டாக்டர்
கவிதாவும்,
மரகதத்திடம், “பெரியம்மா, நீங்க
பாட்டியாக போறீங்க. உங்க மருமகளுக்கு நாற்பத்தைந்து நாள் ஆயிருக்கு. நீங்க டாக்டர்
மணிமேகலையிடமே இனிமே செக்கப் பண்ணிக்கிங்க. அப்புறம் ஆறு வருஷம் கழிச்சு
உண்டாகியிருக்கிறதுனால உங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க” என்று கூறினார்.
“ரொம்ப
சந்தோஷம் டாக்டர். நல்ல செய்தியை சொன்ன உங்க வாயிக்கு சர்க்கரையை தான் போடணும். கண்டிப்பா, என் பொண்ணு மாதிரி நான்
நல்லா பார்த்துப்பேன் டாக்டர்” என்று கூறி தேவசேனாவை கூட்டிக்கொண்டு வெளியே
வந்தாள் மரகதம்.
தேவசேனாவிடம், “முதல்ல அந்த முனைல
இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போவோம்”
என்று கூறியபடியே அந்த பிள்ளையார் கோவிலுக்கு தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள்
மரகதம்.
வீட்டிற்கு
திரும்பியவுடன், மரகதம், “தேவசேனா, நீ போயி
ரெஸ்ட் எடுத்துக்க. நான் ராத்திரிக்கு சேமியா பாயாசம் பண்ணி வைக்கிறேன். அப்புறம், இப்பவே உன் புருஷனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடாதே. அவன் ராத்திரி
வந்தவுடனே, நேர்லேயே சொல்லு. அப்பத்தான் அவன் சந்தோசப்படுறதை
நீ பார்க்க முடியும்” என்றாள்.
இரவு, வெங்கடாச்சலமும், முருகனும் கடையை சாத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
முருகன்
அவர்களுடைய அறைக்கு சென்றவுடன், பின்னாடியே சென்ற தேவசேனா, அந்த அறை கதவை
மூடிவிட்டு, அவனை கட்டிப்பிடித்து,
அவன் முகம் முழுவதும், முத்தம் மழை பொழிந்தாள். இந்த திடீர்
முத்தமழையில், முருகன் திக்குமுக்காடிப் போனான். பிறகு
அவளிடமிருந்து விலகி,
“என்ன
தேவ்ஸ்,
இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கே. அப்புறம்
சேலை வேற கட்டியிருக்கே. எப்பவும் நைட்டி தானே போட்டிருப்பே, என்ன விஷயம்” என்று கேட்டான்.
தேவசேனா, தன் சேலையை சற்று
விலக்கி, அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து, தன் கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டாள்.
அந்த
வெட்கப் பார்வையும், தன் கையை எடுத்து அவள் வையிற்றில் வைத்துக் கொண்டிருப்பதையும், முருகனுக்கு விஷயத்தை புரியவைத்தது. இருந்தாலும்,
அவள் வாயிலிருந்து அந்த விஷயத்தை கேட்க ஆசைப்பட்டவன் போல,
“என்னம்மா, நான் கேட்ட கேள்விக்கு
இன்னும் பதிலே சொல்லலை” என்றான்.
“அதான், பதில் சொல்லிட்டேனே”
என்றாள் அவளும்.
“எங்க
சொன்ன? ஒண்ணுமே
சொல்லாம என் கையை எடுத்து உன் வயித்தில வச்சுக்கிட்டு இருக்கே. வயித்தை வலிக்குதா”
என்று எதுவும் புரியாத மாதிரி கேட்டான் முருகன்.
“ச்சீ
சுத்த மோசம்பா நீங்க. எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு, இப்ப ஒண்ணும் புரியாத
மாதிரி நடிக்கிறீங்க. சரி, என் வாயல சொல்லணும் அவ்வளவுதானே.
நீங்க அப்பாவாக போறீங்க” என்று வெட்கத்தோடு சொன்னாள் தேவசேனா.
அவன்
அவளை,
அப்படியே தூக்கி ஒரு சுத்து சுத்தி, இறக்கி விட்டு, “பாரு இப்ப நீயும் அம்மாவாக போறே. என்ன நமக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு.
இதுக்கு போய் மனசை கஷ்டபடுத்திக்கிட்டு.... சரி, இப்ப நீ
வாயும் வயிறுமா இருக்க. உனக்கு என்ன
வேணும்” என்று கேட்டான்.
“இந்த
சந்தோஷமே,
எனக்கு பெரிய சந்தோஷம். இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம். அதோடு, நீங்க எனக்காக உங்கம்மாக்கிட்ட எதிர்த்து பேசுனீங்க பாருங்க, அது போதும். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்,நீங்க
தாங்க எனக்கு புருஷனா வரணும்” என்று தொண்டை அடைக்க கூறினாள்.
“ஏய், என்ன திடீர்னு
செண்டிமெண்டா பேசுற” என்று கேட்டான்.
