Saturday, October 20, 2012

தாய்மை – 3

பகுதி - 2

மறு நாள் காலை, வரவேற்பறையில் வெங்கடாச்சலம் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். மரகதமும், தேவசேனாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

மரகதம், “நானும் ஆறு வருஷம் பொறுத்துப் பார்த்துட்டேன், இவ, இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை கொடுக்கிற மாதிரி தெரியலை. இவளை தள்ளி வச்சுட்டு,என்னோட ஒண்ணுவிட்ட அண்ணன் கிட்ட உன்னோட இரண்டாவது பொண்ணை, என் வீட்டுக்கு மருமகளா அனுப்புறியான்னு கேக்கப்போறேன்” என்றாள்.

அங்கே வந்த முருகன், “அம்மா, என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியான்னு” கேட்டான்.

“நான் நல்லா புரிஞ்சு தான் பேசுறேன். பின்ன என்னடா, நேத்து அந்த வளைக்காப்புல, நான் பட்ட கஷ்டம் இருக்கே, அப்பப்பா, என்னமோ எனக்கு தான் குழந்தையே இல்லாத மாதிரி, ஒவ்வொருத்தியும் என்னைய பார்க்குறதும், குசு,குசுன்னு அவளுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுமா, ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு” என்றாள்.

உடனே வெங்கடாச்சலம், “அப்புறம் ஏன் போனே?” என்று கேட்டார்.

“ஆ! இது நல்லாயிருக்கே கதை, புது செருப்பு கடிக்குதுன்னு, போட்டுக்காமா வெறு காலோட நடக்க முடியுமா. எனக்கு இனிமே இவளுக்கு குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை இல்லை. அதனால தான், இவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்”. என்றாள் மரகதம்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தேவசேனாவுக்கோ, கண்களிலிருந்து கண்ணீர், தாரை தாரையாக வழிந்துக் கொண்டிருந்தது.

ஏம்மா, அவ நம்பளை நம்பி வந்திருக்கா, அவளுக்கு எப்படிம்மா துரோகம் பண்றது. ஏற்கனவே அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. அவ அண்ணன் தான் அவளுக்கு கல்யாணத்தையே பண்ணிவச்சாரு. இப்ப அவளை அவ அண்ணன் வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்ப பாவம்மா. என்ன ஆனாலும் சரி இவ தான் எனக்கு கடைசி வரைக்கும் பொண்டாட்டி.என்னால வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியாது” என்று குரலை உயர்த்தி பேசினான் முருகன்.

“சரியா சொன்னடா என் சிங்கக்குட்டி. இங்க பாரு, மரகதம் நீ சொன்ன பாயிண்ட்க்கே வரேன். புது செருப்பு காலை கடிக்குதுன்னா, காலுக்கு எண்ணையை தடவிக்கிட்டு, அந்த செருப்பையே மாட்டிக்கிட்டு போவமே ஒழிய, அந்த செருப்பை தூக்கிப் போட்டுட்டு, வேற ஒரு செருப்பை வாங்க மாட்டோம். இந்த காலத்துல குழந்தை இல்லைங்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு. அப்படியும், அவனுக்கு குழந்தை பிறக்கலையா, ஒரு அநாதை குழந்தையை தத்து எடுத்துக்குவோம்.” என்றார் வெங்கடாச்சலம்.

“என்னது! தத்து எடுக்கிறதா. அதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என்று முரண்டு பிடித்தாள் மரகதம்.

வெங்கடாச்சலம் மரகதத்திடம், “சரி, இதுக்கு வேற ஒரு வழி சொல்றேன். ஏண்டி, அவ வீட்டுக்கு விலக்காயி எத்தனை நாள் ஆச்சு” என்று கேட்டார்.

மரகதமும், இன்னைக்கு இரண்டாவது நாள்” என்று கூறினாள்.

வெங்கடாச்சலம் உடனே மகனிடம் திரும்பி, “அடுத்த வாரத்திலிருந்து, பத்து நாளைக்கு நீ கடைக்கு வர வேண்டாம். நீங்க இரண்டு பேரும் எங்கையாவது, ஒரு மலைப் பிரதேசத்துக்கோ, இல்ல பெங்களூர், மைசூர்ன்னு எங்கேயாவது போய் சந்தோஷமா இருந்துட்டு வாங்க. இது உங்களுக்கு இரண்டாவது தேனிலவுன்னு நினைச்சுக்கிட்டு போங்க. நமக்கு குழந்தை இல்லையே அப்படிங்கிற கவலை கொஞ்சம் கூட இருக்க கூடாது. என்ன புரிஞ்சுதா. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம், திரும்பி வீட்டுக்கு வர்ற வழியில, தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற கற்பரட்சாம்பிகை கோவிலுக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க” என்று கூறினார்.

அதற்கு முருகன், “இல்லப்பா, இந்த தடவை போய் டாக்டரை பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றான்.

“இந்த தடவை அவ உண்டாகலைன்னா, அடுத்த தடவை கண்டிப்பா போய் டாக்டரை பாருங்க. எனக்கென்னமோ, இந்த தடவை அவ கண்டிப்பா உண்டாயிடுவான்னு மனசுக்கு படுது. அப்புறம் உங்கள் இஷ்டம்” என்றார்.

சரிப்பா, “நீங்க இவ்வளவு நம்பிக்கையா சொல்லும்போது, நாங்க ஊட்டிக்கு போயிட்டு வரோம்பா” என்றான் முருகன்.

ஒரு வாரம் கழித்து, முருகனும், தேவசேனாவும் ஊட்டிக்கு இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றார்கள். பத்து நாள் கழித்து, வீட்டுக்கு திரும்பியவுடன், தேவசேனா, தன் மாமியாரிடம்,

“இந்தாங்க அத்தை, கற்பரட்சாம்பிகை கோவிலோட பிரசாதம்” என்று கொடுத்தாள்.

“என்னம்மா, நல்லா சந்தோஷமா இருந்தீங்களா” என்று கேட்டாள் மரகதம்.

“நல்லா சந்தோஷமா இருந்தோம் அத்தை” என்று கூறியபொழுது அவளுடைய பட்டுக் கன்னம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அதனை மறைப்பதற்காக, அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள் தேவசேனா,

மரகதமும், அதனை புரிந்துக் கொண்டு, பூஜை அறைக்கு சென்று,

கடவுளே!, இந்த தடவையாவது, அவ கண்டிப்பா உண்டாகிடனும்னு" , மனமுருக வேண்டிக்கொண்டாள்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு ஒரு நாள் மதிய வேளை. மரகதம், தேவசேனாவிடம், “ஏண்டி போன வாரமே உனக்கு தூரம் வந்திருக்கணுமே, இன்னும் வரலையா” என்று கேட்டாள்

“இன்னும் வரலை அத்தை. சரியா ஏழு நாள் தள்ளி போயிருக்கு” என்று கூறினாள்.

“கடவுளே! இது நல்லதுக்காகத்தான் தள்ளிப் போயிருக்கணும். உம். அந்த காலத்துல என்னோட மாமியாரே, எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கும்போது, நாடி பிடிச்சு பார்த்துச் சொன்னாங்க. எனக்கு அப்படியெல்லாம் பார்க்க தெரியாதே. சரி, வா அடுத்த தெருவுல இருக்கிற டாக்டர் கவிதா கிட்ட போய் பார்ப்போம்” என்று மரகதம் தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள்.
 
டாக்டர் கவிதாவும், தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, மரகதத்திடம்....

[தொடரும்]                                                                         பகுதி - 4


No comments:

Post a Comment