இன்றைய உலகில் மனிதர்கள் எவ்வளவு
வேகமாக போய் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நான் இன்று பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தியே
சான்று.
துபாயில் ஒரு தம்பதி
தங்களது ஐந்து வயதுக் குழந்தையுடன் டாக்சியில் துபாய் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்.
எங்கே விமானத்தை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் (அவசரத்தில்) டாக்ஸியிலிருந்து
இறங்கி வேக வேகமாக தாங்கள் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் தூக்கிக்கொண்டு
விமான நிலையத்துக்குள் சென்று, மூன்று போர்டிங் பாஸை வாங்கியிருக்கிறார்கள். அப்பொழுது
தான் அந்த மூன்றாவது போர்டிங் பாஸுக்கு சொந்தமான தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை டாக்ஸியிலேயே
விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. உடனே, அலறி அடித்து விமான நிலைய போலீசாரிடம் முறியிட்டு
இருக்கிறார்கள். பிறகு போலீசாரும் அந்த டாக்ஸியை கண்டுப்பிடித்து விமான நிலையத்திற்கு
வர வைத்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம்
நடந்த இந்த களேபரத்தில், அந்த குழந்தை எந்த வித கவலையுமின்றி தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது.
அந்த டாக்ஸி ஓட்டுனருக்கும் பின்னாடி ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது தெரியவில்லை.
கடைசியில் அந்த தம்பதி, தாங்கள் போக வேண்டிய விமானத்துலேயே போனார்களா என்று தான் தெரியவில்லை.
இன்றைய நவீன உலகில்,
மனிதர்கள் எல்லாம் அவசர அவசரமாக தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும்.
அதற்காக பெற்ற குழந்தையையே மறக்கும் அளவுக்கு அவசரமாக செயல்படுவார்கள் என்று நினைத்து
பார்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment