Sunday, October 28, 2012

இரு பச்சிளம் குழந்தைகள் – வெவ்வேறு சூழ்நிலையில்

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தினப்பத்திரிக்கையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை பற்றிய வெவ்வேறு செய்தியை படிக்க நேர்ந்தது. இவ்விரு செய்திகளும், நான் மிக சமீபத்தில் பதித்த என் முதல் சிறுகதையான “தாய்மை”யுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது.  
முதல் செய்தி, சென்னை மெரீனா கடற்கரையில், உழைப்பாளர் சிலையின் பின்புறத்தில், அனாதையாக வீசப்பட்டு கிடந்த, பச்சிளம் குழந்தையை பற்றியது.
நான் என் கதையில், மனைவி என்ற அந்தஸ்தை காட்டிலும், தாய்மை என்ற அந்தஸ்து தான் ஒரு பெண்ணை பெருமை பட வைக்கிறது என்று கூறியிருப்பேன். ஆனால், இந்த செய்தியை படித்தபிறகு, இப்படியும் ஒரு கல் நெஞ்சம் கொண்ட தாய் இருப்பாளோ என்று எண்ண வைக்கிறது. அந்த பெண்ணை தாய் என்று சொல்வதை காட்டிலும் ஒரு அரக்கி என்று சொன்னால் தான் சரியா இருக்கும். அந்த குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்தால் அது உருவாகாமலே தடுத்திருந்திருக்கலாம். அப்படியும் மீறி அந்த குழந்தை பிறந்து விட்டது எனும்போது, குறைந்தபட்சம் அநாதை ஆசிரமத்திலையாவது அந்த குழந்தையை சேர்திருந்திருக்கலாம். இது எதுவுமில்லாமல், கடற்கரை சாலையில் பொம்மையை வீசி எறிகிற மாதிரி, அந்த குழந்தையை வீசி எறிந்து விட்டு சென்றிருக்கிறாள் அந்த தாய் உருவில் இருந்த அரக்கி. கடற்கரையில் அதுவும் ஒரு மறைவிடத்தில், எத்தனை வகையான ஜந்துக்குள் இருக்கும், நாய்கள் திரியும். இதில் ஏதாவது ஒன்று கடித்திருந்தால்,அந்த குழந்தை என்னவாகியிருக்கும். அந்த குழந்தை எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்கிற ஒரு மனப்பான்மை தான் தெரிகிறது அந்த அரக்கியிடம். நல்ல வேளை, அந்த குழந்தைக்கு எதுவும் ஆகாமல், கடற்கரையில் ரோந்து வந்த போலீசார் கண்டெடுத்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அரக்கிக்கு குழந்தையாய் வந்து பிறந்தது தான் அந்த குழந்தை செய்த பாவமா?
அடுத்த செய்தி, பிறந்து ஒரு மாதமே ஆன, பச்சிளம் குழந்தை தாமினி, தன் ஏழை ரிக்ஷா தொழிலாளி தந்தையை, லட்சாதிபதி ஆக்கியுள்ளதைப் பற்றியது.
பொதுவாகவே, பெண்களுக்கு, பிரசவம் என்பது மறு ஜென்மம் எடுப்பது போன்றதாகும். கிட்டதட்ட, 99.9 சதவீத பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அந்த .1 சதவீத பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுகிறார்கள். என் தாய்மை கதையில் வருகிற மாதிரியே உண்மையில் ஒரு பெண்ணும் பிரசவத்தில் இறந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர் நகர வீதிகளில், சைக்கிள் ரிக்ஷா ஓட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர், பப்லு. கடந்த மாதம் 20ஆம் தேதி, அவரின் மனைவி பிரசவத்தில், மிகக் குறைந்த எடையில் ஒரு பெண் குழந்தையை அவருக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். அந்த பெண் குழந்தையை அவர் சுமை என்று நினைக்காமல், தன் தோளில் தூளி ஒன்றை கட்டி, அதில் குழந்தையை தொங்க விட்டவாறு, ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். மிகுந்த பாசத்துடன் அந்தக் நோஞ்சான் குழந்தையை, பப்லு வளர்த்து வருவதைக் கண்ட, தனியார் "டிவி' நிருபர், அதை செய்தியாக, "டிவி'யில் வெளியிட, பப்லுவின் நிலைமையே மாறிவிட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தை தாமினியை, தங்கள் மருத்துவமனையில் சேர்த்த தனியார் மருத்துவமனை, இலவசமாக "இங்குபேட்டரில்' வைத்து, உயிர் காக்கும் சிகிச்சை அளித்து, குழந்தையைக் காப்பாற்றி விட்டது. அந்தக் குழந்தையை, பப்லு எப்படி வளர்க்கப் போகிறார் என்ற கவலையில், நல்ல உள்ளம் படைத்த பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்து, அவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினர். ராஜஸ்தான் மாநில அரசு, குழந்தையின் மருத்துவச் செலவை ஏற்க முன்வந்தது. வங்கி ஒன்று, பப்லுவுக்கு, 10 ஆயிரம் ரூபாயில், புதிய ரிக்ஷா வாங்கிக் கொடுக்க முன்வந்துள்ளது. ஜெய்ப்பூர் மாவட்ட கலெக்டர், "என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என உறுதி அளித்துள்ளார். அந்த குழந்தையின் தந்தை பப்லு தற்போது லட்சாதிபதியாகி விட்டார். அவர், அந்த பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி:
"இந்தப் பணத்தை வைத்து, தாயில்லாத என் குழந்தையை நன்றாக  வளர்த்து, நன்றாக படிக்க வைத்து, உயர்ந்த நிலைமைக்கு    ஆளாக்குவேன்'   என, உறுதியளிக்கிறார் பப்லு.அவர் மேலும்     கூறியதாவது:என்      குழந்தையை வைத்து பிச்சை எடுக்க, நான்      விரும்பவில்லை. நல்ல      முறையில் வளர்க்க விரும்புகிறேன். பெண்      குழந்தைகளைப் புறக்கணிக்கும் இந்த சமுதாயத்தில், என்னைப் பார்த்து பலரும் மனம்      மாற வேண்டும்.தோளில் தூளி கட்டி, அவளை   வளர்க்க நான்     தயாரானேன். என் நிலையைப் பார்த்து, வருந்திய பலரும் உதவி    செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி".இவ்வாறு அவர்   தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையோ தாயிருந்தும், அந்த தாயின் அன்பு கிடைக்காமல் அநாதை ஆசிரமத்தில் வளர்கிறது. மற்றொரு குழந்தையோ, பிறக்கும்போதே, தாயை இழந்து, தாயுமானவராக இருக்கும் தன் தந்தையிடம் வளர்கிறது.  இந்த வேறுபாட்டில் தான் ஆண்டவனுடைய படைப்பின் சூட்சமம் இருக்கிறது.  இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்டால், நாமும் ஞானிகள் தான்.   

1 comment:

  1. ஒவ்வொருவருக்கும் தான் வளர்ந்த சூழ்நிலை, தன்னை சார்ந்த சமுதாயம் மற்றும் நண்பர்கள் இவைகளை பொறுத்தே முடிவெடுக்கும் திறனும், குணங்களும் அமைகின்றன ... இந்த மாற்றம் மாற்றமுடியாதது... இதை சகித்துக்கொண்டு போனால் மட்டுமே நம்மால் இறுதிவரை வாழமுடியும் ... இல்லையென்றால் பாதியிலேயே நாம் மனநோயாளியாவது உறுதி... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete