Wednesday, October 30, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – ஜாக்கிங் காட்சி

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

ஏப்ரல் 17ஆம் தேதி நாங்க காத்திருந்து, எங்களோட காட்சியையும் சூட்
பண்ணாம  நாங்களும் எல்லார் கூடவும் போட்டோவும் எடுத்துக்காம வீட்டுக்கு திரும்பி வந்தோம். அன்றைக்கு இரவு 10 மணிக்கு ஒரு sms, மறு நாள் மதியம் 2.30 மணிக்கு பொட்டானிக்கல் கார்டனுக்கு ஜாக்கிங் துணிமணியோட வந்துடுங்க அப்படின்னு. மறு நாளாவது நம்மளை வச்சு படம் எடுப்பானுங்களான்னு எனக்கு சந்தேகம். ஏற்கனவே ஒரு நாள் லீவு வெட்டியா போயிடுச்சு. மறு நாளும் லீவு வேஸ்டா போக கூடாதேன்னு பயம். சரி, முழுக்க நனஞ்சாச்சு, இனி முக்காடு போட்டு என்ன பிரயோஜனம்னு மனசை தேத்திக்கிட்டேன். மறு நாள் மற்ற மூன்று நண்பர்களோடையும் பேசி, அந்த இடத்துக்கு போறதுக்கு train தான் வசதின்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு பெரிய படையோடு கிளம்பி போனோம். மற்ற இரண்டு நண்பர்களோட குடும்பம் மட்டும் வரலை. நான் என் குடும்பத்தையும், மற்ற நண்பர் அவரோட  குடும்பத்தையும், மற்றும் எங்களின் பொதுவான நண்பரின் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போனோம். trainல போற வழியில பார்த்தா, அப்படி ஒரு மழை பெய்ய ஆரம்பிச்சுது. ஆஹா, ஜாக்கிங் காட்சியை எடுக்கிறேன்னு சொன்னாங்க, இப்படி மழை பெய்யுதே, இன்னைக்கும் கோவிந்தா தான்னு நினைச்சோம். நல்ல வேளை நாங்க அங்க 2.15 மணிக்கு “circular quay” என்ற இடத்துக்கு போய் இறங்கும்போது, மழை விட்டிருந்துச்சு. அங்கேருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால், அந்த பொட்டானிக்கல் கார்டன் வந்துடும். ஆனா அவ்வளவு பெரிய பார்க்ல, இவுங்க எங்க சூட்டிங் வச்சிருக்காங்கன்னு எங்களுக்கு தெரியலை. அந்த பார்க்குக்கு உள்ள நடந்து போய் பார்க்கலாம், எப்படியும் அவ்வளவு பெரிய கூட்டம் கண்ல பட்டுடும்னு ஒரு நம்பிக்கைல நடக்க ஆரம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம் சூட்டிங் நடக்கிற அறிகுறியே காணோம். நாங்க ராகேஷுக்கும், கிருஷ்ணாவுக்கும் போன் மேல போன் போட்டோம். அவுங்களுக்கும் சரியான இடத்தை சொல்ல தெரியலை. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேல நடந்து அவுங்க இருக்கிற இடத்தை கண்டுப்பிடிச்சு போனோம். அங்க அவுங்களோட பஸ் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அடப்பாவிகளா! ஒழுங்கான அட்ரஸ் சொல்லியிருந்தா, நாங்களும் கார் எடுத்துக்கிட்டு வந்திருப்போமே, இவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டாமேன்னு நினைச்சோம். கிருஷ்ணா வந்து எங்களையெல்லாம் ஜாக்கிங் டிரஸ் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. நாங்க எங்க மாத்துறதுன்னு கேட்டோம். அவர் உடனே அந்த பஸ்ல போய் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. உடனே எங்க நண்பர்கள்ல ஒருத்தர், ஏங்க, இந்த கேரவன் எல்லாம் கிடையாதான்னு கேட்டாரு. கிருஷ்ணா அப்படியே அந்த நண்பரை ஒரு பார்வை பார்த்துட்டு, ஹீரோவுக்கே இங்க அந்த வசதி எல்லாம் கிடையாதுன்னு சொன்னாரு. அந்த நண்பரும் பரவாயில்லை, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். ஆனா எங்களை ஜாக்கிங் பண்ண சொல்லி ரொம்ப தூரம் ஓட சொல்லாதீங்க, ஏற்கனவே, நாங்க 7 கடல், 7 மலையை தாண்டி வந்த மாதிரி ஒரு மணிநேரம் நடந்து வந்திருக்கோம்னு சொன்னாரு. கிருஷ்ணாவும் அப்படி எல்லாம் ஒரேடியா ஓட சொல்லமாட்டோம். ஷாட், ஷாட் தான் எடுப்போம்னு சொல்லிட்டு போயிட்டாரு. நாங்களும் ஜாக்கிங் டிரஸ் எல்லாம் பஸ்ஸுக்குள்ளேயே மாத்திக்கிட்டு வெளியே வந்தோம். அப்ப தான் இந்த படத்துக்கான ஸ்டில் போட்டோகிராபர் எங்க கிட்ட வந்து, என்னங்க நீங்க நேத்து காணாம போயிட்டீங்க, விஜய் சார் சூட்டிங் முடிஞ்சவுடனே, போட்டோ எடுத்துக்கிறதுக்கு உங்களை கூட்டிக்கிட்டு வர சொன்னாரு. நானும் வந்து பார்த்தா, ஒருத்தரையும் காணோமேன்னு” சொன்னாரு. நாங்களும் அவரிடம், நீங்க எல்லாரும் தான் சூட்டிங் முடிய 6.30 மணி ஆகும்னு சொன்னீங்க, அதனால காபி குடிக்க போயிட்டோம்னு சொன்னோம். இன்னைக்கு முடிஞ்சா போட்டோ எடுத்துக்க பாருங்கன்னு சொல்லிட்டு அவர் போயிட்டாரு. நாங்களும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தோம். அசோசியட் டைரக்டர் பிரசன்னா, எங்களையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்து, “எங்க இன்னும் மூணு பேரை காணோம்னு கேட்டாரு. எங்களுக்கு தெரியாதுன்னு சொன்னவுடனே, அவர் இயக்குனர் கிட்ட போய் சொன்னவுடனே, இயக்குனரும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிலாம்னு சொல்லிட்டு, எங்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்க சொன்னாரு. அப்ப புதுசா ஒரு ரெண்டு பேர் வந்தாங்க. அவுங்க இதுக்கு முன்னாடி எடுத்த ரெண்டு காட்சியிலும் இல்லை. அவுங்களையும் இந்த காட்சியில சேர்த்துக்கிட்டு அவுங்களுக்கும் ஒரு வரி டையலாக் சொல்லிக்கொடுத்தாரு பிரசன்னா. ஒரு தடவை மட்டும் எல்லாருக்கும் சொல்லி கொடுத்துட்டு அவரும் போயிட்டாரு. இந்த காட்சிக்கு தேவையான லைட்டிங்க்ஸ் எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவுல, நடிகர் விஜய் வந்து ஒரு சேரை, கடலைப் பார்த்து போட்டு ஒரு குடையை புடிச்சு உட்கார்ந்துகிட்டு, தனிமையில இனிமை காண ஆரம்பிச்சுட்டாரு. யாரும் அவர் பக்கத்துல போக கூட இல்லை. இந்த காட்சிக்கு, உள்ளூர் வெள்ளைக்கார கலைஞர்கள் சில பேர் பக்காவான ஜாக்கிங் காஸ்ட்யூம்ல வந்திருந்தாங்க. (அவுங்களுக்கு தான் ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்ச சம்பளம் 100 டாலர்ன்னு தெரிஞ்சுது). மணியோ 4மணியாயிடுச்சு. இன்னும் ஒரு ஷாட்டும் எடுக்கலை. இருட்டு வேற தலை காட்ட ஆரம்பிச்சுது. ஆகா, இன்னைக்கும் நம்ம பொழப்பு, நாய் பொழப்பாகிடும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டோம். எங்க நண்பர்களுக்கு எல்லாம் ஒரே கோபம். இன்னைக்கு மட்டும் நம்ம காட்சியை எடுக்காம விடட்டும், அதுக்கப்புறம் இவுங்க கூப்பிடுற அன்னைக்கு நாம வரவே கூடாதுன்னு ஒரு தீர்மானம் வேற போட்டாங்க. இப்படி நாங்க தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்கும்போதே, அங்க விஜய்யும், அமலாபாலும் ஜாக்கிங்ல சந்திச்சிக்குற மாதிரியான காட்சியை ஒரு 4/5 டேக்ல எடுத்து முடிச்சாங்க. அதாவது விஜய் வந்து ஒரு பத்தடி ஒடுற மாதிரியும் அமாலாபால் சைட்லேருந்து ஓடி வர மாதிரியும் எடுத்தாங்க. அப்ப அந்த வெள்ளைக்காரங்க ஓடனும். அவ்வளவு தான். அதற்கு அப்புறம் இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் மேட்டு மேல ஏறி போய் நிக்க சொல்லிட்டு, எங்களை எல்லாம் மேடு ஆரம்பமாகிற இடத்துல நின்னுக்கிட்டே மூச்சு வாங்குற மாதிரி ஜாக்கிங் பண்ண சொன்னாரு. நாங்களும் நின்னுக்கிட்டே மூச்சுவாங்கி ஜாக்கிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப அமலாபால் மேலேயிருந்து கீழே எங்க கிட்ட வந்து பேசுற மாதிரியும், நாங்க அவுங்க கிட்ட பேசுற மாதிரியும் ஒரு மூணு நாலு டேக்ல அந்த காட்சியை எடுத்தாங்க. நாங்களும், அப்பாடா, இந்த காட்சியும் முடிஞ்சிடுச்சு,இன்னும் அந்த டான்ஸ் கிளாஸ் காட்சி தான் இருக்குன்னு நினைச்சோம். ஆனா, அப்புறம் தான் சொன்னாங்க, இந்த காட்சியோட continuity காட்சி எடுக்கணும். நாங்க அப்புறம் சொல்றோம்னு சொன்னாங்க.

விஜய் கூட போட்டோ எடுக்கறதுக்காக நாங்க எல்லாரும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப்பார்த்தோம். ஆனா, அதுக்குள்ள மறுபடியும் விஜய்யும் அமலாபாலும் டான்ஸ் ஆடுற மாதிரியான காட்சியை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மணியோ 6.30 ஆயிடுச்சு. நல்லா இருட்டவும் ஆரம்பிச்சுடுச்சு. ஒரு சில நண்பர்கள் எல்லாம் கிளம்பி போயிட்டாங்க. நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க.

அப்படியென்ன பிசியா இருந்தாங்கன்னு, நான் அடுத்த பதிவுல சொல்றேன்.
- இன்னும் சொல்கிறேன்


No comments:

Post a Comment