அதற்கு
தேவசேனா,
“எல்லா பெண்களும், தன்னைப் பத்தி மாமியார் ஏதாவது அநியாயமாக
பேசுனா, தன் கணவன் தன் சார்பா பேசணும்னு நினைப்பாங்க. எனக்கு, உங்கம்மா, உங்களை இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கிங்கன்னு சொல்லும்போது, நீங்க என்ன
சொல்லப்போறீங்கன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா அழகா அவுங்க வாயை அடைச்சு, என் மனசுல பாலை வார்த்தீங்க. இந்த குழந்தையை பெத்துக்கொடுத்துட்டு, நான் செத்துப்போனா கூட, உங்களோடு நூறு வருஷம்
சேர்ந்து வாழ்ந்த திருப்தி இருக்குமுங்க” என்று கூறினாள்.
“என்னது
இது, ஒரு
நல்ல விஷயத்தை சொல்லிட்டு, சாவு,கீவுன்னு
பேசிக்கிட்டு. இன்னொரு தடவை, உன் வாயிலிருந்து இந்த மாதிரி
வார்த்தை வர கூட புரிஞ்சுதா” என்று அதட்டினான் முருகன்.
அங்கே, வரவேற்பறையில், மரகதம் தன் கணவனிடம், தேவசேனா உண்டாகியிருப்பதை
பத்தி பேசிக்கொண்டிருந்தாள்.
அதற்கு
பிறகு வந்த நாட்களில், மரகதம், தேவசேனாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. மரகதமே
எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
மரகதமும், முருகனும், தேவசேனாவும் செக்கப்புக்கு சென்றபோது, டாக்டர்
தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, எல்லோரிடமும்,
“தேவசேனாவுக்கு
பிரஷர் இருக்குது. அதனால அவ பெட் ரெஸ்ட்லேயே இருக்கட்டும் என்று சொல்லி, தேவசேனாவிடம், இங்க பாரும்மா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் முத
பிரசவம் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனா நீ ரொம்பவே பயப்பிடுற. நார்மலா இரு.
மனசுக்கு இதமான நல்லா இசையை கேளு. எல்லாம் நல்ல படியா நடக்கும் என்றார்.
உடனே
மரகதம்,
“ஏன் டாக்டர், பெருசா பிரச்சனை எதுவும் இல்லையேன்னு” தன்
சந்தேகத்தை கேட்டாள்.
டாக்டரும், “ஒண்ணும்
பயப்பிடுறதுக்கு இல்லை. ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால, குழந்தை நல்லபடியா பிறக்குமான்னு ரொம்ப பயப்பிடுறாங்க”, வேற ஒண்ணும் இல்லை. என்றார்.
வீட்டுக்கு
திரும்பும் வழி எல்லாம், மரகதமும், முருகனும் அவளுக்கு தைரியம் சொல்லிக்
கொண்டு வந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக்
கிழமை வெங்கடாச்சலம், மரகதத்திடம்,
“என்ன!
மரகதம்,
மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லா வேலையும் நீ தான்
செய்யுற போல” என்று கேட்டார்.
அதற்கு
மரகதமும், “அவ பிள்ளத்தாச்சியா இருக்கா, போதாக்குறைக்கு அவளுக்கு
பிரஷர் வேற. அவளைப் போய் எப்படிங்க எல்லா வேலையும் செய்யச் சொல்றது. பாவம், அவளுக்கு அவ ஆத்தா இருந்தா, இந்நேரம் அங்க போய் சவுகரியமா இருப்பா. அதான், அவ
அங்க இருக்கிற மாதிரியே, இங்க இருக்கணும்னு தான், அவளை ஒரு வேலை செய்ய சொல்றதில்லை” என்றாள்.
“சரி, அவளுக்கு இப்ப ஆறு மாசம் நடக்குது. அவளை அவுங்க
அண்ணன் வீட்டுக்கு அனுப்புறியா, இல்ல,
நம்மலே இங்க பிரசவம் பார்த்துடுவோமா?” என்று கேட்டார்
வெங்கடாச்சலம்.
“எனக்கு, அவுங்க அண்ணன்
வீட்டுக்கு அனுப்புறதுக்கு இஷ்டமே இல்லை. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, நாம பிரசவம் பார்ப்போம் இல்ல. இவளும் நம்ம பொண்ணு தான். பேசாம நாமளே இங்கேயே பிரசவம் பார்த்துடுவோம். எதுக்கும் அவளையும் ஒரு
வார்த்தை கேப்போம்” என்றாள் மரகதம்.
“அட!மருமக
என்னையிலிருந்து உன் பொண்ணா ஆனா? உன் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, அன்னைக்கு உம்
மவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதை பத்தி பேசுவியா? என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டார் வெங்கடாச்சலம்.
அதற்கு
மரகதம்,
“நான் தான் இப்ப மாறிட்டேன் இல்ல!,சும்மா அதையே சொல்லாதீங்க.
