Wednesday, October 2, 2013

தண்ணி குடித்தால் வாந்தி வரும்

என்னது! தண்ணி குடிச்சா வாந்தி வருமா, எந்த தண்ணியைன்னு(!!) நீங்க சந்தேகப்பட்டு கேட்கிறது புரியிதுங்க. நல்ல தண்ணி தாங்க. அதை நான் சொல்லலைங்க, எங்க சின்ன மாகாரணி தாங்க சொல்லியிருக்காங்க.

தினமும் ராத்திரி அவுங்களுக்கு நான் தான் சாப்பாடு கொடுக்கணும். சனி ஞாயிறுகளிலும் நான் தான் அவுங்களை காலையில எழுப்பி பல்லை விலக்கி,குளிப்பாட்டி, சாப்பாடு கொடுக்கணும். (எல்லாம் அவுங்க அம்மா ட்ரைனிங். இந்த வயசுலேயே பக்காவா கத்துக்கிட்டு அதையே விடாம ஃபாலோ பண்றாங்க!!!!). ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும் சின்ன மகாராணி, ரொம்ப சமர்த்தா சாப்பிடுவாங்க. அதனால அவுங்களுக்கு சாப்பாடு ஊட்டுறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அதே சமயம், பெரிய மாகாராணிக்கு சாப்பாடு கொடுக்கிறது இருக்கே, அது தான் உலகத்துல உள்ள மிகப் பெரிய கஷ்டமான வேலையே. சரி, சின்னவங்களை பார்த்து, பெரியவங்களும் ஒழுங்கா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் நப்பாசையோடு காத்துக்கிட்டு இருந்தோம். ஆனா நடந்ததோ அப்படியே உல்டா, பெரியவங்களைப் பார்த்து சின்னவங்களும் ஒழுங்கா சாப்பிடாம நம்மளை உண்டு இல்லைன்னு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் கஷ்டப்பட்டு அவுங்களுக்கு சாப்பாடு கொடுத்து முடிச்ச பிறகு, தண்ணியை கொடுத்து குடிக்கவைக்கிறதுக்குள்ள, நம்ம தொண்டை தண்ணி வத்திப்போயிடும். 

இன்னைக்கு ராத்திரியும், நான் தான் அவுங்களுக்கு பொங்கலை ஊட்டினேன். கொஞ்ச பொங்கலை ரொம்ப நேரமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல பொங்கலை வாயில வச்சுக்கிட்டு இருமினாங்க. அதனால நான் அவுங்க கிட்ட தண்ணியை கொடுத்து குடிக்க சொன்னேன். தண்ணி பாட்டிலை வாய் கிட்ட கொண்டு போனவுங்க, உடனே என்கிட்ட கொடுத்து, “அப்பா, தண்ணி குடிச்சு வாமிட் வரும்”னு சொன்னாங்க. முதல்ல எனக்கு புரியலை. என்ன சொல்றீங்கன்னு திருப்பி கேட்டேன், திருப்பியும் ““அப்பா, தண்ணி குடிச்சு வாமிட் வரும்”னு சொன்னாங்க. ஆஹா! ஏழரையை ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு, யாருடா சொன்னாங்கன்னு கேட்டேன். அதுக்கு “ஜெயா”ன்னு சொன்னாங்க. (ஜெயான்னு ஒருத்தவங்க கிட்ட தான் அவுங்க இரண்டு நாள் டே கேர் போறாங்க). என்னது! ஜெயா சொன்னாங்களான்னு! நான் திருப்பி கேட்டேன். “yap” அப்படின்னாங்க. (அந்த இரண்டு நாளும் அங்க போறதுனால, வெறும் இங்கிலீஷ் வார்த்தை தான் வாயிலிருந்து வரும்). உடனே, பக்கத்துல சாப்பிட்டுக்கிட்டு இருந்த அவுங்க ஐயா, எப்படி,மாத்தி சொல்றா பாருங்க, சியாந்திரம், இவுங்களை கூப்பிட போகும்போது, தண்ணியை ஒழுங்கா குடிக்காததுனால ரொம்ப கோவிச்சுக்கிட்டேன்னு எங்க கிட்ட ஜெயா சொன்னாங்கன்னு அவுங்க ஐயா சொன்னாங்க. ஆஹா, தண்ணியை குடிக்காம இருக்கிறதுக்கு என்னவெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நினைச்சு, எப்படியோ அதையும் இதையும் சொல்லி, தண்ணியை குடிக்க வச்சேன்.


இப்பவே (இரண்டே கால் வயசுக்கே!) எனக்கு கண்ணு கட்டுதே, இன்னும் போகப்போக!!!!!!!! 

No comments:

Post a Comment