Friday, September 12, 2014

குழந்தை கடத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற!!!!





 

இப்பொழுதெல்லாம் பத்திரிக்கைகளை திறந்தாலே, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை கொடுமைகளும், அவர்களை கடத்துவதும் தான் முக்கிய செய்திகளாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் கோவையில் இரண்டு பள்ளிக்குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டதை, யாராலும் எளிதில் மறக்க முடியாது. பணத்தாசை பிடித்தவர்கள், குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவதும், மிருகமாக பிறக்க வேண்டியவர்கள், தவறி மனிதனாக பிறந்து, மிருக குணத்துடன் பால் மனம் மாறாத குழந்தைகளிடம் தவறாக நடப்பதும், அன்றாட நிகழ்ச்சிகளாகவே மாறிவிட்டன. நம்முடைய குழந்தைகளுக்கு இம்மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது என்று நாம் சும்மா இருக்க கூடாது. குழந்தைகளுக்கு “GOOD TOUCH / BAD TOUCH” போன்றவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்து அவர்களை பாதுக்காக்க வேண்டும். மேலும் இந்த குழந்தை கடத்தலை ஒரு பெற்றோராக நாம் எவ்வாறு தடுக்க முடியும் என்பதை மின் குழுமத்தில் நான் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சூப்பர் ஐடியா!!
பாஸ்வேர்ட் (password) கேட்ட சிறுமி..(SHARE MORE PLEASE)
===============================
.
கடத்தலில் தப்பிய சாதுர்யம்...,பெற்றோர்களே உடனே அமல்படுத்துங்கள்.....!
==============================
பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்....,
(
அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும், இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்) ...,
சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான்.
அருமையான யோசனை அல்லவா இது.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!

 
இந்த செய்தியை நீங்களும் உங்கள் நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, September 9, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்


 



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை


சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்


சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நகர் வளம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்

ஐயா அவர்கள் வருடந்தோறும், ஐப்பசி மாதத்திற் கந்த சஷ்டி யுற்சவாரம்பதினம் முதல் சஷ்டிதினம் வரை காரைமாநகர் அறுபத்துமூவர் மடாலயத்தில், கந்த புராணத்தில் சூரசம்மாரப்படலம், தேவர்கள் போற்று படலம், மீட்சிப்படலம், தெய்வயானையம்மை  திருமணப்படலம்,வள்ளியம்மை திருமணப்படலம் முதலிய பகுதிகளைப் படித்துப் பொருள்கூறித்   தத்துவார்த்தங்களும் அதிநுட்பமாய் காட்டி கேட்போர் மனமகிழப் பக்தி சிரத்தையுடன் பிரசங்கஞ் செய்வார்கள்.

 
அதுவன்றியும் சந்தர்ப்பம் நேர்ந்த பொழுதெல்லாம், விபூதி, உருத்திராஷம், ஸ்ரீபஞ்சாஷரம்  முதலிய சிவ சாதனங்களின் மகிமைகளையும் சிவபுராணங்களிலும் பெரிய புராணத்திலும் ஆங்காங்குள்ள விசிஷ்டங்களையும், பெரியோர்களுடைய மகிமைகளையும் பக்தி சிரத்தையுடன் கேட்போர்க்கு ஆனந்தம் உண்டாகும்படி பிரசங்கஞ் செய்வார்கள்.

அவ்வாறு பிரசங்கஞ் செய்யும்பொழுது சிவமகிமைகளைப் பிரமாணங்களோடு எடுத்துக்காட்டி  ஆண்டானடிமைத்திரமும் விளக்கி புறச்சமய நிராகரணஞ் செய்து சிவபரத்துவ ஸ்தாபன விஷயம் நேர்ந்துழி வீராவேசத்துடனிருந்து, சிங்ககர்ச்சனைப் போன்ற கெம்பீரத் தொனியுடன் கடன்மடை திறந்தாற்போன்ற தடைபடா வாக்கினால் கன்னெஞ்சமும் கசிந்துருக எவ்வளவு நேரமானாலும் கேட்போர் சலியாமல் கேட்கத்தக்க இனிமையுடன் விபூதி உருத்திராக்க தாரண சிவவேடத் திருமேனிப் பொலிவுடனிருந்து பிரசங்கஞ் செய்வார்கள்.

ஐயா அவர்கள் சிவநேசர் திருக்கூட்டத்தில் கலந்து அளவளாவி அதில் அக்ராசனாதிபதியாகவுமிருந்து பிரசங்கஞ் செய்து வந்தமை ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்படும். அந்தத் திருக்கூட்டத்தின் எட்டாம் ஆண்டு மூன்றாவது கூட்டம் பள்ளத்தூரில் நடைப்பெற்றபொழுது ஐயா அவர்கள் தங்கள் காலத்தின் கடைசிப் பிரசங்கமாக “நித்திய மங்கள சோபானாம்” என்பதைப் பற்றி உபந்யாசம் புரிந்தார்கள். இது வியக்கத்தக்கதாகும்.

எப்பொழுதும் சிவமகிமையையே பேசுதலிலும், எழுதுதலிலும் மாணாக்கர்களுக்குப் போதித்தலிலுமே காலங்கழித்து வந்தார்கள்.


ஐந்தாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.

Friday, September 5, 2014

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்னி சைவ மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை












அடியேன் முதன் முதலாக ஒரு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு இறைவனுடைய அனுக்கிரகத்தால் ஒரு கட்டுரையை சமர்பிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையானது விழா மலரிலும் வெளி வந்திருக்கிறது. இப்படி ஒரு ஆன்மிக மாநாட்டை இங்கு நடத்தப்போகிறார்கள் என்று ஆரம்பத்தில் தெரிந்தபொழுது, நம்முடைய சைவ சமயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதே, அதனால், நம்மால் கட்டுரை எல்லாம் எழுத முடியாது என்று தான் எண்ணியிருந்தேன். ஈசனின் கருணையால், சமயக்கல்வி பற்றிய கட்டுரைகளும் எழுதலாம் என்று தெரிய வந்த போது,நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதலாம் என்று முடிவெடுத்தேன். என்ன தான், நான் கணிணித்துறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த காலத்து தொழில் நுட்பங்களான ஜாவா (java...) போன்றவைகளில் எனக்கு பரிச்சயம் கிடையாது (நான் ஆதி காலத்து தொழில்நுட்பமான cobol தொழில் நுட்பத்தில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்). அதனால் சமயக்கல்விக்கு இணையத்தளத்தை உருவாக்குவதை பற்றி கூறவில்லை. ஆனால் வருங்காலத்தில், அவ்வாறான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு இக்கட்டுரை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இக்கட்டுரையை படைத்தேன். 
அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்
                            சிட்னி சொக்கன்
முன்னுரை

     “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
     யாண்டும் இடும்பை இல.”

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திடுவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவர்க்கு உலகத்தில் துன்பம் ஒரு போதும் இல்லை என்று திருக்கறளில் சொல்லியிருப்பது போல், துன்பக்கடலானது நம்மை சூழாமல் இருப்பதற்கு இறைவனை நினைக்க வேண்டும் என்று அடுத்த தலை முறையினருக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தாயகத்திலும் சரி, புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் சரி, சமயப் பள்ளிகள் மூலம் சமயக்கல்வியை நாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகில், சமயத்தை சொல்லிக்கொடுப்பதற்கு சமயப்பள்ளிகள் மட்டும் போதுமா என்று பார்த்தால், கண்டிப்பாகப் போதாது . தொழில் நுட்பத்தையும்  பயன்படுத்தி சமயக் கல்வியை சொல்லிக்கொடுத்தால் தான், ஓரளவிற்கு நாம் வெற்றி பெற முடியும். இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியால், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு இணையம். சமயக்கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் இணையம் எவ்வாறு பயன்படுகிறது என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இணையம் வழி கற்றுக்கொள்ளுதல்
     சமயம் சார்ந்த தகவல்களை இன்று ஏராளமான இணையத் தளங்களில் (website) காணமுடிகிறது. அவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, “சமய இணைய நூலகம்” என்று ஒன்றை சமய அமைப்புகள் நிர்வாகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியேனின் கருத்தாகும். இதனால் எதிர்காலத்தில் சமயம் சார்ந்த அனைத்து இணையத்தளங்களும் ஒரே இடத்தில் காணப்படும். இனி, சமயத் தகவல்களை அளித்து, சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளகளைப் பார்ப்போம்.

இறை வழிப்பாட்டைப் பற்றி இத்தளத்தில் காணமுடிகிறது. அதாவது, இறைவனை தொழும் முறை, திருநீற்றை பயன்படுத்தும் முறை, உருத்திராக்கம், சிவலிங்கங்கள், சரியை, கிரியை, யோகம் ஞானம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, வழிபாடு, சிவ ஆகமகுறிப்புகள், ஆன்மீக வகுப்பறை போன்றவற்றை இத்தளத்தில் காணலாம்.

இத்தளத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் புராணம் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் காண முடிகிறது.

பன்னிரு திருமுறைகளையும் படிக்கவும், கேட்கவும் இத்தளம் உதவுகிறது.

ஒளி, ஒலி வடிவத்தில் நாயன்மார்களின் கதைகளை இத்தளத்தில் காணலாம். குழந்தைகளுக்கு நாயன்மார்களின் கதையை, இத்தளத்தைக் கொண்டு காண்பித்தால், அவர்கள் எளிதில் நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.  

ஒலி வடிவில் தேவாரத்திருமுறைகளை பதிவிறக்கம் செய்வதற்கு இத்தளம் உதவுகிறது.

தேவாரப்பாடல் பாடப்பெற்ற 276 திருத்தலங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் காண முடிகிறது. மேலும் அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்கள், முகவரி போன்றவைகள் இதில் இருக்கிறது. இந்த இணையத்தளத்தைக் கொண்டு, அத்திருத்தலங்களுக்கு எல்லாம் எளிதாக சென்று இறைவனை தரிசிக்க முடியும்.

முருகக் கடவுளுக்கான ஒரு இணையத்தளமாக இந்த இணையத்தளம் காணப்படுகிறது.

சமயம் சம்பந்தமான புராண கதைகளை இத்தளத்தில் காண முடிகிறது.
இத்தளங்களின் மூலம் வீட்டிலிருந்தபடியே சமயம் சார்ந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள இணையம் வழி வகுக்கிறது. இது போல் இன்னும் பல தளங்கள், சமயம் சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது.

இணையம் வழி கற்பித்தல்
      மேற்சொன்ன அனைத்து இணையத்தளங்களும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கிறது. அவர்கள் அவற்றைப் படித்து, தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். சமயப்பாடசாலைக்கும் குழந்தைகளை அனுப்பலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் அவ்வாறு படிப்பதைக் காட்டிலும் கணினி வழியாக தாங்களே படிப்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிக்கூடங்களிலும் அதனைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். மேலும் எல்லா நாடுகளிலும் சமயப்பாடசாலை இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் சமயத்தை கற்பிப்பதற்கு, இணையத்தின் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. தமிழையும், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கும் இணையத்தளங்களைப் போல், சமயக்கல்விக்கு அம்மாதிரியான இணையத்தளங்களை உருவாக்கி கற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். மொழிகளை கற்றுக்கொடுக்கும் சில இணையத்தளங்களை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் “bug club” என்கிற இணையத்தளம் பிரபலமாக இருக்கிறது. அந்த இணையத்தளத்தில் பெரிய புத்தகம்(big book) வடிவிலான புத்தகங்களை வாசித்து அல்லது கேட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இதனுடைய பயன்பாடு பெரும்பாலும் சிறிய குழந்தைகளுக்குத்தான்.



இம்மாதிரியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கி, அதில் இறைவனை வழிபடும் முறை, கடவுளின் படங்கள் போன்றவைகளையெல்லாம் ஏற்றி அதற்கேற்ப கேள்வி பதில்களை தயாரிக்கலாம். இதன்மூலம் சிறிய குழந்தைகள் சமயக்கல்வியை படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த தளம், சிறு குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் எல்லாம் பயிற்சியுடன் அமைக்கப்பெற்றிருக்கிறது. இம்மாதிரி ஒரு தளத்தை வடிவமைத்து, நாயன்மார்களின் கதைகள், திருவிழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதில் ஏற்றி, அதற்கேற்ப பயிற்சிகளை உருவாக்கலாம்.
சமயக்கல்வியை நடத்தும் பாடசாலைகள் அங்கு நடத்தப்படும் பாடங்களை இணையத்தளத்திலோ அல்லது குறைந்தபட்சம் வலைப்பூவிலோ பதிவேற்றம் செய்தால், உலகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். உதாரணமாக http://www.southasia.sas.upenn.edu/tamil/les.html இந்தத்தளத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தை எல்லோராலும் படிக்க முடியும்.

http://anbujaya.com/index.php/2013-06-07-10-15-17/2013-06-07-10-17-17 இந்தத்தளத்திலும் தமிழ் கற்றுக்கொடுப்பதற்கான உத்திகள் கையாளப்பட்டிருக்கிறது. இந்த தளங்களை மாதிரி சமயக்கல்வியை சொல்லிக்கொடுப்பதற்கான பாடத்திட்டங்களை இணையத்தளத்தில் ஏற்றினால் எல்லோராலும், எங்கிருந்தும் சமயக்கல்வியை இணையத்தின் மூலம் கற்க முடியும்.

முடிவுரை
     இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தின் மூலம் தமிழ் மொழி அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அதுபோல் சமயக்கல்வியும் அடுத்தக்கட்டத்தை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் இக்கட்டுரை உதவியாக  விளங்கும் என்று நம்புகிறேன்.



  

Wednesday, September 3, 2014

ஆணின் தோல்விக்கு பின்னால் பெண் இருக்கிறாள்




                (பட உதவி - கூகிள் ஆண்டவர்)

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் ஒரு ஆண் வெற்றி பெறும்போது, அதில் அவனுடைய மனைவியின் பங்களிப்பானது மிக முக்கியமாக இருக்கும். அது போல் வேலையிலோ அல்லது வியாபாரத்திலோ வெற்றி பெற்ற ஒரு பெண், தன்னுடைய இந்த வெற்றிக்கு தன்னுடைய கணவர் தான் காரணம் என்று கூறுவார். இவ்வாறு, ஒரு ஆணுடைய வெற்றிக்கு பெண்ணும், பெண்ணுடைய வெற்றிக்கு ஒரு ஆணும் காரணக்கர்தாவாக இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் படித்த ஒரு செய்தியோ, பெண்களால் தான் ஆண்கள் தோற்று போகிறார்கள் என்று கூறியது. அந்த ஆண்களின் தோல்வி வாழ்க்கையில் இல்லை, விளையாட்டில். அதுவும் இந்தியாவில், மிக மிக பணக்கார விளையாட்டான கிரிக்கெட்டில் தான். நம் ஆட்கள் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு, அவர்களது மனைவியரும், தோழியரும் தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்லியிருக்கிறது. நம்மவர்கள் விளையாடி தோற்றதற்கு, எப்படி அவர்களது மனைவியர் காரணமாவர்கள் என்று நீங்கள் ரொம்ப யோசிக்க வேண்டாம். காரணம் இது தான், கிரிக்கெட் வாரியம், வீரர்களோடு அவர்களது மனைவியைரையும், தோழியரையும் இங்கிலாந்து செல்ல அனுமதித்திருந்தது. வீரர்களை, பயிற்சிக்கு அனுப்பாமல், அவர்களை தங்களோடு ஊர் சுற்றவும், ஷாப்பிங் செய்யவும் அவர்களுடைய மனைவியர் கூட்டிக்கொண்டு சென்று உள்ளார்கள். மேலும், வீரர்கள் விளையாட நினைத்தாலும், அவர்களை விளையாட முடியாதபடி, குழப்பி, திசை திருப்பி விட்டார்கள் என்று வீரர்களின் தோல்விக்கு அலசி ஆராய்ந்து காரணம் சொல்லியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதுவே, இந்தியா இந்த இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தால், இந்த முழு வெற்றிக்கும், வீரர்களோடு சென்ற அவர்களது மனைவிய\ரும்,தோழியரும் தான் காரணம் என்று கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக சொல்லியிருக்கும். வாரியம் சொல்ல வில்லையென்றாலும் கூட, நம் வீரர்கள் கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆக மொத்தத்தில், இவர்களின் வெற்றி தோல்வி காரணங்களுக்கு ஒரு பெண் தான் தேவைப்படுகிறாளே ஒழிய விளையாட்டுத்திறன் இல்லை என்று நினைக்கும்போது, இந்த பாழாய்ப்போன கிரிக்கெட்டை நம்பி இன்னும் நம் நாட்டில் பைத்தியங்கள் உலவுகிறதே என்று மனது வேதனையடைகிறது.   

