Thursday, February 27, 2014

குழந்தையினால் ஏற்பட்ட தர்மசங்கடம்

இந்த சம்பவம் ஏறக்குறைய 17,18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் செட்டிநாடு சிமெண்ட் கம்பெனியின் சிமெண்ட் ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம். அந்த ஆலை, கரூர்க்கு அருகில் புலியூர் எனும் இடத்தில் இருக்கிறது. ஆலையை விட்டு வெளியே வந்தால் பேருந்து நிற்குமிடம் இருக்கும். ஒரு நாள் திருச்சி செல்வதற்காக அந்த பேருந்து நிற்குமிடத்தில் நின்றுகொண்டிருந்தேன். பேருந்தும் வந்தது, நான் முன்னாடி சென்று ஏறினேன். வண்டிக்குள் சரியான கூட்டம். முன்பக்கம் ஏறிய என்னை கூட்டம் தள்ளி, தள்ளி வண்டியின் நடுப்பக்கத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியது. அப்போ, எனக்கு முன்னாடி ஒரு பெண்மணி, கைக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தைக்கோ மிஞ்சிப்போனா இரண்டு வயசு இருக்கும். குழந்தையும் அழுது கொண்டு இருந்ததால், அந்த பெண்மணி தோளில் தலையை சாய்க்க வைத்து அதை தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த குழந்தையோ தோளில் தலையை சாய்க்காமல், அழுது கொண்டு வந்தது. அந்த பெண்மணிக்கு யாரும் பரிதாபப்பட்டு இடம் கொடுக்கலை. பின்னாடி நின்றுக்கொண்டிருந்த எனக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. யாருக்குமே மனிதாபிமானமே இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு, அந்த குழந்தையின் அழுகையை நம்மளால நிறுத்த முடியுமான்னு, ரெண்டு கையிலும்  சொடக்கு போட்டு காண்பிச்சேன், அது அழுகையை நிறுத்தலை. அப்புறம் முகத்தை கொஞ்சம் அஷ்டக்கோணலாக்கி, ரெண்டு கையையும் காதுக்கிட்ட வச்சு, கோமாளித்தனமான சேஷ்டைகளை எல்லாம் செஞ்சேன். உடேன குழந்தை அழுகையை நிறுத்தி, என்னைய வச்ச கண்ணு வாங்காம பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம். நம்மலாளையும் அழுகிற குழந்தையை சிரிக்க வைக்க முடியுதேன்னு. சரி குழந்தை தான் அழுகையை நிறுத்திடிச்சே, அப்புறம் நம்ம எதுக்கு கோமாளி வேஷம் போடணும்னு, நான் சும்மா நின்னேன். உடனே மறுபடியும் குழந்தை ஆழ ஆரம்பிச்சிடுச்சு. திருப்பியும் நான் கோமாளி வேஷம் போட்டவுடனே, குழந்தை சிரிச்சுது. ஆஹா, இதென்ன பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடிச்ச கதையா இல்ல இருக்குனு நொந்துக்கிட்டு, கோமாளி வேஷத்தை தொடர ஆரம்பிச்சேன்.
 
என்னோட வலது பக்கத்துல இருக்கிற மூணு பேர் சீட்டுல ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்திருந்த ஒருத்தர் எந்திரிச்சு, என் பின்னாடி நின்னுக்கிட்டு, என்னைய உட்காரச் சொன்னாரு. எனக்கோ தலையும் புரியலை, வாலும் புரியலை. என்னடா, நமக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமான்னு மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு ஓரத்துல உட்கார்ந்தேன். (மற்ற ரெண்டு பேரும் உள்ள தள்ளி உட்கார்ந்தாங்க). எனக்கு இடம் குடுத்தவரும், குழந்தையை வாங்கிக்குங்கன்னு சொன்னாரு. நானும் அந்த பெண்மணிக்கிட்ட, குழந்தையை கொடுங்கன்னு கையை நீட்டினேன். அதுவரைக்கும் நான் பண்ணின சேஷ்டைகளையெல்லாம் சிரிச்சு பார்த்துக்கிட்டு இருந்த குழந்தை, நான் கையை நீட்டினவுடனே, மறுபடியும் ஓன்னு ஒரே அழுகை. அந்த பெண்மணியும், பரவாயில்லைங்க, இது யாரு கிட்டேயும் போகாதுன்னு சொன்னாங்க. அப்பத்தான், எனக்கு இடம் கொடுத்தவருக்கு ஏதோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சிருக்கும் போல, உடனே அவர் என்னிடம் நீங்க தானே அந்த குழந்தைக்கு அப்பா? அப்படின்னு கேட்டாரு, நான் ஒரு நொடி ஆடிப்போயிட்டேன். என்னடாது, பெரிய வில்லங்கத்தை கூட்டுறதுக்கு தான் நம்மளை உட்கார சொன்னாரோன்னு பயமாயிடுச்சு. என் குழந்தை இல்லைங்கன்னு சொன்னேன். அதுக்குள்ளே பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த வேற ஒருத்தர், "அது என் குழந்தைங்கன்னு" ஒரு சத்தம் கொடுத்தாரு. என்னடா, ஆளாளுக்கு நம்ம குழந்தையை ஏலம் போடுறாங்கன்னு நினைச்சிருப்பார் போல, பாவம் அவர் நிலமை அப்படியாயிடுச்சு. அப்பத்தான் அந்த மனிதர் ஏன் எனக்கு இடத்தை விட்டுக்கொடுத்தாருன்னு புரிஞ்சுது. நான் உடனே எந்திரிச்சு, அவரையே உட்காரச் சொன்னேன். அவரும் உட்கார்ந்துக்கிட்டு, "சாரிங்க, நீங்க தான் அந்த குழந்தைக்கு அப்பான்னு" நினைச்சுட்டேன்னு" சொன்னாரு. அடப்பாவி, இந்த பால்வடியும் முகத்தை  பார்த்தா கல்யாணம் ஆகி, ஒரு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுதான்னு, மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்.  அதிலிருந்து பஸ்ல எந்த குழந்தையையும் கொஞ்சுறது கூட இல்லை.
 

12 comments:

  1. அதானே... அது எப்படி உங்களைப் பற்றி இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்...? ஹா.. ஹா... (சுவாரஸ்யமான) தர்மசங்கடம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் பார்த்து எனக்கு மிகுந்த ஆச்சிரியம். எப்படி உடனுக்குடன் பார்த்து கருத்துக்களை பதிகிறீர்கள் என்று.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி DD.

      Delete
  2. ///அதிலிருந்து பஸ்ல எந்த குழந்தையையும் கொஞ்சுறது கூட இல்லை. //

    குழந்தையை கொஞ்சுறதை நிப்பாட்டி பொண்ணுங்களை கொஞ்சுறதா நாட்ல நாலு பேர் பேசுறாங்க

    ReplyDelete
    Replies
    1. நாலு பேர் எல்லாம் வேண்டாம். நீங்க ஒருத்தரே போதும், என் பேரை ரிப்பேர் ஆக்குவதற்கு.

      மக்கள் என்னையப் பத்தி நல்லவிதமா நினைக்கணுங்கிறதுனால தான் நான் "உண்மையானவன்ன்னு" பேர் வச்சிருக்கேன். அதனால யாரும் நீங்க சொல்றதை நம்ப மாட்டாங்க.

      Delete
  3. என்ன சகோ !
    எல்லாரும் கலாய்கினமா அவங்க சும்மா குஷியா ஏதாவது சொல்வாங்க சொல்லட்டுமே. எனக்கு தெரியும் நீங்க நல்ல பிள்ளை இன்னு தப்பு தாண்டாவுக்கு எல்லாம் போகமாட்டீங்க என்று. சரியான பேர் தான் choose பண்ணியிருக்கிறீங்க அந்த பெயரை காப்பாத்துவீங்க தானே ....ஹாஹா. நல்லதுக்கு காலமில்லை சகோ. வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, என்னைய ரொம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லிட்டீங்க. சந்தோஷமா இருக்கு
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  4. நல்லா சிரித்தேன் ...

    அடி விழாத வரை நல்லது அல்லது மறைத்துவிட்டீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. இதை எழுதும்போது எனக்கே அப்படி ஒரு சிரிப்பு. ஆனா அன்னைக்கு ஒரு மாதிரி தர்மசங்கடம், எப்படா திருச்சி வரும் இறங்கலாம்னு இருந்தேன்.

      என்னது அடியா!!! அட கடவுளே ஏங்க நான் நல்லது தாங்க பண்னினேன். அதுக்கு எதுக்கு நான் அடி வாங்கணும்.

      இதுல நான் மறைத்துவிட்டேனா. உம். சகோதரி இனியா சொன்னமாதிரி, நல்லதுக்கே காலம் இல்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  5. காட்சியை கற்பனை பண்ணி பார்த்த ஏனோ மூன்றாம் பிறை கமல் ஞாபகம் வரார் சகோ?
    ஹா....ஹா....ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஏங்க நான் மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கரணம் எல்லாம் அடிக்கலைங்க.
      ஆமா, கற்பனை பண்ணியே என்னை கிழ்பாக்கத்துக்கு அனுப்பிடுவீங்க போல.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. நல்ல அனுபவம்தான்! உங்கள் பக்கம்( கரூர்- திருச்சி) நிறைய பேருந்துகள் இருந்தும் கூட்டம் கொஞ்சம் அதிகம்தான்! என்னுடைய குழந்தையுடன் ஒரு முறை நானும் பஸ்ஸில் அவஸ்தை பட்டேன்! நன்றி!

    ReplyDelete
  7. செம அனுபவமா இருக்கே..... :)))

    பல சமயங்களில் நல்லது செய்யப் போய் நல்ல 100 வாட்ஸ் பல்பு வாங்கிடுவோம்!

    ரசித்தேன்.

    ReplyDelete