இந்த குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடுமோன்னு பயத்துல தான் அன்னைக்கு அப்படி
பேசுனேன். இப்ப, நான் அவளை என் பொண்ணாதான் பார்க்குறேன்”
என்றாள்.
“சரி, சரி, நீ மாறினது ரொம்ப சந்தோஷம். உன் பொண்ணை கூப்பிடு,
அவக் கிட்டயே அண்ணன் வீட்டுக்கு போறியான்னு கேப்போம்” என்றார்.
உடனே
மரகதமும்,
“தேவசேனா, முருகா இரண்டு பேரும் சத்த இங்க வந்துட்டு
போங்கப்பா” என்றாள்.
முருகனும், தேவசேனாவும் அவர்கள்
அறையை விட்டு வந்தார்கள்.
வெங்கடாச்சலம், தேவசேனாவிடம், “ஏம்மா, பிரசவத்தை இங்கேயே வச்சுக்கலாமா, இல்ல உங்க அண்ணன் வீட்டுக்கு போறியாம்மா” என்று எடுத்த எடுப்பிலேயே
கேட்டார்.
தேவசேனாவும்,”நான் இங்கேயே
இருக்கத்தான் மாமா விரும்புறேன். என்னைய அத்தை தங்கத் தட்டுல வச்சு தாங்கு
தாங்குன்னு தாங்குறாங்க. எங்க அண்ணி கூட இந்த அளவுக்கு என்னைய பார்த்துக்க
மாட்டாங்க. நான் இங்கேயே இருந்துடுறேனே மாமா. இல்ல, முத
பிரசவம் தாய் வீட்டில தான் நடக்கணும்னு நினைச்சிங்கன்னா,
நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“அம்மாடி, பேசாம நீ இங்கேயே
இருந்துடு. டேய் முருகா, நீ அவுங்க அண்ணன் வீட்டுக்கு போனை
போட்டுக்கொடு, நான் பேசி சொல்லிடுறேன்” என்றார்
வெங்கடாச்சலம்.
தேவசேனா, பிரசவத்துக்கான நாளை
நெருங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு, பிரசவ வலி எடுத்து, எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு
சென்று, தேவசேனாவை அட்மிட் பண்ணி வெளியே காத்திருந்தார்கள்.
“முருகா, உன் மச்சினனுக்கு, போன் செஞ்சு தேவசேனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்னு சொல்லிடு”
என்றார் வெங்கடாச்சலம்.
கொஞ்ச
நேரத்திற்கு பிறகு, தேவசேனாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர் வெளியே வந்து முருகனிடம்,”உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்றார். பிறகு, எங்களால சின்ன உசுரைத்தான் காப்பாத்த முடிஞ்சுது. பெரிய உசுரை காப்பாத்த
முடியலை. இந்த மாதிரி சூழ்நிலைல, நாங்க பெரிய உசுரைத் தான் முதல்ல
காப்பாத்த பார்போம். ஆனா இவுங்க விஷயத்துல, எங்களால அவுங்களை
காப்பாத்த முடியலை” என்றார்.
முருகன்
அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துவிட்டான்.
உடனே, மரகதம், “என் மருமக குழந்தையை கொடுத்துட்டு, போய்
சேர்ந்துட்டாளா. ஐயோ, நானே என் மருமகளே கொன்னுட்டானே. இவரு
அப்பவே சொன்னாரு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு. நான் கேட்டிருந்தா, இந்நேரம் என் மருமக உயிரோடு இருந்திருப்பாளேன்னு” ஒப்பாரி வைக்க
ஆரம்பித்து விட்டாள்.
வெங்கடாச்சலம்
தான்,
மரகதத்தையும், முருகனையும் சமாதானப்படுத்தி, பிரசவ அறைக்கு கூட்டிக்கிட்டு போனார்.
அங்கே, தேவசேனா, தான் பெண்ணாய் பிறந்ததுக்கான முழுமையை அடைந்து விட்டோம், இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் என்ற எண்ணத்தில்,
தான் பெற்றெடுத்த செல்வத்தையும், தன் காதல் கணவனையும், தந்தையாக இருந்த மாமனாரையும், கடைசிக் காலத்தில்
தாயாக மாறிய மாமியாரையும் என்று எல்லோரையும் தவிக்கவிட்டுட்டு மறைந்து விட்டாள்.
பக்கத்தில்
இருந்த அவள் பெற்ற செல்வமோ, “அம்மா, என்னை இந்த உலகத்துக்கு காட்டுவதற்காக, நீ இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாயே” என்று சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தது.
[முற்றும்]
அருமையான கதை
ReplyDeleteகண்களில் நீர்த்துளிகள்
மனம் கனத்து விட்டது
தாய்மை ஒரு ஆனந்தம்
வார்த்தைகள் இல்லை சொல்ல.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Delete