Saturday, March 1, 2014

கோட்டைப்புரத்து வீடு - புத்தக விமர்சனம்


ரொம்ப நாளாக புத்தக விமர்சனம் எழுதணும்னு எண்ணி, எழுத முடியாமலே இருந்தது. என் வீட்டு குட்டி நூலகத்தில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய நாவலகள் தான் அதிகம் இடம்பிடித்திருக்கும். அவர் எழுதிய நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் இந்த மர்மம் நிறைந்த புதினமான "கோட்டைப்புரத்து வீடு” ஒன்று. இந்நாவல் ஆனந்த விகடனில் 31 வாரங்கள் தொடராக வெளிவந்துள்ளது. தலைப்பைப் பார்த்தவுடன், இது ஒரு சரித்திரக் கதையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றும். அதற்கு அவர் தன்னுடைய என்னுரையில், "அன்றைய சரித்திரமும், இன்றைய சமுதாயமும் கைகோர்த்து நடந்த ஒரு கற்பனை" என்று சொல்லி, அன்றைய சரித்திரத்தையும், இன்றைய சமுதாயத்தையும் மர்மம் எனும் முடிச்சைக் கொண்டு இணைத்திருக்கிறார்.  அந்த மர்மமுடிச்சானது சாபத்தால் பின்னப்பட்டதா இல்லை சதியால் பின்னப்பட்டதா என்பதை கண்டறிந்து அந்த முடிச்சை அவிழ்ப்பதே இந்த நாவலாகும். அன்றைய சரித்திரத்தில் அதாவது நூறாண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக , இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண்ணைக் கொண்டே அந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பது வரவேற்கத்தக்கது.

அப்படி என்னத்தான், அந்த கதையில் மர்மம் புதைந்திருக்கிறது என்று பார்க்கலாம். மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் கோட்டைப்புரத்து சமஸ்தானத்தில் ஆண் வாரிசுகள் யாரும் முப்பது வயதிற்கு மேல் உயிர் வாழ்வது இல்லை. அதற்கு காரணம் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு வஞ்சியம்மா என்ற தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்ணை, அன்றைய கோட்டைப்புரத்து ராஜாவான வேங்கைராஜன், வேங்கைப்பொன்னியம்மன் ஆலயத்திற்குள்ளேயே மானபங்கப்படுத்தி விடுகிறார். இதனால் அந்த வஞ்சியம்மா அம்மனின் சேலையைக் எடுத்து ஆலயமணியில் தூக்குப் போட்டுக்கொள்கிறாள். அவள் விடுத்த சாபத்தால் தான், அந்த சமஸ்தானமே அழிய ஆரம்பிக்கிறது. சரி, சாபம் என்று ஒன்று இருந்தால், பரிகாரம் ஒன்று இருக்குமல்லவா. அது இங்கேயும் இருக்கிறது. அந்த பரிகாரத்தை கண்டெடுப்பதில் தான் சிக்கல். அதாவது, சமஸ்தானத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, அது அவர்கள் தெய்வத்திற்கு நிகராக வணங்கும் ஒரு மூங்கில் பெட்டியை திறக்க வேண்டும். அதனுள் தான் அந்த பரிகாரம் இருக்கிறது. ஆனால் நூறு ஆண்டுகளாக அந்த சமஸ்தானத்தில் பெண் குழந்தை பிறக்கவில்லை. தப்பித்தவறி பிறக்கும் ஓரிரண்டு பெண் குழந்தைகளும், பிறந்தவுடன் இறந்து விடுகிறது. பெண் குழந்தை திறக்காமலே, அந்த மூங்கில் பெட்டியை திறந்த மற்றவர்களும், உடனே ஏதோ ஒரு விதத்தில் இறந்து விடுகின்றனர். இதனால் அந்த சாபத்திற்கான பரிகாரத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த கதையின் நாயகி, கோடீஸ்வர வீட்டுப் பெண்ணான அர்ச்சனா, தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த கோட்டைப்புரத்து சமஸ்தானத்தின் கடைசி வாரிசான விசுவநாத ரூபசேகரனை உயிருக்குயிராக காதலிக்கிறாள். அவனும் முப்பது வயதில் இறந்து விடுவான் என்று தெரிந்தும், அவன் மீதுள்ள காதலால், அந்த சமஸ்தானத்தில் ஏற்படும் இறப்புகள் எல்லாம் சாபத்தால் ஏற்பட்டதா அல்லது சதியால் ஏற்பட்டதா என்று கண்டறிகிறாள்.

இந்த நாவலின் பாதி அத்தியாயம் வரை படித்தால், இந்த நாவலில் உள்ள மர்மம் சதியா, சாபமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவிற்கு சாபத்திற்கும், சதிக்கும் சரிசமமாக பங்களித்திருப்பார் கதாசிரியர். புத்தகத்தை எடுத்தால் 320 பக்கத்தையும் முழுமூச்சாக படித்து முடித்து தான் கீழே வைக்கத் தோன்றும். அந்த அளவிற்கு, இந்த கதை நம்மை மர்மத்தோடு கூட்டிச் செல்லும்.

நூலின் பெயர் : கோட்டைப்புரத்து வீடு
ஆசிரியர் :  இந்திரா செளந்தர்ராஜன்
பக்கங்கள் : 320
வெளியிட்டோர் : வானதி பதிப்பகம்
23 தீனதயாளு தெரு, தியாகராய நகர்
சென்னை - 17 


20 comments:

  1. படித்து வியந்ததுண்டு... விமர்சனம் நன்று...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, உடனடியான விமர்சனத்துக்கு மிக்க நன்றி டி‌டி.

      Delete
  2. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமை நண்பரே
    இனி தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்களின் வருகை எனக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மிக்க நன்றி.

      Delete
  3. இனிமே புத்தகம் விமர்சனம் போட்டால் அந்த புத்தகத்தை வாங்கி அனுப்பிவிட்டு விமர்சனம் போடுங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. ஆ, அஸ்கு, புஸ்கு, இது நல்ல கதையா இல்ல இருக்கு.
      ஹலோ!!!!, எங்களால சாப்பாட்டை தட்டுல பரிமாற தான் முடியுமே தவிர ஊட்டி விட முடியாது.

      Delete
  4. நானும் இவரது நூல்களை படித்திருக்கிறேன்
    திகில் படம் பார்ப்பது போலவே இருக்கும்!
    நல்ல விமர்சனம் ! சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. இந்த நாவலை படித்திருக்கவில்லையென்றால், கண்டிப்பாக படித்து பாருங்கள்.

      Delete
  5. திகில் பரப்பும் இந்திர சௌந்தர்ராஜனின் எழுத்துக்கள் எனக்கும் விருப்பமே,

    நல்ல விமர்சனம்,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. நேரம் இருந்தால் இந்த நாவலையும் படித்துப்பாருங்கள்.

      Delete
  6. வணக்கம் சகோ !
    விமர்சனம் நன்றே வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி ! முயற்சிக்கிறேன் வாசிப்பதற்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. இந்த நாவலை படித்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

      Delete
  7. ஆஹா! உங்க வீட்டு குட்டி நூலகத்தை கொள்ளை அடிக்க வேண்டியது தான்....:))

    த்ரில்லிங்கான புத்தகமாக இருக்கே. எனக்கு இந்திரா செளந்தர்ராஜன் நாவல்கள் மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      குட்டி நூலகத்தை நல்லா வந்து கொள்ளையைடிங்க. ஆனா அதுக்கு முன்னாடி, எந்தெந்த புத்தகங்களையெல்லாம் கொள்ளையாடித்தீர்கள் என்று நான் வைத்திருக்கும் நூலக பதிவேட்டில் எழுதி விட்டு போங்கள்.

      நீங்கள் ஏற்கனவே "என் பெயர் ரங்கநாயகியைப்" படித்திருக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாக இதையும் படித்துப்பாருங்கள்.

      Delete
  8. ஆஹா இது நல்ல யோசனையாய் இருக்கிறதே அட இது எனக்கு தோணாம போச்சே எப்படி வாசிப்பது என்று திணறிக் கொண்டிருந்தேன். எனக்கும் கொஞ்சம் tips தாருங்கள் எப்படி கொள்ளை அடிப்பது என்று. ப்ளீஸ் !

    ReplyDelete
    Replies
    1. எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க???
      கொள்ளை அடிக்கிறதுக்கு டிப்ஸ் வேறயா....

      Delete
    2. //எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க???//face book இருந்த இந்த கமெண்டுக்கு லைக் போட்டுருப்பேன் .lol .

      Delete
    3. நான் தான் முகநூலிற்குள் போவதே கிடையாதே. அது என்னவோ எனக்கு முகநூலின் மீது ஒரு ஆர்வம் இருந்ததே இல்லை.

      Delete
  9. என்னையும் கொள்ளைக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும்! தலைமைப் பொறுப்பாக இருந்தாலும் சரி! :)))

    படிக்கத் தூண்டும் விமர்சனம். பாராட்டுகள்.

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete