வரவேற்பறையில்
இருந்த ஸ்விட்சைப் போட்டவுடன், அங்கே ஒரு ஓரத்தில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை புதைத்து
உட்கார்ந்திருந்தாள் தேவசேனா. முருகன் அவள் அருகில் சென்று,
அவளை தொட்டுத் தூக்கியவுடன்,அவனுடைய ஸ்பரிசத்துக்காக
காத்திருந்தவள் மாதிரி, அவன் நெஞ்சில் முகம் புதைத்து, ஓ! வென்று அழுதாள்.
முருகன், “என்ன
நடந்தது, ஏன் இப்படி அழுற?, அம்மா
எங்கே” என்று கேட்டான்.
அதற்கு
அவள், அவனை
நிமிர்ந்து பார்த்து, “மூணாவது வீட்டில இருக்கிற சீதாவிற்கு
வளைக்காப்பாம், அதுக்கு போயிருக்காங்க” என்றாள்.
இப்போது, அவள் அழுகின்ற காரணத்தை
ஓரளவு புரிந்து கொண்டான் முருகன். இருந்தாலும் முழுமையாக தெரிந்துக் கொள்வதற்காக,
“நீ
போகலையா” என்று கேட்டான்
அவனிடமிருந்து
விலகி,
நன்றாக கண்களைத் துடைத்துக் கொண்டு,
“எனக்கும்
போகணும்னு ஆசை தான், ஆனா, என்னைய தான் அவ மாமியார் கூப்பிடவேயில்லையே! என்னமோ
நான் தீண்டத்தகாதவ மாதிரி, அத்தை கிட்ட நீங்க மட்டும் வாங்கன்னு
சொல்லிட்டு போறாங்க. இதைக் கேட்டா, நான் மலடி, நான் சீதாவைப் பார்த்து பொறாமைப் படுவேன், கண்ணுப் போட்டுறுவேன்னு
சொல்லுவாங்க. இந்த மாதிரி என்கிட்ட மத்தவுங்க நடக்கும் போது என்னால தாங்க முடியலைங்க.
அதான் லைட்டு கூட போடாம மனசு உடைந்து போய் உட்கார்ந்திருக்கேன்” என்று தன் மணக்குமறல்களை
கொட்டித்தீர்த்தாள்.
“இதை எல்லாம்
பெருசா நினைச்சு கவலைப் படாதேடா” என்றான் முருகன்.
“எப்படிங்க
கவலைப்படாம இருக்க முடியும். ஒரு பெண் தாய்மை என்ற பாக்கியத்தை அடையும்போது தாங்க அவ
பெண்ணா பிறந்ததுக்கான முழுமையை அடையிறா. என்னதான் அவளுக்கு மனைவின்னு அந்தஸ்த்து கிடைச்சாலும், அவ தாய்மை அடையலைன்னா, அவளுக்கு இந்த சமுகத்துல மலடின்னு தாங்க பேரு. ஒரு குழந்தையை பத்து மாசம்
வயித்துல சுமந்து, அது தன்னோட பிஞ்சுக் காலால உதைக்கும்போதும், அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு நகரும்போதும் கிடைக்கிற உணர்வே ஒரு தனி சுகம்னு
எல்லோரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அந்த மாதிரியான ஒரு உணர்வு, ஒரு சுகம் இதெல்லாம் எனக்கு கிடைக்காமா போயிடுமாங்க? நான் ஒரு பெண்ணுக்கான முழுமையை அடையாமப் போயிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்குங்க”
என்று தன் ஆதங்கத்தை எல்லாம் வெளிப்படுத்தினாள் தேவசேனா.
“உனக்கு
மட்டும் தான் அம்மாவாகணும்னு ஆசை இருக்கா என்னா, எனக்கும், எப்ப அப்பாவாக
போறேன், ஒரு குழந்தை எப்ப நம்மளை அப்பான்னு கூப்பிடப் போகுதுன்னு மனசுக்குள்ள எவ்வளவு ஏக்கம் இருக்கு தெரியுமா. அதுக்காக, நான் உன்னைய
மாதிரி புலம்பிக்கிட்டா இருக்கேன். அதனால இந்த புலம்புறதை நிறுத்திட்டு சாதாரணமா இருக்கப்
பாரு” என்றான்.
“நீங்க
ஆம்பிளை, நாலு
இடத்துக்கு போறீங்க, நாலு பேரை பார்க்குறீங்க, அதனால உங்களுக்கு குழந்தை இல்லைங்கிற கவலை ரொம்ப தெரியாது. ஆனா, எனக்கு இந்த வீடு தானேங்க உலகம். அப்புறம் எனக்கு குழந்தை இல்லைங்கிற நினைப்பு
வராம என்னங்க பண்ணும்” என்றாள்.
அதற்கு
முருகன், “உன்
கஷ்டம் எனக்கு புரியுதும்மா. முடிஞ்சவரைக்கும் உன் மனசை வேற வேலைல
திருப்பப் பாரு. முடியலையா, என்கிட்ட இப்ப
உன் கவலையை சொன்ன மாதிரி சொல்லு” என்றான்.
“உங்க
கிட்ட, என் கஷ்டங்களை
சொன்னதுக்கு அப்புறம் தான், என் மனசு லேசான மாதிரி இருக்கு. சரி, சாப்பிட வாங்க” என்று முருகனை அழைத்தாள் தேவசேனா.
“நீ சாப்பிட்டியா”
என்று கேட்டான் முருகன்.
“நான்
எப்பங்க உங்களை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கேன்” என்று பதிலுரைத்தாள்.
“சரி வா, இரண்டு பேரும் சேர்ந்து
சாப்பிடுவோம், ஆமா அம்மா?” என்று கேட்டான்
முருகன்.
“அவுங்க
அங்கேயே சாப்பிட்டுட்டு, லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு போனாங்க” என்றாள் தேவசேனா.
மறு நாள்
காலை, வெங்கடாசலமும்
ஊரிலிருந்து திரும்பியிருந்தார். அப்போது அங்கே வரவேற்பறையில் ஒரு பெரிய பிரளயமே நடந்துக்
கொண்டிருந்தது....
[தொடரும்]
No comments:
Post a Comment