிலோவிற்கு புத்தகங்களை மட்டுமே வாங்கி வருவேன்.
இப்படி வாங்கி வந்ததில், என் வீட்டில் ஒரு மிகச் சிறிய தமிழ் நூலகமே அமைந்து விட்டது.
அதில் பாதிக்குப்பாதி சரித்திர நாவல்கள். அதுவும் தமிழக சரித்திர நாவல்கள் மட்டும்
தான். என்னை மாதிரி ஆட்கள், சரித்திர நாவல்களை
தேடித்தேடி படிப்போம். ஒரு சிலருக்கு சரித்திர நாவல்களை பார்த்தாலே பயம் வந்து விடும்.
வேறொன்றுமில்லை, அந்த புத்தகங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் இருக்கும். இந்த புத்தகத்தை
எப்போது படித்து முடிப்பது என்ற எண்ணம் தான் அந்த பயத்திற்கு காரணமே. அவர்களுக்கெல்லாம்
ஒரு அரிய செய்தி, கல்கியின் பிரசத்திப்பெற்ற நாவல்களான “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின்
சபதம்” மற்றும் “பார்த்திபன் கனவு” போன்றவற்றை அமெரிக்க வாழ் தமிழர், திரு. ஸ்ரீகாந்த் ஆடியோ புத்தகங்களாக உருவாக்கியிருக்கிறார். ஆடியோ புத்தகம் என்றால்,
செய்தி வாசிப்பது போல் தான் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை உடைத்தெறிந்து,
தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார் அவர்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு
ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின்,
"பொன்னியின் செல்வன்' நாவலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே
பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக வும், சிவகாமியின்
சபதம் நாவல் 33 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக வும்,பார்த்திபன் கனவு 11 மணி நேரமாக
ஓடக் கூடிய ஆடியோ புத்தகமாக தயாரித்திருக்கிறார். தற்போது உ.வே.சாமிநாத
ஐயரின், "என் சரித்திரம்” நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
அன்றைக்கு ஓலைச்சுவடிகளாக இருந்த அரும்பெரும்
தமிழ் நூல்களையெல்லாம் அச்சு வடிவத்திற்கு மாற்றியவர் உ.வே.சாமிநாத ஐயர். இன்று, அவருடைய
நூலையே ஆடியோ புத்தகமாக மாற்றுகிறார் திரு. ஸ்ரீகாந்த். இப்படி
தமிழ் சேவை செய்யும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும்,
முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர்.
இவரை மாதிரி தன்னலமில்லாத பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு தேவை பணமோ, புகழோ இல்லை,
வெறும் பாராட்டுக்கள் மட்டும் தான். அதனால் நாமும் இவரின் இணையத்தளத்திற்கு சென்று
அவரை பாராட்டுவோமாக. அவரின் இணையத்தளம் - www.tamilaudiobooks.com
No comments:
Post a Comment