பின்குறிப்பு – அடியேனுடைய கட்டுரை படைப்பும், நாடகமும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அதனைப்பற்றிய பதிவுகள் விரைவில் ..... 


Friday, August 29, 2014

வலைப்பூ உலகை மறந்த அந்த இரு வாரங்கள்


 
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரு வாரங்களாக அடியேன் வலைப்பூ உலகை விட்டு சற்று ஒதுங்கியிருந்தேன். “எல்லோரும் நலம் தானே, வேலைப் பளுவா” என்று திரு, துளசிதரன் சார் அன்பாக கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையில் வேலைப்பளு எல்லாம் இல்லை. என்னிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய கெட்டப் பழக்கம், எந்த ஒரு வேலையையும் முன்கூட்டியே செய்யாமல், கடைசி நேரத்தில் செய்வது தான். இதனால் ஏற்பட்ட பாதிப்பு தான் நான் இரு வாரங்களாக வலைத்தளத்திற்கு வர இயலாமல் போனது.

இங்கு கடந்த இரு வாரங்களாக “ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கம்” நடத்தும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஓவியா கவிதை மனனப்போட்டியிலும், வாய் மொழித் தொடர்பிலும் மற்றும் தனி நடிப்பு போட்டியிலும் பங்கேற்றிருந்தார். அதில் முதல் இரண்டை வீட்டு அம்மணி சொல்லிக்கொடுத்து விட்டார்கள். இந்த தனி நடிப்பு போட்டிக்கு (“Mono Acting”) “ஊக்கமது கைவிடேல்” என்ற கருப்பொருளில் ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை நடித்துக்காட்ட வேண்டும். அந்த போட்டிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான், ஓவியாவிற்கு ஏற்ற ஒரு சின்ன ஸ்கிரிப்ட்டை தயார் செய்து நடிக்க சொல்லிக்கொடுத்தேன். அவரும் மிக குறுகிய காலத்தில் அந்த தனி நடிப்பு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தில் வந்து விட்டார். (இவைகளைப் பற்றிய விவரங்களை தனிப்பதிவாக எழுதுகிறேன்).   

இன்று மாலை முதல், ஞாயிறு வரை இங்கு “சைவநெறி மாநாடு” நடக்க இருக்கிறது. இதில் நாளை மாலை நாங்கள் நடிக்கும் “ஈசனின் திருவிளையாடல்” என்ற குறு நாடகம்(25 நிமிடம்) அரங்கேற உள்ளது. சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களில், ஒரு திருவிளையாடலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு கோர்த்து ஒரு நாடகமாக மாற்ற முயற்சித்து,சென்ற வாரம் தான் அந்த முயற்சிக்கு இறுதி வடிவம் கொடுத்தேன். என்னுடைய இந்த கடைசி நேரம் செய்யும் பழக்கத்தால், இதில் நடிக்கிறவர்களையும் நான் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கிறேன். அவர்களும், என்னிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், நாங்கள் வசனங்களை எப்படியாவது மனப்பாடம் செய்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். நாடகத்துக்கான ஒத்திகையையும் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறோம். மேலும் நாளைய தினத்தில், மாநாட்டில் நான் எழுதிய கட்டுரையை (“இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்”) சமர்பிக்க இருக்கிறேன். அதற்கு தேவையான பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் (Power point presentation) இன்னும் செய்து முடிக்க வில்லை (இன்றிரவு அதை முடித்து விட முடியும் என்று நம்புகிறேன்!!!).
 
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வலைத்தளத்திற்கு வரலாம் என்று நினைத்த பொழுது தான், உடல் நிலை சிறிது சரி இல்லாமல் போய்விட்டது. அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எல்லாம் போட்டு உடல் நிலையை சீராக்கிக்கொண்டு, இந்த பதிவை எழுதுகிறேன். இனி மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து வலைத்தளத்திற்கு டிமிக்கி கொடுக்காமல் வருவேன் என்று கூறிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

Tuesday, August 12, 2014

Why Speak Tamil


 
நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம். இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு,  மேலும்....

Tuesday, August 5, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 5 (3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை)

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)




சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs)  என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன்.  காணொளியை காண...